‘தர’மான பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை!

நாம் அன்றாடம் பருகும் நீரிலிருந்து நாம் பயன்படுத்தும் பொருட்கள் வரை தரமாக இருப்பது மிக அவசியம்.

நம் வாழ்க்கையை எளிதாக்குவதிலும், பாதுகாப்பபானதாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் இந்தத் தரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

அவசரமான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்  நாம் எந்த விஷயத்திலும் அதிக கவனம் செலுத்த முடியாவிட்டாலும் நாம் பயன்படுத்தும் பொருள் மற்றும்  உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தை நாம் அனைவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். 

அதே மாதிரி ஒரு நிறுவனம் தயாரிக்கும் பொருளின் தரத்தில் எப்பொழுதும்  முன்னேற்ற பாதையிலே செல்ல வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

எந்தப் பொருளாக இருந்தாலும் அவை தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருப்பது நல்லது.

தரம் குறைந்த எந்த பொருட்களாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் பிற்காலத்தில் மிகவும் மோசமானதாக மாறிவிடக்கூடும்.

அதனால் தரம் எப்பொழுதும் முக்கியம் என்பதனையும் நாம் உணர வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு எந்த வித இழப்பும் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஏனென்றால் மக்கள் தொகை பெருக்கத்தினால் மக்களின் தேவைகளும் அதிகமாகவே இருப்பதினாலும் அநேக பொருட்களில் போலியானது அசல் பொருளை விட நம்மை கவர்வதற்காகவே இருக்கிறது.

அதனால் அசல் எது,  போலியானது எது என்று அதில் பயன்படுத்தியிருக்கும் முத்திரையை பார்த்து நாம் தெரிந்து கொள்வது முக்கியம். ஆகவேதான் அனைத்து நாட்டு மக்களுக்கும் பொருந்தக் கூடியதான ஒரு தொழில்நுட்ப தர நிலையாக ISO என்பது மாறி உள்ளது.

இத்தகைய தர நிர்ணயத்தை புரிந்து கொண்ட நிறுவனங்களும் தங்கள் தொழில் வளர்ச்சி அடைய தங்களுடைய பங்களிப்பை விடாமல் கொடுத்து வருகிறது என்பதையும் நாம் மறுக்க முடியாது. 

இந்த தரத்தை சர்வதேச தர நிர்ணய அமைப்புகளான ஐ.எஸ்.ஓ. (ISO), ஐ.இ.சி. (IEC) மற்றும் ஐ.டியு. (ITU) ஆகியவற்றில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான நிபுணர்களின் கூட்டு முயற்சியுடன் பரிசோதித்து நமக்குத் தருகின்றனர்.

அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14ஆம் நாள் உலகெங்கிலும் உலகத் தர நிர்ணய நாளாக (World Standards Day) கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (I.S.O), அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (I.E.C),

அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (I.T.U) ஆகிய நிறுவனங்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டு உலகத் தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவையைப் பாராட்டுகின்றனர்.

மேலும் பொருள்கள் மற்றும் சேவைகளில் விளங்க வேண்டிய சீர்மைத் தன்மையின் அவசியத்தை உலகளாவிய ரீதியில் வலியுறுத்த இந்த நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.

1969-ம் ஆண்டிலிருந்து, அக்டோபர் 14-ம் நாளை, உலகத் தர நிர்ணய நாளாகக் கடைப்பிடிக்கின்றன.

இந்தியாவில் தர நிர்ணயப் பணிகளை இந்தியத் தர நிர்ணயச் செயலகம் (Bureau of Indian Standards – BIS) மேற்கொள்கிறது. BIS வழங்கியுள்ள ISI முத்திரை என்பது ஒரு தயாரிப்பு இந்தியத் தரங்களுக்கு இணங்குவதாக நுகர்வோருக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

தங்க நகைகளுக்கான ஹால்மார்க் (Hallmark) முத்திரையும் BIS ஆல் வழங்கப்படுகிறது, இது தங்கம் தூய்மையின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.

சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (I.S.O), தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் உற்பத்தியின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பன்னாட்டுத் தர நிலைகளாக 25,613 எனும் எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது.

இவ்வமைப்பில் 172 நாடுகள் உறுப்பினர்களாக இணைந்திருப்பதுடன், இவ்வமைப்பின் கீழ் 841 தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தர மேம்பாட்டைக் கவனித்துக் கொள்கின்றன.

சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (I.S.O) எனும் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராகச் சேர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே சீரான தர முறைகளை வகுப்பதிலும், சான்றளிப்பதிலும் இந்தியத் தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards – BIS) ஈடுபட்டுள்ளது.

இந்தியத் தர நிர்ணய அமைப்பு: இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாக இந்திய தர நிர்ணய அமைவனம் உள்ளது.

இந்நிறுவனம் தொழில்துறையின் நலனுக்காகவும், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டும் தயாரிப்பு சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ முத்திரை), மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் / கலைப் பொருட்களுக்கான ஹால் மார்க்கிங் முத்திரை மற்றும் ஆய்வக சேவைகளின் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) 14 அக்டோபர் அன்று உலக தர நிர்ணய தினத்தைக் கொண்டாடுகிறது.

இது தர நிர்ணய பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான நிபுணர்களின் கூட்டு முயற்சிகளை அங்கீகரிப்பதற்கும் எதிர்கால பாதையில் பயணிப்பதற்கும் ஆகும்.

இவை வழியாகத் தரத்தை உறுதிப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்குத் தரமான பொருட்கள் கிடைக்க வழி செய்கின்றன.

– மணி அமுதன்

Comments (0)
Add Comment