அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’: தொடர் – 31
புகைப்படக் கலைஞர் சங்கர் ராவின் அனுபவம்:
புரட்சி தலைவருடன் எத்தனையோ படங்கள் வேலை செய்திருந்தாலும், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்பு நாட்களை மறக்கவே முடியாது. சிங்கப்பூரில் படப்பிடிப்பு முடித்துவிட்டு புறப்படும் அன்று என்னை அழைத்து,
‘‘எதாவது ஷாப்பிங் பண்ணியா?’’ என்று கேட்டார்.
‘‘இல்ல சார்’’ என்றேன்.
ஹோட்டலில் இருந்து ஏர்போர்ட் புறப்படும் போது என்னையும் நாகேஷையும் அவர் காரில் ஏறச் சொன்னார்.
போகும் வழியில் ஒரு கடையில் காரை நிறுத்தச் சொன்னவர், அவருக்கு, நாகேஷூக்கு, எனக்கு, சக்கரபாணி அண்ணனுக்கு, கேமராமேன் ராமமூர்த்திக்கு என 5 லேட்டஸ்டான லென்சுகளுடன் கேமராக்கள் வாங்கினார்.
‘‘உனக்கு அக்கா, தங்கச்சி யாராவது இருக்காங்களா’’ என்று கேட்டார்.
‘‘ஒரு தங்கச்சி இருக்கா சார்’’ என்றேன். ஐந்தாறு லேடீஸ் வாட்சுகள் வாங்கிக் கொடுத்தார். எனக்கும் நாகேஷூக்கும் ஆளுக்கொரு காஸ்ட்லியான வாட்ச் வாங்கிக் கொடுத்தார்.
இது நடந்து சில நாட்கள் கழித்து சென்னையில் சிவாஜியுடன் ‘சவாலே சமாளி’ ஷூட்டிங்கில் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன்.
‘‘டேய் சங்கர்… சிங்கப்பூர்ல இருந்து அண்ணனுக்கு என்னடா வாங்கிட்டு வந்தே?’’ என்று கேட்டார் சிவாஜி.
‘‘ஷாப்பிங் பண்ணவே டைம் இல்லண்ணே, ஒன்ணும் வாங்கல’’ என்றேன்.
‘‘வாட்ச் நல்லா இருக்கேடா’’ என்று நான் கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்து கேட்டார்.
‘‘இது சின்னவர் சிங்கப்பூர்ல வாங்கிக் கொடுத்தாருண்ணே’’ என்றேன்.
‘‘நல்லா இருக்குடா… அண்ணனுக்கு கொடுடா…’’ என்றார்.
‘‘ஐய்யோ அண்ணே… சின்னவர் ஆசையா வாங்கிக் கொடுத்தார்… அதை எப்படிண்ணே… சும்மா விளையாடாதீங்க…’’ என்று மழுப்பிவிட்டு வந்துவிட்டேன்.
அடுத்த நாள் ‘ராமன் தேடிய சீதை’ படத்துக்காக எம்.ஜி.ஆருடன் காஷ்மீர் சென்றோம். அங்கே மேக்கப்பில் இருந்த எம்.ஜி.ஆர்.
என்னை அழைத்து, ‘‘உன்கிட்ட வாட்ச் கேட்டாராமே சிவாஜி… கொடுக்க வேண்டியது தானே… ஏன் நீ கொடுக்கல?’’ என்று கேட்டார்.
அதற்குள் இந்த நியூஸ் அவருக்கு போயிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
‘‘சார்… நீங்க ஆசையா வாங்கிக் கொடுத்த வாட்ச்… எப்படி சார் கொடுக்குறது’’ என்றேன்.
‘‘அதெல்லாம் தெரியாது… நீ மெட்ராஸ் போனதும் முதல் வேலையா இந்த வாட்சை சிவாஜிகிட்ட கொடுத்திடு. நான் உனக்கு வேற வாட்ச் வாங்கித் தரேன்’’ என்றார்.
அதேபோல மெட்ராஸ் வந்ததும் வாட்சை கொண்டு போய் சிவாஜியிடம் கொடுத்துவிட்டேன். அவருக்கு வாட்ச் சேகரிக்கும் பழக்கம் இருந்தது. அப்போதே 100 வாட்ச்களுக்கு மேல் அவர் வைத்திருந்தார் என்று கேள்விப்பட்டேன்.
எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை அவருக்கு நம்மை பிடித்துவிட்டால் நிறைய செய்வார். ஆனால் தனி மனித ஒழுக்கத்தை பெரிதும் எதிர்பார்ப்பார்.
அவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. குடிப்பழக்கம் உள்ளவர்களைக் கண்டால் அவருக்கு சுத்தமாக பிடிக்காது. அந்த விஷயத்திலும் அவரிடம் ஒருமுறை நான் அவரிடம் மாட்டிக் கொண்டேன்.
‘உழைக்கும் கரங்கள்’ படப்பிடிப்புக்காக மைசூர் சென்றிருந்தோம். ப்ரீமியர் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு முடிந்ததும் மாலை ஹோட்டல் ரூமுக்கு வந்துவிட்டேன்.
நானும் நடிகர் ‘தேங்காய்’ சீனிவாசனும் ஒரு ரூம். குளித்துவிட்டு ஃப்ரெஷ்ஷாக ரெண்டு பேரும் அமர்ந்து மது அருந்தலாம் என்று பிராந்தி பாட்டிலை திறந்து முதல் ரவுண்ட் ஊற்றினேன்.
என் நேரம் பாருங்க… தேங்காய் சீனிவாசன் இதோ வந்துடறேன் என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் சென்றுவிட்டார்.
நான் ரிலாக்ஸாக அமர்ந்து ஒரு ‘தம்’மை கொளுத்திக் கொண்டு மெல்ல பிராந்தியை சிப்-சிப்பாக அருந்திக் கொண்டிருந்தேன்.
வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டது. கேமராமேன் பி.எல்.ராய் தான் வந்திருக்கிறார் என்று நினைத்து, ‘யெஸ் கம் இன்’ என்று நான் சத்தமாக சொன்னதும், கதவு திறக்கப்பட்டது.
தொப்பியுடன் எம்.ஜி.ஆர். நிற்பதைக் கண்டு எனக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது.
மதுக் கோப்பையுடன் அவரிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டேன்.
விருட்டென அறையை விட்டு வெளியேறி விட்டார். நான் அவர் பின்னாடியே ஓடினேன்.
‘‘டைரக்டர் சங்கர் ரூம் எது?’’ என்று கேட்டார்.
நான் ஓடிச் சென்று பார்த்துவிட்டு அவர் அறை பூட்டியிருக்கிறது என்று சின்னவரிடம் சொன்னேன். அவர் புறப்பட்டு சென்றுவிட்டார். முகம் கடுகடுவென இருந்தது.
அப்போது அவருடன் உதவியாளர் சபாபதியும் இருந்தார். நான் பார்த்துக்கறேன் என்று என்னிடம் சைகையில் சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்.
அன்றைய ஷூட்டிங்கை முடித்துவிட்டு ‘பல்லாண்டு வாழ்க’ படத்தின் எடிட்டிங் வேலையை கவனிப்பதற்காக டைரக்டர் சங்கரை அழைத்துச் செல்ல எம்.ஜி.ஆர். வந்திருக்கிறார்.
ஹோட்டல் ரிசப்ஷனில் சங்கர் ரூம் நம்பரைக் கேட்டதும், அவர்கள் 6 என்று என் அறை எண்ணை சொல்லிவிட்டனர். ஆனால் டைரக்டர் சங்கர் 9-ம் எண் ஏ.சி. அறையில் தங்கி இருந்தார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு “சங்கர் குடிப்பானா? இந்தக் காலத்துல யாரையுமே நம்ப முடியலியே” என்று சொல்லி சின்னவர் வருத்தப்பட்டதாக அவரது உதவியாளர் சபாபதி என்னிடம் சொன்னார்.
இவை எல்லாவற்றையும்விட என் திருமணத்துக்கு வந்திருந்து அவர் சொன்ன வார்த்தை என் வாழ் நாளில் மறக்க முடியாதது.
(சரித்திரம் தொடரும்…)