தமிழ்ப் பெயர்கள் இல்லா தமிழ்ப் படங்கள்: அவசியமா?

அண்மையில் நடந்த ‘அப்பா குட்டி’ திரைப்பட வெளியீடு தொடர்பான விளம்பர நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் தங்கர் பச்சான்,

“இந்தப் படத்துக்கு ‘அப்பா குட்டி’ என்று தமிழில் பெயர் சூட்டப்பட்டு இருப்பது மகிழ்ச்சி. தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுவதே இல்லை. இது பற்றி ஊடகங்களும் கவலைப்படுவது இல்லை. இது ரொம்ப கேவலம்” என்று பேசியது, விவாதங்களை உண்டு பண்ணி இருக்கிறது.

உண்மைதான். ஒரு காலத்தில் எவ்வளவு அற்புதமான தமிழ்ப் பெயர்களில் தமிழ்ப் படங்கள் வந்திருக்கின்றன. இது மாறியது ஏன்?

இடையில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் முழுமையான தமிழ்ப் பெயர் சூட்டும் படங்களுக்கு வரிவிலக்கு வழங்கினாரே. அது ஏன் நிறுத்தப்பட்டது?

இன்றைய சூழலில் தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுவது முடியாத செயலா?

இதுதான் இப்போது இங்கே பேசுபொருள்.

தமிழ் சினிமா ஆரம்பித்த போது, படத்தின் பெயர்களில் தமிழ் இல்லை.

தென்னிந்தியாவின் முதல் திரைப்படம், நடராஜ முதலியார் எடுத்த ‘கீச்சக வதம்’. இது மௌனப்படம். தமிழின் முதல் பேசும் படம் ‘காளிதாஸ்’. அப்புறம் வந்த ஹரிச்சந்திரா, காலவா போன்ற படங்களும் சமஸ்கிருத பெயர் தாங்கியே வந்தன.

தமிழின் நான்காவது படமாக வந்த ‘வள்ளித் திருமணம்’தான் தூய தமிழ்ப் பெயரோடு வந்த முதல் தமிழ்ப் படம்.

இதைத் தயாரித்த சாமிக்கண்ணு வின்சென்ட் தான் இந்தியாவிலேயே முதன் முதலில் படப்பிடிப்புக் கருவியைக் கொண்டு வந்து படம் காட்டியவர்.

(உண்மையில் தாதா சாகேப் பால்கே விருது இவர் பெயரில்தான் வழங்கப்பட வேண்டும். இவரிடம் சினிமா கற்றுக்கொண்டு போனவர்தான் பால்கே)

அதன் பின்னரும் சமஸ்கிருத பெயர் கொண்ட படங்கள்தான் நிறைய வந்தன. அதற்க்கு காரணம் அன்று நாடகங்களை ஆக்கிரமித்து இருந்த புராணங்களே படமாகவும் உருவானதுதான்.

திரௌபதி வஸ்திராபகர்ணம் என்ற வாயில் நுழையாத பெயரில் எல்லாம் தமிழ்ப் படம் வந்திருக்கிறது.

1936 ஆம் ஆண்டு வந்த மெட்ராஸ் மெயில், மிஸ் கமலா போன்ற பெயர்கள் மூலம்தான் ஆங்கிலம், தமிழ் சினிமா பெயர்களுக்குள் நுழைகிறது.

இதிலும் மெட்ராஸ், கமலா என்பவை பெயர்ச் சொற்கள் என்பதால் இவற்றை முழுமையான ஆங்கிலத் தலைப்புகளாகக் கொள்ள முடியாது.

1940 ஆம் ஆண்டு கினிமா (எழுத்துப் பிழை அல்ல) ராமு – செருகளத்தூர் சாமா ஆகியோர் இயக்கத்தில் செருகளத்தூர் சாமா நாயகனாக நடித்த shylock என்ற படம்தான் முழுமையான ஆங்கிலப் பெயரில் வந்த முதல் தமிழ்ப்படம்.

ஷேக்ஸ்பியர் எழுதிய வெனிஸ் நகரத்து வணிகன் (The Merchant of Venice) நாடகத்தின் அடிப்படையில் உருவான படம் இது.

படத்தின் போஸ்டர் ஆங்கிலத்தில்தான் வெளியிடப்பட்டது. வெள்ளைக்காரர்களுக்கு சொம்படிப்பதற்காக சாமா மாமா செய்த வேலை அது.

அதன் பின்னர் மிஸ் கமலா பாணியில், மிஸ் மாலினி, டாக்டர் பங்காரு, டாக்டர் சாவித்திரி, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி (1966), revolver reeta (1970) gun fight kanchana (1981) என்று ஆங்காங்கே ஆங்கிலப் பெயரைத் தலைப்பாகக் கொண்ட படங்கள் வந்து கொண்டுதான் இருந்தன.

ஆனால், தமிழறியும் பெருமாள், மருதநாட்டு இளவரசி, பூங்கோதை, திரும்பிப் பார், அன்பு, மலைக்கள்ளன், மதுரை வீரன், தாய்க்குப் பின் தாரம், கள்வனின் காதலி, நாடோடி மன்னன், வடிவுக்கு வளைகாப்பு, மக்களைப் பெற்ற மகராசி அன்னையின் ஆணை, வசந்த மாளிகை இன்னும் இன்னும்..

இப்படி திரைப்படங்களில் வசனம், பாடல், தலைப்பு, விளம்பர வாசகங்கள் இவற்றில் தமிழ் பெரும் பாய்ச்சல் நிகழ்த்திய நிலையில் இந்த ஆங்கிலப் பெயர்கள் எல்லாம், “தம்பிகளா.. கொஞ்ச ஓரமாப் போய் விளையாடுங்க…” என்ற ரீதியிலேயே இருந்தன.

இன்னொரு காரணம் ஆங்கிலப் பெயர்கள் பெரும்பாலான மக்களுக்கு அந்நியமாக இருக்கும் என்பதால்.

ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வி ஒடுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, ஆங்கில வழிக் கல்வியே அந்தஸ்து என்ற நிலை வந்தபோது இது மாறியது.

உண்மையில் காங்கிரஸ் ஆட்சியில் கூட பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் இருந்தது. தமிழ் வழிக் கல்வியே அதிகம் இருந்தது.

ஆனால் தமிழ் தமிழ் என்று முழங்கிக் கொண்டே, திராவிட இயக்க அரசுகள் ஆங்கிலத்துக்கு ஆரத்தி எடுத்து தமிழை ஒடுக்கின.

ஒரு நிலையில் திராவிட இயக்க அரசுகள் தமிழ் அல்லாத மாற்று மொழி மக்களுக்கான அரசுகளாக மாறியபோது, அவர்களுக்கு தங்கள் மொழிகளையும் இங்கே வலுப்படுத்த, முன்னத்தி ஏராக ஆங்கிலம் உதவியது.

1977 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஆங்கிலக் கல்விக்கு உயிர் கொடுக்கப்பட்டது. அடுத்து, கலைஞர், ஜெயலலிதா ஆட்சியில் அது செழிப்பாக வளர்க்கப்பட்டது.

இப்படியாக, ‘அறிவு இல்லாவிட்டால் கூட பரவாயில்லை; ஆங்கிலம் தெரிந்தால் போதும்’ என்ற நிலை வந்தபோது, ஆங்கிலப் பெயர்கள் சினிமாவையும் ஆக்கிரமித்தன.

முதலில் வசனத்தில், அப்புறம் பாடல்களில், பிறகு படத்தின் தலைப்புகளில்!

ஒரு நிலையில் தமிழ்த் திரைப்படத்தின் தலைப்புகள் எல்லாம் ஆங்கிலமாகவே மாறிப் போனது.

இந்த நிலையில், நடந்த தவறுக்கு, தனது தரப்பு பரிகாரமாக 2006, ஜூலை 22-ஆம் தேதி அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி ஓர் அரசாணையை வெளியிட்டார்.

அந்த அரசாணை (நிலை) எண் 72 (G.O. Ms. No. 72)-ன் கீழ், தூய தமிழ் மொழிச் சொற்களை மட்டுமே தலைப்பாகக் கொண்ட தமிழ்த் திரைப்படங்களுக்கு 30% கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டது.

திரைப்படத்தின் தலைப்பு முழுக்க முழுக்கத் தமிழ் மொழிச் சொற்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.

தலைப்பில் ஆங்கிலம், சமஸ்கிருதம் அல்லது பிற மொழிச் சொற்கள் கலந்திருந்தால் வரி விலக்கு கிடையாது போன்ற நிபந்தனைகள் அந்த அரசாணையில் இருந்தன.

அதன்படி, தகுதி பெறும் புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட 30 % கேளிக்கை வரி முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டது.

வரி விலக்கு அளிப்பதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) ஏற்படும் வருவாய் இழப்பைத் தமிழக அரசே ஈடுகட்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அரசாணை வெளியான பிறகு, ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்பட்ட திரைப்படம், வரி விலக்கிற்காக ‘உனக்கும் எனக்கும்’ எனப் பெயர் மாற்றப்பட்டு சலுகை பெற்ற முதல் படமானது.

தொடர்ந்து எம்-டன் மகன் (Emton Magan) படம் எம் மகன் என்று ஆனது. மாஸ் (Mass) என்ற படம் மாசு என்கிற மாசிலாமணி ஆனது.

காட் ஃபாதர் (God Father) என்ற படம் வரலாறு என்றும், லண்டன் டு மெட்ராஸ் படம் மதராசபட்டினம் என்றும் பெயர் மாறி வரிவிலக்கு பெற்றன.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கு வரிவிலக்கு கேட்கப்பட்டது. ‘பாஸ் என்பது BOSS என்ற ஆங்கிலச் சொல் அல்ல, பாசக்காரன்’ என்று பொருள் என – ஓர் உலக மகா யோக்கிய விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால், ரெட் ஜெயண்ட் விநியோகம் செய்த படம் என்றாலும் கலைஞர் அதை ஏற்கவில்லை.

எஸ்.எம்.எஸ் படம் வரிவிலக்குக்காக சிவா மனசுல சக்தி என்று மாறியது.

பின்னர் 2006 நவம்பர் 20 அன்று வெளியிடப்பட்ட அடுத்தகட்ட அரசாணை (G.O. No. 147) மூலம், ஏற்கனவே வெளியாகி மறுவெளியீடு செய்யப்படும் தமிழ்ப் பெயர் கொண்ட பழைய திரைப்படங்களுக்கும் இந்த வரி விலக்கு நீட்டிக்கப்பட்டது.

திரைப்படத்தின் தலைப்பு தமிழ் மொழி இலக்கணத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்ப அமைந்துள்ளதா என்பதைச் சரிபார்க்க அரசால் பிரத்யேகத் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் ஒப்புதல் பெற்ற படங்களுக்கு மட்டுமே வரி விலக்கு வழங்கப்பட்டது.

இன்னொரு பக்கம் மட்டமான, உருப்படாத, தவறான படங்கள் கூட தமிழில் பெயர் இருப்பதால் (பெயர் மட்டும் தமிழில் இருக்கும்) வரிச்சலுகை பெற்றன. அது வரிவிலக்கின் நோக்கத்துக்கு எதிராக இருந்தது.

இதனால் அடுத்து ஜெயலலிதா முதல்வரான நிலையில் 2011 ஜூலை 21 அன்று தமிழக அரசு கொண்டு வந்த புதிய அரசாணையின்படி (G.O. No. 89) படத்தின் பெயர் தூய தமிழில் இருப்பதோடு மட்டுமல்லாமல்,

தணிக்கை வாரியத்திடமிருந்து ‘U’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் எனவும், தமிழ் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் படம் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

ஒரு திரைப்படத்தின் தலைப்பு தூய தமிழில்தான் உள்ளதா என்பதை ஆராய்ந்து சான்றளிக்க அரசால் புதிய பிரத்யேகக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு பரிந்துரைக்கும் படங்களுக்கு மட்டுமே வரி விலக்கு வழங்கப்பட்டது.

ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் K.D பில்லா, கில்லாடி ரங்கா என்பது கேடி பில்லா கில்லாடி ரங்கா என்றும் மாறியதை எல்லாம் ஏற்றுக்கொண்டு வரிவிலக்கு கொடுத்து நோக்கத்தை சிதறடித்தார்கள்.

தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படம் அவசர அவசரமாக ப. பாண்டி என்று பெயர் மாறியது.

பழனிச்சாமி மகன் பாண்டி என்று விளக்கம் சொல்லி வரிச்சலுகையை அள்ளினார்கள். அப்போது முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்த ஒரு காரணம் போதாதா?

வரி விலக்கிற்காக விளக்கம் அளிக்கப்பட்ட சில படங்களின் தலைப்புகள் ஆங்கிலம் போலத் தோன்றினாலும், அவை தூய தமிழ் அல்லது புராணச் சொற்களே எனத் தயாரிப்பாளர்கள் விளக்கம் அளித்து வரி விலக்கு பெற்றனர் அல்லது முயற்சித்தனர்.

உத்தம வில்லன் பெயரில் உள்ள ‘வில்லன்’ என்பது ஆங்கிலச் சொல்லான ‘Villain’ அல்ல, வில்லை ஏந்திய வீரன் என்ற பொருளில் வரும் ‘வில்லன்’ என்ற தமிழ்ச் சொல் என விளக்கமளிக்கப்பட்டது.

(அது வில்லன் இல்லை; வில்லாளன் என்பதே சரி) அந்த தவறான வாதம் ஏற்கப்படவில்லை. வரிவிலக்கு கொடுக்கப்படவில்லை.

ரம் என்பது மதுபானத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் அல்ல, தமிழ் இலக்கியத்தில் வரும் ஒரு சொல் எனப் படக்குழு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. போய்யா யோவ் என்று சொல்லிவிட்டார்கள்.

ஷங்கர் இயக்கிய படம் I என்ற ஆங்கில எழுத்து அல்ல, அழகு மற்றும் வியப்பைக் குறிக்கும் ஓரெழுத்துத் தமிழ் மொழியான ‘ஐ’ எனக் கூறி வரி விலக்கு கோரப்பட்டது.

ஆனால், ஓரெழுத்துத் தலைப்பிற்கு வரி விலக்கு அளிக்க முடியாது என அரசு மறுத்துவிட்டது.

கெத்து என்பது பேச்சு வழக்குச் சொல்லாக இருந்தாலும் தமிழ்ச் சொல்லே என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து வரி விலக்கு வழங்க உத்தரவிட்டது.

விஸ்வரூபம் பட விஷயத்தில் கமலோடு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரது பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுத்தார் ஜெயலலிதா.

கொலையை மறைக்கிற மனோபாவத்தை நியாயப்படுத்துவது போன்ற காட்சிகள். காவல்துறையின் கண்ணியமான செயல்பாட்டுக்கு இழுக்காக அமைந்த காட்சிகள், தவறு செய்யும் ஒருவன் பாவம் தொலைக்க ஆற்றில் குளித்தால் பாவம் போகும் என்ற பிற்போக்குச் சிந்தனை, பள்ளி மாணவியைக் குளிக்கும்போது படம் பிடித்துக் காண்பிப்பது, இவற்றோடு அது வடமொழிப் பெயர் என்றும் வரிவிலக்கு மறுப்புக்கு காரணங்கள் சொல்லப்பட்டன.

அதே நேரம் சிவகார்த்திகேயனின் ரெமோ படக் குழு வரி விலக்குக்காக, ரெமோ என்ற பெயருக்கு ரெங்கநாதன் என்கிற மோகனா என்று மாறுவதாக சொன்னதை வைத்து ஜெயலலிதா ஆட்சியில் வரிவிலக்கு கொடுத்தார்கள். ஆனால் படம் ரெமோ என்ற பெயரில்தான் வெளியானது.

ஆல் இன் ஆல் அழகுராஜா, அழகுராஜா என்று தற்காலிக பெயர் மாற்றம் பெற்று வரிவிலக்கு பெற்றது.

ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை, வணக்கம் சென்னை, நண்பேன்டா, மனிதன் போன்ற படங்களின் பெயர் தூய தமிழில் இருந்து அவற்றுக்கு வரிவிலக்கு தரப்படவில்லை.

காரணம் அவை எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் வந்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயண்ட் படங்கள். வரிச் சலுகை என்ற விஷயம் இப்படி எல்லாம் சீரழிக்கப்பட்டது.

2017 ஜூலை மாதம் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பழைய கேளிக்கை வரிச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதனால் அனைத்துப் படங்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது. அப்புறம் எதற்கு தமிழ்?

மீண்டும் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் வைக்கும் போக்கு பார்த்தீனியச் செடி போல பரவியது.

பின்னாளில் இணைய வழி ஊடகச் சேவை (ஓடிடி) தளங்கள் வந்த பிறகு, ஒரு படம் உலகம் முழுக்க போவதற்கு ஆங்கிலப் பெயர் முக்கியம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

ஆனால், உண்மை அதுவல்ல. உலக அளவில் அதிக வசூல் கண்ட அமீர்கானின் டங்கல் முதலிய படங்கள் அதே பெயரில்தான் அந்தத் தளங்களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றன.

பெரிய படங்கள் மட்டுமல்ல… குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் மலையாளப் படங்கள் அதே பெயரில்தான் வெளியாகின்றன.

இந்தியாவிலேயே மேற்படி இணைய வழி ஊடகச் சேவை தளங்களை சரியாகப் பயன்படுத்துபவை மலையாளப் படங்கள்தான். பல தெலுங்கு, கன்னட, இந்திப் படங்களும் அப்படித்தான்.

தமிழ்ப் படங்கள்தான் என்னவோ வெட்டி முறிக்கிற மாதிரி ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு வந்து திரையரங்களுகளிலும் ஓடுவதில்லை. இணைய வழி ஊடகச் சேவை தளங்களிலும் ஓடுவதில்லை.

எல்லா மொழிகளிலும் ஆங்கிலத்தில் படங்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் இருக்கிறது என்றாலும் தமிழில் அது அதிகமாக இருப்பது ஏன்?

தெலுங்கு, கன்னட, மலையாள, இந்திப் பட உலகம் அந்தந்த மொழி இனத்தவர் கையில் இருக்கிறது. அவர்களுக்கு அவர்கள் மொழி மீது அறிவும் உண்டு. பற்றும் உண்டு. தானாடாவிட்டாலும் தசையாடும்.

ஆனால், தமிழ்த் திரைப்பட உலகம் தமிழர்கள் கையில் இல்லை. திராவிடம் என்ற பசப்பல் சதியின் விளைவால் மற்ற மொழியினர் கைக்குப் போய் விட்டது.

நானும் திராவிடன்தான் என்ற பெயரில் தமிழ் சினிமாவைக் கட்டி ஆளும் மற்ற மொழியினர்தான் இங்கே அதிகம். அவர்களுக்கு தமிழ் அறிவும் கிடையாது. பற்றும் கிடையாது.

(கவுதம் வாசுதேவ் மேனனுக்கு அது உண்டு. அதனால்தான் ‘வாரணம் ஆயிரம்’ என்பது எல்லாம் படத்தின் பெயராக வந்தது.)

அவர்களும் ஆட மாட்டார்கள். அவர்கள் தசையும் ஆடாது. தமிழ் ஒழுங்கா தெரிந்தால்தானே தமிழில் பெயர் வைக்க முடியும்; வசனம் பாடல் எழுத முடியும்?

தவிர, அவர்கள் எல்லோரும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது மற்ற மொழி திரைப்பட மேடைகளில் போய், நான் உங்க அப்பாயிதான்… ஹி ஹி ஹி… பாத்துப் போட்டுக் குடுங்க..” என்பார்கள்.

வேற்று மொழி திரைப்படங்களில் தமிழர்கள் யாரும் அப்படி உச்சம் தொட முடியுமா? முடியாது. காரணம், அவர்கள் எல்லாம் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், திராவிடர்கள் என்ற மாயையில் விழாதவர்கள்.

திராவிடத்தின் பெயரால் அவர்களை ஏமாற்ற முடியாது. இங்கே தமிழ் உணர்வை அடையாளத்தை இருப்பையே திராவிடத்தின் பெயரை வைத்து உடைத்து நொறுக்கலாம்.

சின்னி ஜெயந்த் என்று ஒரு நடிகர் இருக்கிறார். அவரின் தாய்மொழி என்ன என்று யோசித்தோமா?

நவம்பர் இருபதாம் தேதி, தமிழிலும் மொழி மாற்றமும் செய்யப்பட்டு வெளியாக இருக்கும் ஆகாசம்லோ ஓக்க தாரா (ஆகாயத்தில் ஒரு நட்சத்திரம்) என்ற படத்தின் (தயாரிப்பாளர்கள் தெலுங்கர்கள்) விளம்பர நிகழ்வில் பேசிய சின்னி ஜெயந்த்,

“நானும் தெலுங்கன்தான். எனக்கு தாய்மொழி தெலுங்குதான்” என்று பெருமிதமாக மேடையில் (நவம்பர் 17) அறிவிக்கிறார்.

அவரை தெலுங்கன் என்று பார்த்தா இயக்குநர் மகேந்திரன் ’கை கொடுக்கும் கை’ படத்தில் வாய்ப்புக் கொடுத்து இருப்பார்?

ஆனால், சரியான சமயத்தில் சரியாக மொழி அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டு, அவர்கள் எல்லாம் பெருமை கொள்வது உண்டு.

நாற்பது வருடம் தெலுங்கு திரைப்பட உலகில் ஒரு தமிழன் இருந்து விட்டு, அங்கே ஒரு தமிழ்ப் படத் தயாரிப்பாளர் வந்தார் என்பதற்காக மேடையில் நான் தமிழன் தான் என்று அறிவிக்க முடியுமா?

அப்படி ஒருவன் நாற்பது வருடம் மற்ற மொழி திரைப்பட உலகில் இருக்க முடியுமா?

இப்படிப்பட்டவர்கள் எப்படி தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க நினைப்பார்கள்?

தமிழ்ப் படங்களுக்கு அவர்கள் மொழியில் பெயர் வைக்கத்தானே ஆசைப்படுவார்கள்.?.

”மாத்தாடு மாத்தாடு மல்லிகே…”, ”இக்கட ரா ரா ராமையா…” என்று கொண்டாடத்தான் செய்வார்கள்.

இத்தனைக்கும் மேற்படி ஆகாசம்லோ ஒக்க தாரா என்ற பெயரே அர்த்தமில்லாத ஒன்று. தமிழில் அதற்கு ஆகாயத்தில் ஒரு நட்சத்திரம் என்று பெயர் வைத்துள்ளார். மற்ற மொழிகளிலும் அதே ரீதியில்.

ஆகாயத்தில் வேறு நட்சத்திரமே இல்லையா என்ன? எவ்வளவோ நட்சத்திரம் இருக்கிறதே. அதில் ஒன்று என்பதில் என்ன சிறப்பு?

சாத்தியக் குறைவு கொண்ட ஒரு சூழலில் அல்லது இடத்தில் இப்படி ஒரு பெயர் வந்தால் அது சிறப்பு. உதாரணமாக பகலில் ஒரு நிலவு, இரவில் ஒரு வானவில், நெருப்பாற்றில் நீல மலர்… இப்படி.

அதைவிட்டு விட்டு பகலில் ஒரு சூரியன், இரவில் ஒரு நிலா, நெருப்பில் ஒரு கனல், கடலின் ஒரு குடம் நீர் என்று பெயர் வைப்பது எப்படி ஓர் அரைவேக்காட்டுத்தமான பேரோ, அப்படித்தான் ஆகாயத்தில் ஒரு நட்சத்திரம் (ஆகாசம்லோ ஓக்க தாரா) என்பதும்.

1986 ஆம் ஆண்டு தெலுங்கில் வந்த சிம்மாசனம் படத்தில் வந்த ”ஆகாசமலோ ஒக்க தாரா” என்ற புகழ்பெற்ற பாடலின் முதல் வரி அது என்கிறார்கள்.

”ஆகாசம்லோ ஒக்க தாரா நாக்கோசம் ஒச்சிந்தி ஈ வேளா (ஆகாயத்தில் ஒரு தாரகை எனக்காக இந்த வேளை வந்தது) என்று பூமியில் இருந்து பாடும்போது அந்த வரிக்கு அர்த்தம் கிடைக்கிறது.

அடுத்த வரி ”இலாலோ ஒக்க சந்தமாமா (இந்த பூமியில் ஒரு நிலவு)” என்றும் சரியாக வருகிறது.

ஆனால், விண்வெளியில் சாதனை படைக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் கதைக்கு ஆகாயத்தில் ஒரு தாரகை என்ற பெயர் எப்படிப் பொருந்தும்?

ஆகாயத்தில் ஒரு நட்சத்திரமா இருக்கிறது? எந்த அர்த்தத்தில் இந்த பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை?

இது இருக்கட்டும். தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பது அவசியமா?

உலகின் மூத்த மொழி என்கிறோம். இலக்கியத்தின் ராணி என்கிறோம்.

தமிழ் என்ற மொழி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட, உலகின் மூத்த மொழியின் பெயர் தமிழ் என்பதை ஏற்கிறார்கள்.

உலகின் பல மொழிகளில் தமிழின் வார்த்தைகள் கொட்டிக் கிடக்கின்றன. அது தமிழில் இருந்து வந்தது என்பதே தெரியாமல் பலர் அதைப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

நமக்கு பிறகு உருவான மொழி, இன மக்கள் எல்லாம் இன்னும் திரைப்பட உலகில் தங்கள் மொழி இன அடையாளங்களைப் பதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

தமிழிலும் அது நிகழ வேண்டாமா?

ஒளிச் சிதறல் அழகானது. ஆனால், மொழிச் சிதறல் கேவலமானது இல்லையா?

பார்த்தால் பசி தீரும், அன்பே வா, மண்வாசனை, குடியிருந்த கோவில், தெய்வப் பிறவி போன்ற பெயர்கள் ஒரு தமிழ் ரசிகனுக்குக் காட்டும் உணர்வு நெருக்கத்தை வேறு எந்த மொழி கொடுத்து விட முடியும்?

— சு.செந்தில் குமரன்

Comments (0)
Add Comment