பட்டுக் கோட்டையாரும் பழைய பேப்பரும்!
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பிறந்த நாளையொட்டி (13.04.1930) இந்த மீள்பதிவு.
பட்டுக்கோட்டையாரும் ஓ.ஏ.கே.தேவரும் ராயப்பேட்டையில் எட்டு ரூபாய் வாடகைக்கு ஒரு அறை எடுத்துத் தங்கியிருந்தார்கள். அப்போது தேவருக்கு நடிக்க வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. பட்டுக்கோட்டையாருக்கும் வாய்ப்பு இல்லை.
ஓய்வு நேரத்தில் எல்லாம் கவிஞர், கையில் கிடைத்த நோட்டுப் புத்தகங்கள், தாள்களில் எல்லாம் ஏராளமான பாடல்களை எழுதி எழுதிக் குவித்திருக்கிறார்.
ஒருநாள் பட்டுக்கோட்டையார் தேநீர் அருந்தச் சென்றிருந்தபோது, பழைய பேப்பர் வாங்கும் வியாபாரி ஒருவர் “பழைய பேப்பர்… பழைய பேப்பர்…” என்று கூவிக்கொண்டே தெருவில் போனான்.
தேவர் அவனைக் கையை தட்டி அழைத்தார். அறையில் இருந்த பழைய செய்தி ஏடுகளையும் காகிதங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் ஒன்றுவிடாமல் திரட்டி எடுத்துப் பேப்பர்காரரிடம் போட்டுவிட்டார் தேவர்.
கவிஞர் டீ குடித்து விட்டு அறைக்குத் திரும்பி வந்தார். அறை சுத்தமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை.
“எல்லா குப்பைகளையும் எடுத்துப் பழைய பேப்பர்காரனிடம் போட்டு விட்டேன்” என்று தேவர் சொன்னபோது கவிஞருக்கு ‘திக்’கென்று இருந்தது.
தாம் எழுதி வைத்திருந்த பாட்டு நோட்டுகள், காகிதங்கள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தார். எதையும் காணோம்.
“பாட்டு நோட்டுகளைக் காணோமே… எடுத்து வைத்திருக்கிறீர்களா?” என்று அவர் கேட்டபோது, தேவர், “அட போங்க… உங்க நோட்டும் நீங்களும்… உங்க பாட்டை ஒரு பட முதலாளியும் எடுத்துக் கொள்ளவில்லை… பழைய பேப்பர்காரனாவது 3 ரூபாய்க்கு எடுத்துக் கொண்டான்” என்றார் சிரித்துக் கொண்டே.
பட்டுக்கோட்டையார் பாவம்! அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. “அதில் நல்ல நல்ல பாட்டுக்கள் எல்லாம் எழுதி வைத்திருந்தேனே…” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.
“அட, அது போனால் என்ன? அதைவிட நல்ல பாட்டுக்களை உங்களுக்கு எழுதத் தெரியாதா என்ன? எழுதுங்களேன்” என்றார் தேவர்.
தேவரின் அந்த நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை. ‘படித்த பெண்’ என்ற ஒரு படத்துக்குப் பாட்டு எழுத கவிஞருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் படம் வெளிவருவதற்குள் ‘மகேஸ்வரி’ என்ற படம் கவிஞரின் பாடலோடு வெளிவந்தது. அதன்பிறகு பட்டுக்கோட்டையாரின் பாடல்களுக்குப் பஞ்சமே இல்லை. எழுதி எழுதிப் புகழ்பெற்றார்.
அத்தனை பாடல்களும் ஓ.ஏ.கே. தேவர் குறிப்பிட்டது போல ‘இன்னும் நல்ல பாட்டுகள்’. ஒன்றை ஒன்று மிஞ்சும் படியான இன்னும் இன்னும் நல்ல பாடல்கள்.
சின்னக்குத்தூசியின் ‘எத்தனை மனிதர்கள்’ நூலிலிருந்து…
28.01.2021 03 : 23 P.M