“கண்களைத் திறந்து பாருங்கள்” – ஓஷோ

பரண்:
“என்னவொரு மகிழ்வுப் பெருக்கு,
இந்தக் கொடை நதியைக் கடந்து செல்கையில்
கால் செருப்புகளைக் கையில் ஏந்தியபடி!”
-கவிஞர் பாஷோ

ஞானம் அடைந்த ஒருவனுக்கு ஒவ்வொரு அசைவும் அதிசயமாகவும், புதிராகவும் ஆகிவிடுகிறது.

சாதாரண விஷயம் கூட அவனுக்கு அப்படித்தான்!

நீ சொல்வாய்.

“கைகளில் செருப்பை எடுத்துச் செல்வதில் என்ன அதிசயம் இருக்கிறது? கோடை கால நதி வறண்டு கிடக்கும். அதில் என்ன பெரிதாக மகிழ்ச்சி இருக்கப் போகிறது?”

ஆனால் ‘ஜென்’னைப் பொறுத்த வரையில், அது மிகவும் குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியாக இருப்பதற்குப் பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை. காலணிகளைக் கைகளில் தூக்கியபடி கோடை நதியைக் கடந்து போகையிலும், மாபெரும் ஆனந்தம் அங்கே பெருக்கெடுக்கும்.

உனது மகிழ்ச்சியானது காரண காரியங்களின் அடிப்படை கொண்டதாக இருந்தால், அந்தக் காரண காரியங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முயற்சி செய்வாய். ஏனெனில் அந்தக் காரண காரியங்கள் விலகும்பொழுது உனது மகிழ்ச்சியும் சேர்ந்து விலகிப் போய் விடும்.

எந்தக் காரணங்களும் அற்று நீ மகிழ்வாக இருந்தால், நீ இயல்பாகவே மகிழ்வு நிரம்பியவனாக இருப்பாய்.

நீ எதற்கும் அடிமையாக இருக்க மாட்டாய்.

காரணங்களற்று மகிழ்ந்திருக்கையில் நீ அன்பால் மிகுந்திருப்பாய்.

ஏசு சொன்னார்,
‘தட்டுங்கள் திறக்கப்படும்’.

நான் சொல்கிறேன்,
“கதவு திறந்து தான் இருக்கிறது. கண்களைச் சற்று திறந்து பாருங்கள்”

-ஓஷோவின் ‘கடவுள் இறந்துவிட்டார். இப்போது ஜென் மட்டுமே வாழும் உண்மை’ என்னும் சொற்பொழிவிலிருந்து ஒரு பகுதி.

09.02.2021  10 : 50 A.M

You might also like