கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 22
எழுதுவதற்கு எங்கிருந்தெல்லாம் தூண்டுதல்களைப் பெற்றிருக்கிறோம்? – என்பதை மனதிற்குள் மீள்பார்வையில் பார்த்தால், ஊடக உலகிலும், எழுத்துலகிலும் எவ்வளவு பேர் ஆசான்களாக இருந்து நமக்கு வழிகாட்டியிகிறார்கள்.
என்னுடைய சொந்த அனுபவத்தில் கிடைத்த சில பகிர்வுகள் மட்டும் இங்கே:
பத்து வயது வாக்கில் சென்னைக்கு குடும்பத்துடன் வரும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, அந்த பால்ய கால ஆச்சர்யத்தோடு சென்னையில் பல விஷயங்கள் என்னை ஈர்த்தன.
அப்படி ஈர்ப்புக்குரிய ஒன்று சென்னை மவுண்ட் ரோட்டில் இருந்த ஜெமினி ஸ்டூடியோவின் முகப்பு வியந்துப் பார்க்க வைத்திருக்கிறது.
முகப்பின் மேல் அமைந்த அந்த லோகோவில் இரண்டு சிறுவர்கள் இசைக்கருவியை இசைத்தபடி நிற்கிற சிற்பம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், வஞ்சிக்கோட்டை வாலிபன் என்று எத்தனையோ புகழ்பெற்ற படங்களைத் தயாரித்த ஜெமினி நிறுவனத்தின் மீதும் அந்த நிறுவனத்தை நடத்திய அமரர் வாசன் மீதும் மிகுந்த மதிப்பு ஏற்பட்டிருந்தது.
அவருடைய மகனான பாலன் என்று அழைக்கப்பட்ட திரு.பாலசுப்ரமணியம் அவர்கள் மீது அதே விதமான மதிப்பு இருந்தது.
அவரும் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் உட்பட பல படங்களை இயக்கியவாரே, ஆனந்த விகடன் என்கின்ற பாரம்பரியம் சார்ந்த வார இதழையும் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார்.
அதே நிறுவனத்திலிருந்து 80-களின் ஆரம்பத்தில் ஜுனியர் விகடன் வார இதழ் வெளிவந்தபோது, அதன் ஆரம்ப கட்டத்தில் ஃபீரிலேன்சராக பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது.
அடுத்தடுத்து நான் அனுப்பிய பல கட்டுரைகள் ஜுனியர் விகடனில் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனந்த விகடனிலும் அப்போது எழுதியிருக்கிறேன்.
சில கட்டுரைகளுக்குக் கூடுதலான சன்மானத் தொகை அனுப்பி வைக்கப்பட்டதும் நடந்திருக்கிறது.
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் நண்பர் ஒருவரை வழியனுப்பிவிட்டு திரும்பி ரயில்வே பிளாட்பாரத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே விகடன் அதிபரான பாலசுப்ரமணியம் அவர்கள் இரு கைகளிலும் தோள் பைகள் வைத்தபடி நடந்து வந்து கொண்டிருந்திருந்தார்.
நான் பக்கத்தில் சென்று அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
மணா என்று சொன்னதும், அப்போது எழுதிய சில கட்டுரைகளைக் குறிப்பிட்டு மிகச் சிக்கனமாகப் பாராட்டினார்.
கதர் வேஷ்டி சட்டையுமாக இருந்த அவர், அவருடைய தோற்றமும் அன்பான உபசரிப்பும் சட்டென்று என்னை நெருக்கம் கொள்ள வைத்தது.
அவர் கையிலிருந்த ஒரு பேக்கை நான் கொண்டு வருகிறேன் என்று சொன்னபோது,
“வேணாம் பா.. நீ பேசிக்கிட்டே கூட வா, முதல் வகுப்புல டிக்கெட் போட்டிருக்கேன். இன்னும் ட்ரெயின் கிளம்ப அரைமணி நேரம் ஆகும். அதுவரை நாம பேசிட்டிருக்கலாம்”
– என்று அவருடைய சுமைகளை அவரே முதல்வகுப்புப் பெட்டியில் நுழைகிற வரை எடுத்துக் கொண்டு வந்தார்.
உள்ளே நுழைந்ததும், இளம் குளிர் பரவியிருந்தது. எதிரே அமரச் சொன்னவர், திரும்பவும் நிதானமாக என் குடும்பத்தைப் பற்றி, என்னுடைய கல்வித் தகுதி, வாசிப்புப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்.
நான் பதிலுக்கு அவரைப் பற்றி சில கேள்விகளை இயல்பாக எழுப்பியபோது, தன்னைப் பற்றி சற்றும் பெருமிதம் காட்டாத மனநிலையில், இருந்ததை வெளிப்படுத்தியது அவருடைய மிக மிருதுவான பேச்சு.
ரயில் கிளம்ப தயாராகிவிட்டதும், “பார்த்துக் கீழ இறங்குங்க. தொடர்ந்து எங்களுக்கு எழுதுங்க” என்று புன்னகைத்தபடிச் சொன்னவரிடம் கைக்கூப்பி விடைபெற்றுக் கொண்டேன்.
ஆனந்த விகடனில் பணியாற்ற வாய்ப்பு உருவாகியபோதும், நண்பர் பிரபஞ்சனுடன் சேர்ந்து இன்னொரு பத்திரிகையில் பணியாற்ற நான் சென்று விட்டதால், விகடனில் பணிபுரிய முடியவில்லை.
அதன்பிறகு திரு.பாலசுப்ரமணியம் அவர்களின் மகனான திரு.சீனிவாசன் அவர்களை சிலமுறை சந்தித்திருக்கிறேன்.
அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை காமராஜர் அரங்கத்தில், ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்பை அதன் பழமை மாறாத நவீனத்துடன் வெளியிட்டிருந்தார்கள்.
அதற்கான விழாவில் விகடன் சேர்மனான திரு.பாலசுப்ரமணியமும் பங்கேற்று மேடையில் அமர்ந்திருந்தார்.
விழா முடிந்ததும் மேடைக்குப் போய் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த ஜெயகாந்தன் அவர்களைப் பார்த்துவிட்டு மேடையில் இருந்த பாலசுப்ரமணியம் அவர்களிடம், “என்னை தெரிகிறதா?, மணா” என்று சொன்னதும் மலர்ந்த முகத்துடன் அவர் சிரித்தார்.
கைகளைப் பற்றிக் கொண்டார்.
“என்னப்பா, என் கிட்ட வந்து உன்னைத் தெரியுதானு கேட்குற?. நீ எங்க இருந்தாலும், துக்ளக்-கோ, குமுதமோ உன் எழுத்தை வாட்ச் பண்ணிட்டுதா இருந்துருக்கேன். உன்கிட்ட இதைக் கேட்கணும். சோ-வோட ‘ஒசாமஅசா’ தொடரை ஏன் நீ விகடன்ல எழுதுல” என்று அவர் கேட்டபோது மௌனமாக இருந்தேன்.
சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு அவரே சொன்னார், “இதுப்பத்தி நா சோ-கிட்ட கேட்டப்ப, உனக்காகதான் அந்தத் தொடரை எழுத ஒத்துக்கிட்டதா சொன்னார். சரி அதுக்கு நீ என்ன செய்வ?” என்றவர், “எங்க பண்ணைக்கு எப்ப வர்ற? கண்டிப்பா வா” என்றபடி விடைக் கொடுத்தபோது, அதை புகைப்படமாக எடுத்தவர் எனது நண்பரும் பத்திரிகையாளருமான பொன்ஸீ.
இந்தச் சந்திப்பு நடந்து மிகக் குறுகிய காலத்தில் அவர் மறைந்த தகவல் கிடைத்து, சென்னையிலுள்ள அவரது வீட்டிற்கு இறுதி அஞ்சலிக்காகப் போயிருந்தேன்.
துக்ளக் ஆசிரியரான சோ அவர்களும் மிகவும் உடல் நலம் குன்றியவாறு அவர் எம்.டி. என்று அன்போடு அழைக்கும் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.
ஆனந்த விகடனின் அடுத்த இதழ், விகடன் அதிபரான பாலசுப்ரமணியம் அவர்களுக்கான அஞ்சலிக் கட்டுரைகள் நிறைந்த இதழாக உருவாகிக் கொண்டிருந்தது.
விகடனில் பணியாற்றிய எனது நண்பர் என்னை தொடர்புகொண்டு, “சோ அவர்களிடம் எங்க பாஸ் பற்றி ஒரு கட்டுரையை வாங்கித் தரமுடியுமா?” என்று கேட்டதும், சோ அவர்களிடம் சொன்னேன்.
உடனே துக்ளக் அலுவலகத்திற்கு என்னை லேப்டாப்புடன் வரச் சொன்னார். மாடியறையில், வழக்கம்போல சோ-வை சந்தித்ததும், மிகவும் உணர்வுவயப்பட்ட நிலையில் அவர் இருப்பதை அவரது தோற்றமே வெளிப்படுத்தியது.
“ஆரம்பிக்கலாமா என்று கேட்டவர், எங்க எம்.டி.யை பத்தி இப்படி ஒரு அஞ்சலிக் கட்டுரை எழுத வேண்டியிருக்கும்னு நான் நினைக்கலை. நான் எடிட்டர்னு அழைச்சது அவர் ஒருவரைத்தான்” என்று சொல்லியபோது அவரது கண்கள் கலங்கியிருந்தன.
கண்ணாடியைக் கழற்றிவிட்டு கண்களைத் துடைத்தபடி மிகவும் நேர்த்தியாக அவர் விரும்பிய எடிட்டரைப் பற்றி அன்பு மயமாகச் சொல்லிக் கொண்டு போனார்.
குறிப்பிட்ட இடத்தில் பேச்சை நிறுத்தி, “இதோடு போதும்” என்று சொல்லிவிட்டு லேப்டாப்பில் நான் டைப் செய்ததை கீழே கொண்டுபோய் பிரிண்ட் எடுத்துவரச் சொன்னார்.
எடுத்து வந்ததும், அதை ஒரு வாசிப்பு வாசித்துவிட்டுக் கொடுத்தார்.
அதை ஆனந்த விகடன் அலுவலகத்திற்கு நேரில் சென்று அந்தக் கட்டுரையைக் கொடுத்துவிட்டு வந்தேன்.
அடுத்த வார ஆனந்த விகடன் இதழில் அந்தக் கட்டுரை அஞ்சலிக் கட்டுரைகளில் ஒன்றாக வெளியாகி இருந்தது.
இப்போது நினைத்துப் பார்த்தால், விகடன் பாலசுப்ரமணியம் அவர்களைப் போல வெளிப்படையான மனதுடன் ஊக்கப்படுத்துகிறவர்கள் இப்போது இருக்கிறார்களா? என்ற கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
********
80-களின் துவக்கத்தில் நண்பர் பிரபஞ்சனால் எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டவர் சின்னக்குத்தூசி என்று அழைக்கப்பட்ட தியாகராஜர்.
திருவாரூரைப் பூர்வீகமாகக் கொண்ட சின்னக்குத்தூசி சென்னை திருவல்லிக்கேணியில் வல்லப அக்ரஹாரத்தில் உள்ள மேன்சனில் புத்தக அடுக்குகள் நிறைந்த ஒரு சிற்றறையில் தங்கியிருந்தார்.
பத்திரிகை உலகில் நீண்டகால அனுபவமும், காமராஜர், ஈ.வி.கே.சம்பத், கண்ணதாசன், கலைஞர், கி.வீரமணி என்று பல்வேறு தலைவர்களுடன் மிக நெருக்கமான பழக்கத்தைக் கொண்டிருந்தவரான சின்னக்குத்தூசிக்கும் எனக்கும் இடையிலான அந்தத் தொடர்பு ஆத்மார்த்தமானது என்றே சொல்லலாம்.
அதிலிருந்து அவர் மறைகிற வரை நீண்டகாலம் எங்களுக்கிடையிலான நட்பு நீடித்திருந்தது.
கருத்தியல் ரீதியாக எவ்வளவோ விவாதங்கள் நடந்தபோதும், கோவமாகவோ, எந்த ஒரு சுடு சொல்லையும் எந்த ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் அவர் சொன்னதில்லை.
எனது வாழ்வின் மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில் ஒரு தாய்க்கோழி தன் குஞ்சை அடைகாப்பதைப் போன்றதொரு அன்பான கதகதப்பை அவர் ஊட்டிக் கொண்டே இருந்தார்.
எனது ஒவ்வொரு நூல் வெளியானபோதும் அதன் முதல் பிரதியை அவரது அறைக்கு எடுத்துக் கொண்டுபோய் கொடுக்கும்போது, அவர் காட்டிய அன்பான எதிர்வினை அப்படியே என் எழுத்தை உச்சி முகர்வதைப் போலிருக்கும்.
அவ்வளவு ரசித்து பாராட்டியிருக்கிறார். எனது இரண்டு புத்தகங்களுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்.
பொருளாதார ரீதியாக சில சரிவுகளை எதிர்கொண்டபோதும் பாதுகாப்பான துணையாக உடன் நின்றிருக்கிறார்.
அவருடன் கருத்து நிலையில் முழுக்க முரண்பட்ட சிலருடன் எனக்கு நெருக்கமான தொடர்பு இருந்தபோதும் அதுபற்றிக் கிண்டல் செய்வாரே ஒழிய அவரது சொற்களில் நகம் முளைத்ததில்லை.
அந்த சிறு அறையிலும் அவரை பார்க்க வந்தவர்களுக்கு தொடர்ந்து தன்னால் அளிக்க முடிந்த ஆதரவை இறுதிவரையிலும் மிக எளிமையாக எந்த விதமான அகந்தைகளற்று வழங்கிக் கொண்டிருந்தார்.
என்னைப் போன்று அவருடன் பழகியவர்களுக்கு எழுத்து உந்துதலுக்கான அன்பான ஊற்றுக் கண்ணைப் போலவே இருந்தார்.
உடல்நலமற்ற நிலையில், திருவல்லிக்கேணியிலேயே இன்னொரு ஓட்டலில் சிறிதுகாலம் அவர் தங்கியிருந்தபோது, அங்கும் கட்சி பேதமற்று பலதரப்பட்ட அரசியல் பின்புலம் சார்ந்த நண்பர்கள் அவரைப் பார்க்க வந்து கொண்டே இருப்பார்கள்.
அந்த அறை, எப்போதும் அங்கு வரும் நண்பர்களாலும் அவர்கள் நடத்தும் விவாதங்களாலும் நிறைந்திருக்கும்.
மிகவும் கருத்துரீதியாக மாறுபட்ட ஒருவருடன் கூட நாம் அந்தக் கருத்தியலை மீறி நல்லதொரு நட்பைப் பேண முடியும் என்பதற்கான சாட்சியத்தைப் போல இருந்தார்.
“இவ்வளவு பேர் உங்களைத் தேடி வருவதில் உங்களுக்கு சலிப்பு வரவில்லையா?” என்று ஒருமுறை அவரிடம் கேட்டபோது, எப்போதும் போல மென்மையாக அவர் சொன்னார்.
“குடும்பம்னு ஒன்னு இல்லாத எனக்கு நண்பர்கள்தான் குடும்பத்தைப் போல் இருக்கிறார்கள். அவர்கள் வருவதை நான் எப்படி சலிப்பாக எடுத்துக் கொள்ள முடியும்?
அதேமாதிரி நம் மீதும் நமக்கு சலிப்பு வந்துவிடக்கூடாது. அது மிக மிக முக்கியம்” என்று சொன்னவர், அவருடைய கடந்த கால அனுபவங்களை ரசமாகச் சொல்லும்போது கேட்பதற்கு அவ்வளவு ரசனையாக இருக்கும்.
மிகவும் அன்பான சந்தர்ப்பங்களில், “கண்ணா” என்று அவர் உரிமையோடு அழைக்கும்போது, ஒரு தந்தையின் நிழலை அவருக்குள் காண முடிந்திருக்கிறது.
சென்னை பிருந்தாஸ் மருத்துவமனையில் உடல்நலமற்ற நிலையில், கையில் குளுக்கோஸ் டிராப் இறங்கிக் கொண்டிருந்த நிலையிலும் மறுபுறம் முரசொலிக்கு, மனதில் எழுதியிருந்த கட்டுரையை டிக்டேட் செய்து இன்னொருவரை எழுத வைத்துக்கொண்டிருந்தார்.
“இந்த நிலையிலும் நீங்க எழுதணுமா?“ என்று கேட்டபோது, அப்படி எழுதாம என்னால இருக்க முடியாது. எனக்குச் சரின்னு தோன்றத நா எழுதுறே. இது உங்களுக்கும் பொருந்தும். என்ன நிலை வந்தாலும் உங்களுக்கு சரின்னு படுறத எழுதிக்கிட்டே இருங்க. என்னைப் பொறுத்தவரை மரணம் நெருங்குகிற வரை நான் எழுத்தளவில் இயங்கிக்கிட்டுதான் இருப்பேன்” என்றார்.
பேசுவதற்கு சிரமப்பட்ட நிலையிலும் அவர் சற்றே தடுமாறியபடி பேசிய அந்தக் கனிந்த வார்த்தைகள் என்னைப் போன்றவர்களின் நெஞ்சில் எப்போதும் இளம் சூட்டைப் போல் நிறைந்திருக்கின்றன.
இப்போதுகூட அந்த நினைவின் கதகதப்பில்தான் இப்போது நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த வரியைக் கூட எழுதுவதற்கான உந்துசக்தியாக தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.
காலத்தால் சின்னக்குத்தூசி மறைந்தாலும், என்னைப் போன்றவர்களின் எழுத்துக்கான உந்துசக்தியாய் அவருடைய நினைவு உயிர்ப்புடன் எப்போதும் உடனிருக்கும்.
– மணா
(எழுதத் தூண்டிய அனுபவங்கள் தொடரும்)