இடைத்தேர்தல் எழுப்பும் அடிப்படைக் கேள்விகள்!

சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர்கள் முதலில் மதிப்புக் கொடுக்க வேண்டியது தங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய வாக்காளப் பெருமக்களைத் தான்.

தமிழகத்தில் இதுவரை பல்வேறு இடைத்தேர்தல்கள் நடந்திருக்கின்றன. பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி இயல்பாக காலமாகும்போது இடைத்தேர்தல் நடந்திருக்கின்றன.

அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி காலமானால் அவர்களுடைய இடத்திற்கு இன்னொருவரை தேர்ந்தெடுக்க இடைத்தேர்தல் வருவது மிகவும் நியாயமான ஒன்று.

ஒரு விதத்தில் அந்த இடைத்தேர்தலை நடத்த அனுமதிப்பது ஜனநாயகப்படி ஆரோக்கியமான ஒன்றுதான்.

ஆனால், அண்மைக்காலமாக தாங்கள் நின்று வெற்றிபெற்ற நிலையில் அந்த பதவியை தங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக ராஜினாமா செய்வது எந்த விதத்தில் சரியானது?

அண்மைக் காலத்தில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜயதரணி, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் சேர்ந்து மறுபடியும் அதே தொகுதியில், கட்சி மற்றும் சின்னம் மாறி போட்டியிட்டபோது அவரை ஏற்கனவே தேர்ந்தெடுத்த வாக்காளப் பெருமக்கள் மீண்டும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

தன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய வாக்காளர்கள் தேர்வை முழுக்கப் புறக்கணித்து ராஜினாமா செய்வதை வாக்காளப் பெருமக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்.

அவரவர் சௌகர்யத்திற்காக ராஜினாமா செய்தால் மக்கள் வாக்களித்து அனுப்பியதற்கு என்னதான் மதிப்பு?

முழுக்க ஜனநாயகத்தை கேவலப்படுத்தும் விதத்தில்தான் மிக அண்மையில் அதிமுகவில் இருந்து சில எம்.எல்.ஏக்கள் வெளியேறினர். அதில் இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

தேர்தலை நடத்துகிற தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி ஒரு சட்டமன்றத் தேர்தலை நடத்த சில கோடி ரூபாய் அதிகாரபூர்வமாக செலவாகிறது.

அதேநேரம் கணக்கில் வராமல் கோடிக்கணக்கான ரூபாய் பல கட்சியினரால் செலவழிக்கப்படுகிறது.

எந்தக் கட்சியாக இருந்தாலும் தங்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு சற்றும் மதிப்பு கொடுக்காமல் தன்னுடைய சொந்த விருப்பத்திற்காக ராஜினாமா செய்தால் அதன் விளைவாக உருவாகும் பெரும் செலவை தேர்தல் ஆணையம் ஏன் ஏற்க வேண்டும்?

அப்படி ஒரு நெருக்கடி வரும்போது தங்களைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களிடம் எந்த ஒரு வேட்பாளர்களும் கலந்து ஆலோசித்திருக்கிறார்களா?.

மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதற்கு முன் அனுமதியைப் பெற்றிருக்கிறார்களா?

இதெல்லாம் செய்யாத நிலையில்தான் தாங்கள் மனம் மாறியதைப் போலவே, தங்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளார்களும் மனம் மாறி வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயமானது?

இதற்காக ஆகும் பெரும் செலவிற்கு சம்மந்தப்பட்ட வேட்பாளர்கள் எந்த விதத்தில் பொறுப்பேற்பார்கள்?

இவர்களைப் போலவே, சொந்தக் காரணங்களுக்காக ராஜினாமா செய்துவிட்டு, மறுபடியும் போட்டியிடுவதை பல எம்.எல்.ஏக்கள் ஒரே சமயத்தில் செய்தால் அதன் எதிர்விளைவுகள் எப்படி இருக்கும்?

இந்த சமயத்தில் ஏற்கனவே இன்னும் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதற்கும் அதிகாரபூர்வமாகவும் அதிகாரபூர்வமற்றும் எவ்வளவு கோடி ரூபாய் செலவழிக்கும் சூழல் உருவாகும்.

இனிமேலாவது ஒரு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் காலமானால் மட்டுமே அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.

அதை விடுத்து தங்கள் விருப்பப்படி உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டுப் போனால் அவர்களைத் தேர்தெடுத்த மக்களை அவர்கள் இழிவு செய்வதாகத்தானே அர்த்தம்.

அது அவர்களின் சொந்த முடிவாக இருக்காலாம், அதேசமயம் ஜனநாயகத்தை மலினமாக்குகிற செயல்பாடு என்று தான் சொல்ல வேண்டும்.

தேர்தல் ஆணையம் இனியாவது இத்தகைய ஜனநாயக அபத்தமான செயல்பாடுகள் தொடர்வதைத் தடுக்கும் விதமாக சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மக்களுக்காக இயங்குவதாகச் சொல்கிற தேர்தல் ஆணையம் இதைப் பரிசீலிக்கட்டும்.

– யூகி

Comments (0)
Add Comment