இனி கிராமப்புற மேலாண்மையும் படிக்கலாம்!

காலமும் தொழில்நுட்பமும் வேகமாக வளரும் நவீன காலத்தில் கிராம மேலாண்மை வேகமாக வளரும் துறையாக உள்ளது. அந்தத் துறை பற்றிய தகவல்கள் தாய் இணைய இதழ் வாசகர்களுக்காக…

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையுடன் கூடிய இந்திய நாடு, அனைத்து கண்டங்களிலும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. பெருமளவில் நகரமயமாக்கம் நடைபெற்று வந்தாலும், இந்தியா இன்னும் ஒரு முதன்மையான விவசாயப் பொருளாதாரமாகவே உள்ளது.

பெரும்பான்மையான மக்கள் இன்னும் கிராமங்களில் வாழ்கின்றனர். கிராமப்புறங்களில் நல்ல மாற்றங்கள் நடந்துவருகின்றன. கிராமங்களும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் சீரமைக்கப்படும் சாலைகளால் மிகச்சிறந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளன. மின்சார மயமாக்கலும் மருத்துவ வசதிகளும்கூட அங்கே மேம்பட்டுள்ளன.

கடந்த இருபது ஆண்டுகளாகக் கிராமப்புற வருமானம் பல காரணங்களால்  கணிசமாக உயர்ந்துள்ளது. இது அதிகமாகச் செலவழிக்கும் திறனை வளர்க்கிறது. இந்திய மக்களில் 58 சதவீதம் பேருக்கு முதன்மையான வாழ்வாதாரமாக விவசாயமே இருந்துவருகிறது.

2018 ஆம் ஆண்டுடன் முடிந்த நிதியாண்டில் வேளாண்மை, வனவியல் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவற்றால் கிடைத்த மொத்த மதிப்பு ரூ.17.67 டிரில்லியனாக இருந்தது. ஆனால், கிராமப்புற பொருளாதாரம் என்பது விவசாயம் மட்டுமல்ல என்பதை நாம் உணரவேண்டும்.

கிராமப்புற மேலாண்மைக் கல்வி

கிராமப்புற மேலாண்மையை ஒரு வேலையாகக் கொள்வதற்கு ஒரு முறையான தகுதி இருக்கவேண்டிய தேவையில்லை. பொருளாதாரம்,  வேளாண் அறிவியல், விவசாய பொறியியல், சமூகப் பணி, மேலாண்மை ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் முதுநிலைப் படிப்பை முடித்திருந்தால் போதுமானது. கிராமப்புற நிர்வாகத்தில் ஒரு வேலையை உருவாக்கிக் கொள்ளமுடியும்.

கிராமப்புற வளர்ச்சி, மற்றும் வணிகத்திறன் தொடர்பான ஏராளமான வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு பல நிறுவனங்கள் கிராமப்புற மேலாண்மை / மேம்பாடு மற்றும் விவசாயம் தொடர்புடைய துறைகளில் ஒரு சிறப்புத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.

உண்மையில், இந்தக் களத்தில் பணியாற்ற மனிதவளத்தைப்  பயிற்றுவிப்பதற்காகப் பல நிறுவனங்களும் அமைப்புகளும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.

பாடத்திட்டம்

கிராமப்புற மேலாண்மை பாடத்திட்டத்தில் வழக்கமான மேலாண்மை பாடத்தில் கற்பிக்கப்படும் அனைத்துப் பாடப்பிரிவுகள் இருக்கும். இங்குக் கோட்பாடுகள், கொள்கைகள் மற்றும் கருத்துக்களைக் கிராமப்புற அமைப்புகளில் செயல்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கிராமப்புறப் பிரிவில் சில குறிப்பிட்ட கூடுதல் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.

நீங்கள் படிக்கும்போது பொதுவாக வளர்ச்சிக் கோட்பாடுகள், கிராமப்புறப் பொருளாதார கட்டமைப்பு, வளர்ச்சி நிர்வாகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சமூக ஆராய்ச்சி முறை, பொதுச் சுகாதாரம், சுகாதாரப் பேரிடர் மேலாண்மை, திட்ட மேலாண்மை, அரசு சாரா நிறுவனங்களின் மேலாண்மை, நிலம் மற்றும் நீர்வள நிர்வாகம், பெருநிறுவன சமூகப் பொறுப்பு, வனவியல் மற்றும் நிலவள மேலாண்மை, கால்நடைவளர்ப்பு, கிராமப்புற நிதி சேவைகளின் மேலாண்மை, கிராமப்புற தொழில்முனைதல், பயிர் உற்பத்தி மற்றும் பருவநிலையின் தாக்கம், சமூக நீதி, சமூக நடவடிக்கை மற்றும் மனித உரிமைகள் போன்ற பாடப்பிரிவுகளையும் கடந்துவரவேண்டும். கள அனுபவமும் பாடத்திட்டத்தில் மிக முக்கியமான பகுதியாக இருக்கும்.

படிப்புகள்

நாடு முழுவதும் கிராமப்புற மேலாண்மை மற்றும் அது தொடர்புடைய படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் ரூரல் மேனேஜ்மெண்ட் கல்வி நிலையம் நாட்டிலேயே கிராமப்புற மேலாண்மைப் படிப்புக்குப் புகழ்பெற்றது. இங்குக் கிராமப்புற மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ, எக்சிகியூட்டிவ் முதுநிலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன.

ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் (என்ஐஆர்டி), அகமதாபாத் ஐஐஎம், லக்னோ ஐஐஎம், அஸாம் வேளாண் பல்கலைக்கழகம், கேரள வேளாண் பல்கலைக்கழகம், ஜெய்ப்பூர் ஊரக மேலாண்மை நிறுவனம்., ஸ்கூல் ஆப் ரூரல் மேனேஜ்மெண்ட் புவனேஸ்வர்,  சேவியர் இன்ஸ்டிட்யூட் புவனேஸ்வர். கோவிந்த் பல்லபபந்த் வேளாண்மை தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஒடிசா வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிலையங்களில் கிராமப்புற மேலாண்மை தொடர்பான டிப்ளமோ மற்றும் முதுநிலைப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

வேலைக்கான பகுதிகள்

கிராமப்புற மேம்பாடு பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கான பணி என்பது உங்களுடைய கல்வி மற்றும் நிபுணத்துவத்தைப் பொறுத்தது. கிராமப்புற மேலாண்மை நிபுணராக ஒருவர் பின்வரும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பகுதிகளில் பணியாற்றலாம்.

மார்க்கெட்டிங்

கிராமப்புற இந்தியாவில் மிகப்பெரிய வணிகத் திறனைக் கருத்தில்கொண்டு, இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கிராமப்புறங்களில் சிறப்பு உத்திகளைப் பயன்படுத்தி திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகளில் மக்களையும் ஈடுபடுத்துகின்றன. இந்த நிறுவனங்களில், ஒட்டுமொத்த சந்தைப்படுத்தல் திட்டத்தில்  கிராமப்புற சந்தைப்படுத்தல் திட்டமும் இருக்கிறது.

வாகனங்கள்,  மோட்டார் சைக்கிள்கள், மொபைல் போன்கள், பிஸ்கட் ஆகிய  உற்பத்தியாளர்கள் கிராமப்புறச் சந்தைகளில் ஊடுருவுவதில் ஒரு முயற்சியையும் அவர்கள் விட்டுவிடுவதில்லை என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கிராமப்புற நுகர்வோரின் விருப்பங்களை மாற்றுவது மற்றும் கிராமப்புற சந்தைகளின்  பிற இயக்கம் சார்ந்த ஆய்வுகளும் ஒரு பகுதி வேலையாக இருக்கலாம்.

திட்ட மேலாண்மை

கிராமப்புற இந்தியாவின் மேம்பாட்டுக்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல்வேறுபட்ட திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன. அதில் பெரும்பாலானவை பொது – தனியார் கூட்டு முயற்சியால் உருவானவை. மின் உற்பத்தி நிலையங்கள், சாலை கட்டுமானம், வீட்டுவசதி மற்றும் உற்பத்தி ஆலைகள் போன்றவற்றுடன் தொடர்புடையவையாக அந்த தி்டடங்கள் உள்ளன. நாள்தோறும் நடைபெறும் பணிகளைக் கவனித்தல், நேரமின்மை மற்றும் செலவுகளைக் குறைத்தல் ஆகியவற்றை உறுதி செய்தல் போன்றவற்றுடன் திட்டநிர்வாகப் பணிகள் தொடர்புடையதாக இருக்கின்றன.

பண்ணை நிர்வாகம்

இந்தியாவின் பண்ணைத் துறையில் போதுமான பன்முகத்தன்மை உள்ளது.  சிறு பங்குகள் மற்றும் பெரிய பங்குகள் கொண்ட விவசாயிகள் இருக்கின்றனர். பல விஷயங்களில், பண்ணை நடவடிக்கைகள் ஒரு வணிகத்தைப் போலவே நடத்தப்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் ஒப்பந்த வேளாண்மையும் பெரும் ஊக்கத்தைப் பெற்றுள்ளது. மிகப்பெரும் விவசாயப் பண்ணை வேலைகளை நிர்வகிக்கத் தொழில் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்.

சமூக மாற்றம்

சமூக மாற்றம் அல்லது கிராமங்களின் மாற்றத்தில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில அளவில் செயல்படும் அரசு சாரா  நிறுவனங்கள் அதில் அடங்கும். உலகளவில் செயல்படும் அமைப்புகளும்கூட (பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, ஆகா கான் அறக்கட்டளை போன்றவை) உள்ளன.

சிஎஸ்ஆர் எனப்படும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின்கீழ், பல வணிக நிறுவனங்கள் லாபத்தின் ஒரு பகுதியை சமூகப் பணிகளுக்காகச் செலவிடுகின்றன. மேலும் அந்த செலவின் பெரும்பகுதி கிராமங்களுக்குச் செய்யப்படுகிறது. பொது மற்றும் தனியார் துறையில் உள்ள பெரும் நிறுவனங்களுக்கு சொந்தமாகவே சமூகப் பொறுப்பு அல்லது சமூக சேவைப் பிரிவுகள் செயல்படுகின்றன.

கிராமப்புற நிதி

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி பின்னிப்பிணைந்துள்ளது. வங்கி தேசிய மயமாக்கலின் பிரதான நோக்கமே வங்கிச் சேவைகளை நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதாகும். பொதுத்துறை வங்கிகளில் கிராம வளர்ச்சி அலுவலர், வேளாண் நிதி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. இந்த வங்கிகள் கிராமப்புறங்களில் ஒரு மேற்பார்வையாளரின்கீழ் வணிகப் பிரதிநிதிகளை நியமனம் செய்கின்றன.

கிராமப்புற தொழில்முனைவு

இந்தியாவில் தொழில்முனைதல் மற்றும் ஸ்டார்ட் அப் புரட்சி நடந்துவருகிறது. ஏதாவது சாதிக்கவேண்டும் என விரும்பும் இளைஞர்கள் சொந்தத் தொழில் செய்ய நினைக்கிறார்கள். கிராமப்புற நிர்வாகத்தில் ஒரு தொழிலைத் தொடர ஒருவர் கிராமங்களில் தங்கியிருந்து வேலை செய்யவேண்டும் என்ற கட்டுக்கதையை நம்ப வேண்டியதில்லை. பல நிர்வாகப் பொறுப்புகள், நகர்ப்புற மையங்கள் மற்றும்   பெருநகரங்களில் அமைந்துள்ளன. நகரங்களில் பணியாற்றினாலும், அவ்வப்போது கிராமங்களுக்கு வந்து நேரடி அனுபவம் பெறுவது அவசியம்.

வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி போன்ற பெரிய நிறுவனங்களுக்குக் கிராமப்புற மேலாண்மை நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். தற்போது வளாக நேர்முகத்தேர்வு மூலம் சில நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளும் ஆட்களைத் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளன. கிராமப்புற மேலாண்மை மற்றும் அது தொடர்புடைய படிப்புகளை முடித்தவர்களிடம், நீங்கள் பணியாற்ற விரும்பும் இடத்தைத் தேர்நதெடுக்கச் சொல்வார்கள்.

நீங்கள் கிராமப்புற மேலாண்மை / வளர்ச்சி தொடர்பான ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்  தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மக்களின் திறனை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பைச் செய்யலாம்.

– தான்யா

12.01.2021 – 02.15 P.M

You might also like