அரசியல்வாதிகளுக்கும் தேர்வு வையுங்கள்!
வாசிப்பின் ருசி:
“எல்லாவற்றுக்கும் தேர்வு இருக்கிறது. இந்திய ஆட்சிப்பணி, குடிமைப் பணி, காவல்துறை உயர் அதிகாரிப்பணி என அனைத்திற்கும் தேர்வு நடத்தப்படுகிறது.
இவ்வளவு வடிகட்டுகிறார்களே.. இதையெல்லாம் தீர்மானிக்கிற, நிர்வகிக்கிற தலைவர்களுக்கு எந்தத் தேர்வும் இல்லையே…
சமூகம், அறிவியல், பொருளியல், இலக்கியம், வரலாறு, உலக அறிவியல், உலக அரசியல், வேளாண்மை – இவை எல்லாம் உள்ளடக்கிய பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கி அமைச்சர் பதவி ஏற்பவருக்குத் தேர்வு வைக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம். நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம்.
ஆனால் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டுமென்றால் இந்தத் தேர்வை எழுத வேண்டும். தலைமையேற்று நிர்வாகம் செய்கிற அமைச்சர்கள் எல்லோரும் கட்டாயமாக ஒரு தேர்வெழுத வேண்டும் என்பது தான் நியாயமாக இருக்கும்.
பல பேர் இங்கு பார்த்து எழுதினால் கூட தேர்வில் தேர்ச்சி பெற மாட்டார்கள்.
எனவே தேர்வு கொண்டு வாருங்கள்.
தேர்வில் தோற்றுப்போனால் வெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருக்கட்டும்.
இப்படிச் செய்தால் ஒரு தேசத்தின் குடிமக்களுக்கு அறிவார்ந்த தலைவன் கிடைத்து விடுவான்.
ஏனெனில் இவர்களுக்குப் பொருளாதாரம் என்றால் என்னவென்று தெரியவில்லை. அறிவியல் என்றால் என்னவென்று தெரியவில்லை. இலக்கியம், வரலாறு எதுவும் தெரியவில்லை.
ஒட்டுமொத்த நாட்டையும் நிர்வகிக்கிறவர்களுக்கு ஆகப் பெரும் அறிவும், அனைத்துப் புரிதலும் அவசியம் எனக் கருதுகிறேன். அரசியலில் ஈடுபடுகிறவர்கள் அனைத்தையும் படிக்க வேண்டும்.”
- 2021 பிப்ரவரி மாதம் வெளிவந்துள்ள ‘அந்திமழை’ மாத இதழில் புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து “அரசியல்வாதிகளுக்கும் தேர்வு வையுங்கள்” என்ற தலைப்பில் நாம் தமிழர் இயக்கத் தலைவரான சீமான் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
நன்றி: அந்திமழை
15.02.2021 2 : 59 P.M