எம்.ஜி.ஆரை நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை!

‘ராஜா தேசிங்கு’ அற்புதமான படம். தேசிங்கு ராஜா, தாவூத் கான் என இரட்டை வேடங்களில் மக்கள் திலகம் வித்தியாசமாக, அருமையாக நடித்திருப்பார். பாடல்கள் எல்லாம் நன்றாகவே இருக்கும்.

படம் துவங்கியதில் இருந்தே திரைக்கதை அமைப்பதில் குழப்பம்.

பத்மினி இந்து மதத்தைச் சேர்ந்த இளவரசியாக இருந்தவர், திடீரென ஆயிஷா பாத்திரத்துக்கு மாற்றப்பட்டார். கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியார் பத்மினியின் ரசிகர்.

இந்து மதத்தைச் சேர்ந்த இளவரசி பத்மினி விஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் ‘பாற்கடல் அலைமேலே…’ பாடலுக்கு பாடி ஆடும் காட்சி ஏற்கெனவே படமாக்கப்பட்டது.

பத்மினி ஆயிஷா பாத்திரமாக மாற்றப்பட்ட பின்னும் பத்மினியின் நடனம் இடம்பெற வேண்டும் என்று லேனா செட்டியார் பிடிவாதமாக இருந்தார். “அது எப்படி? முஸ்லிம் பெண்ணாக நடிக்கும் பத்மினி எப்படி விஷ்ணு அவதாரத்தை பற்றி பாடமுடியும்? பிரச்சினைகள் வரும்” என்று மக்கள் திலகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பாடல் காட்சி படத்தில் இடம்பெறவில்லை.

அப்படியும் வீம்புக்கு படம் வெளியானபோது சம்பந்தமில்லாமல் இடைவேளையில் தனி ‘பிட்’டாக போட்டு அந்தப் பாடல் காட்சியை ஓட்டினார் லேனா செட்டியார். மறு வெளியீடுகளில் அந்தப் பாடல் இடம்பெறவில்லை. இப்போது யூடியூப்பில் இருக்கிறது.

கடைசியில் தேசிங்கு ராஜாவும் தாவூத் கானும் சண்டையிட்டு இறந்து விடுவார்கள். இதையும் சற்று மாற்றி அமைக்கலாம் என்று மக்கள் திலகம் கூறியதற்கும், “இதே நிறுவனம் தயாரித்த மதுரை வீரன் படத்தில் இறந்தாலும் படம் ஓடவில்லையா?” என்று தயாரிப்பாளர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

“அப்போது இருந்த நிலை வேறு.. இப்போது நாடோடி மன்னனுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து, இமேஜ், ரசிகர்கள் எதிர்பார்ப்பு மாறிவிட்ட நிலையில், முடிவை மாற்றலாம்” என்று மக்கள் திலகம் கூறியது ஏற்கப்படவில்லை.

படப்பிடிப்பில் தாமதம். நீண்ட கால தயாரிப்பு, முடிவில் தாவூத் கானை தேசிங்கு ராஜா கொன்று, தானும் தற்கொலை செய்து கொள்வார். இதனால் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

நாடோடி மன்னன் படத்தில் மக்கள் திலகம் சொல்வது போல “அவரை நம்பாமல் கெட்டவர்கள் அதிகம். நம்பிக் கெட்டவர்கள் இன்று வரை இல்லை” என்றாலும் தன் நடிப்பில் மக்கள் திலகம் எந்தக் குறையும் வைத்திருக்க மாட்டார்.

ராஜா தேசிங்கு வீரர்களுடன் சண்டையிடும்போது அவர் மீது ஈட்டியை எறியாமல் தேசிங்கு சண்டையிடும் அழகை ஈட்டி மீது சாய்ந்தபடி தாவூத் கான் பார்த்து ரசிக்கும் அழகே போதும்.

அதற்கு முன் இனிமையான ‘கானாங்குருவி.. காட்டுப்புறா.. ’ பாடலுக்கும் பத்மினியுடன் மக்கள் திலகம் பிரமாதமாக நடனம் ஆடியிருப்பார்.

You might also like