தேர்வாணையத் தவறுகளும் பயிற்சித் தொழிலின் பகற்கொள்ளையும்!

அரசுப் பணி என்பது இன்றைய இளைஞர்களில் பலருக்கு அவர்களின் குடும்ப வறுமையைப் போக்குவதற்கான நம்பிக்கை, சமூகத்தில் ஒரு மதிப்பைப் பெறுவதற்கான கனவு, வாழ்க்கையை ஓரளவுக்கேனும் நிலைப்படுத்திக் கொள்வதற்கான போராட்டம்.

அந்தக் கனவை நனவாக்குவதற்காக ஆண்டுக் கணக்கில் படித்து, பயிற்சி மையங்களின் கதவுகளைத் தட்டி, ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலவழித்து, தங்களுடைய இளமையையும் உழைப்பையும் காலத்தையும் அர்ப்பணிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவானதல்ல.

ஆனால், அந்த இளைஞர்களின் உழைப்புக்கும் நம்பிக்கைக்கும் பொறுப்பேற்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இத்தனை காலமும் தேர்வெழுதிய போட்டியாளர்களின் ஆதங்கமாகவும் தனிப்பட்ட புகார்களாகவும் இருந்து வந்த குற்றச்சாட்டுகள், இப்போது தேர்வுக்குப் பயிற்சியளிக்கும் பயிற்றுநர்களின் வெளிப்படையான விமர்சனங்களாகவும் மாறியிருப்பதுதான் கவனிக்கத்தக்கது.

இதுவரை ஒன்று, இரண்டு வினாக்களில் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படும் பிழைகள், இப்போது எண்ணிக்கையிலும் தன்மையிலும் அதிகரித்துள்ளனவோ என்ற சந்தேகத்தை அண்மையில் வெளியான குரூப்–II, குரூப்–IIA முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 10 அன்று வெளியிடப்பட்ட அந்த விடைக்குறிப்பில் சில வினாக்கள் தவறாக அமைக்கப்பட்டிருப்பதோடு, சரியான விடைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றிலும் பிழைகள் இருப்பதாகப் பயிற்றுநர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை, வினா தவறாகக் கேட்கப்பட்டுள்ளது, விடைக்குறிப்பில் பிழை உள்ளது.

தங்களுடைய சரியான விடைக்குக்கூட மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று போட்டியாளர்கள் பலமுறை குரல் எழுப்பியிருக்கிறார்கள். முறையிட்டிருக்கிறார்கள். நியாயம் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், அவர்களுடைய குரல்களுக்கு உரிய பதிலும் தீர்வும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

ஒரு தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட இளைஞன், தனது உழைப்புக்கான நியாயம் கிடைக்குமா என்று காத்திருக்கிறான்.

அவனுடைய வாழ்க்கையோ காத்திருப்பதில்லை. குடும்பத்தின் பொருளாதார அழுத்தம், வயது வரம்பு, அடுத்தடுத்த தேர்வுகள், வாழ்க்கைத் தேவைகள் எனப் பல நெருக்கடிகள் அவனைச் சூழ்கின்றன.

இறுதியில், பழைய குறைகளுக்கான தீர்வை எதிர்பார்ப்பதைவிடுத்து, மீண்டும் புத்தகங்களைக் கையில் எடுத்துக்கொண்டு அடுத்த தேர்வுக்குத் தயாராகத் தொடங்கிவிடுகிறான்.

அவனது போராட்டம் முடிவதில்லை; தேர்வாணையத்திடம் நீதி கேட்ட குரலும் நாளடைவில் அடங்கிவிடுகிறது.

ஆனால், அவன் இழந்த காலத்தையும் மனஉளைச்சலையும் பொருளாதார இழப்பையும் யார் ஈடுசெய்வது?

இதுவரை தேர்வர்களின் புகார்களாகவும் தனித்தனி எதிர்ப்புகளாகவும் இருந்தவை, இப்போது பயிற்சியளிக்கும் தரப்பிலிருந்தே வெளிப்படையாக விமர்சிக்கப்படுவது ஒரு முக்கியமான திருப்பம்.

தங்களிடம் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு என்ன பதிலைச் சொல்லுவது என்று தெரியாமல் தவிப்பதாகப் பயிற்றுநர்கள் கூறுகின்றனர்.

காரன்வாலிஸ் பிரபு 1793 ஆம் ஆண்டு நிரந்தர நிலவரித் திட்டத்தைக் கொண்டுவந்தார் என்பது வரலாற்றின் அடிப்படையான செய்தி.

அதனை 1973 எனக் குறிப்பிடும் வகையில் வினாவிலோ விடைக்குறிப்பிலோ பிழை இடம்பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவுக்கே 1947ஆம் ஆண்டுதான் சுதந்திரம் கிடைத்தது என்ற நிலையில், அதற்குப் பின்னர் காரன்வாலிஸ் நிலவரித் திட்டத்தைக் கொண்டுவந்தாரா என்ற கேள்வியை எழுப்பும் அளவுக்கு இந்தப் பிழை வேடிக்கையானதாக அமைந்துள்ளது.

காந்தி–இர்வின் ஒப்பந்தம் 1931 மார்ச் மாதத்திலும், இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்தி பங்கேற்றது அதே ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் நிகழ்ந்திருக்கும்போது,

இரண்டாவது மாநாட்டில் காந்தி பங்கேற்றதையே சட்டமறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டதற்கான காரணமாகக் குறிப்பிடுவது காலவரிசையைத் தலைகீழாக்குவதாகப் பயிற்றுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேபோல், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் ஆகிய துறைகளின் நிர்வாகப் பொறுப்புகள் குறித்த வினாக்களிலும் குழப்பங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அமைச்சகங்களின் பொறுப்புகள் குறித்த அடிப்படைத் தெளிவுகூட இல்லாமல் வினாக்களை அமைப்பதும், அதற்கேற்பத் தவறான விடைகளை வழங்குவதும் எத்தகைய தேர்வுத் தரத்தை வெளிப்படுத்துகின்றன?

நேரு, காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் நூல்கள் மற்றும் அரசியல் சிந்தனைகள் குறித்த வினாக்களிலும் தவறான பொருத்தங்கள் இடம்பெற்றுள்ளதாகப் பயிற்றுநர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

பொதுத்தமிழ் வினாக்களில்கூட பொருத்தமற்ற சொல் தேர்வு, குழப்பம் தரும் வினா அமைப்பு எனப் பல்வேறு குறைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

தயிர் சாதம் தொடர்பான வினாவிலிருந்து அரசு நிர்வாகம் சார்ந்த வினாக்கள் வரை, கேள்விகளின் பொருத்தப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவை அனைத்தும் உண்மையில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய குற்றச்சாட்டுகள்.

ஒவ்வொரு வினாவுக்கும் உரிய ஆதாரம், ஒவ்வொரு விடைக்கும் சரியான விளக்கம் வழங்கப்பட வேண்டிய கட்டாயம் தேர்வாணையத்திற்கு உண்டு.

000

இங்கே இன்னொரு முக்கியமான கேள்வியையும் நாம் தவிர்த்துவிட முடியாது.

தமிழ்நாட்டில் அரசுப் பணித் தேர்வுகளுக்கான பயிற்சி என்ற பெயரில் இயங்கும் மையங்களின் எண்ணிக்கை, அவற்றுக்காகச் செலவிடப்படும் தொகை, பயிற்சிக் கட்டணங்கள், தேர்வர்களிடம் உருவாக்கப்படும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை ஒருமுறை கவனித்துப் பார்க்க வேண்டும்.

அரசுப் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு, பல்வேறு விளம்பரங்களாலும் வெற்றிக் கதைகளாலும் மாணவர்களை ஈர்க்கும் பயிற்சி நிறுவனங்கள் இருக்கின்றன.

பயிற்சிக்காகச் சேரும் மாணவர்களின் பொருளாதார நிலை, மனநிலை, குடும்பப் பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கட்டணங்களும் கூடுதல் செலவுகளும் சுமத்தப்படுவதாகப் புகார்கள் எழுகின்றன.

அரசுப் பணிக்கான தயாரிப்பு என்ற பெயரில் இளைஞர்களின் பணம், நேரம், உழைப்பு, மனநலம் எனப் பலவும் பணயம் வைக்கப்படுகின்றன.

சில பயிற்சி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் உரிய ஆய்வு தேவைப்படுகிறது.

மாணவர்களின் வெற்றியை முன்னிறுத்திப் பயிற்சி அளிப்பதற்கும், அவர்களுடைய வேலைவாய்ப்புக் கனவுகளை வணிக வாய்ப்பாக மாற்றுவதற்கும் இடையே பெரிய வேறுபாடு இருக்கிறது.

இத்தனை காலமும் இந்தச் சூழலைக் கண்டும் காணாமலும் இருந்த அரசுத் துறைகளும் உரிய கண்காணிப்பை மேற்கொண்டனவா என்ற கேள்வியும் எழுகிறது.

தேர்வாணையத்தின் குளறுபடிகளும் பயிற்சி மையங்களின் வணிக நோக்கங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் நிலையில், பாதிக்கப்படுவது மட்டும் எப்போதும் போட்டியாளர்கள்தான்.

இப்போது பயிற்றுநர்களே தேர்வாணையத்தின் வினாக்களையும் விடைகளையும் விமர்சிக்கத் தொடங்கியிருப்பது, இதுவரை வெளியில் முழுமையாகப் பேசப்படாமல் இருந்த குறைபாடுகள் இனியும் மறைக்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளதைக் காட்டுகிறது.

பெரிய அமைப்புகளின் முகமூடியைக் கிழிப்பதற்கு எப்போதும் பெரிய போராட்டங்கள்தான் தேவைப்படுவதில்லை.

சில நேரங்களில் அவற்றின் சிறிய முரண்பாடுகளே அவற்றின் உண்மையான முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து விடுகின்றன.

இப்போது பயிற்றுநர்களிடமிருந்து எழும் குரலும் அப்படியானதொரு முரண்பாட்டின் வெளிப்பாடாக இருக்கலாம்.

ஒரு வினா தவறாகக் கேட்கப்பட்டு, அதற்குச் சரியான விடையை எழுதிய மாணவருக்கே மதிப்பெண் கிடைக்காமல் போனால், அதன் விளைவு ஒன்றரை மதிப்பெண் இழப்போடு முடிந்துவிடுவதில்லை.

அந்த ஒன்றரை மதிப்பெண்ணே ஒருவரின் தேர்ச்சி வாய்ப்பைத் தீர்மானிக்கலாம்.

இரண்டு ஆண்டுகளாகத் தேர்வுக்காகக் காத்திருந்த ஒருவரின் முயற்சி மீண்டும் தொடக்கத்திற்குத் தள்ளப்படலாம்.

அப்படியிருக்க, வினாவைத் தயாரிப்பவர்களுக்கும் விடைக்குறிப்பைச் சரிபார்ப்பவர்களுக்கும் எந்தவிதமான பொறுப்புணர்வும் வேண்டாமா?

தேர்வாணையத்தின் ஒரு தவறு, தேர்வரின் வாழ்க்கையில் எத்தனை ஆண்டுகளை விழுங்கக்கூடும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

தவறான வினாவுக்கும் தவறான விடைக்கும் இடையில் சிக்கிக்கொள்ளும் மாணவனின் எதிர்காலம் அதிர்ஷ்டத்தைச் சார்ந்ததாக மாறிவிட்டால், அது எப்படிப் போட்டித் தேர்வாக இருக்க முடியும்?

லட்சக்கணக்கில் தேர்வர்கள் பங்கேற்கும் ஒரு பொதுத் தேர்வை நடத்தும் நிறுவனத்திடம் குறைந்தபட்ச வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புணர்வையும் எதிர்பார்ப்பது தவறா?

தேர்வாணையம் என்பது யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத அதிகார அமைப்பு அல்ல.

பொதுமக்களின் நம்பிக்கையாலும், இளைஞர்களின் உழைப்பாலும் தனது மதிப்பைப் பெற்றிருக்க வேண்டிய பொது நிறுவனம்.

ஒரு சாதாரணப் போட்டியாளர் நீதி கேட்கும்போது அது தனிப்பட்ட புகாராகப் பார்க்கப்படுகிறது.

இப்போது பயிற்றுநர்களும் வினாத்தாள் மற்றும் விடைக் குறிப்புகளின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும்போது, அதனை வெறும் தொழில்முறை அதிருப்தியாகக் கடந்து செல்ல முடியாது.

ஏனெனில், இந்தச் சிக்கலின் மையத்தில் இருப்பது அரசுப் பணிக்காகத் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான ஆண்டுகளைச் செலவிடும் இளைஞர்கள்தான்.

சுட்டிக்காட்டப்பட்ட வினாக்களையும் விடைகளையும் தேர்வாணையம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தவறான வினாக்களுக்கு உரிய நியாயமான தீர்வை வழங்க வேண்டும்.

விடைக்குறிப்பில் உள்ள பிழைகளைத் திருத்துவதோடு, தேர்வர்கள் அளிக்கும் ஆட்சேபனைகளுக்குத் தெளிவான பதிலளிக்க வேண்டும்.

வினாத்தாள் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு, விடை சரிபார்ப்பு ஆகிய ஒவ்வொரு நிலையிலும் துறைசார் வல்லுநர்களின் பங்களிப்பையும் உறுதிசெய்ய வேண்டும்.

அதேவேளை, பயிற்சி நிறுவனங்களின் கட்டண நடைமுறைகள், விளம்பரங்கள், மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தொகைகள் குறித்தும் உரிய கண்காணிப்பு அவசியம்.

இத்தனை ஆண்டுகளாகப் போட்டியாளர்கள் மட்டுமே எழுப்பிய குரல் இப்போது பயிற்றுநர்களிடமிருந்தும் ஒலிக்கிறது. நாளை இந்தக் குரல் இன்னும் பல தரப்பினரிடமிருந்து எழக்கூடும்.

இதனை ஒரு மாற்றத்தின் தொடக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்.

வினாத்தாளில் பிழை இருப்பது ஓர் அச்சுப் பிழையாக இருக்கலாம்; விடைக்குறிப்பில் பிழை இருப்பது ஒரு நிர்வாகக் குறையாக இருக்கலாம்.

ஆனால், அந்தப் பிழைகளால் ஓர் இளைஞனின் எதிர்காலமே பறிபோனால் அது வெறும் பிழையல்ல; பொதுப்பொறுப்பில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தோல்வி!

அரசுப் பணிக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகத்தான் தேர்வாணையம் இருக்கிறது.

தேர்வாணையத்தின் தவறுகளைத் தாங்கிக் கொள்வதற்காகத்தான் தேர்வர்கள் இருக்கிறார்கள் என்ற நிலை உருவாகிவிடக் கூடாது.

இளைஞர்களின் கனவுகளுக்கு விடைக்குறிப்பு எழுத வேண்டிய அமைப்பு, அவர்களின் எதிர்காலத்திற்கே கேள்விக்குறி வைக்கக்கூடாது.

– மைத்திரி அன்பு, காஞ்சிபுரம்.

Comments (0)
Add Comment