சோமலெ: தமிழ் பயண எழுத்தின் முன்னோடி!

தமிழுக்கும் சமயத்திற்கும் தொண்டாற்றியதில் செட்டிநாட்டு நகரத்தாரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் தொடங்கி ஏ.கே.செட்டியார், சக்தி வை. கோவிந்தன், முல்லை முத்தையா, கவியரசு கண்ணதாசன், சின்ன அண்ணாமலை, கருமுத்து தியாகராசச் செட்டியார், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், வள்ளல் அழகப்பச் செட்டியார் என இப்பட்டியல் நீளும்.

இவர்களுள் பயண இலக்கியம், வரலாற்று இலக்கியம், நாட்டுப்புறவியல், இதழியல், மக்கள் வாழ்வியல் என்று பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்துத் தமிழுக்கு அருந்தொண்டாற்றிய அறிஞர் ‘சோமலெ’ என்ற புனைபெயர் கொண்ட சோம.லெ.லெட்சுமணன் செட்டியார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்குப்பை கிராமத்தில், பிப்ரவரி 11, 1921ம் ஆண்டு சோமலெ பிறந்தார்.

தந்தை பெரி.சோமசுந்தரம் செட்டியார். தாயார் நாச்சம்மை ஆச்சி. உயர்நிலைக் கல்வியை முடித்தபின் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்றார்.

பின்னர் மும்பையில் உள்ள ஹாரிமன் இதழியல் கல்லூரியில் பத்திரிகையியல் துறையில் பட்டயம் பெற்றார். 1937ம் ஆண்டு சோமலெவுக்கு நாச்சம்மை ஆச்சியுடன் திருமணம் நடந்தது.

திருவத்தாள், மீனாட்சி, மல்லிகா, சீதா என்னும் பெண் மகவுகளும், சோமசுந்தரம் எனும் ஆண்மகவும் வாய்த்தன.

ஆரம்பத்தில் சிறிதுகாலம் விவசாயத் தொழிலில் ஈடுபட்டார் சோமலெ. பின்னர் நகராத்தாருக்கே உரித்தான வணிகத்தில் ஆர்வம் கொண்டார்.

தொழில் நிமித்தமாக 1947-48ல் பர்மாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அது அவருக்கு மாறுபட்ட அனுபவங்களைத் தந்தது.

அதே சமயம், உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே. செட்டியாரின் ‘அமெரிக்க நாட்டில்’ நூலைப் படித்ததும் அவருக்கு உலகச் சுற்றுப் பயணம் செய்யும் ஆவல் ஏற்பட்டது.

அதன் காரணமாக 1948ல் அவர் பிரிட்டன், சுவீடன், ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஹவாய் எனப் பல நாடுகளுக்கும் பயணம் செய்தார்.

பலநாடுகளின் மக்கள், பண்பாடு, பழக்கவழக்கங்கள், நாகரிகம் போன்றவை அவரைக் கவர்ந்தன. “வணிகனாகச் சென்றேன்; எழுத்தாளனாகத் திரும்பி வந்தேன்” என்று குறிப்பிட்ட சோமலெ, தனது அனுபவங்களை எழுத்தில் வடிக்க ஆரம்பித்தார்.

சோமலெயின் முதல் கட்டுரையை ‘அமுதசுரபி’யில் அதன் ஆசிரியர் விக்கிரமன் வெளியிட்டார். அக்கட்டுரைக்கு நல்ல வரவேற்புக் கிட்டவே தொடர்ந்து எழுத ஆரம்பித்தார் சோமலெ. பயணக் கட்டுரை நூல்கள் மட்டுமல்லாமல் பல்வேறு துறை நூல்களையும் எழுதத் தொடங்கினார்.

அத்தோடு, பல்கலைக்கழக அளவில் பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுத் திறம்படப் பணியாற்றினார்.

1955 முதல் 1958 வரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார்.

1958 முதல் 1960 வரை செட்டிநாடு அண்ணாமலை தொழில் நுட்பக் கல்லூரியின் தாளாளராகப் பதவி வகித்தார். இது தவிர 1955 முதல் 1961 வரை சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் பொறுப்பைத் திறம்பட வகித்திருக்கிறார்.

சென்னையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்குப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிப் பலரது பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.

தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். ஆயினும் சோமலெ மிகவும் எளிமையானவர். அன்போடு பழகக்கூடியவர். நட்புப் பாராட்டுபவர்.

உலகைச் சுற்றித் தம் அனுபவங்களை நூலாக யாத்த சோமெலெவின் பெருமையை, எல்லா நாடும் தன் நாடாய் எங்கும் சுற்றி ஆராய்ந்து பல்லார் அறியச் செந்தமிழில் பண்பாய் உரைக்கும் என் நண்பன் என்று கூறிப் பாராட்டுகிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

சோமலெயின் கைம்மாறு கருதாத இத்தமிழ்ப் பணியை “நெற்குப்பை பெற்றுத் தந்த நிறைகுடம்”என்று பாராட்டுகிறார் கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரம்.

“பயண இலக்கியத்திலும், பண்பாட்டுத் துறையிலும், மாவட்டமென்றும், மாநிலமென்றும், தேசீயமென்றும், உலகமென்றும் அவர்கள் படைத்த அருமையான படைப்புகளை இனி ஒருவர் படைக்க முடியுமா என்பது ஐயமே!” என்கிறார் லேனா தமிழ்வாணன்.

இளவயதிலேயே சோமலெவுக்கு எழுத்தில் நாட்டமிருந்தது. பதின்மூன்றாவது வயதில் சிறுசிறு கதைகள், கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அத்திறமை அவர் வளர வளர மேலும் மிளிர்ந்தது.   நிறையப் படிப்பார்.

தாம் படித்த நூல்களிருந்து நிறையத் தகவல்களைக் குறிப்பெடுத்துக் கொள்வார். அவற்றை ஒரு தனிப்பையில் போட்டு வைப்பார்.

அதுபோல செய்தித்தாள்களில் வரும் முக்கியமான தகவல்களையும் செய்திகளையும் தனித்தனியே கத்தரித்து அவற்றுக்கான பைகளில் இட்டு வைப்பார். தேவைப்படும் காலத்தில் பயன்படுத்திக் கொள்வார்.

தன் கைப்பையில் எப்போதும் ஒரு குறிப்புப் புத்தகத்தைத் தயாராக வைத்திருக்கும் அவர், தான் சந்திக்கும் நபர் பற்றிய முக்கியமான நிகழ்ச்சிகளை அதில் குறித்துக்கொள்வார்.

அது நூல்கள் எழுதும் காலத்தேயும் தகவல்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்ட போதும் அவருக்கு உதவியது.

ஒரு பல்கலைக்கழக் ஆராய்ச்சி மாணவர், தனது குழுவினருடனும் பேராசிரியரின் உறுதுணை யுடனும் இணைந்து செய்யும் ஆய்வு முயற்சிகளை சோமலெ தனி ஒருவராகச் செய்தார். அதனாலேயே, அவரால் ஆங்கிலத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களையும், தமிழில் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களையும் தர முடிந்தது.

சோமலெவின் பயண நூல்கள் தனிச்சிறப்பு மிக்கன. சோமலெ எழுதிய ‘அமெரிக்காவைப் பார்’ என்ற நூலைப் படித்ததால்தான் தன்னுள் அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற ஆர்வமே முகிழ்த்தது என்கிறார் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி.

கனடா, சுவீடன், தாய்லாந்து முதல் இந்தோனேசியா வரை தாம் சென்ற பத்து நாடுகள் பற்றி ‘உலக நாடுகள் வரிசை – 10’ என்ற தலைப்பில் நூல்களை வெளியிட்டார்.

தொடர்ந்து ஆப்பிரிக்க நாடுகள் வரிசையில் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபுக் குடியரசு, நைஜீரியா போன்ற 12 நாடுகளைப் பற்றிய நூல்கள் வெளியாயின.

ஒரு பயண இலக்கிய நூல் எப்படி இருக்கவேண்டும் என்பதற்குத் தனது ‘பிரயாண இலக்கியம்’ நூலில் விளக்கம் தருகிறார் சோமலெ:

“பிரயாண நூல்கள் பிற இலக்கியங்களைப் போல வாழ்க்கையோடு தொடர்பு உடையவை. அவற்றைப் படிக்கும்போது வெறும் புள்ளி விவரங்களாக மட்டும் இருத்தல் கூடாது.

பிரயாண நூல்களைப் படிக்கும் மக்களில் சிலர் தாங்களும் பிரயாணம் செய்ய வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்கள். ஆனால் அந்த வாய்ப்பு இல்லாதவர்கள். ஆசிரியருடைய கண் கொண்டு தாமும் வெளிநாடுகளைப்பற்றி அறிய வேண்டுமென்ற நோக்கத்துடன் படிக்கக் கூடும்.”

இந்த விளக்கத்தை அப்படியே நடைமுறைப்படுத்திக் காட்டினார் சோமலெ.

எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்நாட்டின் பழைய வரலாற்றை அறிந்து கொள்வதுடன் அந்த நாடு, எந்த வகையில் இந்தியாவுடன் தொடர்புகொண்டதாக இருக்கிறது என்பதையும் ஆராய்ந்து அதைத் தமது நூல்களில் குறிப்பிடுவது சோமலெவின் வழக்கம்

அயல்நாடுகளுக்குச் சென்று பயண இலக்கியம் படைத்த சோமலெவுக்கு நம் நாட்டின், குறிப்பாகத் தமிழகத்தின், பல பகுதிகளுக்கும் பயணம் செய்து அவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அதன் விளைவாக உருவாகியதுதான் மாவட்ட நூல்கள் வரிசை. இதற்கு உறுதுணையாக பதிப்பாளர் ப.செல்லப்பன் விளங்கினார். அவரது தூண்டுதலால் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்றார் சோமலெ.

“சோமலெ அவர்களால்தான் எனக்குப் பயண இலக்கியம் படைக்கும் ஆர்வமே வந்தது” என்கிறார் இலக்கிய வீதி இனியவன்.

பயண இலக்கியத்திற்கே புது வடிவை உருவாக்கி அளித்தவர் சோமலெ என்பதால் அவர் தென்னாட்டு மார்க்கோ போலோ என்றும், பல்துறை நூல்களைப் படைத்த சாதனையாளர் என்பதால் ‘நடமாடும் தகவல் களஞ்சியம்’ என்றும் போற்றப்பட்டார்.

சோமலெவின் சாதனை மகுடமாகத் திகழ்வது நகரத்தாரின் பெருமைதனைக் கூறும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’.

இமயம் முதல் குமரிவரை அவர் சென்ற நாடுகளில் தான் கண்ட விஷயங்களை நூல்களில் குறித்துள்ளார் சோமலெ.

அவற்றில் பல பொது அறிவைத் தூண்டுபனவாகமட்டுமல்லாமல் வியப்பை அளிப்பதாகவும் உள்ளன.

உதாரணமாக “குஜராத்தில் விதவைகள்தான் தங்க வளையல்களைப்போட்டுக்  கொள்வார்கள். சுமங்கலிகள் கண்ணாடி வளையல்கள்தான் போட்டுக் கொள்வார்கள்.”

“ஹிமாசல பிரதேசத்தில் பெண்கள் தொகை குறைவு. ஆகையால் ஒவ்வொரு குடும்பத்திலும் மூத்த பையனுக்கு மட்டும் திருமணம் செய்வது என்ற வழக்கம் நிலவுகிறது” போன்ற செய்திகளை அவர் குறித்திருப்பதைச் சொல்லலாம்.

பல்வேறு நாட்டின் தூதுவர்களாக விளங்குபவர்களுக்குரிய தகுதிகளை யும் பொறுப்புக்களையும், கடமையும் பற்றி சோமலெ எழுதியிருக்கும் ‘நீங்களும் தூதுவர் ஆகலாம்’ நூல் முக்கியமானது.

சிறந்த வேளாண் விஞ்ஞானியான சோமெலெயின் மகன் சோமலெ சோமசுந்தரம், தந்தையுடன் இணைந்து எழுதிய ‘வேளாண்மைப் பல்கலைக் கழகம்’ என்னும் நூலும் குறிப்பிடத் தகுந்தது.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்ட முதன்மையான நூல் அது.

இவை தவிர பண்டிதமணி கதிரேசன் செட்டியார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சர்தார் வேதரத்தினம் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றையையும் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார் சோமலெ. தமிழக அரசின் பரிசுகள் பல இவரது நூல்களுக்குக் கிடைத்துள்ளன.

சாகித்ய அகாதமி, தேசியப் புத்தக நிறுவனம், இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனம் போன்ற நிறுவனங்கள் இவரது நூல்களை வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் லெனின் கிராடு பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்ட பெருமையும் இவரது நூல்களுக்கு உண்டு.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் பாடத் திட்டங்களுக்கான ஆசிரியராகவும் சோமலெ பணியாற்றியிருக்கிறார்.

துவைத்து உடுத்திய வெண்ணிற வேட்டி, சட்டை. புன்னகை சிந்தும் முகம். பணிவான, நகைச்சுவை ததும்பும் பேச்சு. அந்தப் பேச்சில் தொனிக்கும் அவரது ஆழ்ந்த அறிவு – இதுதான் சோமலெ.

பிற்காலத்தில் சென்னையை வாழ்விடமாகக் கொண்டாலும் தாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த நெற்குப்பையை மறக்காமல் அவ்வூரில் வங்கி, தொலைபேசி நிலையம், காவல்நிலையம், அஞ்சல் நிலையம் போன்றன வருவதற்குக் காரணமாகத் திகழ்ந்தார்.

எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், பேச்சாளர் என்று பல்துறை வித்தகராக விளங்கிய சோமலெ, நவம்பர் 4, 1986ல் அமெரிக்காவில் வசித்து வந்த மகன் சோமசுந்தரத்திற்கும் கடிதம் எழுதிவிட்டு அதை தபாலில் சேர்க்கும் பொருட்டு அண்ணாசாலைத் தபால் நிலையத்திற்குச் சென்றார்.

கடிதத்தைப் பெட்டியில் சேர்ப்பித்த சில நிமிடத் துளிகளில் தபால் நிலையத்திலேயே மயங்கி விழுந்து உயிர்நீத்தார்.

தமிழில் பயணக் கட்டுரைகளுக்குத் தனி இலக்கியத் தகுதியை உருவாக்கி அளித்த முன்னோடி சோமலெ என்பது மறுக்கமுடியாத உண்மை.

நன்றி: ‘தென்றல்’ பத்திரிகையில் பா.சு. ரமணன் எழுதிய கட்டுரையின் சுருக்கமான வடிவம்.

தகவல்: செந்தமிழ்த் தேனீ சோமலெ – முனைவர் இரா. மோகன், மணிவாசகர் பதிப்பகம். சோமலெ –  நிர்மலா மோகன், சாகித்திய அகாதமி வெளியீடு.

You might also like