நூல் வாசிப்பு:
“நடிகர் சங்கத் தலைவராக இருந்த சிவாஜி, ‘நேற்று இன்று நாளை’ படத்திற்கு அரசு ஏற்படுத்திய எதிர்ப்பைக் கடுமையாகச் சாடினார்.
கேளிக்கை வரியை அரசு திடீரெனக் கூட்டியதில் இருந்த உள்நோக்கத்தை அறிந்த சிவாஜி, அனைத்து நடிகர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
எம்.ஜி.ஆரும் அதில் கலந்து கொண்டார்.
“ஒரு கலைஞனைத் திட்டமிட்டுப் பழிவாங்கும் அரசின் எந்த விதமான முடிவையும், நடிகர் சங்கம் ஏற்காது” என்பதை சிவாஜி திட்டவட்டமாக அறிவித்தார்.
தனது சக போட்டியாளர் எம்.ஜி.ஆர் என்று தெரிந்திருந்தும், இக்கட்டான சூழலில் அரசியலை மறந்து எம்.ஜி.ஆரோடு சிவாஜி கைகோர்த்தது நெகிழ்ச்சியான முடிவாக அனைவராலும் பார்க்கப்பட்டது.
திரையரங்கு உரிமையாளர்களை அழைத்துப் பேசிய சிவாஜி, காலவரையின்றித் திரையரங்குகளை மூடுவது தான் சரியான எதிர்ப்பாக இருக்கும் எனச் சொன்னார்.
சிவாஜியின் ஆலோசனையை அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் ஏற்றுக் கொண்டனர். தமிழகத்தில் உள்ள 1425 திரையரங்குகளும் 1974 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று மூடப்பட்டன.
சிவாஜி நடிப்பில் உருவான ‘என் மகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ல் வெளியீடு என அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தால் அப்படம் அன்று வெளியாகவில்லை.
தனக்கு ஏற்படும் எந்தப் பாதிப்பையும் பொருட்படுத்தாமல், எம்.ஜி.ஆருக்காகக் களத்தில் நின்ற சிவாஜியின் நட்பு உள்ளம், எம்.ஜி.ஆரை உணர்ச்சிப் பிழம்பாக்கியது.
பலவிதமான அரசியல் தாக்குதல்கள் சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே நடந்தாலும், கடைசி வரையில் நட்பில் அவர்களை யாராலும் பிரிக்க முடியவில்லை”
- மு.ஞா.செ. இன்பா எழுதிய ‘சிவாஜி ஆளுமை-3’ என்ற நூலில் இருந்து ஒரு பகுதி.
- நூல் வெளியீடு: கைத்தடி பதிப்பகம், சென்னை. பக்கங்கள் : 348, விலை : 350, தொடர்பு எண் : 95662 74503