“பொது எதிரியை வீழ்த்த ஒற்றுமையோடு செயல்படுவோம்”

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு சொகுசு விடுதியில் இருந்து ஆதரவாளர்கள், தொண்டர்களுடன் புறப்பட்டு, நேற்று மாலை தமிழகத்திற்கு வந்தார்.

அதன்பின் சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம், ஜானகி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வழிநெடுகிலும், அவருக்கு அ.ம.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் கட்சிக் கொடிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, “அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை. தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நான் அடிமை. அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன்.

தொடர்ந்து, தீவிர அரசியலில் ஈடுபடுவேன். விரைவில் எல்லோரையும் சந்திப்பேன். அவசரமாக ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது மக்களுக்குத் தெரியும். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு செல்வேனா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். என் மீது பயம் என்பதால், புகார் கொடுத்திருக்கின்றனர். விரைவில் மக்களைச் சந்திப்பேன்.

தெய்வ அருளாலும், மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அக்கா ஜெயலலிதா ஆசியாலும், கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கிறேன். ஜெயலலிதா சொன்னதுபோல, எனக்கு பின்னாலும் அ.தி.மு.க. 100 ஆண்டுகள் ஆனாலும் தழைத்தோங்கி இருக்கும் என்ற அவரது எண்ணத்தை தொடர, என் வாழ்நாள் முழுவதும் கட்சியின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்பேன்.

ஜெயலிதாவின் பிள்ளைகள், என்றும் எனக்கு பிள்ளைகள் தான். கட்சி எத்தனையோ சோதனைகளை சந்திருத்திருக்கிறது. அப்போதெல்லாம், பீனிக்ஸ் பறவையாக மீண்டு எழுந்திருக்கிறது. எம்.ஜி.ஆரின் பொன்மொழிக்கேற்ப, ஜெயலலிதாவின் வழிவந்த ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் ஒற்றுமையாக ஒரு அணியில் நின்று நம் பொது எதிரியை மீண்டும் தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர விடாமல் வீழ்த்த ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் எண்ணம், குறிக்கோள்.

நம் அரசியல் எதிரிகளின் பிரித்தாளும் முயற்சிக்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது என்பது ஜெயலலிதாவின் எண்ணம். அதைக் காப்பது நம் கடமை. எம்.ஜி.ஆர். கட்டிக் காத்து ஜெயலலிதாவின் வழியில் வெற்றிநடையுடன், வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் இயக்கம், சிலரின் சொந்த விருப்பு வெறுப்புகளால் சிதைந்து விடக்கூடாது. இந்த இயக்கம், வாழையடி வாழையாக தழைத்தோங்க, என் இறுதி மூச்சு உள்ள வரை உழைத்திருப்பேன்.

ஜெயலலிதாவின் அன்புத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, வரும் தேர்தலில் வெற்றிக்கனியை ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க உறுதியேற்க வேண்டும்” எனக் கூறினார்.

09.02.2021 12 : 10 P.M

You might also like