அதிமுக பொன்விழா : தகவல் – 5
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அ.தி.மு.க என்கிற இயக்கத்தைத் துவக்கிய போது, அவர் மட்டுமே அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.சோமசுந்தரம், பாவலர் முத்துச்சாமி, கே.ஏ.கிருஷ்ணசாமி போன்ற நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்களும் கட்சியில் இணைந்தார்கள்.
கழகத்தைத் துவக்கிய சில நாட்களுக்குள்ளேயே ஜி.ஆர்.எட்மண்ட், குழ.செல்லையா, சௌந்தர பாண்டியன், எஸ்.எம்.துரைராஜ் என்று வரிசையாகச் சில சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து அ.தி.மு.க.வைப் பலப்படுத்தினார்கள்.
அடுத்து கா.காளிமுத்து, சி.வி.வேலப்பன், கோவை செழியன், ஜி.விஸ்வநாதன் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களும் வந்து இணைந்தார்கள்.
1972 ஆம் ஆண்டு. நவம்பர் 3 ஆம் தேதி.
சென்னை சீரணி அரங்கில் அ.தி.மு.க கூட்டம். அவ்வளவு பெருந்திரள்.
அதில் ஆரவாரத்திற்கிடையே பேசினார் கே.ஏ.கிருஷ்ணசாமி.
“இது வரை நமது தலைவரை நாம் ‘புரட்சி நடிகர்’ என்றே அழைத்து வந்தோம். இனி மேல் அவர் புரட்சி நடிகர் அல்ல, புரட்சித்தலைவர். ஊழலை ஒழித்துக் கட்டும் தர்மயுத்தத்தின் தானைத் தலைவர்’.
இனிமேல் நாம் அனைவரும் அவரை ‘புரட்சித்தலைவர்’ என்றே அழைக்க வேண்டும்” என்று சொல்ல மெரினாக் கடலோரம் “புரட்சித்தலைவர்” என்ற முழக்கம் ஓங்கி ஒலித்தது.