கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 25
நம் எல்லோருடைய வாழ்விலும் நாம் கடந்து வந்த காலத்தில், சில கணங்கள் கனமானபடி நெஞ்சில் தங்கி இருக்கின்றன.
சில கணங்கள் எப்போதுமே பசுமையும், குளிர்ச்சியுமாக நினைவில் மிதந்து கொண்டிருக்கின்றன.
உண்மையில் அப்படிப்பட்ட கணங்கள்தான் நம்முடைய வாழ்வை உயிர்ப்பிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
அப்படி எனக்குக் கிடைத்த அபூர்வமான கணங்களைப் பற்றிய சிறு பதிவு இது.
பல எழுத்தாளர்களை நான் சந்தித்திருந்தாலும், அதில், குறிப்பிடத்தக்கவராக சுந்தர ராமசாமி அவர்களை சொல்ல வேண்டும்.
‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ என்கிற அவருடைய மிகவும் பிரபலமான நாவலை மதுரையில் உள்ள ஓட்டல் அறையில் 3 நாட்கள் வரை இடைவெளிவிட்டு அவரே வாசித்துக் காட்டியபோது, அவருடைய குரலில்தான் எவ்வளவு ஏற்ற இறக்கங்கள்.
தன்னுடைய நாவலை அதை எழுதிய எழுத்தாளரே அவருடைய குரலில் வாசித்து, அதை நேரில் கேட்கிற அனுபவத்தை நான் பெற்றபோது எனக்கு வயது 20.
ஒரு புளியமரத்தின் கதை, பிரசாதம் என்று அவருடைய படைப்புகளையும் பசுவய்யா என்கிற பெயரில் அவர் எழுதிய கவிதைகளையும் வாசித்த இளம் வாசகனாக அவருக்கு அறிமுகமானதுமே எதனாலோ ஒரு நெருக்கம் கூடிய உணர்வு ஏற்பட்டது.
ஓட்டல் அறையிலிருந்து பலர் கிளம்பியதும் அருகிலிருந்த ஒரு ஓட்டலுக்கு போனபோது என்னை பேசவிட்டு அதை கூர்ந்து கவனிப்பதில் அவர் காட்டிய ஈடுபாடு வியப்பளிப்பதாக இருந்தது.
அவருடைய வீட்டு நூலகத்திலிருந்து சில புத்தகங்களை பதிவுத் தபாலில் அனுப்பி வைத்திருக்கிறார்.
டைப் செய்யப்பட்டு கீழே கையெழுத்திட்ட நேர்த்தியுடன் அவர் எனக்கு எழுதிய கடிதங்கள் அவருடைய அடர்த்தியான அன்பைச் சொல்லும்படியாக இருந்தன
என்னுடைய வாழ்வில் நல்லதும் கெட்டதுமான பல நிகழ்வுகள் நடந்தபோதெல்லாம் உடன் நின்று ஆற்றுப்படுத்தியிருக்கிறார்.
சென்னையில் ஒரு சமயம் அவரை இதய பரிசோதனை பண்ணுவதற்காக டாக்டர்.தணிகாசலத்திடம் அழைத்துச் சென்று அவர் பரிசோதித்து அவருக்கு ஆபரேசன் எதுவும் தேவையில்லை என்று சொன்னபோது, அவ்வளவு தூரத்திற்கு குழந்தைத்தனமான ஆர்வத்துடன் சந்தோஷப்பட்டார்.
சென்னையில் லெப்டோ பைரசிஸ் என்றழைக்கப்பட்ட எலிக் காய்ச்சலால் நான் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக நான் வீட்டுப் படுக்கையில் இருந்தபோது, நண்பர் அரவிந்தனுடன் சேர்ந்து என்னை பார்க்க வந்திருந்தார் சுந்தர ராமசாமி.
ஆறுதலும் அதே சமயம் குறும்பும் கொப்பளிக்க அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த அன்பான உரையாடலே மருந்து தடவுவதைப் போல மென்மையாக இருந்தது.
நாகர்கோவிலில் உள்ள அவருடைய வீட்டில் அவரை சந்திக்கும்போது, காலை சிற்றுண்டி முடித்துவிட்டு அங்கேயே கழித்த பல மணி நேரங்களை எப்போதுமே மறக்க முடியாது.
அதேமாதிரிதான் அவருடைய மனைவியான கமலம்மாளும் கண்ணனும் பழகியிருக்கிறார்கள் இன்றுவரை.
அவர் எழுதிய நூல் ஒன்றை எனக்கும் எனது மனைவிக்கும் சமர்ப்பித்திருந்ததெல்லாம் நட்பின் அன்பான கொடை என்றே சொல்ல வேண்டும்.
அவரது அந்திம காலத்தில் நாகர்கோவிலில் அவரை சந்தித்தபோது, பேசிய அந்த வார்த்தைகளில்தான் எத்தனை கனிவு?
“நாம் பலருடன் பழகுகிறோம். சிலருடன் பேசும்போது “அடுத்து என்ன பேசுவது?“ என்று ஒருவிதமான மௌனம் பேச்சிற்கிடையே வந்துவிடும்.
அப்படி எந்தவிதமான மௌனமும் இடையில் வந்துவிடாதபடி பழகிய சிலரில் நீங்களும் ஒருவர்” என்று சொன்ன சொற்களில் கசிந்த அன்பு எப்போதும் உடனிருக்கும்.
**************
சௌந்தர்ய உபாசகன் என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் மூத்த எழுத்தாளரான லா.ச.ரா என்றழைக்கப்படும் லா.ச.ராமாமிர்தத்தை மதுரையில் நான் சந்தித்தது நினைவுகொள்ளத்தக்க அனுபவம்தான்.
மதுரை நேதாஜி சாலையில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்கு வந்து அவர் தங்கியிருந்தபோது, ஒரு மாலை துவங்கி நள்ளிரவு முடிகிறவரை அவருக்கே உரித்தான கவித்துவ மொழியோடு பேசிக் கொண்டிருந்தார் லா.ச.ரா.
அந்த அறையிலும் ஏற்கனவே அவர் எழுதிய அபிதா இதழ்கள், அஞ்சலி போன்ற நூல்களைப் படித்த இளம் வாசகனாக நண்பர்களுக்கிடையே கூர்ந்து கவனித்தபடி அமர்ந்திருந்தேன்.
பேச்சிற்கிடையே வந்துவிழுந்த சில சொற்கள் மழைத்துளிகளைப் போல ஈரத்துடன் இருந்தன.
“நாம் இன்று எழுதும் சிறு படைப்பில்கூட நமது பெயரை போட்டுக் கொள்கிறோம்.
இங்கே உள்ள கோவில் சிலைகளைப் பாருங்கள். எவ்வளவு நுட்பமாக கல்லில் அதை செதுக்கியிருக்கிறார்கள் அந்தக் கால கலைஞர்கள்.
அவர்களில் யாருக்காவது தான் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய அந்த சிலைக்குக் கீழே தன்னுடைய பெயரைப் போட வேண்டும் என்று தோன்றியிருக்கிறதா?
அதை உருவாக்கிய அற்புதமான கலைஞர்கள் மறைந்துவிட்டார்கள். அதை செதுக்கியவர்களின் பெயர்களும் மறைந்துவிட்டன.
ஆனால், அவர்கள் உருவாக்கிய அந்தக் கோபுரமே வானத்தில் போடப்பட்ட சிற்பக் கலைஞனின் கையெழுத்தைப் போல அல்லவா நிமிர்ந்து நிற்கிறது.”
“காலம் என்பது நமக்கு அருகில் இருக்கும் பிரம்மாண்டமான கண்ணாடியைப் போன்றது. நம்முடைய ஒவ்வொரு செயலையும் அந்தக் கண்ணாடி கவனித்துக் கொண்டிருக்கிறது.
நாம் தூங்கினாலும் கூட அந்தக் கண்ணாடி விழிப்போடு நம்மை பார்த்துக் கொண்டிருக்கும்.”
– இம்மாதிரி அவர் பேசியவற்றை மனதில் பதிய வைத்து இரவோடு இரவாக அதை எழுத்துப் பிரதியாக்கி காலை எட்டு மணி வாக்கில் அவர் தங்கியிருந்த அறைக்குக் கொண்டு போயிருந்தேன்.
படு உற்சாகமாக வரவேற்றார் லா.ச.ரா. கையில் வைத்திருந்த அவருடைய பேச்சைப் பதிவு செய்த எழுத்துப் பிரதியை அவரிடம் கொடுத்த போது, அவருடைய முகமே வெளிச்சமானது.
விரைவாக அதை வாசித்து முடித்தபோது, சிறு புன்னகை அவரிடம் வெளிப்பட்டது.
“ஐந்து பக்கங்களுக்கு மேல் நான் பேசினதை எந்தக் குறிப்பும் எடுக்காம என்னுடைய மொழி நடையிலேயே எழுதியிருக்கீங்க.
இலங்கையில் இத்தகைய கூர்ந்த கவனிப்பை அவதானிப்புனு சொல்லுவாங்க. இந்த அவதானிப்பை மட்டும் விட்றாதீங்க”.
அவர் சொன்னபடியே அவதானித்து எழுதப்பட்ட அந்த எழுத்துப் பிரதி திரு. சிற்பி பாலசுப்ரமணியம் நடத்தி வந்த ‘வானம்பாடி’ இதழில் லா.ச.ரா-வுடன் ஒரு உரையாடல் என்கிற தலைப்பில் வெளிவந்தது.
**************
திரையில் பார்த்து சிறுவயதிலிருந்தே என்னை வியக்கவைத்த திரைக்கலைஞரான சிவாஜி கணேசன் அவர்களோடு மூன்று நாட்கள் காரில் அவருடன் சேர்ந்து பயணப்பட வாய்ப்பு இருக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
அப்படிப்பட்ட வாய்ப்பை எனக்கு உருவாக்கிக் கொடுத்தவர் துக்ளக் ஆசிரியரான சோ.
தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் துவக்கி அதற்காக தமிழகம் முழுக்க பிரச்சார பயணத்தை அவர் தமிழகத்தின் தென் மூலையிலிருந்து சென்னை வரை மூன்று நாட்கள் காரில் பயணப்பட்டபோது சோ-வின் விருப்பப்படி என்னையும் உடன் அழைத்துச் சென்றார் சிவாஜி.
முதல்நாள் காரில் ஏறிய கொஞ்ச நேரத்திற்குள்ளேயே ஒருமை கலந்த பேச்சிற்கு வந்துவிட்ட சிவாஜி, மறுநாளெல்லாம் இன்னும் கீழிறங்கி உரிமையுடன் பேச ஆரம்பித்தார்.
அவருடைய திரை அனுபவங்களை மிகவும் திறந்த மனதோடு அவர் சொல்லிக்கொண்டு வந்ததைப் பார்த்தபோது நன்கு முதிர்ந்த ஒரு குழந்தைப் பேசுவதைப் போலவே இருந்தது.
‘எம்-டன் மகன்’ படத்தில் நடிகர் நாசர், மகனாக நடிக்கும் பரத்தை கடுமையாகக் கண்டித்து, ஈரலைச் சாப்பிட வைப்பது மாதிரியே, தூத்துக்குடியில் ஒரு கனமான அதட்டலைப் போட்டு இறாலை முதன்முறையாக சிவாஜி என்னை சாப்பிட வைத்ததெல்லாம் ருசியான அனுபவம்.
இடையே ஒரு கூட்டத்தில் காரைவிட்டு இறங்கி மேடைக்குப் போய் பேசிவிட்டு கூட்டம் முடிந்து தொண்டர்கள் பாதுகாப்போடு ஒரு வழியாக காரில் ஏறிவிட்டார் சிவாஜி.
கூட்டத்திற்கிடையே சிக்கிக் கொண்ட என்னால், அந்தக் காருக்குப் பக்கத்தில் சுலபமாக போக முடியவில்லை.
முண்டியடித்து காரின் அருகில் போனபோது, “அந்தக் குரங்குப் பய அனுப்பிச்ச குரங்குப் பய எங்க போனான்? அவனை புடிச்சுக் கொண்டாங்கடா” என்று தேவர் மகன் ஐயா மாதிரியே உரத்தக் குரலில் அவர் கத்திக் கொண்டிருந்தபோது, நான் காருக்குள் நுழைந்தேன்.
“வாப்பு.. உனக்கு ஒழுங்கா ஏறக் கூடத் தெரியல, இனிமேலும் இப்படி எங்கயாவது போய்த் தொலைஞ்ச.. நல்லாயிருக்காது. அப்புறம் அந்தக் குரங்கு பயலுக்கு யாரு பதில் சொல்றது” என்று கத்தியவர் சிறிது நேரத்தில் சமாதானம் ஆகி, மீண்டும் குழந்தையைப் போல பேச ஆரம்பித்துவிட்டார்.
சென்னைக்குத் திரும்பி, துக்ளக் ஆபிஸிற்கு போனதும் சோவிடம் அந்த அனுபவத்தைச் சொன்னேன்.
சொன்னதும் அழுத்தமான புன்னகை.
“இதுவரை என்னத் தான் அவர் குரங்குப் பைய்யன்னு கூப்பிட்டிருக்கார். இப்ப உங்களையும் கூப்பிட ஆரம்பிச்சிட்டாரா!.. ஹை.. ஹை.. ஒரே ஜாலி. எப்படியோ குரங்குப் பட்டியல்ல நீங்களும் என்னோட சேந்துட்டீங்க” என்று அவரது பாணியில் கலாய்ப்பின் உச்சிக்குப் போனார் சோ.
நிறைவாக இப்படிச் சொன்னார்: “இந்த ராமசாமியே அனுமாராகும்போது, நீங்க யாரு, லட்சுமணன்தானே. அதனால், நீங்களும் அனுமாரா மாறிடலாம். நல்ல பொறுத்தம் தான்” என்று கேலி படற சொன்னபோது,
அந்தக் கால ஓவியரான கொண்டைய ராஜுவின் ராமாயண ஓவியத்தில் ராமருக்கு முன்னால் மௌனமாக அமர்ந்திருக்கிற அனுமாரைப் போலவே நானும் அமைதியாக இருந்தேன்.
மதம் மாறுவதைப் போல, இனம் மாறும் பேரதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கு எவ்வளவு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்?
**************
இதே தொடரில் கலைஞரைப் பற்றி அவ்வப்போது குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், இது இன்னொரு அனுபவம்.
கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் சரி, தமிழக முதல்வராக இருந்தபோதும் சரி, இன்றைக்குப் பேசினால் நாளைக்குச் சந்திக்க முடியும் என்கிற அளவுக்கே அவர் தன்னை வைத்திருந்தார்.
அன்றும் அப்படித்தான். கனிமொழியின் வீட்டில் குமுதம் இதழுக்கான பேட்டி எடுக்க நான் சென்றபோது, என்னுடன் வந்திருந்தவர் திரைப்படக் கலைஞரான ‘வைட் ஆங்கிள்’ ரவிசங்கர்.
பேட்டியெல்லாம் முடிந்து புகைப்படம் எடுப்பதற்கு ஆயத்தமானார் கலைஞர்.
ஹாலில் சில லைட்டிங் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார் நண்பர் ரவிசங்கர்.
வட நாட்டவர்கள் திருமண நேரத்தில் பயன்படுத்தும் விசேஷ ஜரிகை தலைப்பாகையை கலைஞரை அணிவிக்கச் செய்து வித்தியாசமாக படம்பிடிக்க வேண்டும் என்பது நண்பர் ரவிசங்கரின் விருப்பம்.
அந்த விருப்பத்திற்கு முழு மனசோடும் குழந்தைத்தனமாக ஒரு ஆர்வத்தோடும் ஒத்துழைத்தார் கலைஞர்.
அருகிலிருந்த அறையின் நிலைக்கண்ணாடிக்கு முன்னால், தலையில் அந்த ஜரிகை தலைப்பாகையை சரியாக அணிவித்தார். கச்சிதமாக அவருக்குப் பொருந்தியிருந்தது அந்த தலைப்பாகை.
கண்ணாடியிலிருந்து முகத்தைத் திருப்பி, “எப்படிய்யா இருக்கு..” என்று கேட்டார்.
“கலைஞர்-ஜி.. மாதிரி இருக்கு” என்று சொன்னதோடு நிற்காமல், கூடவே இன்னொரு வார்த்தையையும் நான் சொன்னபோது, பலத்த சிரிப்பு வெளிப்பட்டது அவரிடமிருந்து.
“எப்படிய்யா இப்படி சொல்ற. மத்தவங்களை நாசுக்கா கேலி பண்றதுல என்னை எக்ஸ்பர்ட்ன்னு சொல்லுவாங்க. நீ என்னையே கேலி பண்ற. இருந்தாலும் நீ சொன்னது ரசிக்க வைக்கிற மாதிரிதான் இருக்குது.
ஆமா, இன்னொன்னு கேட்கணும். இப்பச் சொன்னியே இதெல்லாம் முன்கூட்டியே இப்படிதான் பேசணும்னு யோசிச்சிட்டு வருவியா” என்று புன்னகை மாறாமல் கேட்டார் கலைஞர்.
“ஜரிகை தலைப்பாகையுடன் நீங்க இப்படி கண்ணாடி முன்னாடி நிப்பீங்கன்றதெல்லாம் முன்கூட்டியே நான் யோசிக்க முடியுமா என்ன?
இதெல்லாம் அப்பப்ப தோன்றதை சொல்றது தான். ஃபிரிட்ஜில் பதப்படுத்தி வைச்சிருக்கற காய்கறி போல, மூளையில் கருத்தை தேக்கி வச்சிருந்து சந்தர்ப்பத்திற்கு ஏத்தபடி பேச முடியாது இல்லையா?”
– என்று சொன்னதும் ரசித்த புன்னகையுடன் தனது கைகளை காற்றில் எழுதுவது போல சைகை காட்டி, “நீ சினிமாவுக்கு வசனம் எழுதலாம்யா” என்று கேலி கலந்த சிரிப்புடன் சொன்னார் கலைஞர்.
கலைஞர் அன்று மனசில் விதைத்த விதை தற்போது முளைத்துக் கொண்டிருக்கிறது.
– மணா