“ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் நடந்தது என்ன?”
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் சிலரால் எழுப்பப்பட்டபோது, திருமதி.சசிகலாவின் கணவரான முனைவர். ம.நடராசன் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது – அது குறித்து ‘திரும்பிப் பார்’ (2016 செப்டம்பர்) என்கிற சிறு வெளியீட்டைக் கொண்டு வந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் அதிலிருந்து ஒரு பகுதி உங்கள் பார்வைக்கு:
“சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட குழு, அம்மாவின் (ஜெயலலிதா) உடல்நலம் மேம்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறது.
நுரையீரலில் ஏற்பட்டிருந்த தொற்றுகளை அகற்றுவதற்கான சிகிச்சை எல்லாம் முடிந்து கடந்த சில தினங்களாக செயற்கைச் சுவாசத்திற்கான தேவைகள் குறைந்துவிட்டன.
இயல்பாக அவரால் சுவாசிக்க முடிகிறது. விழிப்புடன் பத்திரிகைகளை அவரால் வாசிக்க முடிகிறது. தன்னுணர்வுடன் இயங்க முடிகிறது.
இது தான் இப்போதைய யதார்த்தமான உண்மை நிலை.
படிப்படியாக அவருடைய உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வருகையில் பலரும் எழுப்புகிற முக்கியமான கேள்விக்கான பதிலையும் இங்கு சொல்லியாக வேண்டும்.
“அம்மா அவர்களின் உடல் நிலை சீராக முன்னேற்றம் அடைகிறது என்று சொல்கிறபோது, அவர்களைப் பார்க்க முக்கியமானவர்களை ஏன் அனுமதிக்கவில்லை?” – இது சிலர் எழுப்பும் கேள்வி.
அம்மாவின் உடல்நிலை தேறி வருகிறது. விரைவில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்பது தான் அவரைக் கவனித்துக் கொண்டிருக்கும் டாக்டர்கள் அனைவரின் கருத்தும் கூட.
ஆனால் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற இந்தச் சமயத்தில் அவரைப் பார்க்கப் பலரையும் அனுமதிப்பது இன்னொரு விதத்தில் நோய்த் தொற்றுகள் உருவாக வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என்பதாலேயே அவரை, மற்றவர்கள் சந்திப்பது தவிர்க்கப்பட்டது.
இதுதவிர அம்மாவைப் படுக்கையில் பார்க்க நேர்கிறவர்கள் உணர்ச்சிவயப்பட்டு எதிர் வினையாற்றுவது அம்மா அவர்களின் உடல்நலத்தைப் பாதிக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் தான் பார்வையாளர்கள் இப்போதைக்குத் தவிர்க்கப்படுகிறார்கள்.
மருத்துவக் காரணங்களைத் தவிர வேறு எந்தக் காரணங்களும் இதன் பின்னணியில் இல்லை என்பதை அம்மாவின் நலனில் அக்கறை கொண்டவர்கள் புரிந்து கொள்வார்கள்.
அதோடு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் அம்மா அவர்களை ஒரு பெண்மணியாக மற்றவர்கள் ஏன் பார்க்கத் தவறி விடுகிறார்கள்?
மருத்துவமனைக்குரிய பிரத்யேக உடையுடன் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் ஒருவர் சட்டென்று பார்வையாளர்களை இயல்பாகச் சந்தித்துவிட முடியுமா என்கிற கேள்விகளைத் தற்போது குற்றம் சாட்டுகிற யாரும் எழுப்புவதில்லை.
கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் அவருக்கு மருத்துவச் சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது 10.02.2009 அன்று முரசொலி நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இது:
“அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு முதலமைச்சர் விரைவில் நலம் பெற்றிடும் வகையில் பார்வையாளர்கள் கண்டிப்பாக ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்”.
பார்வையாளர்களைத் தவிர்க்கும் விதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பு அன்றைய முதல்வருக்குப் பொருந்தும் என்றால் இன்றைக்கு மருத்துவச் சிகிச்சை பெறும் முதல்வரான அம்மாவுக்குப் பொருந்தாதா?
அம்மாவின் நலனை உண்மையிலேயே விரும்பக்கூடியவர்கள் எங்கிருந்தோ பிரார்த்தனை செய்கிறார்கள். மனதார வேண்டுகிறார்கள். நிச்சயம் நல்ல எண்ணம் கொண்ட அந்த மகத்தான தொண்டர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வார்கள்.
அவர்களைப் போன்ற எளிய உள்ளங்களின் வாழ்த்தும், பிரார்த்தனையும் அம்மாவை விரைவிலேயே பூரண நலம் பெற வைக்கும்.
அம்மாவின் தொண்டர்கள் எது குறித்தும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
அம்மாவுக்கு மிகவும் பிடித்தமானதான அவரே குறிப்பிட்ட ஒரு பொன்மொழியை இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் நினைவு கூர்கிறோம்.
“அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை” என்கிற அப்பர் பெருமானின் பொன்மொழியே எனக்குப் பிடித்த பொன்மொழி.”
08.02.2021 03 : 24 P.M