மாத்தளை செல்வா என்கிற எச்.எச்.விக்கிரமசிங்கவை அறிவோம்!

 

இலங்கையின் மத்திய பகுதியிலிருக்கும் மாத்தளை நகரம் வரலாற்றில் சிறப்பு வாய்ந்தது.

சமகாலத்தில் மலையகம் 200 என்னும் தொனிப்பொருளில் கருத்தரங்குகள், மாநாடுகளில் பேசுபொருளாக விளங்கியதும் மாத்தளைதான்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து கப்பல் மார்க்கமாக அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள், தலைமன்னாரிலிருந்து கால்நடையாக வந்து முதலில் தங்கவைக்கப்பட்ட பிரதேசம் மாத்தளை.

இந்த வரலாற்றுச் சிறப்பிற்கு ஆதாரமாகத் திகழ்வது அங்கு எழுந்தருளியிருக்கும் ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம்.

1983 கலவர காலத்தில் இங்கிருந்த சித்திரதேர்களையும் தம்புள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஏக்கநாயக்கவும் ஐ.தே.க ஆதரவாளர்களும் எரித்து சாம்பலாக்கினர்.

ஒரு காலத்தில் மாத்தளை நகரசபையின் தலைவராக விளங்கியவரும், எலிசபெத் மகாராணி இலங்கை வந்தவேளையில் அவரது கையை குலுக்கி வரவேற்றவரும், பிரித்தானியாவின் ஆளுகைக்குள் இலங்கை இருந்தபோது,

அந்த ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கிளர்ச்சி செய்த வீர புரான் அப்புவுக்கு நினைவுச் சின்னம் எழுப்பியவருமான பெரியார் தம்பிராஜா அய்யா அவர்களின் வீட்டையும் அவரையும் அந்தக்கயவர் கூட்டம் உயிரோடு எரித்து சாம்பலாக்கியது.

இவ்வாறு தீக்குளித்த சீதையாக புனர்ஜன்மம் எடுத்த பூமியான மாத்தளை, பல எழுத்தாளர்களையும் சமூக செயல்பாட்டாளர்களையும் எமக்கு வழங்கியிருக்கிறது.

அவர்களில் சிலர் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள்.

நாடக திரைப்பட கலைஞர் மாத்தளை கார்த்திகேசு, எழுத்தாளர்கள் மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், ஏ.பி.வி. கோமஸ், மலரன்பன் பண்ணாமத்து கவிராயர், ஏ.எம் புவாஜி இவர்களின் வரிசையில் மாத்தளை செல்வா என நாம் அழைக்கும் அன்பு நண்பர் எச். எச். விக்கிரமசிங்கவும் முக்கியமானவர்.

1970 களில் எனக்கு வீரகேசரியுடன் தொடர்பு ஏற்பட்ட காலத்தில் அங்கே விநியோகப்பிரிவில் எஸ்.பாலசந்திரன் கீழ் பணியாற்றிய காலத்தில் இவர் எனக்கு அறிமுகமானார்.

வீரகேசரி நீர்கொழும்பு பிரதேச நிருபராக இயங்கியபோது, அங்குஅடிக்கடி செல்ல நேர்ந்த வேளைகளில் எங்கள் சந்திப்புகள் தொடர்ந்தன.

1973 இல் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் மாநாடு அட்டனில் நடந்தபோதுதான் எமக்கிடையே நட்புறவு மலர்ந்தது.

இவ்விழாவுக்கு இந்தியாவிலிருந்து பொதுவுடமைக்கட்சியின் தோழர் பாலதண்டாயுதமும் வந்திருந்தார்.

கோகிலம்சுப்பையாவின் தூரத்துப்பச்சை நாவலும் வெளியிடப்பட்டது.

மாத்தளை செல்வாவுடனான நட்புறவு அரை நூற்றாண்டையும் கடந்து எவ்வித விக்கினமுமின்றி தொடருகின்றது.

அவர் அவுஸ்திரேலியா வரும் போதெல்லாம் என்னை சந்திக்கத் தவறுவதில்லை. நானும் கொழும்புக்கு வரும் போதெல்லாம் அவரை சந்திக்கத் தவறுவதில்லை.

வடக்கு மாத்தளையை பூர்வீகமாகக் கொண்டிருந்த இவருக்கு இலங்கை எங்கும் நண்பர்கள்.

அவர்கள் கலை, இலக்கியவாதிகளாகவும், ஊடகவியலாளர்களாகவும், மாத்திரமின்றி அரசியல் வாதிகளாகவும் அமைச்சர்களாகவும் ஆன்மிக அறங்காவலர் தலைவர்களாகவும் இருப்பவர்கள்.

முன்னாள் பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாருடனும் இவருக்கு நட்புறவு இருந்தது.

மக்கள் விடுதலை முன்னணி தோழர்களுடனும் 1970-களின் பிற்பகுதியில் உறவைப் பேணியவர்.

1982 இல் இவரது தாயார் மாத்தளையில் மரணமானபோது ரோஹன விஜயவீர, லயனல் போபகே, உபதிஸ்ஸ கமநாயக்க, களு ஆரச்சி, வன்னி ஆரச்சி என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து செயல்பட்டமையினால், 1978 இல் வீரகேசரியில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

1990களில் இரண்டு வருடம் டில்வின் சிலாவாவோடு சிறையில் இருந்தவர்.

சிறையில் இருந்த காலத்தில மலையக முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரனுடன் ஏற்பட்ட சந்திப்பு காரணமாக, அவர் அமைச்சரானபோது அவரின் ஊடகச் செயலாளராகவும் இயங்கியவர்.

அத்துடன் எழுத்தாளர்கள் செ. கணேசலிங்கன், மு. நித்தியானந்தன், இரா. சிவலிங்கம், திருச்செந்தூரன், தெளிவத்தை ஜோசப், கே. டானியல் டொமினிக் ஜீவா, பேராசிரியர் சிவத்தம்பி, கவிஞர்கள் ஈழவாணன், புதுவை இரத்தினதுரை முதலான ஆளுமைகளுடனும் நட்புறவைப் பேணியவர்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் சந்தித்த மாத்தளை செல்வாவிடம் அன்று கண்ட அதே சுறுசுறுப்பை இன்றும் காண்கின்றேன்.

தானும் இயங்கி, மற்றவர்களையும் இயங்கவைக்கும் ரஸவாத வித்தை அறிந்தவர்.

இடதுசாரி அரசியலில் இவருக்கிருந்த ஈடுபாட்டினால், அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கும் பலதடவை ஆளானவர். சிறைவாசமும் அனுபவித்தவர்.

மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இவரது இயல்பு. மாத்தளையில் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று அவர்களின் தேவைகளை அரச மட்டத்தில் பேசி கவனித்தவர்.

இவரது தன்னலமற்ற சேவைகளை முன்னாள் ஜே.வி.பி பொது செயலாளர் லயனல் போபகே, சு.முரளிதரன் மாத்தளை வடிவேலன்,மலரன்பன், பி.மரியதாஸ் ஆகியோர் எழுத்திலும் பதிவுசெய்துள்ளனர்.

மாத்தளை செல்வாவின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு அப்பால், என்னை பெரிதும் கவர்ந்த விடயம், அவர் மற்றவர்களின் குறிப்பாக மலையக படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டு வருவதில் காண்பிக்கும் ஆர்வமும் அக்கறையும்தான்.

வீரகேசரி, மற்றும் தமிழ்நாடு தினமணி பத்திரிகைகளின் சிரேஷ்ட ஊடகவியலாளராக விளங்கிய (அமரர்) எஸ்.எம். கார்மேகம் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் சித்திரித்த தொகுப்பு நூல்,

மாத்தளை வடிவேலன், மலரன்பன், எஸ்.மரதன் ஆகியோரின் கதைத் தொகுப்புகள் முதலானவற்றை வெளியிட்டிருக்கும் மாத்தளை செல்வா, மூத்தக் கவிஞர் நவாலியூர் சொக்கநாதன் 1962இல் இயற்றிய மாத்தளை முத்துமாரியம்மன் குறவஞ்சியை மீண்டும்.

திருமுருக கிருபானந்தவாரியார் வாழ்த்துரையுடன் மீண்டும் 1993-இல் பதிப்பித்தார்.

எம்மத்தியில் இறுதி யுத்தத்தின்போது இல்லாமலே கடந்திருக்கும் கவிஞர் புதுவை இரத்தினதுரையும், மாத்தளை செல்வா பற்றி ஒரு பாடலை பாடியிருக்கிறார் எனச் சொன்னால் நம்பமாட்டீர்கள்.

“அக்கிரமங்கள் எங்கெங்கு பூத்திட்டாலும், அதை அழிக்க ஓடிவரும் எனதருமை நண்பன்
விக்கிரம சிங்காவின் பார்வை என் மேல் பட்ட பின்பே நான் பெரிய கவிஞரானேன்.
மக்கள் எல்லாம் என கவிதை படிக்கச் செயத மாத்தளை செல்வாவே உன்னால் என் சக்கரங்கள் என்றூம் சுழலூதடா”

என்ற வரிகள் நினைவு கூரத்தக்கவை.

எனினும் நான் அறிந்தவரையிலும் அறச்சீற்றத்துடன் வாழ்க்கைப்பயணத்தை மாத்தளை செல்வா தொடர்ந்தமையால், பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கும் ஆளானவர்.

இவர் அரசியல் கைதியாக தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது, வீட்டிலிருந்து தனக்கு மாத்திரமின்றி, தன்னோடு இருந்த பிற கைதிகளுக்கும் உணவு வரவழைத்து பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டிருந்தவர்.

“செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு“

                       – என்பது குறள்.

நாம் தேடிச் சேமிப்பதற்கு நட்பைவிட வேறு அரியபொருள் இல்லை. அது இருந்துவிட்டால், எம்மை எத்தகைய இக்கட்டிலும் அது காப்பாற்றும்.

1989இல் ஜேவிபி ரோஹன விஜயவீர படுகொலை செய்யப்பட்டப் பின்னர் தலைவரான சோமவங்ச அமரசிங்கவை அடக்குமுறை இக்கட்டிலிருந்து காப்பாற்றி கடல் வழியாக தமிழகத்துக்கு அனுப்பிவர்தான் மாத்தளை செல்வா.

அதனால் நேர்ந்த நெருக்கடிகளையும் தனக்கேயுரிய சாதுரிய இயல்புகளினால் சமாளித்தவர் எனபதை லயனல் போபகே பதிவு செய்திருக்கிறார்.

மாத்தளை செல்வாவின் தொடர்பாடல் இலங்கை – இந்தியாவுக்கு அப்பால், தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நீடிக்கிறது.

இலங்கை அரசியல் வரலாற்றில் மாத்தளைக்கு முக்கிய இடமிருப்பது போன்று, மலையக இலக்கிய – பதிப்புத்துறை வரலாற்றில் மாத்தளை செல்வாவுக்கும் முக்கிய இடமிருக்கிறது.

– முருகபூபதி – அவுஸ்திரேலியா.

Comments (0)
Add Comment