நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா…!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார் 
சரித்திரத்தைச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச்
சந்தியிலே எறிந்துவிட்டுத்

தன்மான வீரரென்பார்
மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்

இந்தத்  திண்ணைப் பேச்சு வீரரிடம்  ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்
(இந்தத் …)

பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம்  அந்தப்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்
(இந்தத் …)

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
சபைக்கு உதவாத வெறும் பேச்சு

கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருதவேண்டியதை மறந்தாச்சு பழங்
கதைகளைப் பேசி காலம் வீணாச்சு;
கையாலே முன்னேற்றம் கண்டாகணும்
(இந்தத்…)

நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
இன்னும்  பொம்பளைங்க ஆம்பளைங்க
அத்தனை பேரையும்வச்சு மாடா இழுக்கிறோம் வேகமா;
நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும்
(இந்தத்…)

 – 1958-ம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் நடித்து வெளிவந்த ‘பதிபக்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

14.12.2020 02 : 42 P.M

You might also like