ஏ.ஐ. தொழில்நுட்பத்தை வைத்து கோவையில் உள்ள பெரியார் அறிவியல் நூலகத்திற்கு சில ஆயிரம் நூல்களைக் கொடுத்தாலும் கொடுத்தார்கள், அந்த செய்திகள் நீதிமன்றங்களின் கவனத்திற்கும் போய், தற்போது வட இந்திய ஊடகங்களிலும் பரவி, திமுக ஆட்சியில் நடந்த முறைகேடு சந்தி சிரிக்கிற அளவுக்கு போயிருக்கிறது.
இந்த அளவுக்கு இந்த விவாரத்தை சிக்கலாக்கியது யார்?
இந்த நூலகத் தேர்வுக்கென்று நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களும் தமிழறிஞர்களும் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார்கள்.
இவர்களின் மேற்பார்வையில்தான் நூல்களைத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
அப்படிப்பட்ட பேரறிஞர் குழுவில் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள் கடந்த திமுக ஆட்சியின் போது ஏற்றுக்கொள்ளாமல், வேறு புத்தகங்களைத் தேர்வு செய்ததால் தான் அகல்விளக்கு பதிப்பகம் வெளியிட்ட ஏ.ஐ. தொழில்நுட்பம் பற்றி உருவான நூல்கள் எல்லாம் நேராக நூலக அடுக்குகளுக்குள் போய்ச்சேர முடிந்திருக்கிறது.
அப்படி என்றால் இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவான, அரைகுரையாக வெளியான இந்த புத்தகங்கள் தேர்வானது எப்படி?
உண்மையில் இதை பரிந்துரை செய்த அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ யார்?
அவர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்ட அந்த அறிஞர் குழுவை விட என்ன நோக்கத்தில் இத்தகைய சீரழிவான புத்தகங்களை தேர்வு செய்திருக்கிறார்கள்?
இதற்குப் பின்னிருக்கும் ஊழல்தான் என்ன?
ஏற்கனவே நீதிபதிகள் உள்ளிட்டவர்கள் பெரியார் அறிவு நூலகத்திற்காக வாங்கப்பட்ட நூல்களின் தரத்தைக் குறிப்பிட்டு, இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக, சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார்கள்.
தவெக அமைச்சரான ராஜ்மோகன் இதற்கென விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக பத்து நாட்களுக்கு முன்பே சொல்லியிருந்தார்.
தமிழகத்தில் இன்றுவரை இந்த நூலகத் தேர்வு குறித்த பல்வேறு விதமான சர்ச்சைகள் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன.
இதில் சம்பந்தப்பட்ட புத்தகங்களை யாரோ ஒருவர் பரிந்துரை செய்திருந்தால் அந்த பரிந்துமுறை செய்தவரின் கையெழுத்து, குறிப்பிட்ட அந்த நூலக ஆர்டரில் இடம் பெற்றிருக்கும் என்று சொல்கிறார்கள்.
அப்படி இந்த புத்தக ஆர்டரில் கையெழுத்திட்ட பேரறிஞர் யார்?
தமிழகத்தில் எவ்வளவோ தரமான எழுத்தாளர்கள் இருந்தும் அவர்கள் எழுதிய தரமான நூல்கள் இருந்தும் அவற்றையெல்லாம் புறம் ஒதுக்கிவிட்டு,
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் அரைகுரையாக இத்தகைய அபத்தமான புத்தகங்களை நூலகத்திற்குள் கொண்டு செல்லும் இத்தகைய மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களை ஏன் இதுவரை கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தவில்லை?
நூலகத் துறையில் தவறுகள் செய்திருந்த இருந்தாலும் ஊழல் செய்திருந்தாலும் அதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு இத்தகைய நூல்களை இனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய உரிய தெளிவை நீதிமன்றம் கொடுத்தால்தான் இனி ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இத்தைய குப்பைகள் நூலக அடுக்குக்குள் போவதைத் தடுக்க முடியும்.
இப்படிப்பட்ட மோசடிகள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பெயரால் நூலகத்துக்கள் நுழைவதற்கா பொதுமக்களாகிய நாம் நூலக வரியைக் கட்டிக் கொண்டிருக்கிறோம்?
1960-களில் இருந்தே அப்போது இருந்த திமுக தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஏகப்பட்ட புத்தகங்களை எழுதியிருந்தார்கள்.
அப்படிப்பட்ட பின்னணியில் வந்த திமுக ஆட்சியில் இப்படிப்பட்ட அறிவுலகத்தின் பெயரால் இப்படி அவலமான ஒரு மோசடியை நிகழ்த்த காரணமாக இருந்தவர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயம் தவெக அரசுக்கு முன்னால் இருக்கிறது.
இனியும் இப்படிப்பட்ட ஊழல்கள் நடைபெறக் கூடாது என்று தவெக அரசு கருதுமானால், அரசு நூலகங்களுக்கு வழங்கப்படுகிற நூல்கள், சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் முழு ஒப்புதலோடுதான் வழங்கப்படுகிறதா என்பதையும் அந்த எழுத்தாளுக்கு உரிய ராயல்டி தொகை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அந்த பதிப்பகங்கள் வழங்குவதையும் முன்நிபந்தனையாக வைத்தால்தான் இத்தகைய மோசடிகளை நிறுத்த முடியும்.
அதோடு இப்போதே ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் வைத்து இத்தகைய நவீன மோசடிகளை செய்திருப்பவர்கள் எழுத்தாளர்களின் ஒப்பந்தத்திலும் போலியாக கையெழுத்திடக் கூட வாய்ப்பு இருக்கிறது.
அதனால் எழுத்தாளர்களின் போன் நம்பரோடு அவர்களின் ஒப்புதல் இருக்கிறதா என்பதை சரிவர சோதித்த பிறகே இனிமேல் நூலகங்களுக்கு நூல்கள் பெறுவதை நெறிமுறையாக்க வேண்டும்.
இல்லை என்றால் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை வைத்து, ஏதேதோ நபர்களின் பெயர்களை வைத்து, பல்வேறு குப்பைகள் நூலகத்திற்குள் நுழைந்து கொண்டுதான் இருக்கும்.
தவெக அரசுதான் இதற்கு உரிய கடிவாளத்தைப் போட்டு நல்ல, காலத்திற்கேற்ற உரிய முடிவை எடுத்து, இத்தகைய மோசடிகளைத் தடுத்தாக வேண்டும். இதை தவெக அரசு செய்யுமா?
இப்போது மட்டுமல்ல அதிமுக ஆட்சிக் காலத்திலும் நூலக ஆணைக்குழுவுக்கென்று சில எழுத்தாளர்கள், ஆய்வறிஞர்கள் குழுவை நியமித்த வரலாறு எல்லாம் ஏற்கனவே இருக்கிறது.
அதிமுக ஆட்சிக் காலத்திலும் குறிப்பிட்ட சில பதிப்பகம் சார்ந்தவர்களை ‘கவனிக்காமல்’ நூலக ஆணைக்குழு ஒப்புதலைப் பெற்று, நூலகத்திற்குள் யாரும் தனது பதிப்பு நூல்களைக் கொண்டு சென்றுவிட முடியாது.
அப்போதிருந்தே இத்தகைய மோசடிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இப்போதும் நூல ஆணைக்குழு என்ற பெயரில் பேரறிஞர் குழு நியமிக்கப்பட்டிருந்தாலும் இத்தகைய பேரறிஞர்கள் குழுவினர் என்ன செய்திருக்கிறார்கள்?
வெறுமனே, ஒன்றுகூடி ஒரு காபியையும் ஸ்நாக்ஸையும் சாப்பிட்டுவிட்டு, தங்களுக்கான செலவுத்தொகையை வாங்கிக்கொண்டு கலைந்து போவதற்காக இத்தகைய பேரறிஞர் குழுவில் அங்கம் வைக்கிறார்கள்.
இவர்கள் பரிந்துரையை ஏற்காமல் வேறு ஒரு குழுவினர் பரிந்துரைக்கிறார்கள் என்றால் இவருடைய ரோல்தான் என்ன?
வெறுமனே டம்மியாக்கப்பட்ட நிலையில்தான் இந்த பேரறிஞர் குழுவினர் இயங்குகிறார்களா?
இனியாவது, தங்களை டம்மியாக்கி, நூலக ஆணைக் குழுவில் அங்கம் பெறுவது பற்றி எழுத்தாளர் பெருந்தகைகள் கண்டிப்பாக யோசிப்பார்கள் என்று நம்புகிறோம்.
– யூகி