டோரதி எழுப்பும் அர்த்தமுள்ள கேள்விகள்!

ஊர்சுற்றிக் குறிப்புகள் :

அண்மையில் நெட்பிளிக்ஸில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படத்தைக் காண முடிந்தது.

டிரான்ஸ்ஜெண்டர் என்று அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர் பற்றி மிகவும் இங்கீதமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் அவர்களைப் பற்றி அறியாதவர்களுக்கும் மிகவும் அரைகுறையாக அறிந்து கொண்டவர்களுக்கும் ஆச்சர்யத்தை அளிக்கலாம் அல்லது அதிர்ச்சியையும் அளிக்கலாம்.

ஊடக வாழ்வில் பல முறை இத்தகைய மூன்றாம் பாலினத்தவர்களைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது.

அவர்களது நெருக்கடி மிகுந்த அனுபவங்களைப் பதிவு செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அவர்கள் தங்களுக்கென்று ஒரு சங்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதன் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒருவர் நான் சம்மந்தப்பட்டிருந்த ‘புதிய பார்வை’ மாத இதழில் தங்களுடைய வாழ்வின் வெப்பத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அருமையான சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார்.

தெருக்களில் அனாதைகளாக விடப்பட்ட, தான் பிறந்து வளர்ந்த வீட்டிலிருந்தே ஒரு கிருமியைப் போல உணர்ந்து அப்புறப்படுத்தப்பட்ட அவர்களின் வாழ்வியல் குறித்து பல சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கிறேன்.

இத்தனை வலிகளையும் மீறி எனக்கு மிகவும் தெரிந்த மூன்றாம் பாலினத்தவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து அண்மைக் காலத்தில் மறைந்தார்.

இதில், மிகவும் தனித்து காணப்பட்ட ஒருவராக, இன்றைக்கு நாட்டியத் துறையில் பிரபலமாகி பல நடனப் பள்ளிகளைத் துவக்கி, உலக அளவில் பல நாடுகளில் தனது நடனத்தை கொண்டுசென்ற, நீண்ட காலத்து நண்பரான நர்த்தகி நட்ராஜ் அவர்களைப் பற்றிய நினைவு ‘டோரதி’ படத்தைப் பார்க்கும்போது ததும்பியபடியே இருந்தது.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோயிலில் உள்ள அழகான கல் மண்டபத்தில் நடனம் ஆடினார் நர்த்தகி நட்ராஜ்.

மேடையின் பக்கவாட்டில் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரம் வாசித்த இரட்டை வித்வான்களான சேதுராமன் – பொன்னுசாமி குழுவினர் அதேமாதிரியே நாதஸ்வரம் வாசிக்க, அதற்கு அவ்வளவு அழகாக அபிநயம் பிடித்து ஆடினார் நர்த்தகி நட்ராஜ்.

அதையடுத்து பிரபல வார இதழில் அவரது பேட்டியைப் பதிவு செய்திருந்தேன்.

அதன்பிறகு வெவ்வேறு ஊடகங்களில் அவரது வாழ்வியல் நெருக்கடிகளையும் அந்த நெருக்கடிகளை எல்லாம் புறந்தள்ளி மிகுந்த நம்பிக்கையுடன் தன்னைத் தானே நகர்த்திக்கொண்ட விடாமுயற்சியைப் பற்றி பதிவு செய்திருக்கிறேன்.

ஆரம்பத்தில் தனது குடும்பத்தினரால் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்ட அவர்தான் தற்போது அவரது குடும்பத்தை அரவணைத்து, அவரது நண்பர்களை அரவணைத்து,

தான் நேசித்த பரதக் கலையையும் அரணைத்து, உலக அளவில் கொண்டுசென்று அடுத்த தலைமுறைக்கும் பயிற்றுவித்துக் கொண்டிருக்கும் நாட்டியக் குருவாக மாறியிருக்கிறார்.

அவருடைய மகத்தான அனுபவத்தை இதிலும் பகிர்ந்திருக்கிறேன்.

வாசித்துப் பாருங்கள். டோரதி திரைப்படம் உணர்த்த முனைந்திருக்கும் வாழ்வியல் உண்மை புரிபடும்.

– மணா

Comments (0)
Add Comment