கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 23
பத்திரிகை உலகில் நான் நுழைவதற்கு முதல் காரணமாய் அமைந்தவர் நண்பரும், எழுத்தாளருமான ஜெயந்தன்.
மதுரையில் என்னுடைய 20 வயதில் நெருங்கிப் பழகிய அவர், குமுதம், ஆனந்த விகடன் போன்ற வெகுஜன பத்திரிகையில் நிறையவே எழுதிக் கொண்டிருந்தார்.
என்னுடைய 18-ம் வயதில் துவங்கி இலக்கிய சிறு பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தேன். தீவிரமான வாசிப்பு வசப்பட்டிருந்தது.
அப்போதுதான் சென்னைக்கு சென்றுவந்த நண்பர் ஜெயந்தன் என்னிடம், “நண்பர் மாலன் ‘திசைகள்’ என்ற இளைஞர்களுக்கான வார இதழை கொண்டுவர இருக்கிறார். அதில், சேர்வதற்கு உங்கள் பெயரை பரிந்துரை செய்திருக்கிறேன்” என்று சொன்னபடியே,
திரு.மாலன் துவக்க இருந்த ‘திசைகள்’ பத்திரிகையில் உதவி ஆசிரியர்களில் ஒருவராக பணியாற்றச் சொல்லி, அதற்கான கடிதமும் வந்தது.
1980-ம் ஆண்டில் துவக்கப்பட்ட ‘திசைகள்’ இதழுக்காக திண்டுக்கல் பக்கத்திலுள்ள வேடச்சந்தூர் சென்று, அங்கிருந்து ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு கொளுத்துகிற வெயிலோடு, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்த ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன்.
குடிதண்ணீருக்கே கடும் சிரமத்திலிருந்த அந்தக் கிராமத்துப் பெண்கள் தங்கள் தேவைக்கான சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீரை எடுத்து வர வேண்டியிருந்தது.
ஏறத்தாழ கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தில் வரும் அத்திப்பட்டி போன்ற கிராமத்திற்கு நான் போனபோது, அவ்வளவு தூரம் சைக்கிளில் பயணித்துவந்த எனக்கு, அவர்கள் கொடுத்த தண்ணீர் செம்மண் நிறத்தில் கலங்கலாக இருந்தது.
“குடிதண்ணீருக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லி நாங்க தேர்தலை புறக்கணிச்சிருக்கோம். அந்த சமயத்துல இங்க வந்த அரசியல்வாதிகள்ல ஒருத்தர், “உசுரோட இருக்கீங்களே அதுக்காகவாவது ஓட்டுப் போடுங்கடா” என்று சொன்னதைத்தான் எங்களால தாங்க முடியல” என்று ஒரு முதியவர் சொன்ன வார்த்தையைத் தலைப்பாக்கி அந்தக் கட்டுரை ‘திசைகள்’ இதழில் வெளிவந்தது.
‘திசைகள்’ பத்திரிகையில் என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியரான திரு.மாலன் அடுத்து ‘குமுதம்’ ஆசிரியப் பொறுப்பில் இணைந்தபோது, என்னை சென்னை அலுவலகத்தில் பணியாற்ற அழைத்தார்.
சென்னைக்குச் சென்று ‘குமுதம்’ அலுவலகத்தில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் ‘நதிமூலம்’ என்ற பாப்புலரான தொடரை நான் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர் அவர்தான்.
அதையடுத்து 2 மாதங்களுக்குள் ‘குமுதம்’ இலவச இணைப்பாக தென் மாவட்டச் சிறப்பிதழைக் கொண்டு வந்தபோது, 64 பக்கங்களுக்கான சிறு சிறு கட்டுரைகளை 2 நாட்களில் மொத்தமாகக் கொடுத்து அந்த இணைப்பிதழ் வெளிவந்தபோது, நல்ல வரவேற்பு.
அதன் முதல் பிரதியைப் பார்த்துவிட்டு ஆசிரியரான மாலன் எனக்கு எழுதி அனுப்பிய சிறு குறிப்பு – “சிறப்பிதழ் மண்வாசனையோடு ஜம்மென்று இருக்கிறது. கீப்-இட்-அப். வாழ்த்துகள்”.
எழுத்துத் துறைக்குள் நுழைகிற எந்த ஒரு வாசகரின் கவனத்திலும் விடுபடாத ஒரு பெயர் – கல்கி.
அவரது ‘பொன்னியின் செல்வன்’ உட்பட சில நாவல்களை நான் படித்திருந்தாலும், இசை, நடனத்தைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரைகளிலும் அன்றைய திரைப்படங்களுக்காக அவர் எழுதிய விமர்சனங்களும் சரி அதில் கையாளப்பட்ட லாவகமான மொழி நடை ஈர்க்க வைக்கும்படி இருக்கும்.
அவர் துவக்கிய ‘கல்கி’ இதழில் ஃப்ரீ லேன்சராக பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது.
அதற்காக பல மாவட்டங்களுக்கும் போய் வந்திருக்கிறேன்.
எழுத்தில் வெளிப்படும் கேலி கலந்த உணர்வையோ சிக்கனமான உரைநடையோ மிகவும் ரசித்துப் பாராட்டுவார் கல்கியின் புதல்வரும் கல்கியின் ஆசிரியராக இருந்தவருமான கி.ராஜேந்திரன்.
அவர் எழுதும் ‘கல்கி’ தலையங்கங்கள் பளிச்சென்ற மொழி நடையுடன் உரிய விஷய கனத்துடனும் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.
ஒருமுறை கல்கி அலுவலகத்திற்கு நான் செல்வதற்கு முன்பே எனது கட்டுரை ஒன்றை அவருக்கு தபால் மூலம் அனுப்பியிருந்தேன்.
நேரடியாக பார்த்தபோது, அவர் சொன்ன வார்த்தைகளை எப்பொழுதுமே மறக்க முடியாது.
“உங்க மதுரைல கட்டுற மல்லிகைப் பூ மாதிரி ரொம்ப நெருக்கமா உங்க கட்டுரையை அனுப்பிச்சிருக்கீங்க. அதுல இருந்து ஒரு வார்த்தையைக் கூட எடுக்க முடியல” என்று அவருக்கே உரித்தான எளிமையான உவமை கலந்த மொழியோடு சொன்னார்.
எழுத்தின் மதிப்பை உணர்ந்து அதை வெளிப்படையாக பாராட்டுவது எவ்வளவு அளப்பெறும் சக்தியை அளித்திருக்கிறது.
இளம் வயதில் ‘துக்ளக்’ ஆசிரியர் சோ அவர்களை சந்தித்தேன்.
முதன்முதலாக சந்தித்தபோதே அது பெரும் விவாதமாக மாறியிருந்தது.
அவருடைய கருத்தியலுக்கு நேரெதிராக நான் அவருடைய நாடகங்கள் குறித்து அவருடைய செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக பேசியபோது, அவர் ஒருபோதும் அதை ஈகோ சார்ந்த பிரச்சனையாக பார்க்கவில்லை.
மிக எளிமையாக அந்த விவாதத்தை முடித்துவிட்டு மென்மையான சிரிப்போடு, “துக்ளக்கிற்கு தொடர்ந்து எழுதுங்க” என்றார்.
அவர் சொன்னபடியே சில கட்டுரைகளை அனுப்பி அவை துக்ளக்கில் தொடர்ந்து வெளியாகின.
பின்பு துக்ளக்கில் நான் சிறப்புச் செய்தியாளராக பணியாற்றியபோதும், குறிப்பிட்ட கட்டுரைக்காக நான் எடுத்துக் கொண்ட உழைப்பையும் அலைச்சலையும் மதித்து மிகச் சுருக்கமாகப் பாராட்டியிருக்கிறார்.
துக்ளக்கில் வெளியான எனது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தபோது, அதை துக்ளக் ஆண்டு விழா மேடையிலேயே வெளியிட்டு சிறப்பு செய்திருக்கிறார்.
நீண்ட காலமாக அதில் பணியாற்றிவிட்டு குமுதம் வார இதழில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்து, நான் அங்கிருந்து விடைபெற்றபோது, அன்பும் நெகிழ்வுமாக விடைகொடுத்து அனுப்பினார்.
அவருடைய இறுதிக் காலத்தில் திரைப்படம், நாடகம், அரசியல் என்று பன்முக அனுபவத்தை வெளிப்படுத்தும் ஒசாமஅச என்கிற தொடரை குமுதம் வார இதழில் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலமாக, அவர் சொல்ல, நான் எழுதி வந்தபோது எங்களுக்கிடையே இருந்த புரிதலும் அதிகப்பட்டிருந்தது.
சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோதுகூட, அந்த தொடரின் கடைசி அத்தியாயங்களை சிரமத்துடன் அவர் சொல்ல, அதைப் பதிவுசெய்து எழுதி முடித்ததும் அது நூலாக வெளிவந்தபோதும் முகம் மலர்ந்த பூரிப்புடன் மிகச்சிக்கனமாக அவர் சொன்ன ஒரு வரி “என்டைய ஃலைப்ப நான் எழுதுறதவிட நீங்க நல்லா எழுதி இருக்கீங்க.”
மருத்துவமனை ஐ.சி.யூ வார்டில் அவர் இருந்தபோதும் அவர் பார்க்க விரும்பியவர்களில் ஒருவராக எனது பெயரையும் கைப்பட எழுதிக் காட்டியதெல்லாம் நினைவின் நெகிழ்வான பக்கங்கள்.
தமிழின் முதல் செய்தி நிறுவனமான ‘அகிலா நியூஸ்’ என்கிற செய்தி நிறுவனத்தை மதுரையில் நான் ஆரம்பித்து நடத்தியபோது அதற்கு மிகுந்த வரவேற்பு கொடுத்தவர் தினமணி இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவரான நண்பர் சுதாங்கன்.
விகடனில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோதிலிருந்து எனக்குப் பழக்கம் என்றாலும் “உங்களுக்கு பிளாங்க் செக் கொடுக்கிறோம். நீங்கள் எதை வேண்டுமானாலும் தினமணிக்கு அனுப்பலாம் என்று நட்புணர்வுடன் அவர் அளித்த சுதந்திரம் அகிலா நியூஸ் நிறுவனத்தைப் பாப்புலராக்கியது.
ஒரு சமயம் இசைஞானி இளையராஜா லண்டனுக்குச் சென்று சிம்பொனி இசையமைத்துவிட்டு தமிழகத்திற்கு திரும்பியிருந்தார்.
அந்த நேரத்தில் இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைப்புரத்திற்கு சென்று, அவரது அக்கா, அக்காவின் கணவர், அவரது நண்பர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து புகைப்படமும் எடுத்து கட்டுரையாகவும் அப்போது தான் எழுதி முடித்திருந்தேன்.
அப்போது மதுரைக்கு வந்திருந்தார் தினமணி ஆசிரியரான சுதாங்கன்.
வந்ததும் காலை நேரத்தில் எனக்கு போன் பண்ணினார். நான் பண்ணைப்புரத்துக்கு போய்விட்டு வந்து கட்டுரையும் எழுதி வைத்திருப்பதாக சொன்னதும் இடைமறித்த சுதாங்கன் சொன்னார்,
“வீட்டு முகவரியைச் சொல்லுங்க. இன்னும் அரை மணி நேரத்தில் நான் உங்க வீட்ல இருப்பேன். பாத்துக்கலாம்”.
அவர் சொன்னபடியே அடுத்த அரை மணி நேரத்தில் எங்களுடைய வீட்டில் இருந்தார் சுதாங்கன்.
நான் எழுதி வைத்திருந்த கட்டுரையையும் புகைப்படங்களையும் பார்த்தவர், கட்டுரையை ஒரு புரட்டு புரட்டிவிட்டு, எதிரே இருந்த என்னிடம் கை கொடுத்தார்.
இந்த வாரம் தினமணி சுடரில் இதுதான் கவர் ஸ்டோரி என்று புன்னகைத்தபடி சொன்னார்.
அதன்படியே அடுத்த வாரம் கவர் ஸ்டோரியாக வெளிவந்தது இளையராஜாவைப் பற்றிய என்னுடைய கட்டுரை.
இதுமாதிரி என்னுடைய எழுத்தை எத்தனையோ நண்பர்கள் வளர்த்திருக்கிறார்கள்!
குமுதம் வார இதழில் நான் சேர்ந்த பிறகு என்னை ஊக்கப்படுத்தி, அடுத்தடுத்து குமுதம் ரிப்போர்ட்டர், பொறுப்பாசிரியர், தீராநதி பொறுப்பாசிரியர் என்று பல அடுத்தடுத்த நிலைகளுக்கு நான் உயரக் காரணமாக இருந்தவர் குமுதம் உரிமையாளர்களில் ஒருவரான திரு.பா.வரதராசன்.
அவரைப் போலவே என்னை ஊக்கப்படுத்திய இன்னொருவர் குமுதம் நிறுவனரான திரு.எஸ்.ஏ.பி அண்ணாமலையின் மகனும் குமுதம் உரிமையார்ளர்களில் இன்னொருவருமான டாக்டர் ஜவஹர் பழனியப்பன்.
எழுத்தை இயல்பாக நேசிக்கும் பண்புகொண்டவரான அவர், அமெரிக்காவில் இருந்த நிலையிலும் குமுதத்தில் வெளிவந்த எனது கட்டுரைகளை அவ்வப்போது வாசித்துவிட்டு மிகவும் நேசத்துடன் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
குமுதம் அலுவலகத்திற்கு அவர் வரும்போது ஆசிரியர் குழுவினருடன் சிறு மீட்டிங் நடக்கும்.
அதில், குமுதத்திற்கு தேவையான புது ஐடியாவை சொல்கிறவர்களுக்கு உடனே சில ஆயிரம் ரூபாய்களை சிறப்புப் பரிசாகக் கொடுப்பார்.
அப்படி அவரிடம் நான் சொன்ன கான்செப்ட் தான் ஸ்பாட் என்கிற பெயரில் குமுதத்தில் வெளியான ‘தமிழகத் தடங்கள்’.
அந்த கான்செப்டை நான் சொன்னதற்காக சிறப்புப் பரிசை எனக்கு வழங்கியவர் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்.
தமிழகத்தின் பல்வேறு முக்கியமான இடங்களுக்குச் சென்று அதன் பின்புலம் குறித்து வாரா வாரம் எழுதிய அந்தத் தொடருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல முக்கியமானவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்திருக்கிற அவர், குமுதத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, எனக்கு நெஞ்சில் ஏற்பட்ட பிரச்சனையை உடனே அடையாளம் கண்டு, அலுவலகத்திலேயே சோதித்து உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த அந்த நல்லுள்ளம் படைத்தவரை லேசில் மறக்க முடியாது.
இன்னும் ‘அசைடு’ என்கிற ஆங்கிலப் பத்திரிகைக்காக பிரபஞ்சனும் நானும் பணியாற்றியபோது, நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை மிக நேர்த்தியான ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர் திருமதி. ஜானகி வெங்கட்ராமன்.
அவருடைய நளினமான ஆங்கில நடையை மிகவும் வியந்துப் பாராட்டியவர் எழுத்தாளரான சுஜாதா.
மிகவும் செழிப்பான ஆங்கில மொழி நடையில் மொழி பெயர்க்கப்பட்ட எனது கட்டுரை ஒன்று உடனே முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்குச் சென்று சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்ததற்கெல்லாம் திருமதி.ஜானகி வெங்கட்ராமனின் அசாத்திய திறமைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கிற எழுத்துப்பணி தற்போதும் ‘தாய்’ இணைய இதழ் மூலமாக தொடர்ச்சியாக வெளிவருவதற்கு மூலக்காரணமாக அமைந்த டாக்டர். எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் தலைவரான முனைவர் குமார் ராஜேந்திரன் அவர்களுக்கும் என்னுடன் பணியாற்றும் சகாக்களுக்கும் நேசத்துடன் கூடிய நன்றியைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
இப்படி எழுத்து தொடர்வதற்கு எவ்வளவு பேர் பிடிமானத்துடன் கூடிய வேர்களைப் போல உடன் நின்றிருக்கிறார்கள்!
- மணா