எம்.என்.நம்பியார்: நிழலை மீறிய நிஜம்!
திரையில் வில்லனாகவும், நிஜத்தில் கதாநாயகனாகவும் வாழ்ந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் 102-வது பிறந்தநாளையொட்டி (07.03.1919), ஏற்கனவே ‘தாய்’ இதழில் வெளிவந்த கட்டுரை மீள்பதிவாக…
***
தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர் ஈடுபட்டிருந்தபோது அவரைச் சந்தித்த ஒரு கிழவி சொன்னதாகச் சொன்னதாக அப்போது வெளிவந்த செய்தி.
“எதுக்கும் அந்த நம்பியார் கிட்டே நீ கவனமா இருந்துக்கப்பா…”
அந்த அளவுக்கு மாஞ்சேரி நாராயணன் நம்பியார் என்கிற எம்.என்.நம்பியாரைப் பற்றிய பிம்பத்தைப் பதிய வைத்திருக்கிறது சினிமா.
கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பெருவமூர் கிராமத்தில் பிறந்த நம்பியார் இளம்வயதில் படிக்கமுடியாத நிலையில், நவாப் ராஜமாணிக்கத்தின் ‘பாய்ஸ்’ நாடகக் கம்பெனியில் பதிமூன்று வயதில் சேர்ந்திருக்கிறார்.
நாடகங்களில் சிறுசிறு வேஷங்கள் கிடைத்திருக்கின்றன. அப்போது அவருக்குக் கிடைத்தவை நகைச்சுவை வேடங்கள்.
கவிஞர் எஸ்.டி.சுந்தரத்தின் ‘கவியின் கனவு’ நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார் நம்பியார். பலருடைய கவனம் அவர் மீது விழுந்தது.
சினிமாவில் சிறு வேடங்கள் கிடைத்தன. துவக்கத்தில் ‘வித்யாபதி’ போன்ற படங்களில் அவருக்குக் கிடைத்தது நகைச்சுவை வேடங்கள் தான்.

1947ல் வெளிவந்த ‘கஞ்சன்’ படத்தில் கதாநாகனாக நடித்தாலும், 1950 ல் வெளிவந்த ‘திகம்பர சாமியார்’ படத்தில் அவருக்கு 11 வேடங்கள்.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘மந்திரி குமாரி’யும், ‘சர்வாதிகாரி’யும் அவரை வில்லனாகத் திசை மாற்றிவிட்டன.
தொடர்ந்து சிவாஜியுடன் உத்தம்புத்திரன், அமர தீபம், எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன், (அதில் கையைப் பிசைந்தபடி ‘மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று எம்.ஜி.ஆரிடம் பேசுகிற வசனங்கள் பிரபலம்) எங்க வீட்டுப் பிள்ளை, புதிய பூமி, படகோட்டி என்று அடுத்தடுத்த வெற்றிகள் அவரை ‘வில்லன்’ வேடத்திற்கு நம்பியார் தான் என்றாக்கி விட்டன.
இருந்தாலும் ‘மக்களைப் பெற்ற மகராசி, (ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? என்ற மென்மையான பாடலுக்கு வாயசைத்து நடித்திருப்பார்) பாசமலர், பாகப்பிரிவினை, நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் மிகையில்லாமல் நடித்திருக்கிறார்.
கம்பீரமான குரல், உச்சரிப்பில் துல்லியம், முகபாவங்கள், கத்திச்சண்டை இடும் வேகம் போன்றவை தான் நம்பியாருக்கான அடையாளங்களாக இருந்தன.
சற்று உயரம் குறைவு என்றாலும் அதையும் மீறி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஒரு ஆங்கிலப்படம் உட்பட ஆயிரம் படங்கள் வரை அவர் நடித்திருப்பது ஆச்சர்யம்.
ஸ்ரீதரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் 110 வயதான வில்லனாக நடித்திருப்பார். உலகம் சுற்றும் வாலிபனில் வித்தியாசமான வேடத்தில் எம்.ஜி.ஆருடன் மோதியிருப்பார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் அடங்கிய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
‘தூறல் நின்னு போச்சு’ படம் மூலம் வில்லன் வேடத்திலிருந்து அவரை குணச்சித்திர வேடங்களுக்கு மாற்றியவர் பாக்யராஜ்.
அதன்பிறகு ‘பூவே உனக்காக’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கலந்த வேடங்கள் என்று இறுதிக்காலம் வரை நடித்த நம்பியாரின் தனிப்பட்ட ஈடுபாட்டின் மையம் நகைச்சுவை தான்.
அவரே தன்னுடைய பெயரில் நாடகக் கம்பெனியைத் துவக்கியபோது நகைச்சுவைக்கே அவர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
வில்லனாக அவர் நடித்திருப்பதுகூட அவருடைய விருப்பம் சார்ந்த்தல்ல என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
நம்பியார் ஆரம்பத்தில் பணியாற்றிய நவாப் ராஜமாணிக்கம் நாடகக் கம்பெனி அய்யப்பனை முன்வைத்து நாடகங்களை நிகழ்த்தியிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக சபரிமலைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு மேல் சென்று
தலைமைச் சாமியாகி சினிமாவுலகினரை ஈர்த்து, பலருக்கு சபரிமலை மீது ஈடுபாட்டை உருவாகவும் காரணமாக இருந்திருக்கிறார் நம்பியார்.
திரையுலகில் அவர் உருவாக்கிய பிம்பத்திற்கு நேர் எதிரானது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை.
நடிகர் என்பதற்கான எந்தவிதமான பெருமிதங்களும் அவரிடம் இல்லை. பிரபலத் தன்மை எந்த மயக்கங்களையும் அவரிடம் உருவாக்கவில்லை. (எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமானவராக இருந்தும்கூட)
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்காக அவரைச் சந்தித்தபோது பாய்ஸ் கம்பெனியைப் பற்றிய மரியாதையுடன் பேசியவர் தன்னைப் பற்றிச் சொல்வதற்குக் கூச்சப்பட்டார்.
“நடித்தேன். அவ்வளவுதான்” என்றவர் தனக்குப் பிடித்த நடிகராக எம்.ஆர்.ராதாவையும், பிடித்த நடிகையாக சாவித்ரியையும் சொன்னார்.
“அவருக்குப் பூகோளத்தில் மிகுந்த ஈடுபாடு. நைஜிரீயாவைப்பற்றி, ரஷ்யாவில் ஓடும் நதிகளைப் பற்றி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பார். விளையாட்டுகளில் நல்ல ஆர்வம் கொண்ட அவர் தன்னுடைய உடம்பைக் கவனித்துக் கொண்டவிதம் அபாரமாக இருக்கும்.
உணவில் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மனக்கட்டுப்பாடு-மூன்றிலும் கவனமாக இருப்பார். யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது என்கிற சுயமரியாதை உணர்வு அவருக்குண்டு” என்றார் அவருடன் பல படங்களில் நடித்தவரான நடிகர் சார்லி.
நம்பியார் நடித்த சில படங்களைத் தயாரித்தவரான கலைஞானம் சொன்னார்.
“சிறு வயதில் அவர் இருந்த நாடகக் கம்பெனியில் இருந்த கட்டுப்பாடு நம்பியாரிடம் அவருடைய இறுதிக்காலம் வரை நீடித்தது.
பல மொழிப்படங்களில் நடித்திருக்கிற அவருடைய இயல்பை சினிமா சிறிதும் மாற்றியமைத்து விடவில்லை. அவர் ஏகபத்தினி விரதன்.
தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை நன்கு உணர்ந்த அவர், சினிமா ஷூட்டிங்கிற்கு மிகச்சரியாக வருவதை இறுதிக்காலம் வரை ஒழுங்குடன் கடைப்பிடித்தார். யாருக்கும் கெடுதல் நினைக்காத மனம் அவருடையது.”
ஆயிரம் படங்கள், விதவிதமான வில்லன் வேடங்கள் என எல்லாவற்றையும் மீறி 89 வயதில் அவர் மறைந்துவிட்டாலும், அவருடைய வாழ்க்கை அவரைப்பற்றி அறிந்தவர்கள் மத்தியில் அவரை இப்போதும் ஈரமாக வைத்திருக்கிறது.
நடிகராக இருந்ததை விட, மனிதராக தன்னைத் தானே முந்தியிருக்கிறார் நம்பியார்.
07.03.2021 2 : 30 P.M