நம்பியாருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்த எம்.ஜிஆர்!

மீள்பதிவு:

நிரம்பியிருந்தது சென்னை மியூசிக் அகாடமி அரங்கு.

மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் நூற்றாண்டை ஒட்டி – அவருடைய நினைவுதினத்தில் அவருக்கான விழா.

வீரமணி ராஜூவின் பக்திமயமான குரலுடன் துவங்கிய விழாவில், பிரபலமான “இருமுடி தாங்கி” என்று துவங்கும் பாடலைப் பாடிய போது அரங்கில் கோரஸாக ஒலித்தன குரல்கள்.

முதலில் பேச வந்தவர் பாரதி பாஸ்கர். நம்பியார் தனிமனித வாழ்வில் கடைப்பிடித்த ஒழுக்கத்தை வியந்து பாராட்டியவர், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நம்பியார் பேசிய சில வசனங்களைப் பேசிக் காட்டினார்.

அடுத்து நம்பியாரைப் பற்றிய ஒரு ஆவணப்படம். எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டையிடும் காட்சியோடு துவங்கிய படத்தில் நம்பியாரின் உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் பேசினார்கள். அரிய புகைப்படங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

“நாடோடி மன்னன் படத்தை எம்.ஜி.ஆர் எடுத்துக் கொண்டிருந்தபோது, இன்னும் நம்பியாரும், அவரும் சண்டையிடும் ஒரு காட்சியை எடுக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி. அதற்குள் நம்பியார் சபரிமலைக்கு மாலை போட்டுவிட்டார்.

“எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் இந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.

நம்பியார் மாலை போட்ட நிலையிலேயே சமாளித்து அந்தச் சண்டைக் காட்சியில் நடித்து முடித்து விட்டுக் கிளம்பினார்.

சில நாட்கள் கழித்து நம்பியாரை அழைத்து கடைசியாக எடுத்த சண்டைக் காட்சியைத் திரையிட்டுப் பார்த்தால் காமிராவில் ஒன்றும் பதிவாகவில்லை.

அதிலிருந்து நம்பியார் ஒவ்வொரு முறை சபரிமலைக்குப் போகும்போதும் ஆளுயுர ரோஜாப்பூ மாலையை அவர் மறைகிற வரைக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்” என்றார் பி.வாசு.

அதே ஆவணப்படத்தில் நம்பியாரின் மகனான மோகன் நம்பியார் தனது தந்தையைப் பற்றிப் பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது சுவாரஸ்யம்.

“அப்பாவுக்குத் திருமணம் நிச்சயமாகி கேரளாவுக்குப் போய்விட்டார். மறுநாள் திருமணம்.
முந்திய தினம் இரவு ஏதோ தமிழ் பேசுகிற சத்தம்.

பார்த்தால் எம்.ஜி.ஆரும், இன்னொருவரும்.
எம்.ஜி.ஆர் தான் அப்பாவுடைய கல்யாணத்தில் மாப்பிளைத் தோழன்.

எம்.ஜி.ஆருக்கும் அப்பாவுக்கும் இடையில் அவ்வளவு நெருக்கம்.

எம்.ஜி.ஆர் மறைந்த அன்று அப்பா தன்னுடைய அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டவர் திறக்கவே இல்லை. தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. அவருடைய அடக்கம் முடிந்த பிறகு தான் அறையை விட்டு வெளியே வந்தார்”.

இடையில் நம்பியார் பேசிய சில காட்சிகள். அதில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தைப் பற்றிப் பேசினார்.
“அந்தப் படம் எடுத்த இரண்டு மாதங்களும் நாங்கள் தண்ணீரில் தான் இருந்தோம்.

அதாவது கடலிலேயே இருந்தோம். அந்தப் படத்தில், தான் செய்ய நினைத்த அனைத்தையும் செய்து முடித்து விட்டார் எம்.ஜி.ஆர்” என்றார்.

“திருவள்ளுவருக்குக் காவி உடை உடுத்தியதைப் பற்றி இப்போது பரபரப்புடன் பேசுகிறார்களே.. நம்பியார் குருசாமி எவ்வளவு அமைதியாகத் தமிழகத்தில் உள்ள பலருக்குக் காவி உடை போட்டு சபரிமலைக்கு அனுப்பியிருக்கிறார்… பார்த்தீர்களா?

சபரிமலைக்குப் பெண்களை அனுப்பலாமா என்று உச்சநீதிமன்றத்தில் வருகிற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அது ஐயப்பன் தருகிற தீர்ப்பு என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று வழக்கம்போல அதிவேகத்தில் பேசினார் ஊடவியலாளரான ரங்கராஜ் பாண்டே.

முன்னாள் டி.ஜி.பி.யான கே.விஜயகுமார் நம்பியாருடைய ஆன்மிக மயமான வாழ்வின் பக்கங்களைப் பற்றிப் பேசியவர் “அபூர்வமான மனிதர் குருசாமி (நம்பியார்). அவருக்கு எந்த ஆசைகளும் பெரிதாக இல்லை.

எம்.ஜி.ஆர் முதல்வரானபோது நம்பியார் சாமிக்கு ஏதாவது பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று பல முறை பேசிப் பார்த்தார். நம்பியார் சாமி ஏற்றுக் கொள்ளவில்லை.

அன்பில் குழந்தைத் தனமாக அல்ல, ஒரு குழந்தையைப் போலிருந்தார்” என்று மெல்லிய நகைச்சுவையுடன் பேசினார்.

நிறைவாகப் பேசியவர் இசைஞானி இளையராஜா. வழக்கம்போல ஆன்மிகமயமாகப் பேசியவர், தான் நம்பியாருடன் சபரிமலைக்குச் சென்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“சபரிமலைக்குப் போகிற வழியில் தேக்கடி பக்கத்தில் ஒரு கெஸ்ட் ஹவுஸை நான் கட்டியிருக்கிறேன். நம்பியார் சபரிமலைக்குப் போகிறபோது அந்த கெஸ்ட் ஹவுஸில் குழுவினருடன் தங்கிச் சென்றிருப்பது என் பாக்கியம்.

அதனாலோ என்னவோ இப்போது அந்த இடம் வேத பாடசாலையாக மாறியிருக்கிறது. பல மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் அங்கு வந்து தங்கி வேதம் கற்றுப் போகிறார்கள்.

அவருடைய நூற்றாண்டு சமயத்தில் இவ்வளவு பேர் திரளாக வந்திருப்பது அவருடைய பெருமையைச் சொல்கிறது” என்றவர், தான் ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்ததைப் பெரிதாக யாரும் வியக்க வேண்டியதில்லை. இசையமைப்பது என்பது சுவாசம் மாதிரி.

யாராவது தான் இத்தனை முறை சுவாசித்திருக்கிறீர்கள் என்று சொல்வார்களா?” என்றார் தன் பேச்சை நிறைவு செய்யும்போது.

நம்பியாருக்கு அருமையான நினைவுகூரல்!

You might also like