புதுவை அரசியல்: பதவி விலகிய நாராயணசாமி!

கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் நீடித்துவந்த பரபரப்பு அரசியல் முடிவுக்கு வந்திருக்கிறது.

கிரண்பேடி நீக்கத்திற்குப் பிறகு தமிழிசை சௌந்தரராஜன் கூடுதல் ஆளுநராக வந்ததும் இலையுதிர்காலத்தைப் போல சில எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தார்கள். அவர்களில் காங்கிரஸோடு சேர்ந்து தி.மு.க எம்.எல்.ஏ.வும் பதவி விலகியிருந்தார்.

இந்த நிலையில் இன்று புதுச்சேரியின் சட்டமன்றச் சிறப்புக்கூட்டம் நடந்தது. அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்ய முதல்வர் நாராயணசாமி “புதுச்சேரியில் காங்கிரசுக்குப் பெரும்பான்மை பலம் உள்ளது. ஆட்சியைக் கவிழ்க்கச் சதி நடக்கிறது” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி தலைமையிலான ஆட்சிக்குப் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்படவில்லை.

வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து அரசு பெரும்பான்மையை இழந்ததாக அறிவித்தார் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து.

இதையடுத்து சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“புதுச்சேரி அமைச்சரவையில் உள்ள அனைவரும் ராஜினாமா செய்திருக்கிறோம். இனி முடிவு செய்ய வேண்டியது ஆளுநர் தான்.  நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்க உரிமையில்லை.

ஆனால் நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் எங்களுடைய ஆட்சியைக் கலைத்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தகுந்த தண்டனை கொடுப்பார்கள்”.

கிரண்பேடி போய் தமிழிசை வந்ததும் புதுவையில் இப்படி நடக்கப்போகிறது என்பது பரவலாகத் தெரிந்திருந்தும், அடுத்து என்ன செய்யப் போகிறார்கள்?

தமிழிசைக்கு நிஜமாகவே கூடுதல் பொறுப்பு தான்!

22.02.2021 12 : 40 P.M

You might also like