மக்களுக்கான தலைவராக மாறிய எம்.ஜி.ஆர்.!

பிஞ்சுப் பிராயத்தில் மதுரையில் தான் நடித்த படங்களின் வெற்றி விழாவுக்கு வரும்போது எம்.ஜி.ஆரைத் தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்.
 
குறிப்பாக ‘அடிமைப் பெண்’ படத்தின் வெற்றி விழா மதுரையில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு அருகில் உள்ள சிந்தாமணி தியேட்டரில் நடந்தபோது படக்குழுவினருடன் வந்திருந்தார் எம்.ஜி.ஆர்.
 
தேர்தல் காலத்தில் எம்.ஜி.ஆர் வருகிற பிரச்சார வேனுக்காக சொந்த ஊரான மட்டப்பாறையில் இரவு நேரத்தில் காத்திருந்தோம்.
 
நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டிய நேரத்தில் பளிச்சென்ற வெளிச்சம் பாய்ந்த வேனில் வந்த எம்.ஜி.ஆர் சிரித்துக் கையாட்டி, தன்னுடைய ஐந்து நிமிடப் பேச்சில் எங்கள் ஊரைச் சேர்ந்த மட்டப்பாறைச் சிங்கம் என்றழைக்கப்பட்ட அய்யரைப் பற்றிக் குறிப்பிட்டபோது கைதட்டல் நள்ளிரவுக்கான அமைதியைத் தாண்டி ஏகமாகய் ஒலித்தது,
 
பத்திரிகைத் துறைக்கு வந்தபிறகு ராமநாதபுரம் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்த நிகழ்வு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரில் விழா.
 
எம்.ஜி.ஆர் கிளம்பும்போது பின்னால் பத்திரிகையாளர்களைக் கொண்ட வேன் பின்னால் கிளம்பும். அதில் பயணித்து நள்ளிரவில் திரும்புவோம்.
 
விருதுநகர் மாவட்டத் துவக்க விழா. மதிய நேரத்தில் விழா நடந்த மைதானத்திற்குள் பந்தலில் தனியாக உணவு பரிமாறல் நடந்து கொண்டிருந்தது.
 
பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் நாங்கள் அமர்ந்திருந்தோம்.
 
எங்களுக்கு நேர் எதிரே முதல்வரான எம்.ஜி.ஆர் மற்றும் அமைச்சர்களுக்கான உணவு பரிமாறப்பட்டிருந்தது.
 
நீண்ட தலைவாழை இலையில் முழுக்க அசைவ உணவில் பல ரகங்கள். எம்.ஜி.ஆர் அந்த இடத்திற்கு வந்ததும் சாப்பிடும் இடம் பரபரப்பானது.
 
எழ முயன்றவர்களைக் கையமர்த்தி அமரச் சொன்னவர், எதிரே பத்திரிகையாளர்களான நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தவர் இலையில் பரிமாறப்பட்டிருந்ததைக் கவனித்தார்.
 
அடுத்து அவருக்கும், அமைச்சர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டிருந்த இடத்திற்கு நகர்ந்து அங்கிருந்த உணவுகளைப் பார்வையிட்டார்.
 
சிறிது நேரம் மௌனமாக இருந்தவர் அங்கிருந்த மாவட்டப் பொறுப்பாளர்களை அழைத்தார் சற்று உரத்த குரலில்.
 
ஓடி வந்து நின்றார்கள் அவர்கள்.
 
“யார் சாப்பாடு பரிமாறியது?
 
எதிரே பத்திரிகையாளர்களுக்கு இலையில் வைக்கப்பட்டிருக்கிறதைப் பாருங்க.. எங்க இலையில் பரிமாறப்பட்டதையும் பாருங்க..
 
அவர்களுக்குச் சில ஐட்டங்கள் பரிமாறப்படலையே.. ஏன் இப்படிப் பண்றீங்க? இப்போ கொஞ்ச நேரத்தில் அவர்களுக்கும் எங்களுக்கு வைச்சிருக்கிற அதே உணவு வகைகளைப் பரிமாறி ஆகணும்…”
 
“நீங்க உக்காருங்க… நாங்க பரிமார்றோம்..’’
 
“இல்லை.. நீங்க பரிமார்ற வரை நான் நிக்கிறேன்’’
 
அவசரமாக அங்கிருந்தவர்கள் எங்களுடைய இலையில் மற்ற உணவுகளைப் பரிமாறுகிற வரை கையைக் கட்டியபடி நின்று கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.
 
எங்களிடையே இருந்த மூத்த நிருபர் போய் அவரிடம் “அதனால் என்ன… நீங்க உட்காருங்க சார்’’ என்று சொன்னபோதும், சரி சமமாகப் பரிமாறப்பட்டபிறகே அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இலை முன்பு அமர்ந்து கையசைத்து எங்களைச் சாப்பிடச் சொன்னார்.
 
சாப்பிடத் துவங்குவதற்கு முன்னால் ஒரு நாளிதழலில் பணியாற்றும் பத்திரிகையாளர் எங்களிடம் மெதுவான குரலில் கிசுகிசுப்பாகச் சொன்னார்,
 
“தலைவர் பசிக்கிற நேரத்தில் வயித்தை நிறைக்கிறதுக்கு முன்னாடி மனசை நிறைச்சுட்டார்’’.
 
இன்னொரு நிகழ்வு தேர்தல் பிரச்சார நேரத்தில்.
 
மதுரை பாண்டியன் ஹோட்டல். இரவு ஏழு மணிக்குப் பிறகு தேர்தல் பிரச்சாரப் பயணம். அவருடைய வேனுக்குப் பின்னால் இருபது பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு வேன்.
 
(அப்போது அந்த எண்ணிக்கை தான்-புகைப்படக் காரர்களையும் சேர்த்து)
 
மதுரையிலிருந்து தேனி நோக்கிய பயணம். பல இடங்களில் நின்று நின்று மெதுவாகப் பயணம். எங்கும் மக்கள் திரள்.
 
சில கிராமங்களுக்குச் சாலையை மறித்து தங்கள் ஊருக்கு வரச்சொன்ன மக்களிடம் உரிமையுடன் பேசிப் பிறகு வருவதாகச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
 
இன்னொரு ஊரில் வரச்சொல்லி மறியலே செய்தபோது மெயின் ரோட்டிலிருந்து மூன்று கி.மீ தள்ளி உள்ள அந்தக் கிராமத்துக்குள் எம்.ஜி.ஆருடைய வேன் நுழைந்து வெளிச்சம் பாய வேனின் மேல்பகுதிக்கு எம்.ஜி.ஆர் சென்றது தான் தாமதம்-கூடியிருந்த பெண்கள் போட்ட குலவைச் சத்தம் காதுகளைத் துளைத்தது.
 
சிறு பேச்சிற்குள் “என் ரத்தத்தின் ரத்தமான…’’ என்றதும் மேலும் குலவைச் சத்தங்கள்.
 
அங்கிருந்து கிளம்பி ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள இன்னொரு ஊருக்குப் போகிற வழியில் நீண்ட இடைவெளி. நள்ளரிவு பனிரெண்டைத் தாண்டியிருக்கும்.
 
ஓரிடம் வந்ததும் வாகனங்கள் அடுத்தடுத்து பிரேக் போட்டுக் கிறீச்சிட்டு நின்றது.
 
சிறு சலசலப்பு. சற்றுத் தொலைவில் பெரிய மரம். அதை நோக்கி நடந்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். பின்னால் பெரிய டிபன் கேரியர்களைச் சுமந்தபடி ஒரு கூட்டம்.
 
பெரிய மரத்தடியில் கொண்டு வந்திருந்த ஜமுக்காளங்கள் விரிக்கப்பட்டன. காரின் ஹெட்லைட் வெளிச்சம் அந்த இடம் நோக்கி அடிக்கப்பட்டதும், பிரகாசமானது அந்த இடம்.
 
ஒருவர் ஓடி வந்து வேனில் இருந்த எங்களிடம் சொன்னார்.
 
“தலைவர் உங்களை எல்லாம் அழைச்சுட்டு வரச் சொன்னார்’’
 
தயக்கத்துடன் நாங்கள் போனதும் அவரும் அமர்ந்து எங்களையும் வட்டமாக உட்காரச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
 
“ஏழு மணிக்கு முன்னாடி தானே சாப்பிட்டிறுப்பீங்க… இப்போ என்ன டைம் ஆகுது? கூட உட்கார்ந்து சாப்பிடுங்க’’
 
சில அமைச்சர்களும் அமர, இலைகள் போடப்பட்டு அசைவ உணவு பரிமாறப்பட்டது. அவ்வளவு நேரம் கழித்தும் இளஞ்சூட்டுடன் இருந்தன உணவு வகைகள்.
 
“விடிய விடிய என்னோட வரணும் இல்லையா… கீழே உட்கார்ந்து சாப்பிடுறதிலே அசௌகர்யம் ஒண்ணுமில்லையே’’ – சிரித்தபடி கேட்ட எம்.ஜி.ஆர் சம்மணம் போட்டு வெகு இயல்பாக உட்கார்ந்திருந்தார்.
 
அதன்பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்தபிறகு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் அந்த வளாகத்தில் விழா.
 
நிறையப் பத்திரிகையாளர்கள். அவருடைய ஒவ்வொரு அசைவும் உற்றுக் கவனிக்கப்பட்டது.
 
மாலை நான்கு மணி வாக்கில் நடந்த அந்த விழாவில் எம்.ஜி.ஆர் பேச முயன்றபோது தொண்டர்கள் உணர்ச்சிவயப்பட்டார்கள்.
 
“சிரமப் படாதீங்க… தலைவா…” – கத்தினார்கள்.
 
அடுத்து மதுரையில் நடந்த மாநாடு. அதற்கு எம்.ஜி.ஆர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேடைக்கு வந்தபோது பெருங்கூச்சல். அடங்க வெகு நேரமானது.
 
தன்னை நம்பிய ரசிகர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் கொண்ட பற்றினால் சில விஷயங்களை அந்த மாநாட்டில் சிரமத்திற்கிடையில் அவர் பேசியபோதும் திரண்டிருந்த பெருங்கூட்டம் உணர்வு வயப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
 
சென்னை ராஜாஜி ஹாலில் அவருடைய உடல், மக்கள் திரளுக்கிடையே வைக்கப்பட்டிருந்தபோது அந்த இழப்பின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டிருந்தன சில உயிர்கள்.
 
– பத்திரிகையாளர் மணா-வின் ‘மறக்காத முகங்கள்’ நூலில் இருந்து.
 
மறக்காத முகங்கள்!  
வெளியீடு: அந்திமழை பதிப்பகம்,
சென்னை.

தொடர்புக்கு 7358460260

Comments (0)
Add Comment