வாழ்வைப் புரிந்துகொள்ள அதனுள் பயணிக்க வேண்டும்!

கலைப்படைப்புகளில் ஒளிவீசும் அழகியல் அம்சங்களைக் காட்டிலும், அவற்றில் நிறைந்திருக்கும் வாழ்க்கை முறை, பண்பாட்டுக் கூறுகளே பார்வையாளர் உடனான பிணைப்பை இறுக்கமாக்கும்.

அவற்றில் வெளிப்படுகிற, உணர்கிற காலவெளியில் நாமே நுழைந்த உணர்வைப் பூரணமாக்கும்.

அந்த வகையில் கடலையும் கடல் சார்ந்த வாழ்க்கையையும் சொல்லும்விதமாக இருந்தது ‘கொண்டல் – நெய்தல் நிலைக் கலைகள்’ எனும் ஓவியம், ஒளிப்படக் காட்சி.

சென்னை லலித் கலா அகாடமியில் ஜூன் 9 முதல் 16 வரை நடைபெற்றது.

கடற்புற வாழ்க்கையைச் சொல்வதாக இக்கண்காட்சி அமைந்தபோதும் மீனவப் பெண்களின் பார்வையில் கடல், கடலுணவுச் சமையலுக்கும் பெண்களுக்குமான உறவு என்பதைப் பல ஒளிப்படங்கள் பிரதிபலித்தன.

அவற்றின் வழியே, அந்த உலகைப் புரிந்துகொள்கிறோமா என்கிற சுயபரிசோதனையும் நம்மையும் அறியாமல் நிகழ்கிறது.

அ.பகத் சிங், ர.நிரஞ்சனா ஆகியோர் தொகுத்த ‘நெய்தல் கைமணம்’, அந்த நூலுக்காக ஒளிப்படக் கலைஞர் பழனிகுமார், ஓவியர் அந்தோணி குரூஸ் ஆகியோர் அளித்த பங்களிப்புகளின் அடிப்படையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“பிரபல கலைஞர்கள் மட்டுமல்லாமல் சென்னை, புதுச்சேரி, கும்பகோணம் அந்தோணி குரூஸ் பகுதியிலுள்ள கல்லூரி மாணவர்களும் இதில் பங்கேற்றனர்.

மீனவப் பின்னணி கொண்டவர்களும் இதில் அடக்கம்” என்கிறார் கண்காட்சிக்கான ஓவியங்களை ஒருங்கிணைத்த ஓவியர் அந்தோணி குரூஸ்.

“நேரடியாகக் ‘காடுகளைப் பாதுகாப்போம்’ என்று படம் வரையாதே, அங்கிருக்கும் பிரச்சினைகளை அருகே சென்று பார் என்றே மாணவர்களிடம் சொல்கிறோம்.

அங்குள்ள வாழ்க்கையைப் புரிந்துகொள்ள, அதனுள் பயணிக்க வேண்டும்.

இன்னொரு நிலத்திற்குச் செல்லும்போது, அதனை எப்படிப் புரிந்துகொள்வது என்று உணர்த்தினோம்.

கடலோர மக்களோடு தங்கி, அவர்களோடு பயணித்து, அந்த உணவை உண்டு, அவர்களது படைப்புகளை உருவாக்க வைத்தோம்.

கடல் மட்டுமல்லாமல் அதனுடன் கலந்திருக்கிற மக்களின் உழைப்பைப் பேச வேண்டும் என்கிற கவனத்துடன் பணியாற்றினோம்.

கடலோரத்தில் விளையாடி, சிரித்து, ஒய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள். நீரின் ஓட்டத்தைக் கண்டறிந்து கொண்டிருப்பார்கள்.

‘உடலளவிலும் மனதளவிலும் தயாராகி, போகலாம்’ என்று முடிவுசெய்ததும் படகிலேறிப் புறப்பட்டுவிடுவார்கள்.

அதேநேரத்தில், கடலில் இருந்து வந்ததும் அதனை மறந்துவிட்டு, வாழ்க்கைக்கான விஷயங்களைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள்” என்கிறார் அந்தோணி குரூஸ்.

ஒலையில் செய்யப்பட்ட குடுவை போன்ற பையை இடுப்பில் கட்டிக்கொண்டு, பழவேற்காடு முகத்துவாரப் பகுதிகளில் இறால் பிடிக்கிற மக்களின் வாழ்க்கை ஒரு தொகுப்பாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

கடற்புறம் மாசடைந்து கிடப்பதையும், அதற்கு நடுவே அடும்புக் கொடி படர்ந்திருப்பதையும் பதிவு செய்திருக்கிறது ஓர் ஒளிப்படம்.

சிறுநீரக வடிவ இலைகளைக் கொண்ட இந்தக் கொடிகளைப் பிய்த்துப் போட்டு, அதன் மீது கருவாடு காய வைக்கிற வழக்கம் கடலோர மக்களிடம் உண்டு என்கிறார் அந்தோணி குரூஸ்.

இரண்டு எதிர்பாலினத்தவர் ஒருவரை இன்னொருவர் நேசித்துக்கொள்வதுபோல, ஒரு படத்தில் கடலும் கரையும் இடம்பெற்றிருந்தன;

கடலில் மீன்கள் இருக்க, கரை முழுக்க வலை போர்த்தியிருந்தது அதன் சிறப்பாக அமைந்தது.

இப்படிப் பல படைப்புகள்.

இவை மட்டுமல்லாமல் மீன் உருவ சுடுமண் சிற்பங்கள், கடற்புற வாழ்வைச் சொல்லும் செராமிக் சிற்பம், ஃபைபர் கிளாஸில் வார்க்கப்பட்ட மீன்களைக் கொண்ட கலவைக் கலைப் படைப்பு உள்ளிட்ட ஒவ்வொன்றும் கவனம் ஈர்ப்பதாக இருந்தது.

அவற்றுள் ஒன்று, உப்புக் காற்றுக்குத் தன் வாழ்வின் பாதியை அர்ப்பணித்த பெண்ணை உணர்த்தும் முகச்சிற்பம்.

ஒருபாதி உப்பால் அரிக்கப்பட்டதாக இருக்க, அப்பெண்ணின் மூளையில் படகு இருந்ததாக வடிக்கப்பட்டிருந்தது அப்படைப்பு!

  • உதய் பாடகலிங்கம்
  • நன்றி: இந்து தமிழ் திசை
Comments (0)
Add Comment