சோ நெகிழ்வுடன் பகிர்ந்த வாலியின் நினைவுகள்!

நாம் செய்ய நினைத்த சில விஷயங்களை உரிய காலத்தில் செய்ய முடியாமல் போகும்போது எம்மாதிரியெல்லாம் நாம் குற்றவுணர்வுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது என்பதை அழுத்தமாக உணர்த்தியது அந்தச் சம்பவம்.

அப்போது குமுதம் வார இதழில் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் துக்ளக் ஆசிரியரான சோ அவர்களின் அரசியல், திரைப்படம், நாடக வாழ்வியைச் சொல்லும் ஒசாமஅசா (ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான அனுபவங்கள்) என்ற தொடரை எழுதி வந்தேன்.

ஆசிரியரான சோ சொல்லச் சொல்ல அதை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்து, தட்டச்சு செய்து அதைத் திரும்பவும் அவரிடமே காண்பித்து பிழைத் திருத்தி… இப்படி – ஒன்றரை ஆண்டு வரை நீடித்த அந்தத் தொடர் பெருமளவில் பேசப்பட்டது.

தற்போது தனி நூலாகவும் பதிப்பிக்கப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

அப்போது வாரத்திற்கு இருமுறையாவது சோ-வைச் சந்தித்து இரண்டு மணி நேரம் வரை பேசவேண்டிய சூழல் இருந்தது.

அந்தத் தொடருக்காக, சோவுக்கு நெருங்கிய பல்வேறு நபர்களைப் பற்றிய பட்டியலை தயார் செய்து அவரும் நானும் வைத்திருந்தோம். 

அப்போது குமுதம் அலுவலகத்தில் துவக்கப்பட்ட ஆஹா டாக்கீஸ் பொறுப்பிலும் நான் இருந்தபோது கவிஞர் வாலி அவர்களைப் பற்றிய ஒரு காட்சித் தொடரை எடுப்பதற்கான கருத்தாக்கத்தை உருவாக்கி அவரும் அதற்கு சம்மதித்திருந்தார்.

அதனால் அவரையும் அடிக்கடி அவரது வீட்டில் பார்க்கும்போது மிகவும் ஜாலியாகப் பேசிக்கொண்டிருப்பார்.

குமுதத்தில் வெளிவந்து கொண்டிருந்த சோவின் ஒசாம அசா தொடரை வெகுவாக, மனம் விட்டுப் பாராட்டுவார். 

ஒருநாள் அவர் வீட்டுக்குப் போனதும் “என்னப் பத்தி எப்பயா சோ சொல்லப் போறாரு. சோ சொல்லி நீ எப்ப எழுதப் போற?. சோ வைத்திருக்கும் லிஸ்டில் என்னுடைய பேர் இருக்கா, இல்லையா?”  

“இருக்கு சார்” – மெதுவாகச் சொன்னேன்.

”இருக்கும்யா… அத எப்போ நீ எழுதி, எப்ப நா படிக்கிறது. எனக்கு வேற உடம்பு சரியில்லாம இருக்கு. ஒன்னு கெடக்க, ஒன்னு நடந்திரக் கூடாது இல்லையா?.

சோ என்னப் பத்தி என்னதான் சொல்றார்னு எனக்குத் தெரியவேணாமா?.

அதனால ஒன்னு பண்ணு, சோவுக்கு பிரஷர் குடுத்து உடனே என்னப் பத்தி சீக்கிரமே எழுத வை. நானும் சோ கிட்ட பேசுறேன்” என்று எதனாலோ வற்புறுத்தி வாலி சொன்னாலும்

அதை துக்ளக் அலுவலகத்தில் வைத்து சோவிடம் சொன்னபோது  “அதுக்கென்ன அவசரம். நாம வச்சிக்கிற பட்டியல்படியே நிதானமாகவே செல்லலாம்” என்று சொல்லியிருந்தார்.

இதெல்லாம் நடந்து சில வாரங்களுக்குள் கவிஞர் வாலியின் மறைவுச் செய்தி வெளிவந்தது.

அவரது வீட்டிற்குப் போயிருந்தேன். சுற்றிலும் பெரும் கூட்டத்திற்கு இடையே கனத்த மவுனத்தோடு வாலியின் உருவத்தை பார்க்க வேண்டிருந்தது.

அடுத்த சில நாட்களுக்குள் என்னை அழைத்தார் சோ.

“என்ன செய்றது? இந்த வாரத்திலேயே வாலியைப் பற்றி நான் சொல்லிட்றேன்.” என்று சொன்னபடி வாலியைப் பற்றிய நினைவுகளை சற்று உணர்வுவயப்பட்ட நிலையில் பகிர்ந்து கொண்டார் சோ.

அப்படிப் பகிரப்பட்டு ஒசாமஅசா தொடரில் வெளிவந்த வாலியைப் பற்றிய கட்டுரை உங்கள் பார்வைக்கு.

****

கவிஞர் கண்ணதாசன் தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் தானும் புகுந்து தனித்துத் தன்னால் பெயர் வாங்க முடியும் என்று நிலைநாட்டியவர் கவிஞர் வாலி. இவரும் பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். 

கலைஞரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி முடித்து என்னை அதற்கு முன்னுரை எழுதச் சொன்னார். “தாராளமாக எழுதுகிறேன். நான் எழுதியதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது” என்று சொல்லி முன்னுரை எழுதிக் கொடுத்தேன்.

கலைஞரைப் பற்றிய பாஸிட்டிவ், நெகட்டிவ் என்று இரண்டு பக்கங்களைப் பற்றியும் அதில் எழுதியிருந்தேன். அது அப்படியே நூலில் வெளிவந்திருந்தது.

நாத்திகவாதியான கலைஞரையும் வாலி புகழ்ந்து பேசுவார். ஆத்திகவாதிகளையும் புகழ்ந்து பேசுவார்.

சில பேரிடம் எரிந்து விழுவார். சில தயாரிப்பாளர்கள் கொடுத்த பணத்தைக்கூடத் திருப்பி அனுப்பியிருக்கிறார்.

சிலரிடம் மிகவும் பணிவாக நடந்துகொள்வார். இந்த இரண்டு குணங்களும் அவரிடம் மாறி மாறி இருக்கும்.

வாலியின் சில பாடல்கள் ‘மாதவிப் பொன் மயிலாள்’ மாதிரி அவ்வளவு அமர்க்களமாக இருக்கும். அதே சமயம் ‘முக்காபுலா’ மாதிரியான பாடல்களையும் சரளமாக எழுதுவார்.

இரண்டு விதமான தண்டவாளத்தில் போகிற மாதிரி இரண்டு விதமான கூறுகளும் அவரிடம் இருந்துகொண்டே இருந்தது. கடைசிவரை அவர் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருந்தார்.

‘முகமது பின் துக்ளக்’ படத்தில் வாலி பாட்டுகள் எழுதினார். திமுக அந்தப் படம் வெளிவரக்கூடாது என்பதற்காக என்னென்ன செய்ய முடியுமோ அதெல்லாம் செய்துகொண்டிருந்தது.

கேமிராமேன்கள்கூட மிரட்டப்பட்டு விலகிவிட்டார்கள். கடைசியில் கேமிரா அசிஸ்டெண்ட்களை வைத்துப் படத்தை முடிக்க வேண்டியதாகிவிட்டது. அதில் நடித்த நடிகர்கள் மிரட்டப்பட்டார்கள்.

படத் தயாரிப்பாளர் நாராயண அய்யர். அவர் எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல் துணிந்து நின்றவர். எம்.ஜி.ஆரிடம் மானேஜராக இருந்தவர்.

அதில் நடித்த நடிகை ஜி.சகுந்தலாவுக்கும் மிரட்டல் வந்ததை நாராயணன் போன் பண்ணி என்னிடம் சொன்னார்.

“மதியத்திற்கு மேல் அவர் ஷூட்டிங்கிற்கு வரமாட்டார் போலிருக்கிறது. அதற்குள் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எல்லாம் எடுத்துவிடுங்கள்” என்று அவர் சொன்னதும், அவசர அவர் தொடர்பான காட்சிகளை எல்லாம் அவர் டெலிபோனில் பேசுகிற மாதிரி எடுத்துவிட்டோம்.

அந்த அளவுக்குப் படத்திற்குக் கெடுபிடி இருந்தது. படத்தில் பாட்டெழுதிய வாலிக்கும் இருந்தது. “எப்படி நீ எழுதலாம்?” என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு, “நான் ஒத்துக்கொண்டதால் என்னால் எழுதாமல் இருக்க முடியாது” என்று சொல்லியிருக்கிறார் வாலி.

இருந்தாலும் அவர்களுடைய நிர்ப்பந்தத்தினால் சில பாடல் வரிகளை மாற்றச் சொன்னார் வாலி. “எம்.ஜி.ஆருக்காக நான் பாட்டு எல்லாம் எழுதிக்கிட்டிருக்கேன்.

உன் படத்துக்காக எம்.ஜி.ஆர் உறவை என்னால் இழந்துற முடியாது” என்று அவர் சொன்னதால் சில வரிகளை மாற்றினோம். படம் முடிகிறபோது நான் வாலியைக் கூப்பிட்டுப் பேசினேன்:

“இந்தப் படம் வர்றதுக்கு முன்னாடியே இது முஸ்லிம்களுக்கு எதிரான படம்னு திமுககாரங்க பிரசாரம் பண்ண ஆரம்பிச்சாங்க. அது எடுபடாமப் போகணும். அதனால் அல்லாவைப் புகழ்ந்து டைட்டிலில் வரவேண்டிய பாடலை நீ எழுதணும்.”

சொன்னதும் வாலி எழுதிய பாட்டுதான் ‘அல்லா அல்லா’. அவ்வளவு தூரம் அருமையாக அமைந்துவிட்டது அந்தப் பாட்டு.

‘முகமது பின் துக்ளக்’ படம் வெளியானதும், தியேட்டர்களில் கலாட்டா பண்ண திமுகவைச் சேர்ந்த முஸ்லிம்கள் வந்தார்கள்.

தியேட்டருக்கு வந்தவர்கள் படத் துவக்கத்தில் ஒலித்த ‘அல்லா அல்லா’ பாடலைக் கேட்டதும் அப்படியே உட்கார்ந்து கைதட்டி விட்டார்கள். அந்த அளவுக்கு அந்தப் படத்துக்கு உதவியது, வாலியின் பாட்டு.

வாலி சாதாரணமாகப் பேசும்போது நகைச்சுவை கலக்காமல் பேசவே மாட்டார்.

கடைசியில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது போய்ப் பார்த்தேன். சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போதுகூட அவருடைய பேச்சு சீரியஸாக இல்லை. சிரித்தபடிதான் பேசிக்கொண்டிருந்தார்.

அதன் பிறகு மருத்துவமனையில் வாலியின் முகத்தில் ஆக்சிஜன் செலுத்த ‘மாஸ்க்’கைப் பொருத்தியிருக்கிறார்கள். அப்போது அந்த மாஸ்க்கை எடுத்துவிட்டு வாலி அருகில் இருந்தவர்களிடம் சொல்லியிருக்கிறார், “ஒரு இந்துவைக் காப்பாற்ற ‘மாஸ்க்’ (மசூதி என்ற அர்த்தத்தில்) வந்திருக்கு பார்த்தியா?”

எந்தத் தருணத்திலும் இப்படி நகைச்சுவை இழையோடப் பேசுவது வாலியின் இயல்பு. இதற்கெல்லாம் அவர் சிரமப்பட்டு யோசித்துக் கொண்டிருந்தவர் இல்லை. சட்டென்று அந்த நேரத்தில் அவர் மனதில் தோன்றுகிறவைதான்.

ஒரு படத்திற்குக் கதை எழுதினார் வாலி. அந்தப் படத்தில் எனக்கு முக்கியமான ரோல். சில காட்சிகளைப் பார்த்த நான் வாலியிடம்,

“இந்தப் படத்தை எப்படியாவது நிறுத்திடு. இது உனக்குப் பெயர் வாங்கித் தராது. கெட்ட பெயராப் போயிடும். நான் படத் தயாரிப்பாளர்கிட்டே சொல்றேன். நீயும் சொல்லிடு” என்று சொன்னபோது மறுத்துவிட்டார் வாலி.

“இந்தக் கதை என்னுடையது இல்லை. வசனம் மட்டும்தான் என்னுடையது. இதில் நான் போய்க் குறுக்கிட்டு, ‘இது சரியில்லை. ஓடாது’ன்னு சொல்லிக்கிட்டிருக்க மாட்டேன். நீ பேசாமல் வாயைப் பொத்திக்கிட்டிரு.”

அதுமாதிரி தான் தலையிட்டு ஒப்புக்கொண்ட காரியங்களைச் சரிவரச் செய்வதில் கவனமாக இருந்திருக்கிறார். இன்னொரு படத்தில் வாலியின் வசனம்.

அதில் ஒரு டயலாக்கில் ‘A-Z’ என்று எல்லா எழுத்துகளும் வருகிற மாதிரி எழுதியிருந்தார்.

அதாவது A – அடையாறில் புறப்பட்டு B – பேச்சுலராகிய நான் C – சென்ட்ரலில் இறங்கி… Z – ஜூவில் போய் நின்றதாக ஒரு நீண்ட டயலாக்கை சினிமா செட்டில் உட்கார்ந்து எழுதினார். அந்த மாதிரி கற்பனை வளம்!

எம்.ஜி.ஆருக்காக ‘படகோட்டி’, ‘அன்பே வா’ என்று தொடர்ந்து வாலி எழுதிய பாடல் எல்லாம் நல்ல ஹிட்.

அவருடைய பாட்டுத் திறமை மீது எம்.ஜி.ஆருக்குப் பெரிய மோகமே வந்துவிட்டது. அதற்காக வாலி அவரிடம் கைகட்டிச் சேவகம் பண்ணியதாகச் சொல்ல முடியாது.

எம்.ஜி.ஆருடன் பழகிய அனுபவங்களை வைத்துச் சமீபத்தில் ஒரு தொடரை துக்ளக்கில் வாலி எழுதினார். அதில் ஒரு அத்தியாயத்தின் சில பகுதிகளை நான் நீக்கிவிட்டேன்.

உடனே என்னை போனில் கூப்பிட்டார் வாலி.

“என்ன – இப்படிப் பண்ணிட்டே? என் எழுத்தில் கை வைச்சுருக்கியே… அந்த அளவுக்கு உனக்குத் தமிழ் தெரியுமா?”

“எனக்கு அந்த அளவுக்குத் தமிழ் தெரியணும்னு அவசியமில்லை. இந்தத் தொடரில் இந்தப் பகுதி வரவேணாம்னு நினைச்சேன். அதனால் எடுத்துட்டேன்.”

“அந்த மாதிரி எல்லாம் என் எழுத்தில் யாரும் கை வைக்க முடியாது. அந்தச் சுதந்திரம் யாருக்கும் கிடையாது. யாரும் இதுவரை இப்படிப் பண்ணினதில்லே. இதோடு இதை விட்டுரு. இனி அடுத்த அத்தியாயத்தில் இருந்து இப்படிப் பண்ணாதே.”

“நான் இந்தப் பத்திரிகைக்கு எடிட்டர். இதில் ஒரு மேட்டர் பத்திரிகையில் வரவேண்டாம்னு நான் நினைச்சேன்னா அதை எடிட் பண்ணுவேன். அந்தப் பொறுப்பு எனக்கிருக்கு.”

“நான் சொல்லிட்டேன். அதுக்குப் பிறகு உன் இஷ்டம். சில பேருக்குத் தானாப் புரியும். சில பேருக்குச் சொன்னாப் புரியும். சில பேருக்கு என்ன பண்ணினாலும் புரியாது. அப்படிப்பட்டவன் நீ. அதனால் பரவாயில்லை… ரைட், நீ என்ன பண்ணுவீயோ… பண்ணிக்கோ.”

இப்படிச் சொன்னாலும் தொடர்ந்து துக்ளக்கில் எழுதினார். எம்.ஜி.ஆரைப் பற்றி அவர் எழுதினாலும் அதற்கிடையில் தனக்கு ஆரம்ப காலத்தில் உதவியவர்களைப் பற்றி, சின்ன சின்னதாக உதவி பண்ணியவர்களைப் பற்றி, இன்றைக்குப் பிரபலமாக இல்லாதவர்களைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

அதைப் படித்துவிட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் சந்தோஷப்பட்டதும் எனக்குத் தெரியும். என்னிடம் பேசுகிறபோதுகூட, “இது அவர் எனக்குக் கொடுத்ததுடா” என்று நன்றியுணர்வுடன் குறிப்பிடுவார்.

அந்த உணர்ச்சி கடைசிவரை வாலியின் பேச்சிலும் எழுத்திலும் நிறைந்திருந்தது.

இந்த ‘ஒசாமஅசா’ தொடரை குமுதத்தில் ஆரம்பித்ததில் இருந்து என்னிடம், “என்னைப் பத்தி நீ என்ன எழுதப்போறே? ஏதாவது ஏடாகூடமா நீ எழுதுவே. அதைப் பார்க்கக் காத்துண்டிருக்கேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் வாலி.

அவர் சமீபத்தில் மறைந்த பிறகு அவரைப் பற்றிய நினைவுகளை இந்தத் தொடரில் பகிர்ந்துகொள்கிறபோது புன்னகை நிறைந்த வாலியின் முகம் மனசில் நிற்கிறது.

– மணா 

வெளியீடு: பென் பேர்டு பதிப்பகம்
பக்கங்கள்: 300
விலை: ரூ. 699/-
பேச – 8220063246

Comments (0)
Add Comment