கறுத்து, சுருங்கிப் போன தோலுக்கெல்லாம் விருது கிடைக்காது!

நடிகர் பாண்டியராஜன் நடித்த ‘ஆண்பாவம்’ படத்தில் நாட்டுப்புறப் பாடகியான கொல்லங்குடி கருப்பாயி வி.கே.ராமசாமிக்கு அம்மாவாக நடித்திருப்பார்.

படத்தில் ஒரு காட்சியில் மகனாக நடிக்கும் வி.கே.ஆரிடம் கேட்பார் கருப்பாயி.

”ஏண்டா.. ராமசாமி… பையனுக்குப் பொண்ணு பார்த்திருக்கீயே.. பொண்ணு கருப்புத் தோலா? செகப்புத் தோலா?”

வி.கே.ராமசாமி அவருக்கே உரித்தான நக்கலான குரலில் சொல்வார்.

”புலித்தோலு..”

சில படங்களில் நடித்து முடித்த கையோடு சிவகங்கைக்கு அருகில் இருக்கிற கொல்லங்குடிக்குப் போய்விட்ட கருப்பாயியை ‘அசைட்’ என்கிற ஆங்கில இதழுக்காகப் பார்க்கப் போயிருந்தேன்.

(‘அசைட்’ இதழ் இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் விரும்பிப் படிக்கப் பட்ட இதழ். அதில் ஆசிரியர் குழுவில் இணைவதற்குக் கூட அவர் விருப்பமாக இருந்தார்.)

ஓடு போட்ட வீடு. முன்னால் விரிந்த திண்ணை. சுள்ளென்று அடிக்கிற வெயில். நான் போன போது வீட்டுக்குள் இருந்து தலை முடியைச் சரி பண்ணிய படி வந்தார் கருப்பாயி. ஒரேயடியாக வேப்பெண்ணைய் வாசனை தூக்கியது.

”என்னப்பு.. மூக்கு அடைக்குதா.. உடம்புக்கு முடியலை.. அதான் தலையிலே வேப்பெண்ணை தேய்ச்சிருக்கேன்.. ஒண்ணும் கண்டுக்காமப் பேசுங்க..தம்பி..”

அவ்வப்போது பாடுகிற நிகழ்ச்சிகளுக்கும், வானொலி நிலையங்களுக்கும் போய் வந்து வயக்காட்டு வேலைகளுக்கும் போய்க் கொண்டிருப்பதாகத் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தவர் மெல்லிய குரலில்

”தம்பி.. நீங்க என் பாட்டைக் கேட்டிருக்கீகளா? இருங்க.. ஒரு பாட்டு பாடுறேன்” – குரலைச் சரிப்படுத்திக் கொண்டு பாட ஆரம்பித்தார். சட்டென்று மாறியது அந்தச் சூழல். குரலில் மெல்லிய வசியம் இருந்தது.

”தங்க ரயிலேறி நான் தாய்வீடு போகையிலே – எனக்கு

தங்க நிழலில்லை.. தாய் வீடு சொந்தமில்லே..”

– பாடிக் கொண்டு போன போது – வரப்பு மேட்டிற்கு இடையில் இளம் பச்சை நாற்று வாசம் காற்றில் மிதந்து வந்ததைப் போலிருந்தது.

”யாருக்கும் இந்தப் பாட்டை எனக்குச் சொல்லிக் கொடுக்கிறதில்லைப்பு.. நானா தான் இட்டுக்கட்டிப் பாடுறேன்.. ஆனா காசு தான் கைக்கு வர மாட்டேங்குது.. என்னத்தைப் பண்ணட்டும்.

என்ன தான் மேடையிலே போய் மைக்கில் பாடினாலும். கூலி வேலை தாம்ப்பா நமக்கு நிரந்தரம்.. என்ன சொல்றே”- பேச்சில் பிரியம் கூடியிருந்தது.

பேச்சிற்கிடையில் பல பாடல்கள் குறுக்கே வந்து போயின.

”கூத்துப் பார்க்க அவரு  போனா தானனே.

கோடி சனம் கூட வரும் தானனே..”.

கடைசியில் பக்கத்தில் போய் ‘சோடாக்கலர்’ வாங்கி வந்தார். குடிக்கச் சொன்னார். “குடிக்காம போகக் கூடாதுப்பு” அப்போது மெதுவாகக் கேட்டேன்.

”இவ்வளவு தூரம் பாடுறீங்க.. அப்புறம் ஏன் கலைமாமணி விருதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கலை?”

கேட்டதும் அவருடைய முகம் மாறியது. குரல் இடறக் கேட்டார்.

“நீங்க சொன்னீகளே.. அந்த விருதெல்லாம் செகப்புத் தோலு இருக்கிறவங்களுக்குத் தான் கிடைக்கும்.. இந்த மாதிரி கறுத்துச் சுருங்கிப் போய்க் கிடக்கிற தோலுக்கெல்லாம் கிடைக்காதுப்பா..” – கைச்சுருக்கத்தைக் காட்டியபடி கொல்லங்குடி கருப்பாயி சொன்னது மனதைத் தைத்தது.

இந்தக் கடைசி வரியுடன் அப்படியே அடுத்த மாத ‘அசைட்’ இதழில் கொல்லங்குடி கருப்பாயி பற்றிய கட்டுரை வந்தது.

இதழ் வெளிவந்த ஒரிரு நாட்களில் சிவகங்கையில் இருந்த எனக்கு நன்றாக அறிமுகமான பி.ஆர்.ஓ. போன் பண்ணினார்.

”தம்பி.. உங்க கட்டுரைக்கு நல்லது நடந்துருக்கு…. சி.எம். அறிவிச்சிருக்கிற கலைமாமணி லிஸ்ட்டில் நம்ம கொல்லங்குடி கருப்பாயி பெயரை அவங்களே கைப்பட எழுதிச் சேர்த்துருக்காங்க.”

அடுத்த வாரம் வெளியானது அறிவிப்பு.

‘கலைமாமணி’ ஆகியிருந்தார் கொல்லங்குடி கருப்பாயி.

#

You might also like