சென்னையில் சாலைப் பள்ளங்கள் ஏற்படுத்தும் ஆபத்துகள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள் :  

*

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்குச் சமீபத்தில் வருகிறவர்கள் கேட்கிற ரெகுலரான கேள்வி.

“என்ன.. சென்னை முழுக்க இவ்வளவு  இடங்களில் பள்ளத்தைத் தோண்டி வைச்சிருக்காங்களே.. ஏன்?

நிஜமாகவே அந்த அளவுக்குச் சென்னையில் பல சாலைகளிலும், தெருக்களிலும் கூடப் பள்ளங்கள்  தோண்டப்பட்டிருக்கின்றன. சில பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டப்பணிக்காகத் தோண்டுகிறார்கள். பல பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிக்காகத் தோண்டுகிறார்கள்.

மிகச் சில இடங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் தொடர்பான பணிகளுக்காகப் பள்ளங்களைத் தோண்டியிருக்கிறார்கள்.

ஏற்கனவே முதற்கட்டமாகச் சென்னையில் பல ஆண்டுகளாக நீடித்த மெட்ரோ ரயில் பணிகளுக்காக வேலைகள் நடந்தபோது சென்னை நகரத்தின் பல பகுதிகள் திணறிப் போயின.

அந்தப் பணிகளில் ஈடுபட்டவர்கள் வடமாநிலங்களிலிருந்து வந்திருந்த தொழிலாளர்கள். இரவு பகலாக நடந்த அந்தப் பணியின் போது சில விபத்துகள் ஏற்பட்டு சிலர் உயிரிழந்தது நினைவில் இருக்கலாம்.

சென்னைப் பெருநகரம் பெரு மழைக்காலத்தில் எப்படி எல்லாம் வெள்ளத்தால் தவித்துப் போயிருக்கிறது!

இதற்கு ஒரு தீர்வு காணும் முயற்சியாகத் தான் சென்னை நகரம் எங்கும் மழை நீர் வடிகால் திட்டப்பணிகளுக்கான திட்ட மதிப்பீடு எல்லாம் தயாராகி சென்னை எங்கும் அதற்கான வேலைகள் துவங்கின.

அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் அடுத்து மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு மழை நீர் வடிகால் திட்டப்பணிகளை முடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.

புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்தால் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் அடர்த்தியாகவும், பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் வசித்து வருகிறார்கள்.

நீதிமன்ற உத்தரவுப்படி நீர் நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டபோது, ஐ.ஏ.எஸ். அதிகாரியின் குடும்பத்தினர் கட்டிய வீடும் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

மழைநீர் வடிகால் பணிகள் சென்னையில் துவங்கிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அதற்காகப் பல சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் ஜே.சி.பி இயந்திரங்களை வைத்துப் பள்ளங்கள் தோண்டப்பட்டு விட்டன.

சென்னை முழுக்க நடந்துகொண்டிருக்கும் மழை நீர் வடிகால் திட்டப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறவர்களும் வடமாநிலத் தொழிலாளர்களும், ஆந்திர மாநிலத் தொழிலாளர்களும் தான்.

இதிலும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் காணாமல் போய்விட்டார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், பல பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் அடுத்து மழைக்காலம்  வந்துவிட்ட பிறகும் பல பகுதிகளில் நிறைவடையவில்லை.

சமீபத்தில் பரவலாகப் பெய்த மழையின் போது, அந்தப் பள்ளங்கள் எல்லாம் நீர்மயமாகிவிட்டன. குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அந்தப் பணிகளைச் செய்து கொண்டிருந்த ஒப்பந்த தாரர்களால் முடியவில்லை. இதனால் அங்கங்கே நீர் நிறைந்த பள்ளங்கள் உருவாகிவிட்டன.

அந்தப் பள்ளங்களில் காங்கிரீட் போட இரும்புக்கம்பிகள் நீண்டு கொண்டிருக்க, அதில் இரு சக்கர வாகனங்களில் வருகிறவர்கள் விழுவதும் நடந்திருக்கிறது.

குறுக்கலான தெருக்களில் இருக்கும் சாலைகளில் பாதி வரை அடைத்தபடி தோண்டப்பட்டிருக்கும் பள்ளங்களால் சென்னையில் அண்மையில் பல விபத்துகள் நடந்திருக்கின்றன.

சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் யாரைக் கேட்டாலும் இம்மாதிரியான பள்ளங்களால் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விபத்துகள் குறித்துப் பட்டியலே போடுவார்கள்.

சென்ற வாரம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் காலை நேரத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு இளைஞர் விழுந்து விட, மீட்க ஆம்புலன்ஸை வரவழைத்திருந்தார்கள்.

சென்னை நீதிமன்றமே பெருநகரம் எங்கும் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நிறைவடையாமல் இருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டுப் பணிகளை விரைவில் முடிக்கச் சொல்லி எச்சரித்திருந்தது.

மழைநீர் வடிகால் திட்டப்பணி அதிலும் சென்னை மாதிரி அடிக்கடி மழையினால் அவதிப்படும் நகரத்தில் நடப்பது தேவையான ஒன்று தான்.

இருந்தாலும் தொடர்ந்து நடக்கும் விபத்துகளைத் தவிர்க்க, திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு தான் தனிக்கவனம் எடுக்க வேண்டும்.

-யூகி

Comments (0)
Add Comment