பழநி முருகன் சிலையும் புலிப்பாணியின் சாபமும்!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 24
 
ஆலயம் செய்வோம், அங்கே அனுமதி இல்லை;
நீ அந்தக் கூட்டமே, இதில் அதிசயம் இல்லை.
 
1971-ல்  வெளிவந்த ‘சவாலே சமாளி’ திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் எழுதிய பாடலின் ஒரு பகுதி.
 
ஞானப்பழத்திற்காக அண்ணனிடம் போட்டியிட்டு, பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு பழநி மலை மீது முருகன் அமர்ந்ததெல்லாம் ‘திருவிளையாடல்’ காலத்துக் கதை.
 
சிலருக்கு இதைப் படிக்கும்போதே பின்னணியில் கே.பி.சுந்தராம்பாள் உச்சஸ்தாயில்  பாடும் “பழம் நீயப்பா” பாடல் எதிரொலிக்கலாம்.
 
முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருந்தாலும், பழநிக்குத் தனிப்புகழ். தனிப்பெயர். அதற்காகத் தான் ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் இங்கு படையெடுக்கிறார்கள்.
 
தமிழகத்தில் உண்டியல் நிதி அதிகமாக வசூல் ஆகக் கூடிய ஆன்மிகத் தலங்களில் ஒன்று – பழநி.
 
அந்தக் கால நக்கீரர் சொற்களில் சொன்னால் ஆவினன்குடி (பழநியின் அந்தக் காலப் பெயர்). பழநியில் உள்ள தண்டாயுதபாணி சிலையை உருவாக்கியவர் பெரும் சித்தர்களில் ஒருவரான போகர்.
 
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் போகர் பழநியில் வாழ்ந்தபோது அவரும், அவருடைய தலைமைச் சீடர் புலிப்பாணி சுவாமிகளும் சேர்ந்து ஒன்பது அபூர்வ மூலிகைகளை ஒன்றிணைத்து ரசவாதம் செய்து நவபாஷாணத்துடன் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுவது முருகன் சிலை.
 
கௌரிப் பாஷாணம், கெந்தகப் பாஷாணம், சீலைப் பாஷாணம், கச்சாலப் பாஷாணம், வெள்ளைப் பாஷாணம், தொட்டிப் பாஷாணம், சூதப் பாஷாணம், வீரப் பாஷாணம், சங்குப் பாஷாணம் என்று ஒன்பது பாஷாணங்களின் கலவையால் உருவானதாகச் சொல்லப்படும் நவபாஷாணச் சிலை சித்தர்கள் மருத்துவ மரபில் உருவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
 
நவபாஷாணச் சிலையால் என்ன நன்மை அல்லது மற்ற சிலைகளிலிருந்து இது எப்படி வித்தியாசப்பட்டிருக்கிறது என்கிற கேள்விகள் எழலாம்.
 
நவபாஷாணச் சிலைக்குச் சந்தனத்தாலோ, வேறு பொருட்களினாலோ பூஜை செய்தால் மருத்துவக்குணம் கொண்டதாக அந்தப் பொருட்கள் மாற்றம் அடைகின்றன என்கிற தகவல்கள் பரவியதால், பழனியைச் சுற்றி நிறைய சித்த வைத்திய நிலையங்கள் தோன்றிவிட்டன.
 
ஆளுக்காள் விதவிதமான லேகியங்களைத் தமிழ்நாடு கடந்தும் விநியோகித்தார்கள்.
 
இது ஒருபுறம் என்றால் 1983 வாக்கில் பழநி தண்டாயுதபாணி சுவாமி சிலை சேதம் அடைந்ததாகச் செய்திகள் பரவின.
 
இதைக் கண்டித்துப் பழநியில் பல போராட்டங்கள் நடந்தன. ஊடக வெளிச்சத்திற்கு வந்தது சிலை விவகாரம்.
 
‘ஜூனியர் விகடன்’ இதழுக்காக அப்போது பழநிக்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்தேன்.
 
கோவிலைச் சுற்றி சிலை சேதம் அடைந்ததைக் கண்டித்து நிறைய சுவரொட்டிகள்.
 
‘வீரக்கனல்’ பாலசுப்பிரமணியம் என்பவரைச் சந்தித்தபோது பழநி கோவிலின் பூர்வீகத்தையே விளக்கினார்.
 
கோவில் அர்ச்சகர்கள், நிர்வாகிகள், பக்தர்கள் என பலரையும் சந்திக்க வைத்து, பழநி கோவில் அடிவாரத்தில் உள்ள முக்கியமான மடத்திற்கு அழைத்துச் சென்றார்.
 
புலிப்பாணி சுவாமிகள் மடம். போகரின் சீடர்கள் வழிவந்த மடத்தின் ஒருபகுதியில் புலிப்பாணியின் சமாதி. இன்னொரு இடத்தில் போகரின் சமாதி.
 
தண்டாயுதபாணியின் சிலை உருவாக்கப்பட்ட விதம் குறித்தும், நவபாஷாணக் கலவையில் சிலை உருவாக்கப்பட்ட ரசவாதம் குறித்தும் பேசிய புலிப்பாணி மடத்தைச் சேர்ந்தவர்கள் சொன்ன உறுத்தலான விஷயம் இது.
 
“இந்தச் சிலையை உருவாக்கி வழிபட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு, திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பிரச்சினை வந்தது.
 
அதுவரை எங்களுடைய மூதாதையர் காலத்திலிருந்து எங்களுக்கு இருந்து வந்த அர்ச்சனை உரிமையை நாங்கள் இழந்தோம்.
 
இதை உருவாக்கியவர் திருமலை மன்னரின் அரண்மனையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவரான ராமப்பய்யர்.
 
எங்களுக்குப் பதில் மற்றொரு சமூகத்தினர் அதே கோவிலுக்குள் பூஜை செய்யத் தொடங்கினார்கள்.
 
எங்களுக்குக் கோவில் திருவிழாவின் போது சில உரிமைகளும், கோவிலுக்குள் சில உரிமைகளும் வழங்கப்பட்டன.
 
அதற்குப் பிறகு கோவிலின் கருவறைக்குள் நாங்கள் செல்ல முடியவில்லை. இது குறித்து நாங்கள் தொடர்ந்த வழக்கு இன்றும் நடந்து கொண்டிருக்கிறது”
 
– என்று விவரித்தவர்கள், மடத்தில் ஆதாரமாக இருந்த செப்புப் பட்டயத்தையும் காட்டினார்கள்.
 
“இப்போது சிலை சேதம் அடைந்ததாகச் சொல்கிறார்கள். அந்த நவபாஷாணச் சிலை மிகவும் இறுக்கமானது. லேசில் தகர்க்க முடியாத அளவுக்குக் கனமானது. அது எப்படிச் சிதைக்கப்பட்டது என்பது வியப்பாக இருக்கிறது.
 
சிலை எந்த அளவுக்குப் பங்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க எங்களை அனுமதிக்க மறுக்கிறார்கள்” என்று வருத்ததுடன் தெரிவித்திருந்ததை எல்லாம் தொகுத்து ஜூனியர் விகடன் இதழில் எழுதியிருந்தேன்.
 
அதைத் தொடர்ந்து ’அசைடு’ என்கிற ஆங்கில இதழில் கவர் ஸ்டோரியாக எழுதியிருந்திருந்தேன். குங்குமம் இதழிலும் தொடர்ந்து எழுதியிருந்தேன். பழநி கோவில் பிரச்சனை தொடர்பாக பல விரிவான கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.
 
எழுதிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன்பிறகு பழநி கோவில் மூலவர் சிலையை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. சிலையை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
 
தற்காலிகமாக சேதம் அடைந்ததாகச் சொல்லப்பட்ட நவபாஷாண மூலவர் சிலைக்கான அபிஷேகங்கள் நிறுத்தப்பட்டன. தனியாக உற்சவர் சிலை செய்யப்படுவதற்கான வேலைகள் துவங்கின.
 
அப்போது கோவில் கருவறைக்குள் சென்று ஆய்வுசெய்த கனிம வளம் சார்ந்த ஆய்வறிரும், விஞ்ஞானியுமான டாக்டர்.எம்.எஸ்.சரவணன் அப்போது கொடுத்திருந்த அறிக்கையில்,
 
“கருவறைக்குள் சென்று நவபாஷாணத்தால் செய்யப்பட்ட தண்டாயுதபாணி சிலையைப் பார்த்தபோது முகம் அவ்வளவு பொலிவுடன் இருந்தது. முகத்துக்கும், உடல் பகுதிக்கும் வித்தியாசம் இருந்தது.
 
சிலையின் உடல் பாகங்களில் பள்ளங்கள் காணப்பட்டன. இரண்டு கால்களும் மிகவும் மெலிந்து போயிருந்தன. அதனால் சிலையே விழக்கூடிய அபாயத்தில் இருந்தது.
 
ஆனால் அந்தச் சிலை எந்தவிதமான அபிஷேகத்தினால் சேதம் அடையவில்லை என்பதை உணர்ந்தோம்.
 
அதே சமயம் கோவிலில் இருந்த சிலைக்கு மருத்துவக்குணம் இருப்பதாகச் சொல்லப்படுவதை ஆராய்ந்தோம். சிலைக்குச் சந்தனக் காப்பிட்டு காலையில் அதை ஆராய்ந்து பார்த்தோம்.
 
சந்தனத்திற்குள் சிலையில் எந்தத் துகளும் இல்லை. ஆனால் சந்தனத்தில் மருத்துவக் குணம் ஏறியிருந்ததை உணர்ந்தோம்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
 
பழநி கோவிலில் உள்ள நவபாஷாணச் சிலையைத் தவிர மேலும் மூன்று சிலைகள் பழநியைச் சுற்றிலும் இருக்கின்றன என்பதும் இங்கு கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதை.
 
சிலையை உருவாக்கியதில் பங்கு வகித்த புலிப்பாணி எழுதி வைத்துள்ள குறிப்பில், “அபூர்வ மூலிகைக் கலவையில் செய்யப்பட்டிருக்கிற தண்டாயுதபாணி சிலைக்கான பூஜை செய்வதில் யாராவது தடங்கல் செய்தால், காராம் பசுவைக் கொன்ற குற்றத்திற்கு ஆளாவார்கள்” என்கிற எச்சரிக்கை இருக்கிறது.
 
தமிழகத்திலேயே மிக அதிக வருமானத்தை அரசுக்கும் அறநிலையத்துறைக்கும் ஈட்டித் தரும் பழநி கோயிலில் உள்ள பாரம்பரியமான தண்டாயுபானி சுவாமி என்று அழைக்கப்படும் முருகனின் நவபாஷாண சிலையின் இன்றைய நிலை என்ன?
 
பழநி முருகன் சிலையை இந்த அளவுக்கு சேதப்படுத்தியவர்கள் யார்? 
 
இப்படிப் பல கேள்விகள் இன்னும் பதிலே வராத கேள்விகளாகவே கால ஓட்டத்தை மீறி நீடித்துக் கொண்டிருக்கின்றன.
 
– மணா
Comments (0)
Add Comment