கும்மாயம் – உடலைக் கெடுக்காத தமிழர் இனிப்பு!

கவிஞர் கரிகாலன் ரசனை

சிலநாட்கள் முன், இளந்திரையனின் பெரியார் தேநீர் விடுதிக்கு சென்றிருந்தேன். ஒரு இனிப்பு இருந்தது. இளந்திரையன் துணைவியார் உஷா செய்தது.

“இது என்ன இனிப்பு?” – தம்பி இளந்திரையனிடம் கேட்டேன். “பெயர் சரியாகத் தெரியவில்லை. இப்போதைக்கு ‘உளுந்து அல்வா’ என்கிறோம்.” சிரித்தார்.

தொன்னையில் கொஞ்சம் உளுந்து அல்வா கொடுத்தார். அதீத நிறம். அதீத இனிப்பு. அதீத நெய். என நம் காலத்தின் இனிப்பு திகட்டத் தொடங்கிவிட்டது. ஒரு விள்ளல் எடுத்து சுவைத்தேன். அடடா.. இதை எங்கோ சாப்பிட்டிருக்கிறோமே! தோன்றியது.

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எங்கள் அம்மா இதைச் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால், அது உளுந்தால் செய்ததில்லை. அரிசையைப் பொறித்து, பாசி பயிற்றை வறுத்து, இரண்டையும் அரைத்து மாவாக்குவார். சிறிது தண்ணீர் கலந்து, வெல்லத்தோடு பிசைந்து அவித்துத் தருவார்.

அண்மையில் மீண்டும் இளந்திரையன் தேநீர் விடுதிக்குச் சென்றிருந்தேன். உளுந்து அல்வா கேட்டேன். “இதற்கு பெயர் கண்டுபிடித்துவிட்டோம். கும்மாயம் அண்ணா!” என்றார்.

“பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம், இயற்றி” இது மணிமேகலையில் வருகிற ஒரு வரி. இதைப் படித்த உ.வே.சாவுக்கு கும்மாயம் என்றால் என்ன? தெரியவில்லை.

ஒருநாள் நண்பரோடு கோவிலுக்குச் சென்றிருக்கிறார் உ.வே. சா.

பட்டாசாரியார் அவருக்கு பிரசாதங்கள் ஒவ்வொன்றாக எடுத்துத் தந்திருக்கிறார்.

தேன்குழல், வடைத் திருப்பணியாரம், அதிரசம் என ருசித்தவரிடம் புதிதாக ஒரு பிரசாதத்தை நீட்டியிருக்கிறார்கள்.

அதன் பெயர் என்ன? கேட்கிறார் உ.வே.சா. ‘கும்மாயம்’ என்கிறார் பட்டாச்சாரியார். ‘ஆஹா, மணிமேகலையில் பார்த்த கும்மாயம் இதுதானா!’ மகிழ்ந்தார் உ.வே.சா.

பெரும்பாலும் பெருமாள் ஆலயங்களில் கிடைக்கும் பிரசாதம் இது.

‘கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்
குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்
பொன்றுவித்து இன்று நீ வந்தாய்’

திருமொழியில் பாடுவார் பெரியாழ்வார்.

சில இடங்களில் பாயசத்தையும் கும்மாயம் என்பார்கள். இன்று இனிப்புக் கடைகளுக்கு baklawa, kunafa போன்ற 15 ஆம் நூற்றாண்டு துருக்கி இனிப்புகள் வந்துவிட்டன. ஆனால் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே தமிழரின் முல்லை நிலங்களில் செய்யப்பட்ட கும்மாயம் கிடைக்கவில்லை.

தம்பி இளந்திரையன் தமிழரின் அடையாளங்களைத் தேடுவதில் அக்கறை கொண்ட பிள்ளை.

பெரியார் கடையில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படும் கும்மாயம் கிடைக்கிறதா? வியப்பு வேண்டாம்.

தமிழர் முல்லை நிலத்தில் வணங்கிய மால் இந்துக் கடவுளல்லர். அவர் தமிழர் இறையியலின் தொன்மம்.

நாத்திகர் என்பதற்காக பழநி பஞ்சாமிர்தத்தை, திருப்பதி லட்டை, மறுப்பார் உண்டோ?

கும்மாயம் உடலைக் கெடுக்காத தமிழர் இனிப்பு. அதை நம் பாட்டியின் பூட்டியின் அடுப்பங்கறையிலிருந்து அகழ்ந்து எடுத்து வந்திருக்கிறது பெரியார் தேநீர் விடுதி.

திருமுதுகுன்றம் வரும்போது, பெரியார் கடையில் ஒரு தொன்னை கும்மாயம் சாப்பிடத் தவறாதீர்கள்.

Comments (0)
Add Comment