வெற்றியாளர்கள் பின்பற்றக்கூடிய ஒரு சூத்திரம், பஞ்ச தந்திரம். ஆங்கிலத்தில் ‘தி ரூல் ஆஃப் 5′ என்கிறார்கள்.
பஞ்ச தந்திரம் என்பது கமல் பட காமெடி மேட்டர் அல்ல… வெற்றியின் வாசல். எந்த ஒரு வெற்றியாளருமே இரவோடு இரவாக விஸ்வரூபம் எடுப்பதில்லை. சின்னச் சின்ன விஷயங்களைத் தொடர்ந்து செய்வதால்தான் அவர்கள் வெற்றியாளர்கள் ஆகின்றனர்.
ஒரே விஷயத்தைத் தொடர்ந்து செய்துவந்தால்தான் வெற்றியாளராக மிளிர முடியும். இதுதான் விதி.
ரொம்ப அழகாக இப்படிச் சொல்வார்கள். 10 ஆயிரம் முறை திரும்பத் திரும்ப ஒரே வேலையை நாள்தோறும்… சற்று முன்னேற்றத்துடன் செய்து வந்தால், நீங்களும் சச்சின் டெண்டுல்கர் ஆகலாம். ஆம்! நீங்களும் கின்னஸ் சாதனை கூட புரியலாம்.
அவ்வளவு முறை செய்யக்கூடிய பொறுமை வேண்டும். மனது தளர்ந்திடக் கூடாது. பிரபல ஜப்பானிய எழுத்தாளர் ஹருக்கி முராக்கமி சொல்கிறார்:
“நான் மிகப்பெரிய நாவல் எழுதுவதற்காக ரொம்பவெல்லாம் கஷ்டப்படுவதே இல்லை. தினம் தோறும் காலை 4 மணிக்கு எழுந்திருப்பேன். தொடர்ந்து 6 மணி நேரம் நாவல் எழுதுவேன். பிறகு சாப்பிட்டு விட்டு வாக்கிங், ரன்னிங் போவேன்.
ஸ்விம்மிங் போவேன். நன்கு தூங்குவேன். திரும்பவும் எழுந்திருப்பேன் கொஞ்ச நேரம் இசை கேட்பேன். புத்தகம் படிப்பேன். எழுதுவேன். திரும்பவும் 9 மணிக்கு நன்கு தூங்குவேன்.
இதைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பேஸ். இப்படியே 6 மாதம், 1 வருடம் என்று தொடர்ந்து தினந்தோறும் 6 மணி நேரம் நாவல் எழுதுவதால்தான் என்னால் மிகப்பெரிய புத்தகங்களை சுலபமாக எழுத முடிகிறது. பெரிய எழுத்தாளராக இருக்க முடிகிறது” என்கிறார்.
பஞ்ச தந்திர விதிக்கு வருவோம். இந்த 5-ன் விதியை முதன் முதலில் புத்தகத்தில் எழுதியவர், ஜாக் கேன்ஃபீல்ட் இவர். ‘தி சிக்கன் சூப் ஃபார் தி ஸோல்’ என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதி மிகப்பெரிய சாதனை புரிந்தவர்.
அவரும் அவர் பார்ட்னர் மார்க் விக்டர் ஹேன்சன் என்பவரும் சேர்ந்து அந்தப் புத்தகத்தை எழுதி விட்டாலும் அதைச் சீந்துவாரில்லை. நூற்றுக்கணக்கான பதிப்பகங்களுக்கு ஏறி இறங்கியிருக்கிறார்கள். யாரும் அதை புத்தகமாகவே மதிக்கவில்லை.
ஆனாலும் தங்கள் படைப்பின் மேல் பெரும் நம்பிக்கை வைத்திருந்த அவர்கள், தங்கள் புத்தகம் அமெரிக்காவிலும், கனடாவிலும் 1 லட்சம் பிரதிகள் விற்கும் என்று திடமாக நம்பினர். கனவு கண்டனர். அந்தக் கனவை சாதிப்பதற்கு அவர்கள் பின்பற்றிய சூத்திரம் தான், ‘தி ரூல் ஆஃப் 5.
“ஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனை இலக்கு. அதை அடைய நாம தினந்தோறும் இலக்கு சார்ந்த 5 வேலைகளைச் செய்ய வேண்டும்” என்று முடிவெடுத்தார்கள்.
அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்ற நம்மூர் ஃபார்முலா தான், அதைச் செயல்படுத்த ஆரம்பித்தனர் பார்ட்னர்கள்,
ஒரு நாள் ஒரு செய்திக் குறிப்பைத் தயார் செய்து 5 பத்திரிகைளுக்கு அந்தப் புத்தகத்தின் மதிப்புரைக்காக அனுப்பி இருக்கிறார்கள்.
இன்னொரு நாள் 5 பெரிய மனிதர்களுக்கு-அதாவது அந்நாட்டின் ஜனாதிபதி, தொழில் அதிபர்கள், அமைச்சர்கள் இவர்களுக்கு காம்ப்ளிமென்டாக (பரிசாசு) இந்தப் புத்தகத்தை வழங்கி இருக்கிறார்கள்.
இன்னொரு நாள் 5 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சென்று ஹெச்ஆர்., மேனேஜர்களைப் பார்த்து இந்தப் புத்தகத்தை உங்கள் பணியாளர்களுக்குக் கொடுங்கள், பணித் திறன் மேம்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அடுத்த நாள். 5 அமைப்புகளைச் சந்தித்து. தங்கள் புத்தகம் பற்றிப் பேச வாய்ப்பு கேட்டிருக்கிறார்கள்.
பிறகு 5 பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை வெற்றியடையச் செய்யக்கூடிய 2 ஃபார்முலா எங்களிடத்தில் இருக்கிறது, அதுபற்றி விளக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.
இப்படி தங்கள் புத்தகம் தொடர்பாக. தினந்தோறும் 5 வேலைகளை செய்து கொண்டே இருந்துள்ளனர்.
இலக்கு எதுவென்று தெளிவாக நிர்ணையம் செய்ய வேண்டும். அது சார்ந்த 5 பணிகளைத் தினம் தினம் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்ததால்தான் ‘தி சிக்கன் சூப் ஃபார் தி ஸோல் என்ற புத்தகம், 49 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஏறக்குறைய 5 கோடி புத்தகங்கள் விற்பனையாகியிருக்கின்றன.
இதே விதியை இந்திய எழுத்தாளர் ராபின் சர்மாவும் தமது, ‘தி மாங்க் ஹிப் (who) சோல்ட் ஹிஸ் ஃபெராரி’ என்னும் நூலில் எழுதியிருக்கிறார். தினம் தினம் ஒரே இலக்கு நோக்கிய 5 செயல்களைச் செய்யும்போது, வருடத்தில் 1825 செயல்களைச் செய்திருப்பீர்கள்.
“இலக்கை அடைய தொடர்ந்து அதற்காக, 1,825 வேலைகளைச் செய்யும் போது, உங்களது அடுத்த வருட வாழ்க்கை முறையே மாறி இருக்கும்… நீங்களே எதிர்பார்க்காத உயரத்தில் இருப்பீர்கள்…” என்கிறார் ராபின் சர்மா.
வெற்றியாளர்கள், மிகப் பெரிய வேலைகளை இரவோடு இரவாகச் செய்து எல்லாம் வெற்றியாளர்களாக மாறுவது இல்லை. சின்ன விஷயங்களை நாள்தோறும் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பதால்தான், வெற்றியாளர்களாக சாதனையாளர்களாக மாறுகின்றனர்.
அந்த அளவிற்கு பவர்ஃபுல்லானது. பஞ்ச தந்திர விதியின் வலிமை. உங்களுக்கு இலக்கு ஒன்று இருக்க வேண்டும். இலக்கு எது என்று முடிவு செய்யுங்கள், பிறகு அந்த இலக்கை அடைவதற்காக என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று பட்டியலிடுங்கள். அந்தப் பட்டியலிலிருந்து
தினம் 5 வேலைகளைச் செய்தீர்களானால். இலக்கை அடைந்து விடலாம்.
(நீங்கள் எதாவது ஒரு துறையில் வெற்றியாளராக உயரமான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்றால், இந்த ஃபார்முலாவை உங்களுக்கே தெரியாமல் பின்பற்றியிருப்பீர்கள் என்பதே உண்மை.
உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயத்தை நீங்கள் திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருந்திருப்பீர்கள். உங்களையே அறியாமல் செய்திருப்பீர்கள்.
ஏனென்றால் அது உங்கள் மனதிற்கு பிடித்திருக்கும். அதனால் அதைத் தொடர்ந்து திரும்பத் திரும்ப செய்துதான் அந்தத் துறையில் இந்த உயரத்திற்கு வந்திருப்பீர்கள்.
5 வேலைகள் கணக்கின்படி இல்லையென்றாலும், 5 மணி நேரம் 8 மணி நேரம் என்று திரும்பத் திரும்பத் தொடர்ந்து செய்திருப்பீர்கள். நிர்வாகவியலில் ஒரு நல்ல பழமொழி இருக்கிறது, நீங்கள் எதில் கவனம் செலுத்துகிறீர்களோ அது வளரும்.
நீங்கள் சாப்பாட்டில் கவனம் செலுத்தினால், உடம்பு வளரும். நீங்கள் பேச்சில் கவனம் செலுத்தினால் நல்ல பேச்சாளர் ஆவீர்கள். நீங்கள் எழுதுவதில் கவனம் செலுத்தினால், நல்ல எழுத்தாளர் ஆவீர்கள்.
நீங்கள் குடும்பத்தில் கவனம் செலுத்தினால், குடும்பம் வளரும். உறவுமுறையில் கவனம் செலுத்தினால், உறவு முறைகள் நல்ல நிலையில் இருக்கும். தொழிலில் கவனம் செலுத்தினால், தொழில் பெரிதாக வளரும். உங்கள் சொந்த வேலையில் கவனம் செலுத்தினால், வேலையில் பெரிதாகச் சாதிக்க முடியும்.
முத்தாய்ப்பாக நீங்கள் எதில் அதிக நேரம் செலவழிக்கிறீர்களோ, அதுவே உங்கள் வருமானத்தின் அளவை நிர்ணயிக்கும்.
எல்லாவற்றிலும் கொஞ்சம், கொஞ்சம் என்று இருப்பவர்களால் அனுபவஸ்தர்கள் ஆகவே முடியாது. முதலில் ஒரு துறையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் துறைக்கான வேலையை தினம் தினம் செய்து வாருங்கள். இப்படி செய்து வந்தீர்களானால், நீங்களும் வெற்றியாளராகத் திகழ முடியும்.