ரூமாட்டிக் ஃபீவர் ஆபத்து!

இதய வால்வு பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பார்த்தோம்.

அதற்கான மாற்று வழி என்ன?

‘லீக்’ ஆகிற வால்வை எடுத்துவிட்டுச் செயற்கை வால்வைப் பொருத்துவது மட்டுமே இதற்கு சரியான வழி.

‘லீக்’ உள்ள வால்வு இருக்கிற எல்லோருக்குமே இதைச் செய்வதில்லை ‘லீக்’கினால் உபாதைகள் அதிகமாகி, இனி மேலும் தாமதமானால் பிரச்சனை வரலாம் என்கிற நிலையில் அறுவை சிகிச்சைக்கு நாங்கள் சிபாரிசு செய்கிறோம்.

பெரும்பாலும் மூச்சிரைப்பு கூடுதலாக இருக்கிறபோதே பலர் வருவதில்லை. சிலரை திருமணமான பிறகு அழைத்துக்கொண்டு வருவார்கள் இதற்கு காரணம் என்ன?

குழந்தைகளாக இருக்கும்போதே அவ்வப்போது டாக்டரிடம் அழைத்துப் போய் மெடிக்கல் செக்-அப் செய்வது கிடையாது.

அப்படிப் போனால் துவக்க கட்டத்திலேயே இதற்கான அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு சிகிச்சையில் இறங்கியிருக்கலாம்.

ரூமாட்டிக் ஃபீவர் பாதிப்பினால் இதயத்தைச் சுற்றியிருக்கிற போர்வை மாதிரியான பகுதியும் பாதிக்கப்படுகிறது.

உள்ளிருக்கிற தசையும் பாதிக்கப்படுகிறது. இது சுத்தமாகச் சரியாவதில்லை. ஒன்று-வால்வு லீக் ஆகும். இல்லாவிட்டால் வால்வு சுருக்கம் அடையும்.

ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை அதிக அளவில் இருப்பதற்குக் காரணம் அவர்களுக்குப் போதுமான ஊட்டச்சத்து இல்லை.

நம்மைச் சுற்றி நிறைய கிருமிகள் இருக்கின்றன. காசநோய் இருக்கிறது. தொழுநோய் இருக்கிறது. இதே மாதிரி இன்னும் பலவிதமான வியாதிக்கான கிருமிகள் இருக்கின்றன.

குழந்தைகள் ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருந்தால் இந்தக் கிருமிகள் அவர்களைப் பாதிப்பதில்லை. எதிர்ப்பு சக்தி இல்லாவிட்டால் இவை பாதிக்கின்றன.

குறைந்த வருமானமே உள்ள குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கே இந்தப் பாதிப்பு கூடுதலாக இருக்கிறது. அதிலும் கிராமங்களில் இருப்பவர்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம்.

மிகவும் முற்றிய நிலையிலேயே தங்கள் குழந்தைகளுக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பது கிராமத்துப் பெற்றோர்களுக்குத் தெரிய வருகிறது.

தெரிந்ததும் அதிர்ச்சியடைந்து விடுகிறார்கள். இதயத்தில் வால்வை மாற்றவும் அவர்களுக்குப் பொருளாதார வசதி இல்லை.

வால்வு சுருக்கம் மட்டுமே அடைந்திருந்தால் அதற்கு அறுவை சிகிச்சை பண்ணுவது கிடையாது. பலூன் போன்ற அமைப்பு மூலம் அந்தச் சுருக்கத்தை விாிவுபடுத்துகிறோம்.

இதை ஓரிரு நாட்களிலேயே பண்ணிவிட முடியும். இதற்கு 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.

ஆனால் இதயத்தில் கசிவு இருந்தால் இருக்கிற இயற்கை வால்வைச் சற்றுப் பழுது பார்க்கலாம். ஆனால் இம்மாதிரி பழுது பார்ப்பதைப் பத்திலிருந்து 15 சதவீதத்திற்கு மேல் நாங்கள் பண்ணுவதில்லை.

வால்வு ரொம்பப் பழுதடையாமல் லீக் மட்டும் இருக்கிறது என்றால், வால்வு ரிப்பேர் பண்ணலாம். இதற்குச் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை ஆகும்.

இதற்குத் திறந்த அறுவை சிகிச்சை பண்ணவேண்டும். சக்திமிக்க ஆண்டி-பயாட்டிக் மருந்துகள், அனெஸ்தீசியா எல்லாம் கொடுக்க வேண்டும்.

ஆனால் இயற்கை வால்வை எடுத்துவிட்டுச் செயற்கை வால்வைப் பொருத்துவதற்கு 15 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு வெவ்வேறு வால்வுகள் இருக்கின்றன.

ஒன்று சின்ன மெட்டல் கேஜ் மாதிரி இருக்கும். அதற்குள் சிறு பந்து மாதிரி அசையும். இதயம் சுருங்கும்போது அந்தப் பந்து மேலே போய் ஒட்டிக் கொள்வதால் அது வால்வு மாதிரி செயல்படும்.

சில நேரங்களில் பன்றிகளின் வால்வை எடுத்து மனிதர்களின் இதயங்களில் பொருத்துகிறோம்.

பன்றி வால்வை சுத்தம் பண்ணி, ஸ்டெர்லைட் பண்ணிப் பொருத்துகிறோம்.

அதே மாதிரி இறந்த மனிதர்களிடமிருந்து இதய வால்வைப் பெற முடியும். எடுத்து அதைப் பதனிட வேண்டும். இதற்காகவே ‘வால்வ் பேங்க்’ என்று வைத்து இருக்கிறார்கள்.

அதில் வாங்கி பாதிப்படைந்தவருக்கு பொருத்தி விடுகிறார்கள். இதை ‘ஹோமோகிராஃப்ட்’ என்று சொல்வோம்.

‘டிஷ்யூ வால்வ்’ இன்னொரு வகை. இதயத்தைச் சுற்றிப் போா்வை மாதிரி இருப்பதற்கு பெயர் ‘பெரிகார்டியம்’ (PERICARDIUM) என்று முன்பே சொன்னேன்.

இதற்கென்றே வியாபார ரீதியாக வால்வுகளை தயாரிக்கிறார்கள். இது மாதிரியான வால்வுகள் தற்போது புழக்கத்தில் இருக்கின்றன.

என்னதான் மெக்கானிக்கல் வால்வாக இருந்தாலும் அது இயற்கையாக மனிதனுக்கு அமைந்த வால்வு மாதிரி வராது. அதற்கென்று சில கோளாறுகள் உருவாகும். சில சமயங்களில் சரியாகச் செயல்படாது.

இதனால் சில நோய்த்தொற்று கூட வரலாம். இதையெல்லாம் தவிர்த்து ரத்தம் உறையாமலிருக்க வேண்டுமென்றால் அதற்கென்று மருந்தைத் தொடர்ந்து வாழ்நாள் முழுக்கச் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

ரத்தம் உறைகிற தன்மை ஓரளவுக்கு மேல் போனால் மூளையில், கண்ணில், நுரையீரலில் எங்கு வேண்டுமானாலும் ரத்தக் கசிவு ஏற்படலாம்.

அதனால் அதற்குரிய ஆராய்ச்சியின் விளைவாக உருவான மருந்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் ரத்தம் உறைவதைத் தடுக்க முடியும்.

ரத்தத்தில் ஐ.என்.ஆா் அளவை 2.5-லிருந்து 3 வரை வைத்துக் கொண்டிருந்தால் ரத்தத்தில் தடைகள் இல்லாமல், புதிதாகப் பொருத்தப்பட்ட வால்வு நன்றாகச் செயல்படமுடியும்.

இதைவிட்டு, உயிரியல் ரீதியாக ஏதாவது பன்றியிடமிருந்து எடுக்கப்பட்ட வால்விலும் நோய்த் தொற்றுக்கான வாய்ப்பிருக்கிறது.

அதுவும் சமயங்களில் தடித்துவிடும். சில சமயம் டிஷ்யூ வால்வையே எடுத்துவிட்டுத் திரும்பவும் வைக்க வேண்டியிருக்கிறது.

மனிதர்களிடமிருந்து வால்வை எடுக்கலாம் என்றால், நமக்கு தேவைப்படுகிற அளவுக்கான வால்வு கிடைக்காது.

இதனால் சிலர் இயற்கையான வால்வுகளைப் பொருத்தியும் சில தொந்தரவுகளினால் இறந்திருக்கிறார்கள். சிலர் டிஷ்யூ வால்வுகளைப் பொருத்தி, நோய்த்தொற்று வரும்போது அதற்கேற்ற மருந்துகளைச் சரிவரச் சாப்பிடாமல் இறந்திருக்கிறார்கள்.

சில போ் வால்வு பொருத்துவதற்கே வசதியில்லாத நிலையில் இறந்து போகிறார்கள்.

இதயத்தில் பாதிப்பு முற்றி சீரியசான நிலையில் டாக்டரைத் தேடி வருகிற பல நோயாளிகள் மாற்று வால்வைப் பொருத்துவதில்லை என்பதுதான் சோகம்.

அரசு மருத்துவமனைகளில் வால்வு பொருத்துவதைச் செய்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு அதிகமாக இருக்கும்போது எந்த அரசாங்கம் இதற்கு ஈடு கொடுக்க முடியாது.

இதே நிலையில்தான் 60 வருஷங்களுக்கு முன்னிருந்தது. அமெரிக்கா அப்போது அங்கே ‘ரூமாடிக் ஃபீவா்’ பாதிப்பு அதிகமாகிப் பலர் இறந்திருக்கிறார்கள்.

பிறகு தனிமனிதனின் வருமானம் அதிகரித்து, குடும்பம் ஓரளவுப் பொருளாதாரத் தன்னிறைவு அடைந்த பிறகு இப்போது அங்கே இந்த வியாதியைப் பார்ப்பது அபூர்வம்.

ஏனென்றால் நெரிசல் இல்லாத வீடு, போதுமான சுகாதாரம், தேவையான புரதம், மாவு, கொழுப்புச் சத்து எல்லாம் இருப்பதால் இது படிப்படியாக மறைந்து நோய் எதிர்ப்பு சக்தி  கூடிவிடுகிறது.

அதோடு வசதிபடைத்த குழந்தைக்குச் சிறு பிரச்சினை என்றாலும் உடனடியாக டாக்டரை அணுகி விடுகிறார்கள்.

தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டு விடுகின்றன. இதன்மூலம் வாழ்க்கை முழுவதும் தொடா்கிற ஆபத்தைத் துவக்கத்திலேயே தடுத்து நிறுத்தி விட முடிகிறது.

ஆனால் வசதியில்லாமல், போதுமான சுத்தம் சுகாதாரம் வசதியும் இல்லாமல், இந்தப் பாதிப்பில் சிக்கிக் கொள்கிற குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவிற்கு யாா் காரணம் ?

வசதியில்லாத பெற்றோர்கள் மட்டும்தானா? முக்கிய காரணம் அவர்களது தனிமனித வருமானம் குறைந்து போனதுதான்.

(தொடரும்..)

09.01.2021 12 : 45 P.M

You might also like