கொடிக்கான ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!

அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் கொடிக் கம்பங்கள் இருக்கக் கூடாது என்பது தொடர்பான ஒரு இடைக்காலத் தடையை விதித்திருக்கிறது.

இப்போதுள்ள இளைஞர்கள் பலருக்கு ஒரு கொடிக் கம்பத்திற்கு பின்னால் என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று கூட நினைக்கலாம்.

சாதாரண ஒரு கொடி மரத்திற்கும், அந்தக் கொடி மரத்தின் மேல் பறக்க விடப்படுகின்ற கொடிக்கும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்கிற கேள்விகூட அவர்களிடம் எழலாம்.

ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொடிகளுக்கு பின்னால் நீண்டதொரு வரலாறு இருக்கிறது. தமிழர்கள் இங்கு ஆட்சி புரிந்த காலத்திலேயே அவர்களுடைய அடையாளமாக முன்னிலைப்படுத்தியது அவர்களுடைய கொடியைத்தான்.

பாண்டியர்கள், பல்லவ மன்னர்கள் உட்பட இங்கு ஆட்சி புரிந்த பலருக்கும் அடையாளமாக இருந்தது அவர்களது கொடிகள் தான்.

பிரிட்டிஷாரும் போர்ச்சுகீசியரும் தமிழகத்திற்குள் நுழைந்தபோது கூட அவரவர்களுக்கான கொடிகளைத் தான் ஏற்றினார்கள். சுதந்திர அடைந்ததும் பிரிட்டிஷார் கொடி கீழே இறக்கப்பட்டு நம் நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது வரலாறு.

அதற்கு முன்பே சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் ஒவ்வொரு நகர்விலும் காந்தி நடத்திய அறப்போராட்டங்களிலும் நடைபயணத்திலும் திருப்பூர் குமரன் போன்றோர் போராட்டத்திலும் முன்னிலைப்படுத்தப்பட்டது காங்கிரஸ் கொடி தான்.

அதற்காகவே திருப்பூர் குமரனுக்கு ‘கொடிகாத்த குமரன்’ என்கின்ற பட்டப் பெயரும் வழங்கப்பட்டது.

இத்தகைய வரலாறு கொண்ட தமிழ்நாட்டில் தான் நீதிக் கட்சி உருவானபோது போதும் திராவிடர் கழகம் உருவான போதும் அதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற விதத்தில் கருப்பு சிவப்பு என்கின்ற அந்த நிறத்திற்குப் பின்னால் இருக்கிற சமூகநீதியைப் பற்றி விளக்கிச் சொன்னார் பெரியார்.

1949 இல் திமுக உருவான பிறகு அதே மாதிரியான நிறத்தை முன்னிலைப்படுத்தி தான் திமுக என்கிற இயக்கம் உருவானது.

அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிமுக உருவானபோதும் அதன் கட்சிக் கொடியிலேயே அண்ணாவின் படமும் இணைக்கப்பட்டது.

தமிழகத்தில் அடுத்தடுத்து பாமக, தேமுதிக, மதிமுக, விசிக உள்ளிட்ட ஒவ்வொரு கட்சிகளின் கொடிக்குப் பின்னாலும் அதன் பின்புலம் சார்ந்த குறைந்தபட்ச வரலாறு இருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக தமிழகத்தில் உருவான சாதியை முன்னிலைப்படுத்துகிற சங்கங்களுக்கும் தனிக் கொடிகள் உருவாகின.

ஒவ்வொரு ஊரின் நுழைவு வாயிலிலும் பல்வேறு கட்சிகளின் அல்லது இயக்கங்களின் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. சமீபத்தில் உருவான தவெக-வின் கொடி உட்பட பல கொடியின் எண்ணிக்கை பெருகி இருந்தாலும்கூட, முக்கியமாக ஒன்றைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.

கொடி என்பது அது எந்த இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ அதனுடைய ஒரு அடையாளம் அல்லது குறியீடு என்றே சொல்லலாம்.

இன்றைக்கு சில இயக்கங்களுக்குள் கொடி சம்மந்தப்பட்ட கொடிமரம் நடுவதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு, பரஸ்பர மோதல்களும் நடந்தேறி இருக்கின்றன என்பது எதார்த்தமாக இருந்தாலும்கூட, தற்போதைய சில இயக்கங்களுக்கு இடையிலான கொடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகும் மோதலை முன்வைத்து அனைத்துக் கொடி மரங்களையும் எடுப்பது என்கின்ற முடிவுக்கு வருவது சரியான ஜனநாயக அணுகுமுறை அல்ல.

இதைத்தான் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பும் வெளிப்படுத்தி இருக்கிறது.

கொடி என்பது தனித்த ஒரு துணி அல்ல; அது ஒரு இயக்கத்திற்கான, ஒரு ஜீவனான குறியீடு என்பதையும் சம்மந்தப்பட்டவர்கள் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரே ஒரு உதாரணம். சுதந்திர தினத்தன்று சென்னை சார்ஜ் கோட்டையில் கொடியேற்றுவது என்பது தமிழக முதலமைச்சர் பொறுப்புகளில் அமருபவர்களுக்கு இல்லாத நேரத்தில், அந்த உரிமைக் குரலை எழுப்பி, அந்தக் கொடியேற்றும் உரிமையை வாங்கிக் கொடுத்ததில் கலைஞர் கருணாநிதிக்கு முக்கியப் பங்குண்டு.

அதைப் பின்பற்றி தான் இன்றுவரை தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்கும் எந்த முதலமைச்சரும் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றுகிறார்கள்.

ஆக, கொடி என்பது தமிழக அரசியல் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த ஒன்று என்பதை கவனத்தில் கொள்வோம்.

– யூகி

Comments (0)
Add Comment