வாட்ஸ்அப்பின் சிஇஓவாக ஓர் இந்தியர்!

வாட்ஸ்அப்பின் புதிய சி.இ.ஓ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த குணால் ஷா.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் முதல் இந்தியத் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கூகுள், மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களின் சிஇஓக்களாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் வாட்ஸ்அப்பும் ஓர் இந்தியரை சிஇஓவாக ஆக்கியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், பொதுவாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் பொறியியல் பட்டதாரிகளாகவோ அல்லது மேலாண்மை படித்தவர்களாகவோ இருப்பார்கள்.

ஆனால், குணால் ஷா இதுபோன்ற எந்தப் பின்னணியிலிருந்தும் வரவில்லை என்பது கூடுதல் ஆச்சரியத்தைத் தருகிறது.

யார் இவர்?

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு ஃபின்டெக் நிறுவனம் கிரெட் (CRED). இது கிரெடிட் கார்டு பணம் செலுத்தும் ஓர் ஆப் தளம் ஆகும். இதன் நிறுவனர்தான் குணால் ஷா.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் பிறந்து, மும்பையில் வளர்ந்த குணால் ஷா ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பிறகு மும்பை வில்சன் கல்லூரியில் பி.ஏ. தத்துவம் படித்தார்.

தொடர்ந்து எம்பிஏ படிப்பை ஓராண்டுடன் பாதியில் கைவிட்டார். காரணம், அவர் பகுதிநேர வேலைகள் செய்து வந்தார் என்பதுதான்.

உண்மையில் குணால் ஷா தனது 15 வயதிலேயே கடுமையாக உழைக்கத் தொடங்கிவிட்டார் என்கின்றன செய்திகள்.

இவர் தந்தையின் ஜவுளி வணிகம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து குடும்பம் நிதிநெருக்கடியில் சிக்கித் தவித்தது.

இதனால், கிடைத்த வேலைகளில் ஈடுபட்டு சம்பாதிக்கத் தொடங்கினார் குணால் ஷா.

குறிப்பாக டெலிவரி பாயாகவும், டேட்டா ஆபரேட்டராகவும், மெஹந்தி கோன் விற்பவராகவும், சைபர் கஃபே ஆபரேட்டராகவும், கம்ப்யூட்டர் பயிற்றுநராகவும், பைரேட்டடு சிடி விற்பனையாளராகவும் பல்வேறு வேலைகளைச் செய்தார்.

இதற்கிடையேதான் அவரின் கல்லூரிப் படிப்பு நடந்தது. அவர் பி.ஏ. தத்துவம் படிக்கக் காரணமே, அவர் பகுதிநேர வேலைகளில் ஈடுபட அந்தப் படிப்பு ஏதுவாக இருந்தது என்பதுதான்.

பிறகு எம்.பி.ஏ.வை ஓராண்டுடன் நிறுத்தினார். இந்நிலையில் 2009ம் ஆண்டு அவர், ‘பைசா பேக்’ (Paisa Back) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஓராண்டுக்குப் பிறகு 2010-ல் டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் மொபைல் ரீசார்ஜ் தளமான ‘ஃப்ரீசார்ஜ்’ (FreeCharge) நிறுவனத்தை சந்தீப் டாண்டன் என்ற நண்பருடன் இணைந்து உருவாக்கினார்.

இந்தியாவில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறைகள் அப்போதுதான் வளரத் தொடங்கியிருந்தன.

இந்நேரத்தில், ‘ஃப்ரீசார்ஜ்’ தளம் கேஷ்பேக் வெகுமதிகள், சலுகைகள் எல்லாம் கொடுத்தது, லட்சக்கணக்கான பயனர்களை ஈர்த்தது.

இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சி, அதனை 2015-ம் ஆண்டு ஸ்நாப்டீல் நிறுவனம் கையகப்படுத்த வழிவகுத்தது.

ஸ்நாப்டீல் நிறுவனம் அப்போது சுமார் 450 மில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

அன்றைய இந்திய மதிப்பில் இது சுமார் 2,800 கோடி ரூபாய் ஆகும். இதனால், இந்த ஒப்பந்தம் அப்போது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

இதன்பின்னர் குணால் ஷா ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதில் நேரத்தைச் செலவிட்டார்.

இதனையடுத்து 2018-ம் ஆண்டு கிரெட் (CRED) எனும் கிரெடிட் கார்டு பணம் செலுத்தும் ஆப்பினை தொடங்கினார்.

இந்நிறுவனம் கிரெடிட் கார்டு கட்டணங்களைச் சரியான நேரத்தில் செலுத்துவதற்கு வெகுமதி அளிப்பது என்ற ஓர் எளிய யோசனையுடன் தொடங்கியது.

பின்னர் கடன் கொடுத்தல், பணம் செலுத்துதல், வர்த்தகம், காப்பீட்டு சேவை என விரிவடைந்து இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் பிராண்டுகளில் ஒன்றாக கிரெட் நிறுவனம் மாறியது.

தற்போது கிரெட் நிறுவனம் 1.5 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான ஃபின்டெக் நிறுவனமாக விளங்குகிறது. இதற்குக் காரணம் குணால் ஷாவின் வியூகங்கள்தான்.

இதுமட்டுமில்லாமல் அவர் Razorpay, Bharatpe உள்ளிட்ட பல்வேறு ஃபின்டெக் நிறுவனங்களிலும் முதலீடுகள் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் வாட்ஸ்அப்பின் மெட்டா நிறுவனம் அவரை சிஇஓவாக தேர்ந்தெடுத்துள்ளது.

இதற்குக் காரணம் புதிய தயாரிப்புகளை உருவாக்கும் திறன், நுகர்வோர் தேவைக்கேற்ப செயல்படும்விதம், அவரின் சொந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை வளர்த்தெடுத்த அனுபவம் ஆகியவை சொல்லப்படுகிறது.

ஆனால், அதுமட்டுமே காரணமல்ல என்கின்றன தகவல்கள். இப்போது மெட்டா நிறுவனம் குணால் ஷாவின் கிரெட் நிறுவனத்தில் 900 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாகவும்,

அதன் மதிப்பை 4.5 பில்லியன் டாலராக உயர்த்த இருப்பதாகவும், குணால் ஷா உலகளாவிய வாட்ஸ்அப்பின் தலைவராக இருப்பார் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த முதலீடு குறித்தும் குணால் ஷா வாட்ஸ்அப்பின் சிஇஓவாக நியமிக்கப்படுவதையும் முடிச்சிப் போடுகின்றன செய்திகள்.

அதாவது மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெஸன்ஜர், த்ரெட்ஸ் எனப் பல்வேறு சமூக ஊடகத் தளங்களை நிர்வகித்து வருகிறது. இதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்.

அவர் வாட்ஸ்அப்பின் அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்நோக்குகிறார். தற்போது வாட்ஸ்அப் உலக அளவில் 330 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான பயனர்களுடன் மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது.

இந்தத் தளம் குறுஞ்செய்தி அனுப்புவதைத் தாண்டி பணம் செலுத்துதல் மற்றும் வணிக சேவைகளுக்கும் விரிவடைந்துள்ளது.

ஆனால், இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்கள் இருந்தும்கூட அதன் பணப்பரிவர்த்தனைத் தளமான வாட்ஸ்அப் பே பெரியளவில் பிரபலமாகவில்லை.

இந்தியர்களைப் பொறுத்தவரை கூகுள் பே மற்றும் போன் பே ஆகிய இரண்டு யுபிஐ ஆப்களையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கே வாட்ஸ்அப் பேயை பயன்படுத்துவர்கள் குறைவுதான். இது மெட்டா நிறுவனத்திற்கு ஒரு கவலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்தான் மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பேவை வளர்ச்சியடைய செய்ய நினைத்தது.

இன்றைய இணைய பொருளாதாரத்தில் வெறும் டிஜிட்டல் தளம் என்பதைவிட அதில் பணப்பரிவர்த்தனை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ஏனெனில், பணப்பரிவர்த்தனைகளில் உள்ள நிறுவனங்கள் பணம் செலுத்துதல் தவிர, நீண்டகால நிதி உறவுகளையும் வாடிக்கையாளர்களுடன் உருவாக்குகின்றன.

அப்படியாக கடன் கொடுத்தல், காப்பீடு, முதலீடு, வர்த்தகம் மற்றும் பிற நிதிச் சேவைகளை ஒரே தளத்திலிருந்து வழங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி அதிகமான வாடிக்கையாளர்களை இணைக்கின்றன.

அதனால், கிரெட் உடனும் அதன் கோடிக்கணக்கான மதிப்புமிக்க பயனர்களுடன் ஒரு நம்பகமான நிதி உறவினை ஏற்படுத்த மெட்டா நினைப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதன்வழியே டிஜிட்டல் பொருளாதாரத்தில் முன்னணியில் வளரவும், இதற்கு குணால் ஷா உறுதுணையாக இருப்பார் எனவும் அது எதிர்பார்ப்பதாக சொல்கின்றன தகவல்கள்.

– கவின்

Comments (0)
Add Comment