போன்சாய் மரங்களின் டெல்லி கலைஞன்!

மிகச் சிறிய போன்சாய் மரங்களை வளர்க்கும் கலை சீனாவில் ஏழாம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்திருக்கிறது. இன்று அது வசதிமிக்கவர்களின் அடையாளமாக மாறியிருக்கிறது. பத்தாம் நூற்றாண்டு வரைக்கும் போன்சாய் கலை வேறு நாடுகளுக்குச் செல்லவில்லை.

பிறகு ஜப்பான் நாட்டுடன் ராஜாங்க உறவுகளைச் சீனா தொடர்ந்த போதுதான் அந்தக் கலை வெளியில் பரவத் தொடங்கியது.

பின்னர் ஜப்பானில் இந்தத் தோட்டக்கலை நுட்பம் பரவி மக்களிடம் பிரபலமானது. இன்று போன்சாய்  அங்கீகரிக்கப்பட்ட கலையாக இருக்கிறது. ஜப்பானில் போன்சாய் என்பதற்கு ஒரு சிறு தொட்டியில் வளர்க்கும் செடி என்று பொருள்.

இன்று உலகம் முழுவதும் போன்சாய் பரவிவிட்டது. அமைதி, பொறுமை. சமநிலை மற்றும் அதிர்ஷ்டம் போன்ற உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகப் பார்க்கப்படுகிறது.

வைசாலி நகரில் பிறந்த செளமிக் தாசுக்குச் சிறு வயதில் போன்சாய் என்பது மகிழ்ச்சியளிக்கும் கலையாகத் தெரிந்தது.

“நான் பள்ளியில் படிக்கும்போது, தொடர்ச்சியாக நான் மலர் கண்காட்சிகளுக்குச் செல்வேன். தொட்டியில் உள்ள போன்சாய்  மரம் போலவே தோற்றமளிப்பதைப் பார்த்திருக்கிறேன். அது என்னை மிகவும் கவர்ந்தது. எனவே என் சொந்த ஆர்வத்தில் அதன் நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறேன்” என்று விவரிக்கிறார் தாஸ்.

இன்று செளமிக் தாஸ் க்ரோ கிரீன் போன்சாய் என்ற பெயரில் நர்சரியை நோய்டா செக்டர் 128-ல் வைத்திருக்கிறார். இன்று போன்சாய் கலைஞர்களின் பள்ளிக்கூடமாக அது மாறியிருக்கிறது.

டெல்லியில் உள்ள போன்சாய் ஆர்வலர்கள் ஒன்றுகூடி தாஸை கெளரவிக்கும்விதமாக ஆண்டுதோறும் போன்சாய் கண்காட்சியை நடத்தி வருகிறார்கள். அங்கு போன்சாய் வளர்க்கும் நுட்பங்களை ஆர்வம் கொண்டவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

தென் ஆசியாவுக்கான போன்சாய் அமைப்பின் தூதுவராக இருக்கிறார் தாஸ். இந்தியாவின் சார்பில் அவர்தான் பிரதிநிதி. நோய்டா தோட்டக்கலை கழகத்தில் போன்சாய் ஆர்ட் பற்றிக் கற்பித்துவருகிறார். அதேபோல தோட்டக்கலைக்கான கிளப்புகளுக்கும் சென்று  சொல்லித் தருகிறார்.

“போன்சாய் மரங்களை வளர்க்க பல்வேறு நுட்பங்கள் உள்ளன. அது வளரும்போது நீங்கள் விரும்பும் வடிவத்தைக் கொடுக்கமுடியும். இதுவொரு முடிவுறாத கலை. அது வளரும் அழகு என்று சொல்லலாம். ஒவ்வொரு நாளும் அதில் மாற்றத்தைப் பார்க்கமுடியும். ஆனால் மெதுவாகத்தான் எல்லாம் நடக்கும். அது உங்களிடம் பொறுமையை வளர்க்கும். போன்சாய் கலையின் இறுதி இலட்சியம் அழகுதான்” என்கிறார் செளமிக் தாஸ்.

பல ஆண்டுகளாக மரங்களையும் அதன் வழிமுறைகளையும் கற்றுத் தேர்ந்துள்ள தாஸ், சீனாவில் புகழ்பெற்ற பெஞ்சிங் என்ற லேண்ட்ஸ்கேப் கலையையும் அறிமுகம் செய்துள்ளார். மரங்கள் வளர்ப்பதற்கு டெல்லி பருவநிலை மிகவும் ஏற்றதாக உள்ளது.

ஆன்லைன் மூலமும் மரம் வளர்ப்பு பற்றிச் சொல்லித்தருகிறார் செளமிக் தாஸ். போன்சாய் மரங்களை உருவாக்குவதற்குப் பங்கேற்பாளர்களுக்கு மரங்கள் குறித்த அனுபவ அறிவு முக்கியம் என்கிறார்.

– பா.மகிழ்மதி

You might also like