திமுக 1967-ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் சுயமரியாதைத் திருமணம் என்பதை அறிமுகப்படுத்தி, கலப்புத் திருமணத்தையும் சட்டப்பூர்வமாக்கியது.
மிக எளிமையாக ஆடம்பரம் இல்லாமல் மாலையை மாற்றியோ, மாற்றாமலோ திருமணத்திற்கான உறுதிப் பத்திரத்தை எடுத்துக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது மட்டுமே திருமணம் என்கிற அளவில் திருமணத்திற்கான பெரும் பிரம்மாண்டம் மிகச் சுருக்கமாகக் கருதப்பட்டு அதை வெவ்வேறு முக்கிய பிரமுகர்களின் திருமணமும் அப்படித்தான் நடந்திருக்கிறது.
கலைஞரின் திருமணம் அப்படித்தான். சிதம்பரம் ஜெயராமனின் தங்கையான பத்மாவதியை அவர் முதலில் திருமணம் செய்து கொள்ளும் போதும் கலைவாணர் தலைமையில் மிக எளிமையாகத்தான் அந்த திருமணம் திருவாரூரில் நடந்தது.
அதையடுத்து நடிகர் திலகம் சிவாஜி போன்றவர்களின் திருமணமுமே அதே மாதிரியான எளிமையுடன் கோவிலில்தான் மிகக் குறைவான நபர்கள் சூழ்ந்திருக்க நடந்திருக்கிறது.
எம்ஜிஆர்-ஜானகியின் திருமணமும் பதிவுத் திருமணமாக அதேவிதமான எளிமையுடன் நடந்திருக்கிறது.
இப்படி பல்வேறு உதாரணங்களைக் காட்ட முடியும்.
ஆனால், அப்படி எந்தவிதமான சடங்குகள், திரளான கூட்டம், அதற்கு ஆகும் பிரம்மாண்ட செலவுகள் எல்லாவற்றையும் ஓரங்கட்டி ஒரு திருமண ஒப்பந்தம் மூலமாகவே மிகவும் சாதாரணமாக திருமணத்தை நடத்த முடியும் என்பதற்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தது.
திராவிட இயக்கங்கள் வலியுறுத்திய திருமணங்கள் – திராவிடர் கழகத்தினர் தலைமையேற்று நடத்திய திருமணங்கள்.
குறிப்பாக பெரியார் தலைமையேற்று நடத்திய திருமணமும் இப்படிப்பட்ட எளிமையில்தான் நடந்திருக்கிறது.
ஆனால், தமிழக அளவில் விஸ்திரமாக பார்க்கப்பட்ட திருமணங்களில் ஒன்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனுக்கு நடந்த மிக ஆடம்பரமான திருமணம்.
அந்த திருமணத்திற்காக செய்யப்பட்ட ஒரு பிரம்மாண்டம் ஊடகங்களுக்கு தொடர்ந்து தீனிபோட்டு கொண்டே இருந்தது.
அந்த திருமணத்தின்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் முழுக்க நகைகளும் இடுப்பில் ஒட்டியாணமும் அணிந்து வர, அவர்களுக்கு முன்பு அப்போதைய காவல்துறை உயரதிகாரியுடன் நடந்து வந்த காட்சி அப்போதைய வார இதழில் அட்டைப்படமாக வெளிவந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதைப் போலவே அந்த திருமணத்தில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கானவர்களும் அவர்களுக்காக பரிமாறப்பட்ட விருந்து உள்ளிட்ட அனைத்துமே மிக பிரம்மாண்டமாக அமைந்து ஊடகங்களுக்கும் எதிர்கட்சிகளுக்கும் தீனியாகி அந்தக் கட்சியையே ஆட்சியைவிட்டு அகற்றும் சூழ்நிலையை உருவாக்கியது. இது ஏற்கனவே நடந்த விஷயம்தான்.
இதைப்போலவே திமுகவின் மிக மூத்த அமைச்சரும் கழக பொதுச்செயலாளருமான துரைமுருகன் வீட்டுத் திருமணம், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனின் திருமணம் மாதிரியே மிக பிரம்மாண்டமாக,
அதேவிதமான ஆடம்பரம், அதேவிதமான நகை படோடோபங்கள், மிக உயர்ந்த விலை மதிப்பான அழைப்பிதழ், இன்னிசை கச்சேரி, தடபுடலான விருந்து என்று நடந்தது.
அதோடு, எந்த சமஸ்கிருதத்துக்கு எதிராக திராவிட இயக்கங்கள் அடிக்கடி குரல் கொடுத்து வந்தார்களோ, அதே சமஸ்கிருத ஸ்லோகங்கள் முழங்க ஏகப்பட்ட சடங்குகளுடன் நடந்தேறியிருக்கிறது.
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அந்த திருமணம் பற்றிய விவாதம் ஒரு புறமிருக்க, திராவிடர் கழகத் தலைவரான ஆசிரியர் கி.வீரமணி இந்த திருமணத்தின் போது அதுவும் திராவிட இயக்கத்தினரின் திருமணத்தின் போது இத்தகைய சடங்குகள் பின்பற்றப்பட்டதைப் பற்றி தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
அதைப்போலவே பல்வேறு தரப்பினரும் துரைமுருகன் வீட்டுத் திருமணத்தை விமர்சித்த நிலையில் பதிவிட்டுருக்கிறார்கள்.
அதிமுகவுக்கும் திராவிடக் கொள்கைக்கும் எவ்வளவு பிணைப்பு இருக்கிறது என்பதைப் பற்றி அடிக்கடி விமர்சிக்கக் கூடிய திமுகதான் அதன் தலைமை பொறுப்பில் இருக்கிற துரைமுருகன் போன்ற மிக மூத்த உறுப்பினர்கள் தான் இப்படிப்பட்ட ஆடம்பரமான சம்பிரதாயமயமான சடங்குகள் நிறைந்த ஒரு திருமண வைபவத்தை அமோகமாக பல ஊடகங்களுக்கு தீனி கொடுக்கும் நிலையில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரே ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
இன்றைய காங்கிரஸுக்கும் மகாத்மா காந்தி வலியுறுத்திய அகிம்சைக் கொள்கைக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதைப் பற்றி அடிக்கடி கேள்வி எழுப்பும் திராவிட இயக்க வழித்தொண்டர்கள்,
அவர்கள் வீட்டுத் திருமணங்களை எப்படி நடத்துகிறார்கள்? திராவிட மாடல் படி நடத்துகிறார்களா?
ஏன் இவ்வளவு ஆடம்பரமான செலவுகள் இவர்களது வீட்டு திருமணங்களில் செலவழிக்கப்பட்டு, ஏன் இந்த பிரம்மாண்டம் உருவாக்கப்படுகிறது?
1949-ல் இதே சென்னையில் ராபின்சன் பூங்காவில் திமுக என்கின்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டபோது, அப்போது இருந்த கொள்கைகள் வேறு, அப்போது இருந்த தலைவர்களும் வேறு.
ஆனால், அதன் வழிவந்தவர்களாகச் சொல்லப்படக்கூடிய இன்றைய திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் திராவிடக் கொள்கைகளுக்குமே தூர இடைவெளி அதிகரித்து விட்டதா?
அதைத்தான் இந்த திருமணங்கள் உணர்த்துகிறதா?
திராவிட உணர்வு பற்றி பேசுபவர்கள்தான் இது பற்றிய ஒரு ஆய்வை செய்ய வேண்டும்.
– லியோ