ரஜினியை அரசியலில் ஈடுபடக் கட்டாயப்படுத்த வேண்டாம்!

ரஜினியே அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்கிற முடிவைத் தெளிவாக அறிவித்துவிட்டபோதும், அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி ரஜினி ரசிகர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியான வி.எம்.சுதாகர் ரஜினி மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

“தன்னுடைய உடல்நிலை குறித்தும், டாக்டர்கள் ஆலோசனைகளையும், அரசியலுக்கு வந்தால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் மூலம் தன்னை நம்பி வரும் மக்கள் துன்பப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தையும், தான் அரசியலுக்கு வர முடியாத சூழல் குறித்து நம் அன்புத் தலைவர் வெளிப்படையான, தெளிவான அறிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதன் பின்னரும் அவரை அரசியலில் ஈடுபடச் சொல்லிக் கட்டாயப் படுத்துவதற்காகப் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகச் சில ரசிகர்கள் பேசி வருவது அவரை மேலும் நோகடிக்கக் கூடிய செயலாகும்.

இந்தப் போராட்டத்துக்காக ஒரு சிலர் அதற்கான செலவுகளுக்கு என்று கூறி, நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது.

நம் தலைவரின் மீது அன்பும், அவர் நலனில் அக்கறையும் கொண்ட ரஜினி மக்கள் மன்றக் காவலர்களும், ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

07.01.2021 11 : 25 A.M

You might also like