குழந்தைப் பருவ உடல் பருமனைத் தவிர்ப்பது எப்படி?

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் காரணமாக இருந்தாலும், உணவுப் பழக்கம், குடும்பப் பாரம்பரியமும் உடல் பருமனுக்கு காரணமாக இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

முந்தைய ஆய்வுகளிலும் மரபணு மாதிரிகள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் அதிகபட்ச உடல்பருமனுக்குக் காரணமாக இருக்கின்றன.

பிலடெல்பியாவின் குழந்தைகள் மருத்துவமனை புதிய ஆய்வில் பொதுவான உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் டி.என்.ஏ.வை சேகரித்து வைத்திருக்கிறது.

இதுதொடர்பான தகுந்த புள்ளிவிவரங்கள் மரபணு சமிக்ஞைகளை கண்டறிய உதவும். அவர்கள் மிகப்பெரிய சர்வதேச கூட்டமைப்பை உருவாக்கி, உலகம் முழுவதும் உள்ள முடிவுகளை ஒருங்கிணைக்கிறார்கள்.

இந்த ஆய்வுக்கு அமெரிக்காவின் ‘நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹெல்த்’ நிதியுதவி செய்கிறது. ஐரோப்பிய, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்க அமைப்புகளும் ஆய்வுக்கு ஆதரவு அளிக்கின்றன.

இந்த ஆய்வு குழந்தை உடல்பருமன் பிரச்சினையில் புதிய பாதைகளை திறந்து வைத்திருப்பதாக பிலடெல்பியா குழந்தைகள் மருத்துவமனையில் ஜினோமிக்ஸ் ஆய்வாளர் ஸ்ட்ரான் கிராண்ட் கூறுகிறார்.

தனிப்பட்ட ஒருவரின் ஜினோமை அடிப்படையாக வைத்து, குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்பருமனை முன்பே கண்டறிந்து தடுக்க முடிவதோடு, சிகிச்சையும் அளிக்க முடியும் என்று மருத்துவ உலகம் நம்புகிறது.

“இன்று குழந்தைகள் குறைவான எடை அல்லது அதிகமான எடை என இருவிதமாகப் பிறக்கிறார்கள். 2.5 அல்லது 3 கிலோ இருந்து சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

அதற்குக் கீழே மற்றும் அதற்கும் மேலே குழந்தைகள் பிறக்கிறார்கள். பெண்கள் கருவுற்றிருக்கும்போது ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் உழைப்பை கோராத பணிச் சூழல், மன அழுத்தம், அதீதமான ஆசைகள், செயற்கையான உணவுப் பொருள்கள் என பல காரணங்களைக் கூறமுடியும். அதனால் குழந்தைகள் பிறக்கும்போதே அசாதாரணமான எடையுடன் பிறக்கிறார்கள்.

கர்ப்பத்திலேயே குழந்தைகள் எப்படி வளரப்போகிறான் என்பதற்கான திட்டம் உருவாகிவிடுகிறது. புரோகிராமிங் இன் த யுட்ரஸ் என்று அதனைச் சொல்வார்கள். மழலையில் உடலில் உள்ள அணுக்கள் அதனைத் தீர்மானிக்கின்றன. இன்று 30 சதவீதக் குழந்தைகள் எடை குறைவு மற்றும் எடை அதிகமாகப் பிறக்கிறார்கள்.

நான்கு மாதங்களுக்குள்ளாகவே தாய்ப்பால் கொடுக்காமல் புட்டிப்பால் கொடுப்பது தவறு. நோய் எதிர்ப்புச் சக்தியும் மூளை வளர்ச்சியும் தாய்ப்பாலில் அதிகம். புட்டிப்பால் கொடுத்தால் குழந்தை வேகமாக வளர்ந்துவிடும். பார்வைக்கு அழகாக இருக்கும். ஆனால் அது ஆபத்தானது.

குண்டாக இருப்பதை பணக்காரத் தன்மையாக பெண்கள் நினைக்கிறார்கள். அந்த மனநிலை மாறவேண்டும். விரைவாகவே குழந்தைகளுக்குத் திட உணவை ஊட்டத் தொடங்கி விடுகிறார்கள்.

இந்தப் பழத்தைக் கொடுத்தேன், இந்தச் சாப்பாட்டைக் கொடுத்தேன் என்று ஆசையாகத் திணிக்கிறார்கள். இது மிகவும் தவறான பழக்கம். ஒரு குழந்தை எந்த அளவு சாப்பிடுமோ அதுவே அதன் எல்லை. அதன் வயதுக்கேற்ற உணவை அளிக்கவேண்டும்.

குழந்தை மீதான பாசத்தைக்காட்ட உணவை அளவாக வைத்துக் கொள்ளக் கூடாது. 1 இட்லி சாப்பிடும் குழந்தையிடம் இரண்டரை இட்லியை ஊட்டுவது. ஒரு கப் சாதம் சாப்பிடும் குழந்தையிடம் இரண்டு மூன்று கப்புகள் பலவந்தமாகக் கொடுக்கிறார்கள்.

குழந்தைகள் வளரும்போது செழிப்பாகத் தெரியலாம். ஆனால் வளர வளர அதுவே ஆபத்தாக மாறிவிடும். உடல் பருமனில் கொண்டு வந்து விட்டுவிடும். பள்ளிக்குச் செல்லும் அவர்கள் செயற்கை உணவுகள், எண்ணெய்யில் பொரித்த சிப்ஸ், முறுக்குகள் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடத் தொடங்குவார்கள். தண்ணீர் குடிக்கும் நேரத்தில் ஜூஸ் குடிப்பார்கள்.

பெற்றோர்கள் படிப்பு தொடங்கி எல்லாவற்றையும் பலவந்தமாக திணிப்பதால், அவர்கள் மற்ற நேரங்களில் செல்போன், கார்ட்டூன் சேனல் என்று மூழ்கி விடுகிறார்கள். லைஃப் ஸ்டைல், உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை இவையே உடல்பருமனுக்கான முதல் முக்கிய காரணங்களாக இருக்கின்றன” என்கிறார்கள் குழந்தைநல மருத்துவர்கள்.

உடல் பருமனால் பாதிக்கப்படும் சிறுவர், சிறுமிகள் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, நல்ல தூக்கம், பாஸ்ட் ஃபுட் போன்ற உணவுகளை தவிர்ப்பது போன்ற ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்குகிறார்கள்.

சமூக பொருளாதார காரணங்களும் குழந்தைப் பருவ உடல் பருமனுக்குக் காரணமாக அமைவதாக 2015ல் எடுக்கப்பட்ட ஆய்வு கூறுகிறது.

குழந்தைப் பருவ உடல்பருமன் வளர்ந்த மற்றும் வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகளையும் பாதிக்கிறது. நகர்ப்புற, வசதியான குழந்தைகளை உடல்பருமன் அதிக பாதிப்பதாக ஒரு கருத்தும் உலவுகிறது.மன அழுத்தம் பாதகமான செல்வாக்கைக் குழந்தைப் பருவ உடல்பருமனில் செலுத்துகிறது.

“உங்கள் குழந்தை உடல் பருமனால் பாதிக்கப்பட்டால், அது அவர்களுடைய தவறு என்று நினைக்கக்கூடாது” என்று மருத்துவர்கள் பெற்றோர்களை அறிவுறுத்துகிறார்கள்.

உடல் பருமனால் சிறுவர்களைவிட சிறுமிகளைத்தான் அதிகம் பாதிக்கிறது. குழந்தைப்பருவ உடல்பருமன் என்பது இந்தியாவில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர், சிறுமியர்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

– தான்யா

27.01.2021  12 : 45 P.M

You might also like