தொ.ப. எனும் கருஞ்சட்டை அறிஞர்!

பாளையங்கோட்டை – தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்பதாக, எல்லார் மனங்களிலும் அந்த நாட்களில் – நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே – கருத்தமைக்கப்பட்டிருந்த ஓரூர்!

தடுக்கி விழப்போனால், ஒன்று பள்ளிக்கூட வாசலிலோ, அல்லது கல்லூரி வாசலிலோதான் ஒருவர் விழுந்தாக வேண்டும். சம்பாதிப்பதற்காகவன்றி, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துதற்காகவும், அறிவூட்டுதற்காகவுமாக, மிஷினரிகளின் கல்விச் சாலைகள், நூறாண்டுகளுக்கு முன்பே, ஊரைச் சுற்றிலும் காலூன்றியிருந்த வடிவு அது!

தென் தமிழகத்தில், நூறாண்டுகளுக்கு முன்பே, முதல் பெண்கள் கல்லூரியைக் கொண்டிருந்த ஊர்! தாமிரபரணிச் சுலோச்சனா முதலியார் பாலத்தின் அந்தப் பக்கமாய்க் கால் வைத்தால் அது திருநெல்வேலி; இந்தப் பக்கமாய்க் கால் வைத்தால் அது பாளையங்கோட்டை!

அப்படித்தான் பாளையங்கோட்டைத் தெற்கு பஜாரைத் தொட்டு, தெற்கே, அதன் இணைகோடாய்க் கீழ்மேலாய் நீண்டு கிடக்கிற அந்தப் பூர்வீகக் குடிகாட்டின் மேலத் தெருவில் கால் வைத்தால், அங்குத் தொ.ப. வீடு! கீழத் தெருவில் கால் வைத்தால், அங்கு எங்கள் வீடு!

தெற்கு பஜாரை ஊடறுக்கும் இரண்டு குறுக்குத் தெருக்களைக் கடந்தால் 10-15 வீடுகளின் தூரம்தான் எங்கள் இருவர் வீடுகளுக்கும்!

கொள்வினை–கொடுப்பினைகூட, ரொம்பவும் அருகித்தான் நடக்கும் இரண்டுத் தெருக்களுக்கிடையிலும், அப்பொழுது! அதை உடைக்கிற சங்கிலியாய், எங்கள் கீழத் தெருவிற்கு மாப்பிள்ளையாய் வந்து சேர்ந்தவர் இவர்!

அதன்பிறகு, அவருடன் மனம் மிக நெருக்கமாயிருந்த காலங்களில், உரத்து ஒலி எழுப்பினால், கேட்கிற தூரத்தில், வீடுகளின் தூரங்கள் குறுகியிருந்தன. என்னை விட ஒரு வயது மட்டுமே மூப்பு அவர்!

ஆறு வயதிலேயே அப்பாவை இழந்து, அம்மா, ஆச்சியின் அரவணைப்பில், அவர்கள் குழைத்து ஊட்டிய பண்பாட்டு எச்சங்களின் மிக நுணுக்கமான அசைவுகளை – அந்த அறிவை – அந்தக் களஞ்சியத்தை – அதன் மொழிக் குறியீடுகளை, அப்படியே தனக்குள் உள்வாங்கி, அதைப் பொடிப் பொடியாய் நுணுக்கி, நாட்டார் மரபில், அதனிடத்தை உரசிப் பார்த்து, அதற்குப் பகுத்தறிவு முலாம் பூசிச் சமூக அறிவாகக் கைமாற்றித் தந்தவர் தொ.ப.!

தொ.ப. அம்மாவின் பெயர் இலட்சுமி அம்மாள். ஊர் அபிஷேகப்பட்டியை அடுத்திருக்கிற வெள்ளாங்குழி என்பதால், சொந்தப் பெயர் மறைந்து, வெள்ளாங்குழி அம்மாவாகவே பக்கத்து வீட்டாரால் அறியப்பட்டிருக்கிறவர்!

அம்மா, ஆச்சிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்டு, கேட்டு, சமூகத்தை உள்வாங்கி, அதை மனசுக்குள் அலசிப் பார்த்த, இந்த மண்ணுக்கான, பாட்டி வைத்தியத் தொடர்ச்சிதான் – விதை நெல்லின் வீரியம்தான் – அவரின் ஆய்வு நெறிமுறை!

அது, வீரியம் குறைந்த – வீரியத்தைக் குறைக்கிற ஒட்டு ரகம் அல்ல. பாரம்பரிய அறிவுத் தேடலுக்கான புறச் சூழல் அமைகிற நிலையில், நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம், நா.வா.வின் ஆராய்ச்சி, பாளை சி.சு.மணியின் குருஞானம், சாத்தான்குளம் ராகவனின் வரலாற்று ஆய்வுகள், தந்தை பெரியார் சிந்தனைகளின் அணுக்கம், மண்ணின் மரபு வரலாற்றை, அடித்தட்டிலிருந்து வாசிக்கிற தேட்டம், தன்னைச் சூழ்ந்தே கிடக்கிற மாணவர்களின் பல்லாயிரம் கேள்விகள் எழுப்பிய சிந்தனைகள் – இவற்றின் குழைவாக, அவருக்குள் ஊறிக் கிடந்து, மண்ணின் மொழியில் நறுக்குத் தெறித்தாற்போல், தன் கருத்துகளை எளிமையாகச் சொல்லிப் போகிற பார்வைத் துளிதான் அவருடையது!

இவர்கள்தாம் அவரின் ஞானக் குருக்கள்! இவர்களின் திரட்சியிலிருந்து உருவாகித்தான், அவரின் சிந்தனைமுறை அப்படியே இந்தச் சமுகத்தை விளக்குவதற்கும் – விளங்கிக் கொள்வதற்குமாகப் பொருந்திப் போயிருக்கிறது.

அவர் அள்ளித் தெளித்திருக்கிற சிந்தனைத் துளிகள் ஒவ்வொன்றும், ‘அழகர் கோயில்’ போன்று நீண்ட ஆய்விற்குரியது. பணி நிறைவிற்குப் பின்பாகச் செய்ய வேண்டும் என்று தள்ளிப் போட்டிருந்த, விவாதித்துக் கொண்டேயிருந்த பல பணிகளைச் செய்து முடித்தற்குரிய சூழலுக்கு, அவர் உடல் ஒத்துழைக்காமல் போனதுதான், உடலைக் கவனித்துக் கொள்ளாத அவரின் குறை!

இன்னொன்று, என்னைப் போலவே அவருக்கும் புத்திர உறவு சீராக அமையாது போனதும்தான், உள்ளத்தை வருத்திக் கொண்டிருந்த பெரிய குறை!

மற்றபடி, எப்பொழுதும் அறிவைப் பரிமாறுகிற அட்சயப் பாத்திரம்தான் அவர்! உடல் ஒத்துழைக்காத பொழுதும், இவர், தன் மாணவர்களை வைத்து, பேராசிரியர் கா.சிவத்தம்பியைப்போல், இறுதிக் காலத்தில், சொல்லச் சொல்ல எழுத வைத்து நூலாக்கியிருப்பது, மூத்திரச் சட்டியைத் தூக்கிச் சுமந்து திரிந்து, இந்தத் தமிழ்ச் சமுதாயம் விழிக்க, உடல் ஒத்துழைக்காத நிலையிலும், பம்பரமாய்ச் சுழன்ற சமூகத் தேனீ பெரியார் வார்த்துக் கொடுத்திருந்த அந்தச் சமூக அர்ப்பணிப்பின் இயங்கு சூட்சமம்தான் அது!

என்னுடைய ‘தமிழ்ச் சமூகத்தில் கூத்து – நாடகம்: ஒரு தொடர் விவாதத்தை நோக்கி’ நூலுக்கு, பேரா.கா.சிவத்தம்பியும், பேரா.தொ.பரமசிவமும்தாம் அணிந்துரைகள் எழுதியிருந்தனர் என்பது எனக்குக் கிடைத்த பேறு!

கலகக்காரர் தோழர் பெரியார் நாடகத்திற்கும் ஒருமுறை தலைமையேற்று நடத்திக் கொடுத்திருக்கிறார். நெல்லையில் அந்த நாடகம் பார்க்க முழு ஆத்திகரான என் அம்மாவிற்கு, எனக்குத் தெரியாமல் அவராகவே நுழைவுச் சீட்டு வாங்கிக் கொடுத்து, நான் யார் என்பதை என் அம்மாவிற்குக் காட்ட விரும்பி, அவரை நாடகம் பார்க்க அழைத்துவர வைத்தவர்.

நாடகம் முடிந்தவுடன், என் அம்மாவிடம், “நாடகம் எப்படி இருந்திச்சி?” என்கிறார். என் அம்மாவும், “நல்லாருக்கு… அவன் சொல்றதெல்லாம் கேக்கும்போது சரியாத்தானே இருக்கு” என்று சொன்னது, இருவருக்குமே அப்பொழுது பிடித்திருந்தது. ஏனெனில் பெரியார், அவ்வளவு பக்குவமாய் அவர்களின் மனங்களில் கரைந்திருந்தது அப்பொழுது தெரிந்தது.

‘அழகர் கோயில்’ தவிர மற்றவையெல்லாம், பேருந்துப் பயணத்தின்போது படித்து முடித்துவிடுகிற அளவிலான பல்வேறு கட்டுரைகளின் இணைப்பில் அமைந்த நூல்கள்தாம்! ஆனால், படித்தால், பேருந்துப் பயணத்திற்குப் பின்னும், பண்பாட்டின் வேர்த் தடங்கள், வாசித்தவர் மனசிற்குள் மத்தாப்பாய் வெளிச்சமிட்டு, நம் பார்வையை விரிவாக்கிக் கொண்டேயிருக்கும் என்கிற உத்திரவாதத்தை, எவருக்கும் எவரும் தரமுடியும்.

மதுரைப் பல்கலைக் கழகத்தில் நான் முழு நேர ஆய்வு மாணவனாக இருந்தபோது, ஜாகீர் உசேன் கல்லூரி, தமிழ்த் துறையிலிருந்து துறை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ‘அழகர் கோயில்’ பற்றி ஆய்வு செய்ய, 1976-79 இல் மதுரைக்கு வந்திருந்தார்.

எனக்கும் அவருக்கும் ஆய்வு வழிகாட்டி பேராசிரியர் முனைவர் முத்துச் சண்முகன்! ஆய்வில், அவர் வழங்கியிருந்த சுதந்திரம், அறிவியல் பார்வை, அக்கறை-இவை அழகர் கோயில் ஆய்விற்கு அவருக்கு ஆதரவாகத் துணை நின்றன. ஒருமாத காலக் கல்வெட்டியல் பயிற்சி வகுப்பை, திருமலை நாயக்கர் மகாலில், ஒருசாலை மாணாக்கனாய் என்னோடு அவரும் கற்றவர்.

அந்தப் பயிற்சியை தன் வாழ்நாளின் இறுதிவரையும் தன்னோடு தக்க வைத்தும் கொண்டவர். அதுதான் பாளையங்கோட்டை நூலெழுத, சர்க்கரைக் குறைபாட்டில், ஒரு காலிழந்த நிலையிலும், அவரைப் பாடாய்ப் படுத்தி வந்தது. பகுத்தறிவு நிழலில் நின்று, நாட்டார் மரபின் வேர்களைத் தேடியதாகவே, அவரின் அனைத்து ஆய்வுப் பயணங்களும் அமைந்திருந்தன.

தாய்க் கோழியாக, மாணவ உறவுகளை, சாதி, மதம் கடந்து, தன் இதயத்திற்குள் பொத்தி வைத்து, அப்படி நேசித்தவர்! அவர்களை வைத்து எந்த அரசியலும் செய்ய எத்தனிக்காதவர்; மாணவர்கள் மத்தியில் அறிவின் துலக்கமாக விளங்கியவர். முழுக்க முழுக்க நல்லாசிரியரும், நற்சமூகச் சிந்தனையாளரும், நற்றொழிற்சங்கவாதியுமாவார்.

ஜாகீர் உசேன் கல்லூரி ஆசிரியர் போராட்டத்தினால், மதுரை, தியாகராஜர் கல்லூரிக்கு மாற்றப்பட்டவர். வலதுசாரிச் சிந்தனைக்கு, முற்று முழுக்க எப்பொழுதும் எதிரானவர். அதனாலேயே, பல்வேறு சமூக, அரசியல், தமிழ் அமைப்புகளைச் சார்ந்தோர், அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க, ஓடோடி, அவரின் இல்லம் தேடி வந்திருந்தனர்.

நான் தமிழ்ப் பல்கலையில் பணியிலிருந்தபோது நிகழ்ந்த சம்பவமொன்று, இப்பொழுது நினைவிற்கு வருகிறது. அப்பொழுது, முனைவர் ம.இராசேந்திரன் அவர்கள் அதன் துணைவேந்தர்! அவருக்குமுன் நான்காண்டுகளாக நிரப்பப்படாதிருந்த, இணைவேந்தர் நியமன ஆட்சிக்குழு உறுப்பினருக்கான கோப்புகள், கிணற்றில் விழுந்த கல்லாக நகராமலே கிடந்துவந்தன.

துணைவேந்தர் ம.ரா., 2009 இல், அதைத் தூசி தட்டி எடுத்து, அதற்கு உயிர் கொடுத்திருந்தார். நான் அப்பொழுது அவருக்குத் துணையாகப் பதிவாளர் பொறுப்பிலிருந்தேன். இணைவேந்தருக்கு அனுப்புவதற்கான பெயர்ப் பட்டியலைத் தயாரித்து, துணைவேந்தர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு, என்னிடமிருந்தது.

நான் எட்டு பெயர்கள் கொண்ட ஒரு பட்டியலைத் துணைவேந்தருக்கு அனுப்பி, அவரின் ஒப்புதலைப் பெற்று, இணைவேந்தருக்கு அனுப்பியிருந்தேன். அந்தப் பட்டியலில் முதல் பெயர் முனைவர் தொ.பரமசிவன்! அவர் இணைவேந்தரால் தேர்வு செய்யப் பெற்றிருந்தார். அது, அலுவலகச் சம்பிரதாயத்தில் நடந்தது.

துணைவேந்தர் ம.ரா.விற்கு, இன்னாரைச் சேர்க்க வேண்டுமென்கிற நோக்கமேதும் இல்லாத காரணத்தாலும், என் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவும், பட்டியலின் வரிசைக் கிரமத்தை மாற்றச் சொல்லாமல், எல்லோருமே அவரறிந்த தகுதியான அறிஞர்களாயிருந்ததால், அப்படியே அனுப்பச் சொன்னார்.

அப்பொழுது, கூத்துக் களரிக் கட்டடத்தின் முன்பு, அதற்கு நிதி வழங்கிய மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்கள் பங்கு பெறலில் ஒரு கூட்டம் நடந்தது. ஆட்சிக் குழு உறுப்பினரான தொ.ப.வும், பல்கலைக்கழகம் சார்பில் அதில் வாழ்த்திப் பேசினார்.

பேச்சு சுவாரஸ்யத்தில், என்னை விளிக்கும்போது ‘ராமசாமி’ என்றழைக்க, துணைவேந்தர் அதிர்ச்சியில் திரும்ப, “ஒங்களுக்கு அவரெ முன்னாலெயே தெரியுமா?’ என்க, அவரிடம், ‘என் உறவுக்காரர்தான்” என்று கூறியிருக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்து அவர்கள் எல்லாம் போனபின், துணைவேந்தர் ம.ரா., பேச்சினிடையில் என்னிடம், “பேராசிரியர்! பேராசிரியர் தொப. உங்கள் உறவினரா?” என்றார். நான் மேலும் கீழுமாய்த் தலையசைத்தேன்.

“ஆனா அந்த அடிப்படையிலெ அவரு பேரெ நான் ஆட்சிக்குழு உறுப்பினர் பட்டியல்லெ சேர்க்கலை. தகுதியுடைய தமிழறிஞர்ங்றதுனாலெதான்” என்கவும், “அய்யய்ய, நான் அப்படி நெனைக்கலை… எனக்கு அவரு சொல்லித்தான் இப்பத் தெரியுதுங்றதுதான்” என்றார். “சொல்லணும்னு தோணலை… நீங்களும் கேட்கலை” என்றேன். சிரித்துக் கொண்டார்.

என்னைப் பெயர் சொல்லி புதியவர் ஒருவர் கூப்பிட்டதுகூட, அவருக்கு ஆச்சரியமாய் இருந்திருக்கிறது போலும்!

இளநிலை நிகழ்த்துக் கலை – கூத்துக் களரிப் பாடத் திட்டத்தில் அவரின் ‘பண்பாட்டு அசைவுக’ளைப் பாடமாக வைத்திருந்தோம்.

ஆட்சிக்குழு உறுப்பினராக, 05-10-2009 முதல் 04-10-2012 வரை தொ.ப. சிறப்பாகப் பணியாற்றினார். அத்துடன், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளைத் தேர்வு செய்ததிலும், இருதய அறுவைச் சிகிட்சைக்கு ஆட்பட்டிருந்தும், அவரின் பங்களிப்பு, சிறப்பாக இருந்திருந்தது.

இன்னொன்று, துணைவேந்தர் ம.ரா.விற்குப் பதவி முடிகிற ஒரு நேரத்தில், 2011 இல், “அடுத்து, தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக, யாருடைய மூன்று பெயர்களைப் பரிந்துரைப்பீர்கள்” என்று என்னிடம் முனைவர் ம.ரா. திடீரென்று கேட்கிறார். அவருக்குத் திரும்பத் துணைவேந்தராய் வர விருப்பமில்லை.

எனக்கும் அதிலெல்லாம் பெரிதும் ஈடுபாடில்லை! அதிலும் முதலில் தொ.ப. பெயரைச் சொல்கிறேன். “வயதிருக்குமா” என்று கேட்கிறார். காரணம் சொல்லாமல், தொ.ப.விடம் வயதை மட்டும் விசாரித்து, துணைவேந்தரிடம் சொல்கிறேன். அதிலும் முதற்பெயர் அறிஞர் தொ.ப.தான்! மற்றைய இரண்டு பெயர்கள், அவர்கள் உயிரோடு இருந்துவரும் நிலையில், இப்பொழுது இங்குத் தேவையில்லாதது.

தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட, எல்லோமே பேச்சோடு நின்று விட்டிருந்தது. ஒருவேளை, கலைஞரே மறுமுறையும் ஆட்சிக்கு வந்திருந்தால், தொ.ப.வே ஒருவேளைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் வந்திருக்கக்கூடும். அதற்கான உரிய தகுதி அவருக்கிருந்தது. ஆனால் அவரின் எளிமைக்கும், சுயமரியாதைக்கும், பீடி வலிக்கிற இயல்பிற்கும், அந்தப் பதவி அவருக்குச் சரிப்பட்டு வந்திருக்குமா என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.

தெற்கு பஜாரில், கடையின் படிக்கட்டுகளில், அவர் அமர்ந்து பீடி வலிக்கிற அழகும், டீ குடிக்கிற மிதப்பும், பக்கத்து அய்யனார் கடையில் நாளிதழ்கள் வாங்கிப் புரட்டுகிற அக்கறையும், அப்படியிருந்தே, மொழியாராய்ச்சி, கோயிலாராய்ச்சி, கல்வெட்டாராய்ச்சி, அப்படியே அரசியல் ஆராய்ச்சி என்று நகர்ந்து முடிகிற பொழுதுகள் அபாரமானவை.

அதற்கென்று ஒரு கூட்டமும் இருக்கும். கடை திறக்க வருகையில், வெயில் படரத் தொடங்குகையில், நடை மாற வேண்டியிருக்கும். அதற்குள், மூன்று நான்கு டீக்கள், நான்கைந்து பீடிக்கள் அல்லது சிகரெட்டுகள் கரைந்திருக்கும்.

அந்தக் கடை விலைக்கு வருகையில், நண்பரொருவர் அதை விலைக்கு வாங்கி, அதற்குத் ‘தொ.ப.பவனம்’ என்று பெயர் வைத்திருந்தார். அது ரசிகமணி மாளிகையைப்போல் எப்பொழுதும் கூட்டமும், கலந்துரையாடலுமாகவே களைகட்டி இருக்கும். இப்பொழுது, அது முழுக்கவும் நினைவஞ்சலிச் சுவரொட்டிகளால் ஒட்டப்பட்டுக் கதவே மறைந்திருந்தது.

பத்தாண்டுகளுக்கு முன், அவரின் அறுபதாண்டு விழாவையொட்டி, அவரைப் பற்றி எழுதி அனுப்பியிருந்த, என் குறிப்பொன்று இப்பொழுது கிடைத்தது. அப்போதிருந்த அதே கருத்துத்தான் இப்பொழுதும்!

அது இப்படிச் செல்கிறது: “எனக்கிருக்கிற ஒரே தடை, அவர் என் உறவினராக அமைந்து போயிருப்பதுதான். ஆனாலும் என்ன? ஊர்கூடிக் கொண்டாடிக் களிக்கிற, தமிழ்ப் பண்பாட்டியல் சமூக ஆய்வுத் தகைமையாய்த் தன் இருப்பின்வழி, தன்னை ஆக்கிக் கொண்டிருக்கிற தொ.ப. என்கிற ஆளுமையை விட்டுவிலகி, வாழும் காலத்தில் நானெப்படி ஒதுங்கிப் போவது?

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – அந்த வகையில் அவரைக் கொண்டாடுவதை எனக்கான கொண்டாட்டமாய் நான் களி கொள்கிறேன்.

நாம் கவனிக்க மறந்து, கடந்துபோன தலைமுறையின் கடந்த விழுமியங்களைப் பாட்டியின் மனசாய்ப் பகிர்ந்து மகிழும் ஒரு பத்தாயம் அவர். அவரின் ‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வம் என்பதோர்’, ‘சாதிகளின் அரசியல்’, ‘அழகர் கோயில்’ ஆகியவை அவர் எழுத்து வழித் தமிழுக்குத் தந்திருக்கிற செல்வங்கள். நாம் பார்க்கத் தவறிய சின்னஞ்சிறிய தகவல்களைத் துள்ளல் மொழியில் அள்ளித் தெளிப்பதுதான் அவரின் எழுத்துப் பாணி.

இவரைப் பற்றி, ஒற்றை வரியில் என்ன சொல்லலாம்? இப்படிச் சொல்லலாமா? பண்பாட்டு எச்சங்களை முன்னிறுத்தித் தன் ஆய்வைச் சமைக்கும் ஒரு தகவல் களஞ்சியம் அல்லது கணினி என்று சொல்லலாமா? என்னிடம் அபரிமித அன்புள்ளம் கொண்ட இவரிடம், எனக்குப் பிடிக்காத ஒரே பழக்கம், தமிழை ஆட்டிப் படைக்கிற இவரை, புகையும் ஆட்டிப் படைப்பது மட்டும்தான் என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். அந்த பண்பாட்டு அறிவு, அவரின் அம்மா இலட்சுமி அம்மாவிடமிருந்து அவருக்குக் கைமாறிய பொக்கிஷம்!

வீட்டின்முன் கண்ணாடிக் கூண்டிற்குள் அவர் கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறார். இறப்பை என்றாவது ஒருநாள் எவரும் சந்தித்துத்தான் ஆகவேண்டும். இறுதிநாள் சிரமங்களைத் தாண்டி, சிலது அவர்களுக்கான வரங்களாகவும் அமைந்துவிடுகின்றன. அப்படி அமைந்ததுதான் தொ.ப.விற்கு அமைந்த அந்த டிசம்பர்-24!

கலகக்காரர் தோழர் பெரியாரின் சிந்தனைத் தடத்தில் நடைபோட்ட அவரின் சுவாசம் நின்றுபோன நாள், பெரியாரின் 47 ஆவது நினைவு நாள்! அன்று சிரமத்திற்குள்ளான பகற்பொழுதில்தான், அவர் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார், “இன்று எம்.ஜி.ஆர் நினைவு நாள்; பெரியார் நினைவு நாள்; எங்க அம்மாவின் நினைவு நாள்…இன்று நானும் போனால், நல்லாருக்கும்.” அவர் நினைத்த மாதிரியே அதுவும் நிகழ்ந்திருக்கிறது.

வைணவத்தை எழுத்தெண்ணிப் படித்து, ஜீயர்களையே வியப்பிற்குள்ளாக்கியும், ‘நான் இந்து இல்லை’ என்று பாளையங்‘கோட்டை’ மேலேறி நின்று, விண்ணதிர முழக்கமிட்ட தொ.ப.வின் உடல், வைணவர்களின் நம்பிக்கைக்கேற்ப, வைகுண்ட ஏகாதசியன்று (சொர்க்கவாசல் திறப்பன்று) நெருப்பினுள் பயணப் பட்டிருக்கிறது என்பது ஒரு ருசிகர முரண்!

இரண்டுமே, இன்னும் சமணமும் அவருக்குள் முழுமையாய்ச் சங்கமித்திருந்த ஒரு புள்ளிதான் அவர்! மனசு, இதை நினைக்கையில், அவரைக் கேலி செய்யும் பாவத்தில் இலேசாகிறது. தொ.ப. உடலின் கால்மாட்டில் சகோதரி இசக்கியம்மாள் அழுது வீங்கிய கண்களுடன் இருக்கிறார்.

நான் அவரிடம் செல்லவும், “ஒங்க அண்ணன் வரமாட்டாரு… போன் போட்டாலும் வரமாட்டாருன்னு எப்பப் பேசினாலும் சொல்லிக்கிட்டே இருப்பாக… யார் வந்தாலும் ஒங்களெப் பேசாம இருக்க மாட்டாக” என்று அழுது கதற, “அதான் இப்ப வந்திருக்கேனே” என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.

எல்லாம் காலம் கடந்தது. சில காரணங்களால், அந்தத் தெருவில் என் காலடிகள் பட்டும் ஒன்பதாண்டுகளாகின்றன. அதைப் பார்க்க, அவர் மட்டும் இப்பொழுது அங்கில்லை!

நன்றி: கணையாழி, ஜனவரி-2021

10.01.2021  7 : 10 P.M

You might also like