– ராசி அழகப்பனின் ‘தாய்’மைத் தொடர் – 2
ஒரு பக்கம் கலைஞர் அவர்கள் ‘குங்குமம்’ வார இதழை நடத்திக்கொண்டிருக்கிறார். மொழி சார்ந்த ஆளுமை தனதாக்கிக் கொண்டு மக்களிடம் புகழ் பெறத் தெரிந்தவர் என்பதை உணர்ந்த புரட்சித் தலைவர் தனக்கென்று ஒரு அடையாளத்தை தமிழ் அறிவுசார் பரப்பில் அமைக்க வேண்டும் என்று கருதினார்.
அதனால்தான் ‘தாய்’மை மனதுடன் தான் துவங்கும் வார இதழுக்கு ‘தாய்’ என்று பெயர் சூட்டினார்.
ஒருசமயம் ‘தாய்’ எழுத்தாளர் இந்துமதி தலைமையில் இயங்குவதாக இருந்தது.
எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக அப்போது ‘இதயம் பேசுகிறது’ வார இதழ் ஆசிரியர் மணியன் இருந்தார். அந்தப் பத்திரிகையில் பிரபலமாக எழுதி வந்தவர்தான் இந்துமதி. எனவே அவர் பெயர் முன்மொழியப்பட்டது.
ஆனால் புரட்சித் தலைவர் தேர்ந்தெடுத்ததோ வார்த்தைச் சித்தர் வலம்புரிஜானை. ஏனெனில் தமிழ்ப் புலமையும் ஆற்றலுமிக்கவர் என்று அவர் கணித்ததுதான்.
அன்றைய காலக்கட்டத்தில் கஸ்தூரிரங்கன், கல்யாண்குமார், ரகுநாத், நம்பிராஜன், பொன்.ஜெயந்தன் போன்றோர் ஆசிரியர் குழுவிலிருக்க – கங்கன், ஜானி போன்றோர் ஓவியர்களாக பங்கேற்ற ‘தாய்’ பொலிவோடு வந்தது.
ஆரம்பத்தில் சுஜாதாவின் தொடர் வந்ததாய் நினைவு. பிறகு ஹேமா ஆனந்த தீர்த்தன் கதை எழுத வம்பு வலுப்பெற்று புரட்சித்தலைவர் காதுவரை சென்றது.
ஹேமா ஆனந்த தீர்த்தன் வந்ததற்கு காரணம் உண்டு. ஏனெனில் இளைஞர்களை கிளு கிளுப்பாக்கி வாசகர்களை தன்பக்கம் கவர்வதில் அந்த எழுத்தாளர் முன்னிலையில் இருந்தார்.
எப்போதுமே வர்த்தகம் என்கிற ஆசை பெருக்கெடுத்தால் இப்படியான எண்ணங்கள் சாதாரணமாக வந்து தானே தொற்றிக் கொள்ளும்.
பிறகு அந்தப் பாவம் போக்க நீண்டநாள் போராட வேண்டி வரும். அப்படியான நிலைதான் அப்போது வந்தது.
பெண்களை ஆபாசமாக, அதாவது கிளுகிளுப்பாக வர்ணித்து அளவு தாண்டி எழுதுகையில் பெண் வாசகிகள் கண்டனக் குரல்களை எழுப்பினர்.
தாயை தெய்வமாக மதிக்கும் புரட்சித்தலைவர் நடத்தும் பத்திரிகையில் ஆபாசமாக எழுத அனுமதிக்கலாமா? – என்று பல இடங்களில் போர்க்கொடி தூக்கினர்.
புரட்சித்தலைவர் கேட்டுக் கொண்டு சும்மா இருப்பாரா?
அந்த நொடி வலம்புரிஜான் அண்ணனுக்கு ஒரு தொலைபேசி. அதோடு ‘தாய்’ வார இதழில் ஹேமா ஆனந்த தீர்த்தன் போன்றோரின் எழுத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது.
அதன்பிறகு, ‘தாய்’ தனக்கான அடையாளத்தைப் பெற சலனமின்றி பயணித்தது என்று சொல்லலாம்.
அப்போது ஆசிரியர் குழுவிலிருந்தவர்கள் பெரிய ஜாம்பவான்கள் இல்லை.
கஸ்தூரிரங்கன் – ஜேப்பியார் நடத்திய பத்திரிகையில் பழக்கம். கூடவே நாடகம் இயற்றி கையை சுட்டுக் கொண்டிருந்தவர். ஒரு நாடகம் பிரபு நடித்து படமாக மாறியது என்று நினைக்கிறேன். அந்த வேகத்தில் கொஞ்ச காலம் தாயில் பயணித்தார்.
பொன்.ஜெயந்தன் சொந்த மாவட்டத்துக்காரர். நீண்டகாலம் அவரோடு பயணித்தவர்.
நம்பிராஜன் கொஞ்ச காலம் இருந்தார். அவர் கவிஞர் வைத்தீஸ்வரன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுபவர். அவருக்கு நக்கீரன் கோபால் பெரிய அடைக்கலமாக இன்றளவில் இருக்கிறார்.
அவர் இப்போது வெளிவந்துள்ள உலக சினிமா பாஸ்கரன் இயக்கிய ‘இன்ஷா அல்லா’ என்ற திரைப்படத்தில் தனது துணைவியாரோடு நடித்து “அட நம்ம கவிஞர் கலக்கி விட்டாரே” என்று புகழ் பெற்றவர்.
அப்போதைய கஷ்ட காலத்தில் கொஞ்ச நாள் தாயில் இருந்தார்.
ரகுநாத் – இந்துமதியின் நட்பு வட்டத்தில் இருந்த இளைஞர். எழுத்தாளர்.
அவருக்கு நவீன அரசியல் சார்ந்த கதைகள் எழுதப் பிடிக்கும். பின்னாளில் அவர் ஆவணப்பட, திரைப்பட முயற்சியில் ஈடுபடுத்திக்கொண்டார்.
மிச்சமிருப்பது கல்யாண்குமார். இவர் சிறுகதை எழுதி அதன் மூலம் தொடர்பு ஏற்பட்டு பணியில் சேர்ந்தவர்.
பின்னாளில் மணிவண்ணன், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பயணித்தார்.
தலைமை ஆசிரியர் கங்கன் – அசாத்தியமானவர். நவீன ஓவியப் பிரியர். இப்போது உலகளாவிய சர்ச்சைகளை நவீன வடிவ ஓவியங்களால் புதுப்பித்துக் கொடுப்பதில் ஆர்வமாக உள்ளார்.
ஜானி – சாது ஓவியர் பின்னாளில் பாக்யா, மய்யம் என மாறி புத்தக முன் அட்டை வடிவமைப்பு ஓவியராக தன்னை மாற்றிக்கொண்டார்.
ஆக, இது தான் அந்தக் கால தாயின் முதற்கட்ட அமைப்பு.
அப்போது சம்பளம் அனேகமாய் மாதம் 450, அதிகபட்சம் 600 ஆக இருந்தது. எண்பதுகளின் தொடக்கத்தில் இது மிக அதிகம் என்பதாகத்தான் கேள்வி. அதனால்தான் அந்தக் காலத்தில் பத்திரிகையில் பணியாற்றுவது ஒரு கௌரவமாகக் கருதப்பட்டது.
அது மட்டுமல்லாமல் லட்சக் கணக்கானோர் படிக்கும் புத்தகத்தில் பெயர் வருகிறது என்கிற புகழ் மயக்கம் வேறு.
இந்தக் குட்டி அமைப்பை வைத்துக் கொண்டு பெரிய புகழ் வாய்ந்த குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, தினமணி, இதயம் பேசுகிறது, குங்குமம் என இதன் மத்தியில் போட்டி போட்டதுதான் தாயின் அதிசய நிகழ்வு.
சரி. என்ன தைரியத்தில் தாய் வந்தது. எந்த வாசகனைப் பிடிக்க முயன்றது என்று கேள்வி கேட்டால் சொல்ல பதில் இருக்கிறது.
அது என்ன?
கிரிக்கெட் கணக்குதான்?
எந்த பந்தை எப்படி அடித்தால் சிக்ஸராகும் என்று அறிந்த பலே கிரிக்கெட் வீரனை எதுவுமே அறிமுகம் இல்லாத களத்தில் வந்த புதிய பெளலர் முதல் பந்தில் விக்கெட் எடுப்பது போல் தான்.
‘தாய்’ புதிய பெளலர். எந்தவித முன்னேற்பாடும் இல்லாத – இதுதான் ‘தாய்’ என்று கடிவாளம் போட்டுக் கொள்ளாத தன்மையும் தான் – எதிராளியை திக்குமுக்காடச் செய்தது.
எதிரெதிர் திசையில் பயணிக்கும் எழுத்தாளர்களை அமரவைத்து புதிய சொற்போர் நிகழ்த்தி எழுத்தில் புதிய பட்டிமன்றத்தை நிகழ்த்தியது.
வாசகர்களையும், எழுத்தாளர்களையும் அமரவைத்து அம்பெய்ய – தடுத்தாளும் காட்சிகளை சொற்காட்சியாக்கியது.
எவருமே கண்டுகொள்ளாத புதிய புதிய எழுத்தாளர்களை மேடையேற்றி அங்கீகாரம் தந்தது.
இலக்கியத்திற்கும் புதுக்கவிதைக்கும் இடம் தராத சூழலில் ‘தாய்’ தனிப் பக்கங்களைத் தந்து கொண்டாடியது.
இந்த எளிமை புதிய வாசகர்களை, கிராமத்து உள்ளங்களைக் கவர மளமளவென ‘தாய்’ தனித்து உயரத் தலைப்பட்டது.
இதற்கு காரணம் வலம்புரிஜான், மனம், உறுதி, நம்பிக்கை.
எவர் புகழின் மேலும் சாய்ந்து வளர நினைக்காத வசீகர எண்ணம்.
எல்லாப் பத்திரிகைகளையும் தாண்டி தமிழில் தலைப்புகள் அடுக்கு மொழியில் அழகாய் மிளிரும்.
எந்தக் கட்டுரைக்கும் வலம்புரியார் தான் பெரும்பாலும் அழகு மொழியில் வண்ணத் தலைப்பு தருவார். அதுவே தமிழ்ப் பற்றாளர்களைப் பெரிதும் கவர்ந்தது என்று சொல்லலாம்.
வலம்புரி ஜான் அவர்கள் மனதில் விழுவது அவ்வளவு சாதாரணமானதல்ல. ஏனென்றால் எந்தப் புகழ் வெளிக்கும், பரிந்துரைக்கும் மயங்காதவர். ‘தகுதி’ என்பது தன் எழுச்சியாக இருக்க வேண்டும் என்று கருதுபவர்.
‘தாய்’ இதழ் கட்டமைப்பு அப்போது பிரபலமாகப் பேசப்பட்டது.
துவக்க காலத்தில் எம்.ஜி.ஆரின் எழுத்துக்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என்று வலம்புரிஜான் கருதினார்.
ஆனால் எம்.ஜி.ஆர். முதல்வராகப் பணியாற்றுகிறார். நேரமே கிடைக்காது. ஆனாலும் வலம்புரி வார்த்தைக்கு கட்டுப்பட்டு ‘சரி’ என இசைவு தருகிறார் புரட்சித்தலைவர்.
புரட்சித் தலைவரின் எழுத்தை விரும்புகிற மக்கள் அப்போது அதிகம்தானே!
என்ன செய்யலாம்?
எதை எழுதலாம்?
என ஆலோசிக்க – ஏற்கனவே வெற்றி பெற்ற தொடராக ‘நான் ஏன் பிறந்தேன்’ எம்.ஜி.ஆர் எழுதியது. அதன் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்று முடிவானது.
அதுவே வருவது சரியாக இருக்குமா என யோசித்து அதனூடே “காலத்தை வென்றவன்” என்று வலம்புரிஜான் தலையிட எம்.ஜி.ஆர் ‘அட சிறப்பு’ என மகிழ்ந்து ஒப்புதல் அளிக்கிறார். அந்தத் தொடருக்கு பிரத்யேகமாக லே-அவுட் செய்ய வேண்டும்.
யாரை வைத்து செய்வது? என யோசிக்கும் போதுதான் தான் ஏற்கனவே சந்தித்த இளைஞனைத் தேடுகிறார். தேடியும் பிடிக்கிறார். ’தாயில்’ அமர வைக்கிறார். பிரசுரமாகிறது.
ஒரு மூடிய காந்தி கடிகார பாணி மூடி திறக்க அந்த கடிகாரத்திற்கு உட்கார்ந்து எம்.ஜி.ஆர் எழுதுவது போன்ற ஓவியம் வரைந்து ‘காலத்தை வென்றவன்’ என்று காண்பிக்க வலம்புரிஜான் மெச்ச, எம்.ஜி.ஆர் அழைத்து அந்த ஓவியரைப் பாராட்டுகிறார்.
அவர்தான் கங்கன்.
கனகராஜ் கந்தன் என்று அழைக்கப்படுகிற கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் எனும் ஊரில் பிறந்த கற்பனைக்காரர்.
இவரின் அறிமுகம் எப்படிக் கிடைத்தது என வலம்புரிஜான் சொன்னது நினைவுக்கு வருகிறது.
1972 வாக்கில் தி.மு.கவில் இருந்தபோது “வரலாற்றில் கலைஞர்” என்ற நூலை எழுதி அதற்கு முகப்பு அட்டைப் படம் போட தேடிய நேரம்.
ஒரு கார் கடையில் டிசைன் செய்து கொண்டிருந்த கங்கனைப் பார்த்து ஈர்க்கப்பட்டு படம் போட தருகிறார்.
அப்போது கங்கன் ஓவியக் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறார். முஜிபூர் ரஹ்மான் கைகளை கன்னத்தில் வைத்து மேலே பார்க்கும்படியான தோற்றம் போல் கலைஞரை வடிவமைக்கிறார். அது அப்போது கலைஞரால் பாராட்டப்பட வலம்புரிஜான் மனதில் படுகிறார் கங்கன்.
இது நடந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின் கங்களைத் தேடுகிறார். கங்கன் என்னவானார் என்று பார்த்தால் அது ஒரு சுவாரசியம்.
இப்போது தேனாம்பேட்டை காவல் நிலையம் இருக்கிறதல்லவா? அதன் பக்கத்து சந்து எதிர்ப்புறம் உள்ள கட்டிடம் தான் பால்கன் பிரிண்டர்ஸ். அதன் மாடியில் ‘அஸ்வினி’ என்று ஒரு பத்திரிக்கை. அதில் இந்துமதி ஆசிரியர்.
அங்கு கொஞ்ச காலம் பணியாற்றிய பின் ‘மயன்’, அதிலிருந்து பின் மாலன் நடத்திய ‘திசைகள்’ இதழில் பணியாற்றுவதை அறிகிறார்.
விட்டாரா, தேடிப் பிடித்து தனது ‘தாய்’ இதழில் சேர்த்துக் கொண்டு பணி செய்யச் சொல்கிறார்.
கங்கனிடம் எப்போதும் ஒரு புதுமை இருக்கும். ‘காலத்தை வென்றவன்’ தொடரில் முதல் பக்கம் எம்.ஜி.ஆரின் சொந்தக் கையெழுத்து வருவதுபோல் லே அவுட் செய்து, பிறகு அச்சு எழுத்துக்களால் நிறைவு செய்வார். கங்கன் லே-அவுட் என்றால் அது தனியாகத் தெரியும்.
எம்.ஜி.ஆர் ஒரு பக்கம் எழுத, வலம்புரி ஜான் ‘ஆசிரியர் தொகுதி’ என கடைசி பக்கத்தை எடுத்துக் கொண்டு ‘உள்ளதைச் சொல்கிறேன்’ என்று தனது சுதந்திரமான சிந்தனை எழுத்துக்களால் படிப்பவரை கட்டிப் போட்டார்.
தாயின் துவக்கக் கால ஈர்ப்பு – ஒருபுறம் எம்.ஜி.ஆர். – இன்னொரு புறம் வலம்புரிஜான்.
இப்படியான ஈர்ப்பு சக்திகளை பார்த்து ரசித்துக்கொண்டே வருவார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் அப்பு என்கிற ரவீந்திரன். அவர் தங்கமானவர். எவர் விஷயத்திலும் தலையிட மாட்டார்.
இவ்வளவு புகழ் வாய்ந்தவராகயிருந்தும் ‘வலம்புரிஜான்’ அவர்களோடு பேசிப் பழகிவிட்டுச் செல்வார்.
எவரையும் உட்புகுத்த நினைக்க மாட்டார். எம்.ஜி.ஆரும் தனது கட்சிக்காரர்களின் சிபாரிசை தாயில் புகவிடாமல் பார்த்துக் கொண்டார்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக இளைஞர்கள் குழு நெல்சன் மாணிக்கம் சாலைக்கு வருவது வழக்கமாகி விட்டது.
என்ன சார் ஒரே தாய் அலுவலகப் புராணமாகவே இருக்கிறது. எந்த ரணகளமும் இல்லையே என்றுதானே பார்க்கிறீர்கள்?
இருக்கிறது நண்பர்களே!
நான் உள்ளே சேர்ந்ததற்குப் பின் ஒரு ரணகளம் துவங்கியது. அது அடங்க நான்கு வாரம் ஆகியது. அது என்ன? சொல்கிறேன்?
– (தொடரும்)