குடும்பம் ஒரு கதம்பம்!

உறவுகள் தொடர்கதை – 17

குடும்பத்தைப் பற்றியும் அதன் பொறுப்புகள் பற்றியும் திருவள்ளுவர் அற்புதமாக ஒரு குறளில் சொல்லியிருப்பார்.

தென்புலத்தார்  தெய்வம்  விருந்தொக்கல்  தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

இதன் பொருள்: தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்து அம்சங்களையும் பேணுதல் இல்வாழ்பவனுக்குச் சிறப்பாகும்.

கணவன் மனைவி என்று இருக்கும்போது இல்லாத கௌரவம், கடமைகள், செயல்பாடுகள், குடும்பம் என்று அழைக்கப்படும்போது வந்து விடுகிறது.

ஒரு குடும்பஸ்தன், என்னெவெல்லாம் செய்ய வேண்டும் என வள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள். அவன் (அவளும் சேர்ந்துதான்) ஐந்து விஷயங்களைப் பார்க்க வேண்டுமாம்.

தென்புலத்தார் என்றால், தெற்கு திசையின் வழியாக மேலுலகம் சென்ற முன்னோர்கள். அவர்களுக்கான, வருடச் சடங்கு செய்வது முதலில் சொல்லப்படுகிறது.

நம்மை உருவாக்கி வளர்த்தவர்கள் மறைந்ததும், மனதை விட்டு மறையாமல், நினைவு நாளன்று அதற்கான சடங்குகள் செய்ய வேண்டும். அப்படி செய்வது ஒரு வகையில் நன்றி கூறலுக்கு ஒப்பாகும்.

அடுத்ததாக  வருவது, தெய்வம், பக்தி, முதலியன. மூன்றாவதாக விருந்தினரைக் கவனிப்பது மிக முக்கியமானது. இதை குடும்பத்தார்தான் செய்ய முடியும்.

சுற்றத்தாரின் நலனை மனதில் கொண்டு செயல்படுவது நான்காவது கடமையாக சொல்கிறார். கடைசியாக தன் குடும்பம்.

இதன் அர்த்தம், குடும்பத்தைப் பற்றி கடைசியாக அக்கறைப் பட்டால் போதும் என்பது அல்ல.

மற்ற நான்கையும் செய்வதற்கான தகுதியே குடும்பம் என வந்த பின்தானே வருகிறது என்பதால், மற்ற நான்கும் சரியாக செய்ய வேண்டுமானால், ஐந்தாவது ஒழுங்காக இருந்தால்தானே முடியும்?

ஆண் / பெண் சேர்ந்து தம்பதியான பின்தான் குடும்பம் என்ற அமைப்பே வருகிறது. அவர்கள்தாம் அடிப்படைத் தூண்கள் மட்டுமின்றி, முழுக் கட்டிடமே அவர்கள்தாம்.

தம்பதி என்ற சொல்லுக்கு, தம்+பத்தி என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டுமாம். அதாவது தமக்குள் அன்புடையவர்கள். இதை ஆராய்ந்து சொல்லியிருப்பவர், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழறிஞர் பொன். சரவணன்.

இப்படி அன்பு செலுத்துபவர்கள்தாம், செலுத்தும் வரைதான் தம்பதி என்றும் கூறலாம். இப்படி அன்பு செலுத்தினால், மற்றவர்களின் கடமைகள், செயல்பாடுகள் ஆகியனவற்ருக்கு ஆதரவு ஒத்துழைப்புத் தரத்தானே வேண்டும்?

இப்படி அன்பு செலுத்துவது மிகப் பெரிய ஆதரவு மட்டுமின்றி பலமும் கூட. அதே சமயத்தில் குடும்பம் என்று வந்து விட்ட பிறகு, தம்பதிகளைப் பிரிப்பது, எதெல்லாம் என்று பார்க்கலாம்.

முதலாவது, பரஸ்பர பேச்சுத் தொடர்பு மற்றும் அதற்கு கூடுதல் பலம் தரும், அல்லது பலவீனப் படுத்தும் உடல்மொழி ஆகிய இரண்டும் மிக முக்கியம். இந்தத் தொடர்பு சரியில்லை என்றால், பிரச்சினைகள் தானாக வரும். இந்தத் தொடர்பு எப்போதெல்லாம் குறையும் அல்லது பலவீனமாகும்?

பரஸ்பரம் நம்பிக்கை குறையும்போது அல்லது, சரியான புரிதல் இல்லாதபோது. எப்போது புரிதலில் குறைவு ஏற்படும்? புரிந்து கொள்ளத் தெரியாத போது அல்லது புரிந்து கொள்ள விரும்பாதபோது.

எதனால் புரிந்து கொள்ள விரும்பவில்லை?

புரிந்தால் பிடிக்காமல் போகும் என்ற நினைப்பினால்.

சற்று எளிமையாக சொல்ல வேண்டுமானால், இப்போது, பரஸ்பரம் பேசிக் கொள்வது குறைந்து போய், சமூக ஊடகங்கள்தான் தத்தமது உலகம் என்று கணவனும், மனைவியும் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அதாவது டைரியை மறைப்பது போல, சமூக ஊடகப் பதிவுகளைப் பாதுகாக்க விரும்புகின்றனர்.

அதே சமயம், டைரியில் நமது கோப தாபங்கள், மற்றவர் மேல் உள்ள குறை நிறைகளைக் குறிப்பிடுவது போல,  உலகம் அறிய சமூக ஊடகங்களில் பதிவு செய்கிறோமா? பொதுவான விஷயங்களைப் பற்றி வேண்டுமானால் அப்படி செய்யலாம். ஆனால், ’இன்னிக்கு அவள், அவன்..’ என ஆரம்பித்து பதிவு போடுகிறவர்கள் ஏறக்குறைய இல்லை.

அப்படி இருக்கும்போது, ‘என்னோட செல்லை, தெரியாம பார்க்கறது, ஏத்துக்க முடியாது..’ என்று பொங்காத ஆணும் பெண்ணும் இல்லை. எனது சமூக ஊடகப் பதிவுகளைப் பார்த்தால், ’ஒரு வேளை தப்பாக எடுத்துக் கொள்ளலாம்’ என்ற நினைப்புதானே பிரச்சினையைக் கொண்டு வருகிறது? நீங்கள் யார் என்று வாழ்க்கைத் துணைக்குத் தெரியப் படுத்துவதில் குறைபாடு இருப்பதைத்தானே இது காட்டுகிறது?

இது தவிர்க்க வேண்டுமானால், பேசும்போது, முழுமையாகப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களது, விருப்பமாக, குறையாக, அபிப்பிராயமாக என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

அதைத் தயங்கி அல்லது முழுமையாக சொல்ல முடியாது போனால் அதற்கான காரணங்கள் இருக்கின்றன என்றுதானே அர்த்தம்? அதே சமயம், குறிப்பிட்ட விஷயம் சொல்லியாக வேண்டும் என்பதால்தானே, பேசவே ஆரம்பிக்கிறோம்?

நடுவில் தயங்கி என்ன பயன்? இந்தப் பேச்சுத் தொடர்பு திருமணத்தின் ஆரம்பத்திலேயே இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். பேச்சு என்பது, இப்போதெல்லாம், கருத்துப் பரிமாற்றம், என்பது போய், மற்றவரை குறை சொல்வதற்கு, செய்யாததை எடுத்துச் சொல்வதற்கு, என்று ஆரம்பித்து, எதிர்மறை விஷயங்களுக்கு மட்டும்தான் என்றாகி வருகிறது.

குறைகளை விலாவரியாக சொல்லும் நாம், மற்றவரின் நிறைகளையும் முழுவதுமாக, தேவைப்படும் போதெல்லாம் சொல்லப் பழக வேண்டும்.

நம்மைப் பற்றி, நல்ல விஷயங்கள், பாராட்டுகள், சந்தோஷத் தகவல்கள் ஆகியனவற்றை எவ்வளவு தடவை கேட்டாலும் அலுக்காது அல்லவா? மற்றவர்களுக்கும் அப்படித்தான்.

மற்றவரின் செயல், பேச்சு, தோற்றம், நடத்தைப் பிடித்திருந்தால், அவை வெளிப்படும் போதெல்லாம், சொல்லிப் பாருங்கள். உறவு எந்த அளவுக்கு பலப்படுகிறது என்பது தெரியும்.

குறைகளை சொல்லக் கூடாதா? எனக் கேட்கலாம். நிச்சயமாக சொல்லத்தான் வேண்டும். ஒரே ஒரு நிபந்தனை. உங்களது குறைகள் உங்களிடம் எப்படி சொல்லப்பட வேண்டும் என நினைக்கிறீர்களோ அதே போல மற்றவர்களின் குறைகளையும் சொல்லுங்கள். அது போதும்.

இந்த பரஸ்பரத் தொடர்புக்கு பலம் குறையக் குறைய, உறவின் வலிமையும குறைந்து கொண்டே வரும் என்பதை மறக்காதீர்கள்.

அடுத்ததாக, ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் இருக்கிறது. அதாவது, எல்லை என சொல்லலாம். அந்த இடம் அவர்களுக்கானது. தம்பதியரின் உச்ச பட்ச உறவுக்குப் பின்னும், இருவருக்கும் தேவைப்படுவது அவர்களுக்கான இடம்.

பசியாய் இருக்கும்போது, வயிற்றுக்குள் தொடர்ந்து உணவு போய்க் கொண்டே இருக்கிறது. அது நிரம்பியதும், அது மிகவும் ஏங்கிய உணவு வருவது தொடர்ந்தால் என்ன நடக்கிறது? எப்பாடு பட்டாலும் வெளியே தள்ளுகிறது.

ஏனெனில் அதற்கான தனியான, தொந்திரவு செய்யாத நேரம், வேண்டும். அப்போதுதான், இருப்பதை ஜீரணித்து, அடுத்த உணவுக்குத் தன்னைத் தயார் செய்து கொள்ள முடியும். அப்படித்தான், தம்பதியருக்குள்ளான பரஸ்பரம் இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.

அவர்களுக்கான தனிப்பட்ட விஷயங்களை செய்து கொள்வதற்கு, நண்பர்கள், பிடித்த விஷயங்களைப் பார்க்கவும் கேட்கவும், பிடிக்காமல் ஒதுங்கி நிற்கவும் அவர்களுக்கான உரிமையும் வேண்டும்.

ஆங்கிலத்தில், “familiarity breeds contempt”   என்ற முதுமொழி இருக்கிறது. ”மிக அதிகமான அருகாமை, மனதில் வெறுப்பெரிச்சலை உருவாக்கும்” என்பதுதான், இந்த முதுமொழியின் பொருள்.

நீங்கள் எவ்வளவுதான் உங்களது அழகை, நேசிப்பவராக இருந்தாலும், தொடர்ந்து பத்து நிமிடத்துக்கு மேல் கண்ணாடியையே முறைத்துப் பார்த்திருந்தால், என்ன தோன்றும்? அதிலிருக்கும் குறைகள் தோன்ற ஆரம்பித்து, அது மட்டும் பெரிதாகத் தோன்றும்.

குறிப்பிட்ட ஒரு தம்பதி, மன நல ஆலோசகரிடம் வந்தனர். இருவருமே ஒருவருக்காக ஒருவர் கனகச்சிதமாகப் பொருத்தம் என்பது போல இருந்தனர்.

அவர்களது பிரச்சினை, சமீப காலமா, தாம்பத்தியத்தில் குறை ஏற்பட ஆரம்பித்திருக்கிறது என்பதுதான். அவர்களிடம் குறிப்பிட்ட நேரம் பேசிய மன நல ஆலோசகர் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டார்.

இருவரும் ஒரே தொழில் முறைப் படிப்புப் படித்தவர்கள் என்பதால், அது குறித்தான தொழிலை துவங்கியிருக்கின்றனர். இருவருமே ஒரே அலுவலகத்தில், நாள் முழுதும் இருந்து விட்டு, வீட்டுக்கு செல்வார்கள். அங்கே ஒரே விதமான பேச்சு, பரிமாற்றங்களுக்குப் பிறகு, தாம்பத்தியத்தில் ஈடுபட முயற்சிப்பார்கள்.

ஏதோ ஒரு குறை உருவாக ஆரம்பித்தது. அது குறித்த பேச்சுக்கள் இருவருக்குமே பிடிக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து இவ்வாறு இருக்கவே, ஆலோசனைக்கு வந்துருக்கிறார்கள். முதலில் அவர்களது அலுவலகங்களை அல்லது குறைந்த பட்சம் அறைகளாவது வெவ்வேறாக இருக்க வேண்டும்.

தொழில் முறைப் பேச்சுகளுக்கு தொலைபேசி பயன்படுத்துவது வீட்டிற்கு, ஒருவர் முன்னால் செல்வது, மற்றவர் அடுத்து வருவது என ஆரம்பித்து, நாள் முழுதும் கூட இருப்பது குறைய வேண்டும்  என்று கூறி அனுப்பி வைத்தார்.

பொதுவாகவே, கூடவே இருக்கும்போது, மற்றவர்களின் குறைகளை, சுணக்கங்களைத்தான், அதிகம் பார்க்க நேரிடும் என்பதால், அதனால் ஏற்படும் சிறு எரிச்சல், அலட்சியம், அலுப்பு ஆகியன மனதில், முதலில் மரியாதையையும் அதன் பிறகு அன்பையும் குறைக்கும்.

அதே போல தன்னை எல்லா நேரங்களிலும் ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதே எல்லாருக்கும் எரிச்சலை உருவாக்கும். அது அவர்களுக்கான இடத்தை குறுக்குகிறது அல்லது இல்லாமல் செய்கிறது.

இது பெரு எரிச்சலை உண்டாக்கும். இது குடும்ப அமைதி குறையக் காரணமாகும்.  இதுதான், அந்தத் தம்பதிகளுக்கு நடந்தது.

இது போல இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன அவற்றைப் பார்க்கலாம்.

– தனஞ்செயன், மனநல ஆலோசகர்

You might also like