ரூமாட்டிக் ஃபீவர் என்றொரு இதயநோய்!

ஒரு குழந்தைக்கு, பிறப்பதற்கு முன்பே இதயம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது. குழல் போன்ற வடிவமுள்ள இதயம் எவ்வாறு முழுவடிவம் அடைகிறது என்பனவற்றைப் பார்த்தோம்.

இதயக் குறைபாடுடன் பிறக்கிறக் குழந்தைகளைத் தவிர்த்து, நல்ல இதயத்துடன் ஆரோக்கியமாகப் பிறக்கிறக் குழந்தைகளுக்கு இதய நோய் வர வாய்ப்பிருக்கிறது என்று சொல்லும்போது, கேட்பதற்குப் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஆனால், இது உண்மை!

இந்தப் பிரச்சனை அதிகமாக நிலவக்கூடிய இடங்கள் ஆசிய கண்டமும் ஆப்பிரிக்கக் கண்டமும்தான்.

சமூக அந்தஸ்தில்-வறுமைக்கோட்டிற்குக் கீழிருக்கிற குடும்பங்களில் பிறக்கிற குழந்தைகளுக்கே பெரும்பாலும் இந்த விதமான இதய நோய்கள் வருகின்றன. தனியார் மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் பார்த்தால் நூற்றுக்கு முப்பது சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது.

இதயத்தில் நான்கு வால்வுகள் இருக்கின்றன. இடது பக்கம் இரண்டும் வலது பக்கம் இரண்டும் இருக்கின்றன. இதில் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிற வால்வுகள் இடது பக்கம் இருக்கின்றன.

ஒரு வால்வை ‘மைட்ரல் வால்வு’ என்று சொல்கிறோம். இன்னொரு வாழ்வை ‘அயோர்டிக் வால்வு’ என்று சொல்கிறோம்.

இதில் ‘மைட்ரல் வால்வு’ இடது பக்கம் இருக்கிற மேலறைக்கும் கீழறைக்கும் நடுவில் இருக்கிறது. ‘அயோர்டிக் வால்வு’ இடது பக்கம் இருக்கிற மேலறைக்கும் மகா தமனிக்கும் நடுவில் இருக்கிறது.

இந்த இரண்டு வால்வுகளின் வேலையே ரத்தத்தை ஒரு வழியில் செலுத்துவதுதான். ஒரே வழியில் போனால் ரத்தம் திரும்பவும் வராது.

மேலிருக்கிற அறையிலிருந்து கீழே வந்து, கீழ் அறை சுருங்கும்போது, மேல் அறைக்கும் கீழ் அறைக்கும் இடையில் இருக்கிற வால்வு மூடிக்கொள்ளும்.

கீழ் அறைக்கும் தமனிக்கும் நடுவில் இருக்கிற வால்வு திறந்து, இதயம் சுருங்கும்போது, ரத்தம் வெளியே போய்விடும். வெளியே போனதும் அயோர்டிக் வால்வின் இதழ்கள் மூடிக்கொள்ளும். தமனியில் இருக்கிற ரத்தம் திரும்பவும் கீழ் அறைக்கு வராது. உடலுக்குத்தான் போகும்.

இந்த வால்வைத் தாக்குகிற வியாதியின் பெயர் ‘ரூமாடிக் ஃபீவர்’  (Rheumatic fever) அல்லது ‘ரூமாடிக் இதயநோய்’.

முதன் முதலில் இதயத்தைத் தாக்கக்கூடிய விதத்தில் வருவதற்குப் பெயர்தான் ‘ரூமாடிக் ஃபீவர்’. இதயம் தாக்கப்பட்டதற்குப் பிறகு ‘ரூமாடிக் இதயநோய்’ என்று சொல்கிறோம்.

இது எதனால் வருகிறது?

குழந்தைகளுக்கும் சில சமயங்களில் பெரியவர்களுக்கும் தொண்டைப்பகுதியில் எச்சிலை விழுங்கும்போது வலி ஏற்படும், கொஞ்சம் காய்ச்சல் இருக்கும், உடம்பெல்லாம் வலியெடுக்கிற மாதிரி இருக்கும். தலைவலியும் இருக்கும்.

இதற்குக் கிராமங்களில், சுண்ணாம்பை நன்றாகக் குழைத்து, தொண்டை மேல் தடவி விட்டு விடுவார்கள்.

இது வருவதற்குக் காரணம் ‘ஸ்ட்ரெப்டோகாக்கஸ்’ என்கிற பாக்டீரியா. இது தொண்டையில் பலருக்கு இருக்கிறது. அதை நாங்கள் ‘கேரியர்’ என்று சொல்கிறோம். அதாவது கிருமிகள் இருக்கும், ஆனால் வியாதி வராமல் இருக்கும்.

ஒருவர் இருமுகிறார் என்றால் அவரது வாயிலிருந்து துளிகள் பத்து அடிக்குப் போகுமாம். இவர்களுக்கு இந்தக் கிருமிகள் இருந்தால், அது மற்றவர்களுக்குப் பரவலாம்.

முக்கியமாகக் குழந்தைகள் எந்தெந்த விதத்தில் பாதிக்கப்படுகின்றன? எப்படி இந்த ‘ஸ்ட்ரெப்டோ காக்கஸ்’ கிருமிகள் அவர்களது தொண்டையைப் பாதிக்கின்றன?.

அதிகப்படியான கூட்டம் உள்ள இடங்கள், வகுப்பறைகள், கூட்டுக்குடும்பம், சிறு அறையில் நெருக்கமாக படுத்து உறங்கும் சூழ்நிலை மற்றும் ஈரமான இடங்களில் இந்தக் கிருமிகள் தொற்ற வாய்ப்புகள் அதிகம்.

அதோடு குழந்தைகளுக்கு மாவுச்சத்து இருக்கும். கொழுப்புச்சத்து இருக்கும். புரதச்சத்து இருக்காது. தேவையான வைட்டமின்கள் இல்லாத குழந்தைகளின் உடம்பில் சுலபமாகக் கிருமிகள் தொற்றுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.

அப்படி கிருமிகளால் பாதிக்கப்படும் போதுதான் அவர்களுக்குத் தொண்டை வலி வருகிறது. விழுங்க முடியாது. முக்கால்வாசி நேரங்களில் இது வந்து பத்து நாட்களில் சரியாகி விடும்.

அதனால் பலர் “இதற்கு போய் டாக்டரா?” என்று சுக்குக் கஷாயம் குடிக்க வைத்து உடம்பெல்லாம் தைலம் தடவிவிட்டு விடுவார்கள். அதோடு, வியாதி போய்விட்டது என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால் கிருமிகள் தொண்டையிலேயே தங்கியிருக்கும்.

சில குழந்தைகளுக்கு வைட்டமின் சத்து குறைந்து, போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளுக்கு இந்த பாக்டீரியாவின் அணுக்களைச் சுற்றி ஒரு சுவர் இருக்கும்.

இந்தச் சுவரிலிருந்து ஒருவித நச்சுப் பொருள் வெளிவரும். இது இதயத்திற்கு எதிரான சக்தியை உண்டு பண்ணும்.

இதற்கு ‘எம்-ஆண்டிஜன்’ என்று பெயர். இது நம் திசுவுக்கு எதிரான செயலை ஏற்படுத்துகிறது. இரண்டும் கலக்கிறபோது முதலில் தொண்டையில் வலி ஏற்படுகிறது. பிறகுதான் மூட்டுகளில் வலி ஏற்படும்.

வயதானவர்களுக்கு, அதிகமாக உழைப்பவர்களுக்கு, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுகிறவர்களுக்குக் காலப்போக்கில் மூட்டு தேய்மானம் அடைந்து வலி ஏற்படுவது சகஜம்.

ஆனால் குழந்தைகளுக்கு ஏழெட்டு வயதில் காலில் மூட்டுவலி வர வேண்டிய அவசியமே கிடையாது.

எனினும் ஓடியாடிக் கொண்டிருக்கிற குழந்தைகள், அசதியோடு வந்து கால்மூட்டுகளில் வலி ஏற்படுகிறது, என்று சொன்னால் வீட்டில் இருக்கும் பெற்றோர் அதை அலட்சியப்படுத்தி விடக்கூடாது.

அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடம்பிலிருக்கிற நோயின் அறிகுறியாக அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

பாய்டு (BOOYD) என்கிற நிபுணர் “இந்த ரூமாட்டிக் காய்ச்சல் வரும், மூட்டுவலியோடு போய்விடும். ஆனால் இதயத்தைக் கடித்து விடுகிறது” என்று சொல்லி இருக்கிறார்.

இது உண்மை, இந்த பாதிப்பு வந்த இரண்டு, மூன்று வாரங்களில் கால் மூட்டுகளில் வலி வரும். கால் வீங்கிவிடும். படுக்கையை விட்டுக் கீழே இறங்க முடியாது. காலை மடக்கவும் முடியாமல் படாதபாடு படும் அந்தக் குழந்தைகளுக்கு அவ்வளவு வலி இருக்கும். தைலம் தடவுவதால் இது போய்விடாது.

ஒரு வாரத்தில் அந்தக் குழந்தைக்கு மூச்சு வாங்கும். படபடவென்று இருக்கும். வியர்க்கும், படுக்க முடியாது. படுத்தால், பாத்ரூம் போனால் கூட மூச்சு வாங்கும். காரணம், இதய வால்வு பாதிப்படைந்திருப்பதுதான்.

கிருமிகளால் உண்டான நச்சுப்பொருள் உடலுக்கு எதிர் சக்தியை உண்டாக்குகிறது. இந்த முழு அறிகுறிகளையும் சிறு குழந்தைகளால் வாய்விட்டுச் சொல்ல முடியாது. மூட்டு வலிக்கிறது என்றுதான் சொல்லும்.

இதய வால்வுகளை எதற்கு ஒப்பிடலாம் என்று சொன்னால் அழகான ரோஜாவின் மெல்லிய இதழ்களுடன் ஒப்பிடமுடியும்.

இவ்வளவு மென்மையான இதழ் இதயத்தில் உண்டாகிற அழுத்தத்தைத் தாங்குவதைப் பார்க்கும் போது தான் ‘கடவுள் என்று ஒருவர் இருக்கிறார்’ இது மனிதனால் முடியாத காரியம் என்று தோன்றும்.

இதயத்தின் வால்வு அவ்வளவு மெல்லியது! ‘மைட்ரல் வால்வு’ இரண்டு இதழ்களைக் கொண்டது. ‘இது விரிந்து திறக்கும், ‘டிரைக்ஸ் பிட் வால்வு’ மூன்று இதழ்களைக் கொண்டது.

இந்த மூன்று இதழ்களும் ஒன்றை நோக்கி வந்து இணையும்போதுதான் வால்வு மூடுகிறது. ரத்த ஓட்டம் வந்த இடத்திலிருந்து திரும்பி வராமல் தடுக்கிறது.

மேலே நான் சொன்ன கிருமியினால் உடலில் உண்டான எதிர்சக்தி இதயத்தின் இதழ்களைப் பாதிக்கிறது. முதலாவதாக அது இதழ்களைத் தடிக்க வைக்கிறது.

மெலிதாக பளிங்குக் கல்லைப் போன்று பளபளப்பாகக் கூடிய இதழின் மேற்பரப்பு, பளபளப்பை இழந்து சொரசொரப்பு தன்மையை அடைந்துவிடும். இதழின் மீது ஏதோ மண்ணைத் தூவிய மாதிரி தெரியும். வால்வும் பல மடங்கு தடித்துவிடும்.

வால்வுக்கு எப்போதும் ரத்தம் ஓட்டம் கிடையாது. அது எப்படி இயங்குகிறது என்றால் இதயத்தில் இருக்கிற ரத்தத்தில் தோய்ந்து இருப்பதால் அதிலிருந்து தனக்கு வேண்டிய சக்தியை எடுத்துக் கொள்ளும்.

ஆனால், கிருமிகளால் உடலில் எதிர் சக்தி உண்டாகும்போது அந்த பாதிப்பினால் அந்த வால்விலும் ரத்த ஓட்டம் பாய ஆரம்பிக்கிறது. இரத்த அணுக்கள் அதன்மேல் படிகின்றன. இதனால் இதழ்கள் ரணத்தன்மையை அடைந்து விடுகின்றன.

இந்த மாதிரி மாறுதல் வரும்போது, அதன் இதழ்கள் தனித்தனியே இயங்காது. ஒன்றோடு ஒன்று இணைந்து சிறு துவாரம் மட்டுமே உள்ள தட்டு போல் மாறிவிடும்.

வால்வு சல்லடை மாதிரி கீழிறங்கும். இதனால் இதயத்தின் மேலறையிலிருந்து கீழறைக்கு ரத்தம் வேகமாகப் போக முடியாது பெரிதும் அடைபடும்.

மேலறையிலிருந்து கீழறைக்கு ரத்த ஓட்டம் சரியில்லாததால் மேலறையில் ரத்த அழுத்தம் அதிகமாகும். நடந்தால் இன்னும் அதிகமாகும்.

பாதிக்கப்பட்ட குழந்தை மற்ற குழந்தைகளைப் போல ஓடி வர முடியாது. மூச்சிரைக்கும், மாடிப்படிகளைச் சுலபமாகக் கடக்க முடியாது.

இதனால் இதயத்தில் இருக்கிற ஒரு வால்வோ, சமயங்களில் மூன்று வால்வுகளோ பாதிக்கப்படலாம். இம்மாதிரி பாதிப்புகளை, சாதாரணமாக ஸ்டெதஸ்கோப் வைத்துச் சோதிக்கும் நாங்கள் கண்டுபிடித்து விடுவோம்.

எந்த அளவுக்குச் சுருங்கியிருக்கிறது என்பதைப் பிறகு கருவிகளை வைத்துக் கண்டுபிடிப்போம். பாதிப்பு அதிகமாக இருந்தால் இதய வால்வுகளில் ரத்தக்கசிவு இருப்பதை உணரமுடியும்.

கரையான் மாதிரி ஏதோ ஒன்று வால்வுக்குள் நுழைந்து தின்ற மாதிரியான பாதிப்பிருக்கும். அதனால் வால்வு செயலிழந்து ரத்தக்கசிவு இருக்கும்.

மேலறையிலிருந்து 70 மி.லி ரத்தம் கீழறைக்கு வருகிறது என்றால், 30 மி.லி திரும்பவும் மேலறைக்கே போய்விடும். அதனால் உடலுக்குப் போதுமான ரத்த ஓட்டம் போகாது.

மேலறைக்குத் திரும்ப ரத்தம் போவதால், மேலறைகள் ரொம்பவும் விரிவடைந்து போகும். 2.5 செ.மீ வரை சாதாரணமாக இருக்கக்கூடிய மேலறை, 9 செ.மீ வரை ரத்தக்கசிவால் விரிவடைந்துவிடும்.

ரத்தம் கசிவடைந்ததும் இதயமும் பெரிதாகிவிடும். இதைப்போலவே தமனிக்கும் இடது கீழ் பெரிய அறைக்கும் நடுவே இருக்கும் அயோர்டிக் வால்வு பழுதடைந்தால் சுருக்கமோ ரத்தக்கசிவோ அல்லது இரண்டும் சேர்ந்த நிலையோ ஏற்படலாம்.

இந்த நிலையில் மாற்று ஏற்பாட்டிக்கு என்ன வழி?

(தொடரும்..)

  • அகில் அரவிந்தனின் ‘இதயமே இதயமே’ நூலிலிருந்து…

27.01.2021 12 : 45 P.M

You might also like