புரட்சி நடிகரை புரட்சித் தலைவராக்கிய மக்கள்!

அ.தி.மு.க. பொன்விழா : 2

கட்சிக் காட்டுப்பாட்டை மீறிய பேச்சு, கட்சி உறுப்பினர்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சி, கட்சிக்கு அகௌரவம் என  திமுக பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் மீது குற்றம் சாட்டியிருந்தது தி.மு.க. தலைமை.

அப்போது, தி.மு.க. அமைச்சராக இருந்த என்.வி.நடராசன் வெளியிட்ட அறிக்கையின்படி, தி.மு.க. பொருளாளர் பதவியிலிருந்தும், சாதாரண உறுப்பினர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பதினைத்து நாட்களுக்குள் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகளுக்கான பதிலை எம.ஜி.ஆர் தரத் தவறினால், அவர் தி.மு.க.விலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார் என்றும் எம்.ஜி.ஆரிடம் தெரிவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டதாகச் செயதிகள் வெளியானதுமே தமிழகத்தில் அங்கங்கே பொதுமக்கள்  எதிர்ப்பு தெரிவித்தனர்.  மதுரையில் தீவிரத்துடன் வெளிப்பட்டது எதிர்ப்பு.

கோவை, திருச்சி, சென்னை என்று பல இடங்களிலும் எதிர்ப்புகள்.

எல்லோருமே தி.மு.க.வுக்காக அதுவரை உழைத்த எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கியதை எதிர்த்தார்கள்.

எம்.ஜி.ஆரை மிகவும் நேசித்த தொண்டர்கள் அப்போது சொன்னார்கள்.

“தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கி விட்டார்கள். இதன் பலன் அடுத்த தேர்தலில் தெரியும் பாருங்கள்.”

பத்திரிகையாளர்கள் சூழ்ந்திருந்த நிலையில் சென்னை சத்யா ஸ்டுடியோவில், “மக்கள் சொல்கிறபடி செய்வேன்” என்றார் எம்.ஜி.ஆர்.

இதைத் தொடர்ந்து 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி தி.மு.க நிர்வாகக் குழுவும், அக்டோபர் 14ம் தேதியன்று பொதுக் குழுவும் கூடின.

பொதுக்குழுவில் வெளிப்படையாக எம்.ஜி.ஆரை நீக்கும் முடிவைக் கண்டித்துப் பேசியதால் வெளியேற்றப்பட்டவர் இலட்சிய நடிகரான எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

எம்.ஜி.ஆர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு, தூதுவராக நாஞ்சில் மனோகரன் அனுப்பப்பட்டார்.

தி.மு.க.வின் ஒற்றுமை குலையத் தான் காரணம் இல்லை என்று சொல்லி வருத்தம் தெரிவிக்க மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

அதற்குள் எம்.ஜி.ஆரை ஆதரித்தவர்கள் தி.மு.க.வை விட்டு விலக்கப்பட்டார்கள். கே.ஏ.கிருஷ்ணசாமி விலக்கப்பட்டார்.

இதற்கிடையில் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி இருவரையும் தனித்தனியே சந்தித்து சமரசம் செய்து வைக்க முயன்றார் தந்தை பெரியார். அந்த முயற்சிகள் வீணாயின.

தமிழகத்தில் இளைஞர்களும். மாணவர்களும் தனக்கு ஆதரவாகத் திரண்டிருந்த நிலையில் அண்ணாவின் பெயரில் கட்சியைத் துவங்கப் போவதாக அறிவித்த எம்.ஜி.ஆர், “அண்ணாவின் கொள்கைகளை கருணாநிதியின் கட்சி கைவிட்டு விட்டதால், அண்ணாவின் கொள்கைகளைப் பரப்புவதற்காக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பிப்பதாக” அறிவித்தார்.

அந்தத் துவக்கத்திற்கு அவர் தேர்ந்தெடுத்த நாள் அக்டோபர் 17.

காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலால் தனிக்கட்சியைத் துவக்கியிருக்கிறார் என்றும், வருமானவரி பிரச்சினைக்காக ஆரம்பித்திருக்கிறார் என்றும் தி.மு.க தரப்பில் குற்றம்சாட்டிய போது, தெளிவாகச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

“வருமான வரி சம்பந்தமான விவகாரத்திற்கும், புதிய கட்சியின் தோற்றத்திற்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அ.தி.மு.க தொடர்ந்து செயல்படும். கட்சித்தாவலுக்குக் காரணமாக இருக்காது”.

இந்த இரண்டு விஷயங்களையும் வெளிப்படையாகச் சொன்ன எம்.ஜி.ஆர். அடுத்துச் சொன்னது முக்கியமானது.

“தி.மு.க அரசையும், ஆட்சியையும் கவிழ்க்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மத்திய அரசு முயன்றால், அதை அ.தி.மு.க கடுமையாக எதிர்க்கும்.”

தி.மு.க.வை விமர்சித்துப் பல குறைகளைச் சுட்டிக்காட்டி, அ.தி.மு.க. இயக்கத்தை எம்.ஜி.ஆர் உருவாக்கியிருந்தாலும், அந்த நிலையிலும் தி.மு.க தலைமையிலான ஆட்சி கவிழ்ந்துவிட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இல்லை.

உடனடியாக அந்த ஆட்சியைக் கவிழ்த்துத் தான் பலன் பெற வேண்டும் என்கிற குறுகிய எண்ணமும் அவருக்கு இல்லை.

இவ்வளவுக்கும் அ.தி.மு.க தொண்டர்கள் மீது பரவலாகத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆரை ஆதரித்த கட்சிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. மாணவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

தி.மு.க அரசைக் கண்டித்து. அ.தி.மு.க.வின் முதல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்தபோது திரளான கூட்டம்.

அந்தக் கூட்டத்தில் தி.மு.க.விலிருந்து காளிமுத்துவும் முனுஆதியும் விலகி, அ.தி.மு.க.வில் சேர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. காளிமுத்துவும் முனுஆதியும் குமுறலுடன் அந்தக் கூட்டத்தில் பேசினார்கள்,

“எம்.ஜி.ஆரை அரசு தொட்டால் அதை எதிர்த்து மக்கள் புரட்சி செய்வார்கள்” என்று ஆவேசத்துடன் பேசினார் காளிமுத்து.

அ.தி.மு.க. துவக்கப்பட்ட இரண்டு வாரத்திற்குள் ஆறாயிரம் கட்சிக் கிளைகளும், பத்து லட்சத்திற்கு
மேற்பட்ட உறுப்பினர்களும் சேர்ந்திருப்பதாகப் பெருமையுடன் குறிப்பிட்ட அ.தி.மு.க அமைப்பாளரான கே.ஏ.கிருஷ்ணசாமி,

“கருணாநிதி எம்.ஜி.ஆருக்கு வழங்கிய ‘புரட்சி நடிகர்’ பட்டத்தை அவர் துறந்து விட்டார். அதற்குப் பதிலாக மக்களின் ஆதரவுடனும், அனுமதியுடனும் வழங்கப்படும் இந்தப் புதிய பட்டத்தை எம்.ஜி.ஆர் ஏற்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்ட பிறகு, மக்களின் பெரும் ஆரவாரத்திற்கிடையே வழங்கப்பட்ட பட்டம் ‘புரட்சித் தலைவர்’.

47 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தையே உருவாக்கிய, கடந்த கால நிகழ்வுகளுக்கான சாட்சியத்தைப் போல. இப்போதும் சென்னை லாயிட்ஸ் சாலையில் இயங்கி வருகிறது அ.இ.அ.தி.மு.க தலைமை அலுவலகம்.

தன் பெயரில் இருந்த அந்த இடத்தை 1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் அ.தி.மு.க. இயக்கத்திற்கு மாற்றி அளித்தவர், புரட்சித்தலைவரின் மனைவியான ஜானகி அம்மையார்.

-வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன், எம்.ஜி.ஆரின் உறவினர்.

You might also like