பால் விற்பனையில் அசத்தும் ‘உழவர் பூமி’!

இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்ப ஆற்றல், அபரிமிதமான சிந்தனை மற்றும் உலகளாவிய பார்வை கொண்டவர்களாக விளங்குகின்றனர்.

பாரம்பரியத்தை நவீனத்துடன் இணைத்து புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சமூக மாற்றங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

மக்களின் தேவைகளில் இருந்து வாய்ப்பை கண்டறிந்து அதனை வணிகமாக மாற்றும் தொழில் முனைவோராக மிளிர்கின்றனர்.

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் start up-கள் பெருகி வருவதே இதற்கு சான்றாகும்.

இத்தகைய ஒரு start up நிறுவனம் தான் சென்னையில் இயங்கி வரும் ‘உழவர் பூமி’.

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் தினமும் பத்தாயிரம் வீடுகளுக்கு பசும்பால் சப்ளை செய்கிறது இந்த நிறுவனம்.

மதுராந்தகத்தைச் சுற்றி இருக்கும் 2500 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலை எந்த பதப்படுத்துதல் முறைக்கும் உட்படுத்தாமல் அப்படியே பாட்டிலில் அடைத்து வீடுகளுக்கு அனுப்புகிறது.

இதன் நிறுவனரான வெற்றிவேல், மண் சார்ந்தும் விவசாயம் சார்ந்தும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, தான் பார்த்து வந்த கார்ப்பரேட் வேலையை விட்டு இத்தொழிலுக்கு வந்தவர்.

ஜல்லிக்கட்டுப் போராட்டமே தன் வாழ்க்கையை மாற்றி அமைத்ததாகக் கூறும் இவர், அங்கு பேசப்பட்ட விஷயங்கள், கிடைத்த அனுபவங்கள் எல்லாம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

வெளிநாடு செல்லும் திட்டத்தை கைவிட்டு நண்பர்களுடன் இணைந்து ‘விவசாய நாடு’ எனும் அமைப்பினை தொடங்கினார்.

ஏரி, குளங்களைத் தூர் வாறுதல், மரம் நடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டார்.

தொடர்ந்து விவசாயப் பயிற்சிகளைப் பெற்றவர், பிறர் ஆர்வம் காட்டாத கால்நடை வளர்ப்பில் ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.

விவசாயிகள் பத்து மாதம் பால் விற்று கிடைக்கும் பணத்தைக் கால்நடைகளின் ஒருமுறை நோய்க்கு செலவிடுவதைக் கண்டறிந்தார்.

பாலுக்கும் நியாயமான விலை கிடைப்பதில்லை. கறந்த 2 மணி நேரத்திற்குள் விற்பனை செய்யப்படவில்லை என்றால் மொத்தமும் வீணாகிவிடும்.

அதனால் பெரு நிறுவனங்கள் கேட்கும் கொள்முதல் விலைக்கே கொடுக்கும் நிலையில் விவசாயிகள் உள்ளனர் என்பதை அறிந்தார்.

சந்தையில் பசும்பால் கிடைப்பதில்லை என்றும் அதன் தேவை ஒருபுறமும் பாலுக்கான பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் சூழலியல் கேடுகள் மறுபுறமும் உள்ளது போன்ற தகவல்களையும் சேகரித்தவர்,

விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், நுகர்வோருக்கு தரமான பதப்படுத்தப்படாத பால் கிடைக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே தவிர்க்கவும் திட்டம் தீட்டி வேலையினைத் தொடங்கினார்.

இரண்டு ஆண்டுகள் இது குறித்த ஆய்வினை மேற்கொண்டவர் மதுராந்தகத்தை சுற்றி இருக்கும் கிராமங்களில் பால் கொள்முதல் செய்ய முயற்சித்து தோல்வியடைந்தார்.

எனினும் சிறிய அளவில் கிடைத்த பாலைக் கொண்டு விற்பனையை தொடங்கியபோது குளிரூட்டும் வசதி செய்யப்படாததால் பாலினை கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைத்திருக்க முடியவில்லை.

தொடர்ந்து முயற்சித்து நண்பர்கள் மூலம் முதலீடுகளை மூலதனமாக்கி மதுராந்தகத்தில் ஒரு குளிரூட்டும் ஆலையினை அமைத்தார்.

அந்த ஆண்டு முடிவதற்குள் ஆயிரம் லிட்டர் பாலினை சப்ளை செய்ய தொடங்கியது இவரின் நிறுவனம்.

அடுத்து பாலினை தர பரிசோதனை செய்வதற்கான நிலையமும் ஆரம்பிக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் மற்ற பால் நிறுவனங்கள் எல்லாம் முடங்கிய நேரத்தில் நுகர்வோர் வீட்டிற்கே சென்று சப்ளை செய்ததால் இவரின் நிறுவனம் அபார வளர்ச்சி பெற்றது. கொள்முதலைவிட தேவை அதிகரித்தது.

அதனால் 1000 லிட்டராக இருந்த பால் வணிகம் 2500 லிட்டராக உயர்ந்தது. இன்று தினமும் 7000 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

36 ஆயிரம் வாடிக்கையாளர்கள் ‘உழவர் பூமி’யோடு இணைந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

2024-25 ஆம் நிதி ஆண்டில் 15.7 கோடி ரூபாய் வணிகம் செய்திருக்கிறது இந்நிறுவனம்.

தவிர இதன் வருவாயில் 5.5% விவசாயிகளுக்கு தரப்படுகிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தினால் ஏற்பட்ட நல்ல விளைவுகளில் இதுவும் ஒன்று என்கிறார் வெற்றிவேல்.

இளைஞர்களின் ஆற்றலை சரியான திசையில் வழி நடத்தினால் உலகளாவிய முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதற்கு இவரே உதாரணம்.

S. வாணி

Comments (0)
Add Comment