“சிறுவனாக இருந்தபோதே கைதானேன்”
தா.பாண்டியன் அஞ்சலி
*
பொதுவுடமை இயக்கத்தில் தனித்துத் தெரிந்து கொண்டிருந்த குரல் தா.பாண்டியனுடையது.
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தெளிந்த உச்சரிப்புடன் எழுதுவது போலவே உணர்ச்சி வேகத்துடன் பேசக்கூடியவர்.
இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்தவர். இடையில் தனித்து இயங்கி மீண்டும் தாய் இயக்கத்தில் இணைந்தவர்.
ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் உயிரிழந்த போது அருகில் இருந்து பலத்த காயம் அடைந்தவர்களில் தா.பாண்டியனும் ஒருவர்.
இலக்கியம், திரைப்படம், வெளியுலகம், நவீனத் தொழில்நுட்பம், பொதுவுடமை, வரலாறு என்று எதைப் பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம்.
வழக்கறிஞராகப் பணியாற்ற ஆரம்பித்த பாண்டியனின் மனைவி ஜாய்ஸ் பாண்டியன். அவர் ஓய்வுபெற்ற ஆசிரியை. அருணா, ஹெலன் பிரேமா என்று இரு மகள்கள். மகள் ஜவஹர் கல்லூரிப் பேராசிரியர்.
பல புத்தகங்களை எழுதியிருக்கிற இவர், ஏராளமான புத்தகங்களையும் மொழி பெயர்த்திருக்கிறார். தீவிரமான வாசிப்பாளர்.
மேடையில் வட்டார வழக்கைத் தவிர்த்துப் பேசும் இவருக்குப் பிடித்தமான பேச்சாளர்கள் ஜீவா, பி.ராமமூர்த்தி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
2005 ஆம் ஆண்டில் ‘புதிய பார்வை’ இதழுக்காக தா.பாண்டியனை பாலன் இல்லத்தில் சந்தித்து நான் எடுத்த விரிவான நேர்காணலில் இருந்து ஒரு பகுதி மட்டும் இங்கே:
***
“நான் பிறந்தது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள சிறு கிராமமான வெள்ளைமலைப்பட்டியில். எல்லாமே புஞ்சை வயல்கள். அங்கே நதியோ, குளமோ இல்லை. கிணற்றுப் பாசனம் தான். கடுமையாக உழைக்கக் கூடிய விவசாயிகளைக் கொண்டது எங்கள் கிராமம்.
அந்தக் கிராமத்தில் கிறிஸ்தவப் பாதிரியார்களால் நிறுவப்பட்ட பள்ளிக்கூடத்தில் என்னுடைய தந்தை தாவீதும், தாய் நவமணியும் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தார்கள். அவர்களுக்கு முதல் மாதம் வழங்கப்பட்ட தொகை எட்டு ரூபாயாம். அந்தக் காலத்தில் அதற்கிருந்த மதிப்பு அதிகம். அப்போது ஒரு ரூபாய்க்கு 16 படி அரிசி விற்ற காலம்.
நான் என்னுடைய குடும்பத்தில் நான்காவது பையன். மூத்தவர் அக்கா. அடுத்து அண்ணன் செல்லப்பா. அவருக்கு அடுத்து அண்ணன் விக்டர் டானியல் சீனி. வீட்டில் எனக்கு வைக்கப்பட்ட பெயரே பாண்டியன் தான்.
என்னுடைய அப்பா முரட்டுச் சுபாவம் கொண்டவர், ஆனாலும் முற்போக்கான எண்ணம் நிரம்பியவர். பெற்றோர் இருவரும் கிறிஸ்தவ மதத்தில் பற்றுள்ளவர்கள். ஆனால் மற்றவர்களிடத்தில் எந்தவிதமான சாதி, மத வேறுபாடோ, சாதிப் பாகுபாடோ காட்ட மாட்டார்கள்.
கிராமத்தில் பெரும்பான்மையாக இருந்த இந்து சமூகத்தினரைப் படிக்க வைப்பதில் எங்களுடைய அப்பா வெற்றி பெற்றார். அங்கிருந்தவர்களில் பெரும்பான்மையான சமூகத்தினர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். குற்றப்பரம்பரைச் சட்டத்தினால் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள்.
படித்து முன்னேறினால் தான் அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுதலைப் பெற முடியும் என்பதால் அவர்களை வலியுறுத்திப் படிக்க வைத்தார் அப்பா. அவரிடம் பயின்ற பல மாணவ, மாணவியர் ஆசிரியர்களாக இருந்து ஓய்வும் பெற்று விட்டார்கள்.
அப்போது காவல்துறை தான் மதுரை மாவட்டத்தில் கல்வித் துறையையும் நிர்வகித்து வந்தது. காரணம் கள்ளர் சமூகத்தை ஒடுக்குவதில் காவல்துறைக்கு இருந்த அனுபவத்தால் கல்வித் துறையையும் அவர்களிடமே ஒப்படைத்திருந்தார்கள்.
அதனால்தான் எங்கள் பகுதியில் உள்ள கிராமப் பள்ளிகளைப் பார்வையிட போலீஸ் கான்ஸ்டபிள் வருவார். அவருக்குத் தமிழ் கூடச் சரியாக எழுத வராது. ‘நான் சென்றபோது பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்’ என்கிற குறிப்பைக் கூட பிழையோடு எழுதி இருப்பார் அந்த கான்ஸ்டபிள்.
என்னுடைய அப்பா அந்த வாக்கியத்தில் உள்ள இலக்கணப் பிழையையும், எழுத்துப் பிழையும் திருத்துவார். காவல்துறையின் அடக்குமுறையைத் தன்னளவில் கடுமையாக எதிர்த்தார் அப்பா. படிப்புக் குறைவுதான் என்றாலும் ஆங்கிலத்தில் வெகு சரளமாக பேசுவார். அந்தப் பேச்சு அவருக்குக் கிடைத்தா வாள் மாதிரி.
அப்போது இருந்த மாவட்ட ஆட்சித் தலைவரும் காவல்துறை உயரதிகாரிகளும் ஆங்கிலேயர்களாக இருந்ததால் ஊர்ப் பிரச்சினைகளை நேரடியாக அவர்களிடம் எடுத்துச் சொல்வார். வாதாடுவார். இது தொடக்கத்தில் அவருக்கு மரியாதையையும் கவுரவத்தையும் கொடுத்தது என்றாலும், மக்கள் பிரச்சினைகளுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்ததால் அவரை ஒடுக்க ஆரம்பித்தார்கள். அதனால் அவரை மதுரை மாவட்டத்திலேயே பல பள்ளிகளுக்கு மாற்றுவார்கள். எங்கள் குடும்பமும் அவருடன் போகும்.
அப்போது நான் படிக்கத் தொடங்கியது கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ள காமக்காபட்டியில் உள்ள பள்ளியில். அங்கு காமாட்சியம்மன் கோவில் இருப்பதால் காமக்காபட்டி என்ற பெயர். மலையடிவாரத்தில் இயற்கையான செழிப்பு கூடிய ஊர். அங்குதான் ஐந்தாவது வகுப்பு வரை படித்துவிட்டு உசிலம்பட்டி உயர்நிலைப் பள்ளியில் படித்தேன்.
பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் சேர்ந்து அங்கேயே துணை ஆசிரியராக நான்காண்டு காலம் பணிபுரிந்தேன். பிறகு அதை விட்டுவிட்டு சென்னை சட்டக் கல்லூரியில் படிக்க வந்தேன். படிப்பு முடிந்ததும் பிரபல வழக்கறிஞராக இருந்த மோகன் குமாரமங்கலத்திடம் ஆறு ஆண்டு காலம் ஜூனியராக பணிபுரிந்தேன்.
அப்போது வழக்கறிஞர் வேலையை விட்டுவிட்டு முழு நேர ஊழியராகப் பணியாற்ற கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அழைத்தார்கள். அதை ஏற்றுக் கொண்டு முழு நேர ஊழியரானேன். இதுதான் கிராமப்புறத்தில் இருந்து கிளம்பி சென்னை வரைக்கும் நான் மாறிவந்த வெவ்வேறு படிநிலைகள்.
கம்யூனிச இயக்கத்தில் இணைவதற்கு உங்களுடைய குடும்பச் சூழல் எந்த விதத்தில் தூண்டுதலாக இருந்தது?
கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு பற்று உண்டானதற்குக் காரணம், என்னுடைய தந்தை, வெள்ளைக்கார அதிகாரிகள் உள்பட பல அதிகாரிகளுடன் மோதிய உறுதியான நிலைப்பாடு. உலகப் போர் பற்றி, சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி எங்களுக்கும், ஊர் மக்களுக்கும் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்வார் அப்பா. இதையெல்லாம் வைத்து கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது எனக்கு மதிப்பு கூடியது. அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உண்டானது.
கம்யூனிசப் பத்திரிகைகளோ, புத்தகங்களோ அப்போது படிக்கக் கிடைத்ததா?
அப்போது தினப் பத்திரிக்கையாக ‘சுதேசமித்திரன்’ வந்தது மட்டும் நினைவிருக்கிறது. வாரப் பத்திரிகைகளும் குறைவுதான். அப்போது கம்யூனிஸ்ட் பத்திரிகைகளும், துண்டுப் பிரசுரங்களும் படிக்கக் கிடைக்கவில்லை.
உசிலம்பட்டி பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என்னுடைய மூத்த அண்ணன் செல்லப்பாவும் அவருடைய நண்பர்களும் விடுமுறைக்கு எங்கள் வீட்டிற்கு வருவார்கள்.
வீட்டிற்கு வந்தால் பொழுதுக்கும் பொதுவுடமையைப் பற்றிய பேச்சுத்தான். உலகம் முழுக்க விரிந்திருக்கும் அதன் வீச்சு பற்றிப் பேசுவார்கள். பொதுவுடைமை இயக்க வரலாற்றைக் கதை மாதிரி கேட்டுக் கொண்டிருப்போம். அந்த விதத்தில் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கியவர் அண்ணன் செல்லப்பா தான். ஆனால் விசித்திரம் என்னவென்றால் என்னை அவர் கம்யூனிஸ்ட் ஆக்கிவிட்டு அவர் வேலைக்குப் போய் விட்டார். நானும் என்னுடைய இன்னொரு சகோதரர் சீனியும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தோம்.
கட்சியில் எப்படி வேலை செய்வது என்று அப்போது எங்களுக்குத் தெரியாது. உசிலம்பட்டியில் உள்ள 20 இளைஞர்கள் சேர்ந்து இயங்கினோம். அதற்குள் 1948ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. இருந்தும் அது குறித்து எங்களுக்கு பயமில்லை. சுவர் எழுத்துக்களை எழுதி, துண்டறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தோம். ஊர் மக்களிடம் இருந்து பாராட்டு கிடைத்தது.
காவல்துறையினர் எப்படி எடுத்துக் கொண்டார்கள்?
அவர்கள் தொடர்ந்து எங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். எங்களைக் கைது செய்தார்கள். கைதாகி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, நீதிபதி என்னுடைய வயதையும் உயரத்தையும் பார்த்துவிட்டு, “இவ்வளவு சிறு பையனைக் கொண்டு வந்திருக்கிறீர்களே” என்று போலீசாரிடம் கேள்வி கேட்டார்.
என்னிடம் திருக்குறளை வைத்து “மகன் தந்தைக்காற்றும் உதவி பற்றி வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார்?” என்றார் நீதிபதி. உடனே நான் சரியான திருக்குறளைச் சொன்னதும் அவருக்கு மகிழ்ச்சி. “நீ இப்போது நேரடியாகப் பள்ளிக்குப் போகலாம்” என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டார். ஒரு திருக்குறள் தான் எனக்கு விடுதலையை வாங்கிக் கொடுத்தது.
அப்போது நான் படித்துக் கொண்டிருந்த வகுப்பு எஸ்எஸ்எல்சி. என்னை விட்டு விட்டாலும் என் மூத்த அண்ணனை 15 நாட்கள் காவலில் வைத்து விட்டார்கள்.
அதற்குப் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு வந்தபோது, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. தோழர் ஆர்.எச்.நாதன், எஸ்.நாராயணன் போன்றோர் கம்யூனிச இயக்கத்தைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார்கள். கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றிய புத்தகங்களும் கிடைக்கத் துவங்கி விட்டன. அப்படி முதலில் நான் படித்த புத்தகம் ரஜினி பாமிதத்தின் ‘இன்றைய இந்தியா’. அப்போது அதை முழுமையாகப் புரிந்து கொண்டேன் என்று சொல்ல முடியாது. ஒருவித பக்தியின் காரணமாகப் படித்தேன்.
பிறகு ஆர்.எச்.நாதன் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைப் படித்தேன். அந்தப் பருவத்தில், அதன் ஆழமான அர்த்தங்கள் அவ்வளவு புரியவில்லை. ஆனால் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் இருந்தது. அதே சமயம், மார்க்ஸ், லெனின் போன்றோர் எழுதியதையெல்லாம் கற்றுத் தேர்ந்து நான் கம்யூனிஸ்டாக மாறவில்லை.
என் கிராமத்தில் என்னைச் சுற்றி இருந்த மக்கள் பட்ட பாடும், வறுமையில் குழந்தைகளைக் கூட வளர்க்க முடியாமல் பட்ட பாடும் தான் என்னைக் கம்யூனிஸ்டாக மாற்றியது.
இந்தச் சமயத்தில் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட வேண்டும். கிராமத்தில் எங்களுடைய குடும்பம் மத்தியதர வர்க்கக் குடும்பம். எங்களுக்குக் கொஞ்சம் நிலம் இருந்தது. என்னுடைய அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்களாகப் பணியாற்றியதால் எங்களுடைய வீட்டில் எப்போதும் அரிசிச் சோறு தான் சமைப்பார்கள்.
இதையெல்லாம் சொன்னால் சிலருக்கு விசித்திரமாக இருக்கும். ஆனால் அப்போது எங்கள் கிராமத்தில் அரிசிச் சோறு சாப்பிட்ட குடும்பங்கள் இரண்டே இரண்டு தான். மற்றவர்கள் அனைவரும் கம்பு, சோளம், கேழ்வரகைக் குத்திப் புளிக்க வைத்துக் கூழாகவோ, களியாகவோ சாப்பிடுவார்கள். சில குடும்பங்கள் அதற்கும் சிரமப்படும். பார்க்கப் பாவமாக இருக்கும்.
இரவில் எங்களுக்குச் சோறு போடுகிற போது பக்கத்தில் சிறுசிறு கிண்ணங்களில் சோறு வைத்திருப்பார் எங்கள் அம்மா. பக்கத்து வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு சோளத்தையோ, கம்பையோ கொடுக்க முடியாது என்பதால் சோற்றுக்காக சிறு கிண்ணத்தை எங்கள் வீட்டில் வைத்திருப்பார்கள். அதைக் குழந்தைச் சோறு என்று சொல்வார்கள்.
சோறு, கொஞ்சம் பருப்பு வைத்து எங்க அம்மா கொடுத்து அனுப்பும் போது, “ஏம்மா… அவங்க வீட்டில் சோறு சமைக்க மாட்டார்களா?” என்று நாங்கள் கேட்டதும், அவர்கள் வீட்டில் உள்ள சூழ்நிலையில் அரிசிச் சோறு சமைக்க வழி இல்லை என்று விளக்கிச் சொன்னார் அம்மா. சொன்னதும் நெகிழ்ந்து போனோம். இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு விதமான நெருப்பை என் நெஞ்சத்தில் வளர்த்தது.
காலையிலிருந்து வயலில் கடுமையாக உழைக்கிற விவசாயிகள், தங்கள் குழந்தைகளுக்கான சோற்றுப் பருக்கைகளுக்காக அடுத்த வீட்டில் போய் நிற்க வேண்டி இருக்கிறதே என்கிற வேதனைக்கான தீர்வு என்ன என்று யோசனை வரும். இதையெல்லாம் மாற்ற முடியும். சில நாடுகளில் மாற்றியிருக்கிறார்கள். நம் நாட்டில் மாற்ற முடியும். எல்லோருக்கும் உணவு கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை உருவாக்குகிறபடி எங்களுக்கு வகுப்புகள் எடுப்பார் எங்க அண்ணன்.
மரத்தடியில் நடந்த அந்த வகுப்பில் 60 பேர் வரை கலந்து கொண்டிருக்கிறோம். ரகசியமாக நடக்கிற அந்தக் கூட்டத்திற்கு தோழர் கார்த்திகைவேலுவும் வந்து வகுப்பு எடுப்பார். தோழர் கே.பி.ஜானகியம்மாவின் கணவர் குருசாமியும் எங்களை வழிநடத்தினார். எங்களுடைய வீட்டில் தான் தங்கி இருந்தார் அவர். என்னிடமும் என்னுடன் இருந்த பலரிடமும் கம்யூனிச இயக்க உணர்வை உருவாக்கியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு.
காரைக்குடிக்கு நான் வந்த பிறகு கம்யூனிஸ்ட் புத்தகங்களுடன் கம்யூனிச எதிர்ப்புப் புத்தகங்களும் சேர்ந்து எங்களை வளர்த்தெடுத்தன. 1953ல் நான் கட்சியின் அங்கத்தினரானேன். ஆனால் அனுதாபியாக 1947ல் இருந்தே இயங்கினேன்.
ஜீவானந்தம் போன்ற தலைவர்களுடன் எப்போது தொடர்பு ஏற்பட்டது?
காரைக்குடியில் நடக்கும் கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காக ஜீவா அங்கு வருவார். அப்போது அவர் எம்.எல்.ஏ-வாக இருந்தார். அவருடன் பழகக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. உண்மையிலேயே பிறவித் தலைவர் என்று அவரை சொல்லவேண்டும். இயல்பாகவே அவர் என்னை ஈர்த்தார். மாறுபட்ட அவருடைய எளிமை, அவருக்கு இருந்த புலமை, யாரிடமும் அகங்காரம் இல்லாமல் சமமாகப் பழகுகிற போக்கு, பிறரைத் தட்டிக்கொடுத்து வளர்க்கிற போக்கு எல்லாமே அவருக்கே உரித்தான பண்புகள்.
இதையெல்லாம் மீறி அவருடைய செயல்பாடுகளில் உண்மை துலங்குவதை உணர முடிந்தது. யாரிடமும் வலிந்து ஒரு விதமான இடைவெளியை உருவாக்கிக் கொள்ளாத தலைவர் அவர். அவருடனான தோழமையில் அவரது இறுதி மூச்சு வரை சிறு கீறல் கூட விழவில்லை. பொது வாழ்க்கையில் ஒருவர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தவர் அவர்.
தோழர் பி.ராமமூர்த்தியிடம் நன்றாகப் பழக முடிந்தது. அன்பாகப் பழகுவார். வாதாடுவதில் வல்லவர். அவரையும் மிகவும் பிடிக்கும். பிறகு கல்யாணசுந்தரம் பழக்கமானார். பாலதண்டாயுதம் விடுதலையாகி வந்த பிறகு, அவரும் நானும் சேர்ந்து ஒரே குழுவில் வேலை செய்தோம். மாவட்டக் குழுவிலும், மாநில அளவிலும் ஒரே மட்டத்தில் இருந்தோம். தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு சேர்ந்து போனோம்.
அப்போது திராவிட இயக்கங்கள் வளர்ந்த காலகட்டம் அல்லவா?
அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு முன்பே பொதுவுடமை இயக்கத்தில் எனக்கு ஈடுபாடு கூடிவிட்டது. திராவிட இயக்கத்தினர் நல்ல தமிழில் பேசினார்கள், எழுதினார்கள். இருந்தாலும் அதுதான் இறுதித் தீர்வு என்று நான் ஒரு நாளும் அதன் பக்கம் சாயவேயில்லை.
பெரியாருடைய கூட்டங்கள் ஒன்றிரண்டைத் தான் கேட்டேன். அவருடைய ஒரு கூட்டத்தைக் கேட்ட மாத்திரத்தில் அவர் ஒரு புரட்சிக்காரர் என்கிற எண்ணமே எனக்குள் பதிந்தது. அவர் ஒரு மேடைப் பேச்சாளர் மட்டுமல்ல; சமூக மாற்றத்தைப் பற்றி யோசிக்கிற மனிதர் என்கிற மதிப்பும் அவர் மீதிருந்தது.
நான் சென்னைக்கு வந்த பிறகு அவருடன் பழகும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அவருடன் சேர்ந்து சில கூட்டங்களில் பேச வாய்ப்புக் கிடைத்தது. என்னைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.
இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துத்தான் என்னுடைய பிரச்சாரம் அமைந்ததேயொழிய அவர்களின் சார்பாக நான் பேசியதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வேகமாக வளர்ந்துகொண்டிருந்தபோது அவர்களை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டேன்.”
-மணா
2006, டிசம்பரில் வெளிவந்த ‘ஆளுமைகள், சந்திப்புகள், உரையாடல்கள்’ நூலிலிருந்து.
25.02.2021 12 : 30 P.M