ஆண் இல்லாமல் 1 லட்சம் ஆண்டுகளாக வாழும் பெண் மீன்!

அமேசான் மோலியின் ஆச்சரியமான கதை.

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் திடீரென ஆண் பாலினம் முற்றிலும் மறைந்துவிட்டால் என்ன நடக்கும்? இப்படிப்பட்ட கற்பனைகளை நாம் பல திரைப்படங்களிலும் அறிவியல் புனைகதைகளிலும் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இயற்கையில் சில உயிரினங்களுக்கு இது வெறும் கற்பனை அல்ல, உண்மையே.

அப்படிப்பட்ட ஒரு ஆச்சரியமான உயிரினம்தான் அமேசான் மோலி என்ற சிறிய மீன் வகை.

பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மீன் இனம் முழுக்க முழுக்க பெண் மீன்களை மட்டுமே கொண்டு வாழ்ந்து வருகிறது. ஆண் மீன்கள் இல்லை, தந்தைகள் இல்லை.

இருந்தாலும் இந்த இனம் அழியாமல் தொடர்ந்து உயிர்வாழ்ந்து வருவது இன்று வரை விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

மெக்சிகோ மற்றும் தெற்கு டெக்சாஸின் வெதுவெதுப்பான ஆறுகளில் வாழும் இந்த சிறிய வெள்ளி நிற மீன் இனம், கிரேக்க புராணங்களில் வரும் பெண் போர் வீரர்களின் பெயரால் “அமேசான் மோலி” என்று அழைக்கப்படுகிறது.

முற்றிலும் பெண் உயிரினங்களால் மட்டுமே ஆன இந்த இனம், பரிணாம வளர்ச்சியின் பல அடிப்படை விதிகளுக்கே சவால் விடுகிறது.

பொதுவாக உயிரினங்கள் தங்கள் இனத்தைத் தொடர ஆண் மற்றும் பெண் இரண்டும் தேவைப்படுகின்றன. பாலினப்பெருக்கத்தின் மூலம் மரபணுக்கள் கலக்கின்றன.

இந்த மரபணுப் பன்முகத்தன்மையே நோய்களை எதிர்கொள்ளவும், சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளவும் உயிரினங்களுக்கு உதவுகிறது.

ஆனால், அமேசான் மோலி முற்றிலும் வேறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த மோலி மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக தனக்கு தொடர்புடைய பிற இனங்களைச் சேர்ந்த ஆண் மீன்களுடன் இணைகின்றன.

ஆனால், அந்த ஆண் மீன்களின் DNA வை பயன்படுத்துவதில்லை. Gynogenesis எனப்படும் அரிய இனப்பெருக்க முறையின் மூலம், விந்தணு கருமுட்டையின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

பிறகு தாயைப் போன்றே இருக்கும் புதிய பெண் மீன்கள் க்ளோனிங் மூலம் உருவாகிறது.

இதனால்தான் இந்த மீன்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண் மீன்களை மட்டுமே உருவாக்கி வருகின்றன.

இந்த விஷயம் விஞ்ஞானிகளை நீண்ட காலமாக குழப்பத்தில் ஆழ்த்தியது.

காரணம், மரபணுக்கள் கலக்காதபோது தீங்கு விளைவிக்கும் மாற்றங்கள் தலைமுறைகள் தோறும் சேர்ந்து ஒரு இனத்தை அழிவின் விளிம்பிற்குக் கொண்டு செல்லும் என்று பரிணாமக் கோட்பாடுகள் கூறுகின்றன.

இதையே Muller’s Ratchet என்று அழைக்கின்றனர்.

கோட்பாட்டின்படி பார்த்தால், அமேசான் மோலி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்திருக்க வேண்டும்.

ஆனால், சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளாக இந்த இனம் வெற்றிகரமாக உயிர்வாழ்ந்து வருகிறது.

இதுவே இதை இயற்கையின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.

சமீபத்திய ஆய்வில், மோலி மீன்களுக்கு இயற்கையாகவே DNA பழுதுபார்க்கும் திறன் இருப்பதாகவும் Gene Conversion எனப்படும் இந்த செயல்முறை, சேதமடைந்த மரபணுக்களை ஆரோக்கியமான மரபணுக்களைப் பயன்படுத்தி சரிசெய்ய உதவுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது

ஒரு தீங்கு விளைவிக்கும் மரபணு மாற்றம் தோன்றும்போது, அந்த சேதமடைந்த பகுதியை மீன் தானாகவே சரிசெய்து விடுகிறது. இதனால் ஆபத்தான மரபணு மாற்றங்கள் தலைமுறைகள் தோறும் அதிகமாக சேராமல் தடுக்கப்படுகின்றன.

இதுவே குளோனிங் மூலம் இனப்பெருக்கம் செய்தாலும் இந்த மீன் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அமேசான் மோலி மட்டும் இயற்கையில் விதிவிலக்கான உயிரினம் அல்ல. சில நுண்ணுயிர்களும் ஆண் துணையின்றி நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றன.

இருப்பினும் முதுகெலும்புள்ள உயிரினங்களில் அமேசான் மோலி மிகவும் ஆச்சரியமான எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.

இன்று இந்தச் சிறிய மீன், பரிணாம வளர்ச்சி குறித்த நமது புரிதலை மறுபரிசீலனை செய்ய விஞ்ஞானிகளைத் தூண்டி வருகிறது.

பெரும்பாலான உயிரினங்கள் உயிர்வாழ ஆண் மற்றும் பெண் இரண்டும் தேவைப்படும் நிலையில், இயற்கை சில நேரங்களில் முற்றிலும் வேறுபட்ட பாதைகளையும் கண்டுபிடிக்க முடியும் என்பதை அமேசான் மோலி நிரூபித்து வருகிறது.

ஒரு சிறிய மீன் நமக்கு கற்றுக் கொடுக்கும் மிகப்பெரிய பாடம் இதுதான் –  இயற்கை எப்போதும் நாம் நினைப்பதை விட அதிகமான ஆச்சரியங்களையும், எதிர்பாராத வழிகளையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கிறது.

  • சங்கீதா
 
Comments (0)
Add Comment