பொருளாதார நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது?

மேலே உள்ள தலைப்பில் நாம் எழுப்பியிருக்கும் கேள்வி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் மனதில் எழுப்பியிருக்கும் கேள்வி.

வெளிச்சந்தையில் சட்டென்று அரிசியின் விலை உயர்கிறது. பருப்பு, எண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கூடுகிறது. பாலுக்கு பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு பல பொருட்கள் விலை ஏற்றத்தைச் சந்தித்து இருக்கின்றன.

இதையடுத்து தவெக அரசுத் தரப்பில் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வழங்குவதை ஒழுங்குபடுத்திக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதைப்போலவே சென்னையில் அமுதம் போன்ற சிறப்பு அங்காடிகளில் சன்ன ரக அரிசியை கிலோ 30 ரூபாய் விலைக்கும் மற்ற மளிகைப் பொருட்களைக் குறைந்த விலைக்க விற்கவும் பரவலாகக் கிடைக்கவும் ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

தவெக அரசின் இத்தகைய முன்னேற்பாடுகள் காலத்திற்கேற்ற ஒன்றுதான் என்றாலும், மக்களின் பரவலான தேவைகளைச் சமாளிக்க முடியுமா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இன்னொருபுறம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மின்சாரத்தை அதீக விலைக்கு அரசே வாங்க வேண்டிய கட்டாய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

இப்படியெல்லாம் மின்சாரம் வாங்கி பயன்படுத்தும்போது மின்கட்டணம் இதுவரை இல்லாத அளவுக்கு பல வீடுகளில் உயர்த்தியிருக்கிறது.

அவரவரின் மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழுகிற அளவுக்கு மின்சாரக் கட்டணம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கேற்றபடி பலருடைய சம்பளம் உயர்த்தப்படுவதில்லை.

தொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கு உரிய வருவாய் கூடுதலாகக் கிடைக்கப் போவதில்லை.

எல்லோருமே பொருளாதார அளவில் ஒருவித நெருக்கடியை அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையில் ஆயுதபூஜை, தீபாவளி போன்ற விழாக்கள் வருவதால் அவற்றையும் இதே நெருக்கடிக்கு இடையில் பொதுமக்கள் சமாளித்தாக வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கடன்களை வாங்குவதும் நகைகளை அடகு வைப்பதும் முன்பிருந்ததைவிட தற்போது மேலும் அதிகரித்திருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக தட்பவெட்ப நிலை மாற்றத்தால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உருவாகிப் பெருகும் பல்வேறு நோய்கள் இனிமேலும் அதிகரிக்கவும் தொற்றுக்கள் பரவவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

எப்படியாவது தன்னையும் தன் குடும்பத்தையும் சிரமப்பட்டாவது காப்பாற்றி ஆக வேண்டும் என்கிற தத்தளிப்பான மனநிலைதான் தற்போதைய மக்களிடையே நிலவும் எதார்த்தம்.

தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சிகளும் சரி தங்களுக்கிடையே எவ்வளவு மலினமான அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் நலனுக்காக யோசித்துச் செயல்பட  வேண்டிய நேரம் இது என்பதை உணர்த்த வேண்டியது அவசியமாகிறது.

– யூகி

Comments (0)
Add Comment