‘லைவ் டெலிகாஸ்ட்’: போதும் பேயாட்டம்!
தனது ஒவ்வொரு படைப்பையும் இயக்குனர் வெங்கட்பிரபு எப்படி குறிப்பிடுவார் என்றறிவது மிகச்சுவாரஸ்யமான விஷயம். தற்போது, அவரது இயக்கத்தில் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது ‘லைவ் டெலிகாஸ்ட்’. வெங்கட்பிரபு சீரிஸ் எனும் சொல், அவரது பாணியில் ஒரு அட்டகாசமான ஹாரர் த்ரில்லரை பார்க்கப்போகும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
அவரது மாஸ் என்கிற மாசிலாமணி படமே மனம் திருப்தியுறாமல் திரியும் ஆன்மாக்களைப் பற்றியதாக இருக்கும். அதிலிருந்து வேறுபட்டு, ‘நேரலை நிகழ்ச்சியில் பேயின் அட்டகாசம்’ என்ற எண்ணத்தை ஊன்றியது ட்ரெய்லர்.
இதற்கேற்ப ‘லைவ் டெலிகாஸ்ட்’ அமைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு ‘ப்ச்’ என்றுதான் உதட்டை பிதுக்க வேண்டியிருக்கிறது.
நேரலையில் பேய்!
நம் டிவி எனும் தொலைக்காட்சியில் ‘டார்க் டேல்ஸ்’ என்ற அமானுஷ்ய நிகழ்ச்சியை இயக்கி வருகிறார் ஜெனிஃபர் (காஜல் அகர்வால்). திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்ட, உண்மையான நிகழ்வை திரித்துக் காட்டத் தயங்காதவர்.
ஒருமுறை ‘சித்தரிக்கப்பட்ட காட்சிகள்’ என்று டார்க் டேல்ஸில் இடம்பெற்ற காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. பெண்களைத் தவறாகக் காட்டுவதாகக் கூறி எதிர்ப்புகள் பெருக, அந்நிகழ்ச்சி கைவிடப்படுகிறது.
இதனால், அந்த டீம் மொத்தமும் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகம் கடிக்கிறது.
இந்தச் சூழலில், மீண்டும் அதே சேனலில் அதேபோன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி வெற்றி காணத் துடிக்கிறார் ஜெனிஃபர். தனது உதவியாளர் சொன்ன ஐடியாவை வைத்துக்கொண்டு, சற்றே வேறுபட்டு ஒரு அமானுஷ்ய நிகழ்ச்சியை தர முடிவெடுக்கிறார்.
நேரலையில் பேயைக் காட்ட வேண்டுமென்ற நோக்கத்துடன் ‘பேய் ஒரு நேரடி ஒலிபரப்பு’ என்று அந்நிகழ்ச்சிக்குப் பெயரிடப்படுகிறது.
ஒரு மலைக்கிராமத்தில் தனது மகன், மகளுடன் வசிக்கிறார் செண்பகம் (பிரியங்கா). வீட்டில் நிகழும் அமானுஷ்யமான விஷயங்களையும், அந்த வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தாங்கள் தவிப்பதையும் ஜெனிஃபரின் உதவியாளரிடம் அவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.
ஜெனிஃபர் டீம் மொத்தமும் அந்த வீட்டில் போய் இறங்குகிறது. நேரலை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர், நிகழ்ச்சி வடிவமைப்பாளர் பார்வையில் அந்த வீடு மாற்றப்படுகிறது. ஒருவேளை பேய் வராவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில், இரண்டு துணை நடிகர்களுக்கு பேய் வேஷம் போடப்படுகிறது.
இதன்பிறகு நேரலை நிகழ்ச்சி தொடங்க, அதைச் சீண்டும்விதமான காரியங்கள் நிகழ, பேய் என்னென்ன அட்டகாசங்களை செய்கிறது என்பது எபிசோடுகளாக நீள்கிறது.
‘நோ லாஜிக், ஒன்லி மேஜிக்’ பார்முலாவில் அமைந்த கதை என்றாலும், பார்த்துக் கொண்டிருக்கும்போதே சந்தேகங்கள் பெருகுவது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது பெருங்குறை.
நட்சத்திரக் குவியல்!
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், கலை இயக்குனர் விதேஷ், இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன், படத்தொகுப்பு மேற்பார்வை பிரவீன் கே.எல். என்று தனது முந்தைய படத்தின் வெற்றிக் கூட்டணியுடன் இதில் களமிறங்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. அதற்கேற்ப, முதலிரண்டு எபிசோடுகள் பிரமிப்பை தருகின்றன.
ஐஸ்வர்யாவின் எழுத்தில் அமைந்த ‘ஆராரிரோ நான் பாடவே’, ‘நாம் இன்று நான் ஆனதே’ பாடல்கள் மனதோடு ஒட்டிக்கொள்கின்றன.
வெங்கட்பிரபு இயக்கிய ‘சரோஜா’வில் நாயகியாக நடித்தவர் காஜல் அகர்வால். சில ஆண்டு கால இடைவெளிக்குப்பின், கிட்டத்தட்ட அதே தோற்றத்துடன் இதிலும் வலம் வருகிறார்.
ஜெனிஃபர் பாத்திரத்தின் சகாக்களாக வைபவ், ஆனந்தி, டேனியல் போப், அஸ்வின், ஹரி, சிவ், சுபா, மல்லிகா, பிளேடு சங்கர் உள்ளிட்டோர் வருகின்றனர். பிரியங்கா, சுப்பு பஞ்சு, சுனில், செல்வாவுடன் பிரேம்ஜியும் இரண்டு காட்சிகளுக்கு வந்து போகிறார்.
வைபவும் ஆனந்தியும் மட்டுமே சில காட்சிகளில் நிறைந்திருக்கின்றனர். பிளேடு சங்கர் லேசுபாசாக சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்.
மற்ற நட்சத்திரங்கள் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், தங்கள் பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கின்றனர். ‘சீதக்காதி’யில் வந்த சுனிலும், நடிகர் செல்வாவும் திரைக்கதையில் வீணடிக்கப்பட்டிருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
எவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தாலும், ஒவ்வொருவரது முகத்தையும் நினைவில் இருத்தும் வகையில் காட்சிகளை அமைப்பது வெங்கட்பிரபுவின் சிறப்பு. இதில், அது பெருமளவில் மிஸ் ஆகியிருக்கிறது.
திரைக்கதையில் ஒவ்வொரு பாத்திரத்துக்குமான தனித்துவத்தை வைத்து நகைச்சுவையை தெளிப்பது வெங்கட்பிரபு ஸ்டைல். தவிர, இதுவரை தமிழ் சினிமாவில் இருந்துவரும் விஷயங்களை போகிற போக்கில் கிண்டலடிப்பதும் வெங்கட்பிரபுவின் வழக்கம்.
குறைந்தபட்சம், கங்கை அமரனின் ‘ஊருவிட்டு ஊருவந்து’ படத்தை ரெபரென்ஸ் எடுத்துக்கொண்டு ஏதேனும் காமெடி செய்வார் என்று எதிர்பார்த்தால், அதுவும் பொய்த்துப் போயிருக்கிறது.
பெருவெற்றி பெற்ற வெப்சீரிஸ்கள் உருவாக்கிய சட்டகத்தினுள் அடைபடாமல், சீரியல் பாணியில் திரைக்கதை நகர்கிறது. தொடக்கமும் முடிவும் மட்டும் ‘பெப்’ ஏற்ற, நடுவே சவசவத்துப்போன காட்சிகள் ‘பெப்பே’ காட்டுகின்றன.
திரைக்கதையில் வரும் பேய் எப்படிப்பட்டது என்பதை அறிவதில் பார்வையாளர்களுக்கு எவ்விதக் குழப்பமும் ஏற்படக் கூடாது. ஆனால், இதில் அக்குழப்பம் மலையெனப் பெருகி நிற்கிறது.
குழப்பமான பேய் வடிவமைப்பு!
வெற்றிகரமான ஹாரர் படங்களில் ‘பேய்’ குறித்த வடிவமைப்பு கச்சிதமாக இருக்கும். அதன் அடிப்படையான குணம், நோக்கம், பழி வாங்குவதற்கான காரணம் திரைக்கதையின் ஆரம்பத்திலேயே சொல்லப்படும். திரைக்கதை நெடுக, அது மேலும் மேலும் விரியும்.
‘பேய் ஒரு நேரலை ஒலிபரப்பு’ நிகழ்ச்சியில் பணிபுரியும் அனைவரும் அந்த வீட்டில் போய் இறங்கியபோதும், அங்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போதும் பேய் தேமேவென இருக்கிறது.
அதனைச் சீண்டும்விதமான கேள்விகளை கேட்ட ஜெனிஃபரை விட்டுவிட்டு மற்றவர்களை பாடாய்படுத்தும்போது, ‘அம்மாஞ்சி பேய்னாலும் ஒரு லாஜிக் வேண்டாமா’ என்று வடிவேலு குரலில் கதறத் தோன்றுகிறது.
பேயாக வரும் அஸ்வின் பாத்திரத்துக்கான பிளாஷ்பேக் பிரியங்கா குடும்பத்தினருடன் எளிதாக தொடர்புபடுத்தப்பட்டாலும், திரைக்கதையில் நிகழும் அட்டகாசங்களுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாததாக இருக்கிறது. இந்த பிளாஷ்பேக்கை கொஞ்சம் நீட்டித்து, ஒவ்வொரு எபிசோடின் தொடக்கத்தில் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கதையில் வரும் சிறுவன் கதாபாத்திரம் வைபவை நோக்கி ‘கொன்னுடுவேன்’ என்று சைகை காட்டுவதும், அதன்பிறகு அச்சிறுவனை தூக்கிக்கொண்டு வைபவ் வீட்டை விட்டு வெளியேற முயல்வதும் ‘என்ன காரணத்துக்காக’ என்பது திரைக்கதையில் விளக்கப்படவே இல்லை.
ஆனந்தியின் உயிருக்கு ஆபத்து என்பதை முன்கூட்டியே அறிந்து வைபவ் காப்பாற்றும் காட்சியும் கூட, மொத்த திரைக்கதைக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒரு நேரலை நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கு முன்பாக நிகழும் களேபரமும் மெனக்கெடலும் வெங்கட்பிரபு குழுவினர் புகுந்து விளையாடியிருக்க வேண்டிய இடங்கள். அதனை ‘ஜஸ்ட் லைக் தட்’ தாண்டி வந்துவிட்டு ‘டிஆர்பி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது ‘வ்வ்வ்’ என்றிருக்கிறது.
வெப்சீரிஸ் கதை சொல்லலில் ஆங்காங்கே காட்டப்படும் முடிச்சுகள், எதிர்பாராத தருணத்தில் அவிழ்க்கப்பட வேண்டுமென்பது எழுதப்படாத விதி. ‘லைவ் டெலிகாஸ்ட்’டில் அம்முடிச்சுகள் கடைசிவரை இறுகியவாறே இருக்கின்றன.
ஹாரர் படத்துக்கான சிலிர்ப்பையும் வெங்கட்பிரபு படங்களுக்கான நகைச்சுவையையும் ஒருசேர உணர வேண்டுமென்ற ஒரு ரசிகனின் எதிர்பார்ப்பை பொய்யாக்கியிருக்கிறது ‘லைவ் டெலிகாஸ்ட்’. பெண் குழந்தைகளைத் தொடர்ந்து பெற்றவர்கள் ‘போதும் பொண்ணு’ என்று பெயரிடுவதுபோல, ஏதேனும் ஒரு இயக்குனர் ‘போதும் பேய்’ என்றொரு படைப்பைத் தந்தால் நன்றாக இருக்கும்.
– பா.உதய்
22.02.2021 12 : 55 P.M